Sunday, January 05, 2020

தேவ அம்சங்கள்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 31

Portions of deities! | Asramavasika-Parva-Section-31 | Mahabharata In Tamil

(புத்ரதர்சன பர்வம் - 3)


பதிவின் சுருக்கம் : போரில் மாண்டவர்களைக் காட்டப் போவதாகச் சொன்ன வியாசர்; ஒவ்வொருவரும் எவரெவருடைய அம்சமென்பதையும் சொன்னது; அனைவரும் கங்கைக் கரைக்குச் சென்றது...


வியாசர், "ஓ! காந்தாரி, நீ அருளப்பட்டிருப்பாயாக, நீ உன் மகன்கள், சகோதரர்கள், நண்பர்கள், உற்றார், உறவினர் மற்றும் உன் தந்தைமார் ஆகியோரை உறக்கத்தில் இருந்து எழுந்த மனிதர்களைப் போல இவ்விரவில் காணப் போகிறாய்.(1) குந்தி கர்ணனைக் காண்பாள், யது குலத்தவள் {சுபத்திரை} தன் மகன் அபிமன்யுவைக் காண்பாள். திரௌபதி தன் ஐந்து மகன்களையும், தன் தந்தைமாரையும், தன் சகோதரர்களையும் காண்பாள். நீ கேட்பதற்கு முன்பே என் மனத்தில் இருந்த எண்ணமிது. ஓ! காந்தாரி, மன்னனாலும், உன்னாலும், குந்தியாலும் தூண்டபட்டபோது நான் இந்த நோக்கத்தை ஊக்குவித்தேன்.(3) அந்த மனிதர்களில் முதன்மையானவர்களுக்காக நீ வருந்தக்கூடாது. க்ஷத்திரிய நடைமுறைகளில் நிறுவப்பட்ட தங்கள் அர்ப்பணிப்பின் விளைவால் அவர்கள் மரணமடைந்தனர்.(4)


ஓ! குற்றமற்றவளே, தேவர்களின் பணியைச் செய்வதைத் தவிர வேறேதும் முடியாது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அந்த வீரர்கள் பூமிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தேவர்களின் பகுதிகளாவர் {அம்சங்களாவர்}.(5) கந்தர்வர்கள், அப்சரஸ்கள், பிசாசங்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள், பெரும் புனிதர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், தெய்வீக முனிவர்கள்,(6) தேவர்கள், தானவர்கள், களங்கமற்ற குணம் கொண்ட தெய்வீக முனிவர்கள் ஆகியோர் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மரணமடைந்தனர்[1].(7)

[1] "அதாவது, மனிதர்களாக அவதரித்திருந்த அவர்கள் அனைவரும் ஒருவரோடொருவர் போரிட்டு மரணமடைந்தனர் எனப் பொருள் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

நுண்ணறிவுமிக்கவனும், திருதராஷ்டிரன் என்ற பெயரைக் கொண்டவனுமான கந்தர்வர்களின் மன்னனே, மனிதர்களின் உலகில் உன் தலைவனான திருதராஷ்டிரனாகப் பிறப்பெடுத்தான் {அவதரித்தான்} எனக் கேள்விப் படுகிறோம்.(8) மங்கா மகிமை கொண்டவனும், அனைவரைக் காட்டிலும் புகழ்மிக்கவனுமான பாண்டு, மருத்துக்களிலிருந்து உதித்தான் என்பதை அறிவாயாக. க்ஷத்ரி {விதுரன்} மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும் அறத் தேவனின் {தர்ம தேவனின்} இரு பகுதிகளாவர் {அவதாரங்களாவர்}.(9) துரியோதனனைக் கலியென்றும், சகுனியை துவாபரனென்றும் அறிவாயாக. ஓ! நற்குணங்களைக் கொண்டவளே, துச்சாசனனும், {அவனைச் சார்ந்த} பிறர் அனைவரும் ராட்சசர்கள் என்பதை அறிவாயாக.(10)

