Eye of knowledge! | Asramavasika-Parva-Section-32 | Mahabharata In Tamil
(புத்ரதர்சன பர்வம் - 4)
பதிவின் சுருக்கம் : இரவில் கங்கையில் இறங்கிப் போரில் இறந்தவர்களை அழைத்த வியாசர்; தங்கள் தங்கள் ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்களுடன் கங்கையில் தோன்றி கரைக்கு வந்த இரு தரப்பினர்; வியாசர் கொடுத்த ஞானக் கண்ணால் அனைவரையும் நேரில் கண்ட திருதராஷ்டிரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இரவு வந்ததும், அவர்கள் அனைவரும் தங்கள் மாலைச் சடங்குகளை முடித்துக் கொண்டு வியாசரை அணுகினர். அற ஆன்மா கொண்டவனும், தூய்மையான உடலுடனும், ஆன்மாவை நோக்கிச் செலுத்தப்படும் மனத்துடனும் கூடியவனுமான திருதராஷ்டிரன், பாண்டவர்களுடனும், தனக்குத் துணையாக இருந்த முனிவர்களுடனும் சேர்ந்து அங்கே அமர்ந்தான்.(2) அரசக் குடும்பத்தின் பெண்மணிகள் காந்தாரியுடன் சேர்ந்து ஒரு தனிப்பட்ட இடத்தில் அமர்ந்தனர். குடிமக்கள் மற்றும் மாகாணவாசிகள் அனைவரும் தங்கள் வயதின்படியாக வரிசையாக அமர்ந்திருந்தனர்.(3)
அப்போது வலிமையும், சக்தியும் கொண்டவனும், பெரும் தவசியுமான வியாசர் பாகீரதியின் புனித நீரில் நீராடி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், பாண்டவர் தரப்பில் போரிட்டவர்களும், கௌரவர் தரப்பில் போரிட்டவர்களுமான இறந்து போன வீரர்கள் அனைவரையும் அழைத்தார்.(4,5) இதன் பேரில், ஓ! ஜனமேஜயா, செவிடாக்கக்கூடியதும், முன்பு குருக்கள் மற்றும் பாண்டவர்களின் படைகளில் கேட்கப்பட்டதற்கு ஒப்பானதுமான ஆரவாரம் நீருக்குள் இருந்து எழுவது கேட்கப்பட்டது.(6)
அப்போது பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான மன்னர்கள், தங்கள் துருப்பினர் அனைவருடன் பாகீரதியின் நீரில் இருந்து ஆயிரக்கணக்கில் எழுந்தனர்.(7) அங்கே விராடனும், துருபதனும் தங்கள் மகன்கள் மற்றும் படைகளுடன் இருந்தனர். திரௌபதியின் மகன்கள், சுபத்திரையின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன் ஆகியோரும் இருந்தனர்.(8) கர்ணன், துரியோதனன், வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனி, பெரும் பலம் கொண்டவர்களும், துச்சாசனன் தலைமையிலானவர்களுமான திருதராஷ்டிரனின் வேறு பிள்ளைகளும் அங்கே இருந்தனர்.(9)
ஜராசந்தனின் மகன், பகதத்தன், பெருஞ்சக்தி கொண்ட ஜலசந்தன், பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன், மற்றும் தம்பியுடன் கூடிய விருஷசேனன் {கர்ணனின் மகன்கள்} ஆகியோரும் அங்கே இருந்தனர்.(10) (துரியோதனன் மகனான) லக்ஷ்மணன், திருஷ்டத்யும்னனின் மகன், சிகண்டியின் பிள்ளைகள் அனைவரும், தம்பியுடன் கூடிய திருஷ்டகேது ஆகியோரும் அங்கே இருந்தனர்.(11) அசலன், விருஷகன், ராட்சசன் அலாயுதன், பாஹ்லீகர், ஸோமதத்தன், மன்னன் சேகிதானன் ஆகியோரும் அங்கே இருந்தனர்.(12)
இவர்களும், எண்ணிக்கையைக் கொண்டு வசதியாகப் பெயர் கூற முடியாத இன்னும் பலரும் அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றினர். அவர்கள் அனைவரும் பாகீரதியின் நீரில் இருந்து ஒளியுடல்களுடன் எழுந்தனர்.(13) அந்த மன்னர்கள், போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருந்தபோது உடுத்தியிருந்த உடை, தரித்திருந்த கொடிக்கம்பம் மற்றும் வாகனத்துடன் தோன்றினர்.(14) அவர்கள் அனைவரும் தெய்வீக ஆடை உடுத்தியவர்களாகவும், பிரகாசமான காதுகுண்டலங்களுடன் கூடியவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பகை, செருக்கு, கோபம் மற்றும் பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்களாக இருந்தனர்.(15)
அவர்களது செயல்களைச் சொன்னவாறே கந்தர்வர்கள் அவர்களது புகழைப் பாடினர், வந்திகள் அவர்களுக்குப் பணிவிடை செய்தனர். தெய்வீக உடுப்புகளை உடுத்தியவர்களும், தெய்வீக மலர்மாலைகளைச் சூடியவர்களுமான அவர்கள் ஒவ்வொருவரும் அப்சரஸ் கூட்டங்களால் பணிவிடை செய்யப்பட்டனர்.(16) அந்த நேரத்தில், சத்யவதியின் மகனாகிய அந்தப் பெருந்தவசி தன் தவங்களின் பலத்தால், திருதராஷ்டிரனுக்கு தெய்வீகப் பார்வையைக் கொடுத்து அவனை நிறைவடையச் செய்தார்.(17) தெய்வீக அறிவும் பலமும் கொண்டவளும், பெரும் புகழைக் கொண்டவளுமான காந்தாரி, தன் பிள்ளைகள் அனைவருடன், போரில் கொல்லப்பட்ட அனைவரையும் கண்டாள்.(18)
அங்கே கூடியிருந்தோர் அனைவரும், நிலைத்த பார்வையுடனும், இதயம் நிறைந்த ஆச்சரியத்துடனும், தங்களுக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியதும், நம்பமுடியாததுமான அந்த ஆச்சரியமான நிகழ்வைக் கண்டனர்.(19) அஃது இன்புற்றிருந்த ஆடவர் மற்றும் பெண்களுக்கான உயர்ந்த விழாவாக {உத்ஸவமாகத்} தெரிந்தது. அந்த அற்புதக் காட்சி, திரையில் வரையப்பட்ட படத்தைப் போலத் தெரிந்தது.(20) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அந்தத் தவசியின் அருளால் பெற்ற தெய்வீகப் பார்வையுடன் கூடிய திருதராஷ்டிரன், அந்த வீரர்கள் அனைவரையும் கண்டு இன்பத்தால் நிறைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(21)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 32ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |