Despair of Pandavas! | Asramavasika-Parva-Section-21 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 21)
பதிவின் சுருக்கம் : குந்தியின் பிரிவினாலும், அபிமன்யுவின் மரணத்தினால் உண்டான துக்கத்தினாலும் பாண்டவர்கள் தங்கள் வேலைகளை நன்கு பாராமலிருந்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, குருக்களின் தலைவன் {திருதராஷ்டிரன்} காட்டுக்குள் ஓய்ந்து சென்ற பிறகு, பாண்டவர்கள் தங்கள் தாயின் {குந்தியின்} நிமித்தம் துன்பத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் உற்சாகமற்றவர்களானார்கள்.(1) ஹஸ்தினாபுரக் குடிமக்களும் ஆழ்ந்த கவலையில் இருந்தனர். பிராமணர்கள் எப்போதும் அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனைக்} குறித்துப் பேசினர்.(2)
{அவர்கள்}, "முதிர் வயதினனான மன்னன் {திருதராஷ்டிரன்}, {ஆளரவமற்ற} தனிமையான காட்டுக்குள் எவ்வாறு வாழ்வான்? உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரியும், குந்திபோஜனின் மகளான பிருதையும் {குந்தியும்} அங்கே எவ்வாறு வாழ்வார்கள்?(3) அந்த அரசமுனி {திருதராஷ்டிரன்} எப்போதும் அனைத்து வசதிகளையும் அனுபவித்து வாழ்ந்து வந்தவன். அவனுடைய நிலை நிச்சயம் பரிதாபகரமானது. காட்டுக்குள் சென்றவனும், பார்வையற்றவனுமான அந்த அரசகுல வழித்தோன்றலின் இப்போதைய நிலையென்ன?(4) மகன்களிடம் இருந்து பிரிந்ததன் மூலம் குந்தி செய்யற்கரிதான அருஞ்செயலைச் செய்திருக்கிறாள். ஐயோ, அவள் அரச செழிப்பைக் கைவிட்டு காட்டு வாழ்வைத் தேர்ந்தெடுத்தாளே.(5) மேலும், தன் அண்ணனுக்குத் தொண்டு செய்வதில் எப்போதும் அரப்பணிப்புள்ள விதுரனின் நிலையென்ன? தன் தலைவனால் தனக்குக் கொடுக்கப்பட்ட உணவுக்கு நன்றியுணர்வுமிக்கவனும், நுண்ணறிவுமிக்கவனுமான கவல்கணன் மகன் {சஞ்சயன்} எவ்வாறு இருக்கிறான்?" {என்று பேசிக் கொண்டனர்}.(6) உண்மையில், உரிய வயதை எட்டாதவர்கள் உள்ளிட்ட குடிமக்களும், ஒருவரையொருவர் சந்திக்கும்போது இதே கேள்விகளையே கேட்டுக் கொண்டனர்.(7)
துன்பத்தால் பீடிக்கப்பட்டவர்களான பாண்டவர்களும், தங்கள் முதிய தாய்க்காக வருந்தி தங்கள் நகரத்தில் வாழ இயலாதவர்களாக இருந்தனர்.(8) முதிய தந்தையும், தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தவனுமான மன்னனையும், உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரியையும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட விதுரனையும் நினைத்துக் கொண்டிருந்த அவர்கள் மன அமைதியை அனுபவிக்கத் தவறினார்கள்.(9) அரசுரிமையிலோ, பெண்களிலோ, வேத கல்வியிலோ அவர்களுக்கு இன்பமேதும் இருக்கவில்லை.(10) ஆன்மாவைத் துளைத்த துன்பத்தோடு அவர்கள் முதிய மன்னனையும், தங்கள் உற்றார் உறவினரின் பயங்கரப் படுகொலைகளையும் நினைத்தனர்.(11) உண்மையில் இளைஞனான அபிமன்யு, போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான கர்ணன், திரௌபதியின் மகன்கள், மற்றும் பிற நண்பர்கள் ஆகியோரின் படுகொலைகளைக் குறித்து நினைத்த அந்த வீரர்கள் பெரிதும் உற்சாகத்தை இழந்தனர்.(12,13)
பூமியானவள், தன் வீரர்கள் மற்றும் செல்வம் ஆகிய இரண்டையும் இழந்தால் என்பதை மீண்டும் மீண்டும் நினைத்த அவர்கள் மனத்தில் அமைதியை அடைய தவறினார்கள்.(14) திரௌபதி தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தாள், அழகிய சுபத்திரையும் பிள்ளைகளற்றவளாக இருந்தாள். அவர்களும் உற்சாகமற்ற இதயங்களுடனும், பெரிய துன்பத்துடனும் இருந்தனர்.(15) எனினும், விராடன் மகளின் {உத்தரையின்} மகனான உமது தந்தை பரிக்ஷித்தைக் கண்ட உமது பாட்டன்கள் ஏதோ ஒருவாறு தங்கள் உயிர்மூச்சுகளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர்" {என்றார் வைசம்பாயனர்}.(16)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 21ல் உள்ள சுலோகங்கள் : 16
ஆங்கிலத்தில் | In English |