பெரும் வலிமைமிக்கவனும், பகைவரைத் தண்டிப்பவனுமான பீமசேனன் மருத்துக்களில் இருந்து வந்தவனாவான். பிருதையின் மகனான இந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} புராதன முனிவனான நரன் என்பதை அறிவாயாக.(11) ரிஷிகேசன் {கிருஷ்ணன்} நாராயணனாவான், இரட்டையர்கள் அஸ்வினிகளாவர். வெப்பங்கொடுப்பவர்களில் முதன்மையான சூரியன், தன்னுடலை இரண்டாக வகுத்து, ஒரு பகுதியைக் கொண்டு உலகங்களுக்கு வெப்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான், மற்றொரு பகுதியைக் கொண்டு (பூமியில்) கர்ணனாக வாழ்ந்தான். அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்தவனும், பாண்டவர்களின் உடைமைகளுக்கு வாரிசும், (ஒன்று கூடி போரிட்ட) ஆறு பெரும் தேர்வீரர்களால் கொல்லப்பட்டவனுமான அர்ஜுனன் மகனாக {அபிமன்யுவாக} சோமன் பிறந்தான். அவன் சுபத்திரையிடம் பிறந்தான். யோக பலத்தின் மூலம் அவன் தன்னைத் தானே இரண்டாக வகுத்துக் கொண்டான்.(12-14) வேள்வித் தீயில் இருந்து திரௌபதியுடன் சேர்ந்து உதித்த திருதஷ்டத்யும்னன், நெருப்பு {அக்னி} தேவனின் மங்கப் பகுதியாவான் {அவதாரமாவான்}. சிகண்டி ஒரு ராட்சசனாவான்.(15)

துரோணர் பிருஹஸ்பதியின் பகுதி என்றும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ருத்தரனின் பகுதியாகப் பிறந்தவன் என்றும் அறிவாயாக. கங்கையின் மைந்தனான பீஷ்மர், மனிதனாகப் பிறந்த வசுக்களில் ஒருவராவார்.(16) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இவ்வாறே தேவர்கள் மனிதர்களாகப் பிறந்து, தங்கள் பணியை நிறைவற்றிய பின்னர்ச் சொர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(17) மறுமைக்குத் திரும்பிச் சென்ற அவர்கள் அனைவரைக் குறித்தும் உங்கள் இதயங்களில் உள்ள கவலையை நான் இன்று விலக்குவேன்.(18) நீங்கள் அனைவரும் பாகீரதியை {கங்கையை} நோக்கிச் செல்வீராக. அப்போது, போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் காண்பீர்கள்" என்றார் {வியாசர்}".(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அங்கே இருந்தோர் அனைவரும் வியாசரின் சொற்களைக் கேட்டு, சிங்க முழக்கம் செய்து கொண்டே பாகீரதியை நோக்கிச் சென்றனர்.(20) தன் அமைச்சர்களுடன் கூடிய திருதராஷ்டிரனும், பாண்டவர்களும், அங்கே வந்திருந்த முதன்மையான முனிவர்களும் கந்தர்வர்களும், சொல்லப்பட்டது போலவே புறப்பட்டனர்.(21) கங்கைக் கரையை அடைந்த அந்த மனிதக் கடல், தான் விரும்பியவாறு தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டது.(22) பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, பாண்டவர்களுடனும், குடும்பத்தின் பெண்கள் மற்றும் முதியவர்களுடனும் ஓர் இனிமையான இடத்தில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(23) இறந்து போன இளவரசர்களைக் காணப் போகும் இரவின் வருகைக்காக அவர்கள் ஒரு முழு வருடத்தைப் போல அந்த நாளைக் கழித்தனர்.(24) சூரியன் மேற்கின் புனித மலையை அடைந்தபோது, அவர்கள் அனைவரும் அந்தப் புனித ஓடையில் நீராடி தங்கள் மாலை சடங்குகளை முடித்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(25)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 31ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English