Final bath in sacrifice! | Asramavasika-Parva-Section-35 | Mahabharata In Tamil
(புத்ரதர்சன பர்வம் - 7)
பதிவின் சுருக்கம் : பரிக்ஷித்தைக் காட்ட வேண்டிய ஜனமேஜயன்; பரிக்ஷித், சமீகர் மற்றும் சிருங்கி ஆகியோரை காட்டிய வியாசர்; வேள்வி முடிவில் நீராடி ஆஸ்தீகரை வணங்கிய ஜனமேஜயன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னன் திருதராஷ்டிரன் ஒருபோதும் தன் மகன்களைக் கண்டதில்லை. ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, அந்த முனிவரின் {வியாசரின்} அருள் மூலம் கண் பார்வையை அடைந்த அவன், தன்னைப் போலவே இருந்த தன் பிள்ளைகளை முதல் முறையாகக் கண்டான்.(1) மனிதர்களில் முதன்மையானவனான அந்தக் குரு ஏகாதிபதி, மன்னர்களின் கடமைகள், வேதங்கள், உபநிஷத்துகள் அனைத்தையும் கற்று, (அவற்றிலிருந்தே) நிச்சய புத்தியையும் அடைந்தான்.(2) பெரும் ஞானம் கொண்ட விதுரன், தன் தவச் சக்தியின் மூலம் உயர்ந்த வெற்றியை அடைந்தான். திருதராஷ்டிரனும், தவசியான வியாசரைச் சந்தித்தன் விளைவால் பெரும் வெற்றியை அடைந்தான்".(3)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "வியாசர் எனக்கொரு வரம் தர மனம் கொண்டு, என் தந்தை {பரீக்ஷித்} இவ்வுலகில் இருந்து செல்லும்போது எவ்வளவு வயதுடன் இருந்தாரோ, அவர் என்ன உடையை உடுத்துவது வழக்கமோ அதே வடிவத்தில், அதே உடையுடன் அன்பு கூர்ந்து அவரை {பரீக்ஷித்தை} எனக்குக் காட்டினால், நீர் சொன்ன அனைத்தையும் நான் நம்புவேன்.(4) அத்தகைய காட்சி எனக்கு மிக ஏற்புடையதே. உண்மையில், நான் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக என்னைக் கருதிக் கொள்வேன். நான் ஒரு குறிபிட்ட தீர்மானத்தை அடைந்திருக்கிறேன். ஓ!, இந்த முதன்மையான முனிவரின் {வியாசரின்} அருளின் மூலம் என் விருப்பம் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்படட்டும்" என்று கேட்டான்".(5)
சௌதி {லோமஹர்சனரின் முனிக்கூட்டத்திடம்} சொன்னார், "மன்னன் ஜனமேஜயன் இந்தச் சொற்களைச் சொன்ன பிறகு, பெரும் சக்தியும், நுண்ணறிவும் கொண்ட வியாசர், தன் அருளைக் காட்டும் வகையில், (வேறு உலகில் {மறுமையில்} இருந்து) பரிக்ஷித்தைக் கொண்டு வந்தார்.(6) மன்னன் ஜனமேஜயன், பேரழகுடன் கூடியவனும், சொர்க்கத்தில் இருந்து வந்தவனுமான தன் அரசத் தந்தை (இவ்வுலகில் இருந்து செல்லும் காலத்தில்) இருந்த அதே வயது மற்றும் அதே வடிவத்துடன் அவனைக் கண்டான்.(7) உயர் ஆன்ம சமீகர், அவரது மகனான சிருங்கின் ஆகியோரும் அதே போல அங்குக் கொண்டு வரப்பட்டனர். மன்னனின் ஆலோசகர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அவர்களைக் கண்டனர்.(8) மன்னன் ஜனமேஜயன், தன் வேள்வியில் இறுதி நீராடலைச் செய்து பெரிதும் மகிழ்ந்தான். அவன் புனித நீரைத் தன் மீது ஊற்றிக் கொண்டதைப் போலவே தன் தந்தையின் மீதும் ஊற்றினான்.(9)
இறுதி நீராடலைச் செய்த மன்னன், யாயாவரர்களின் குலத்தில் பிறந்தவரும், ஜரத்காருவின் மகனுமான மறுபிறப்பாளர் ஆஸ்தீகரிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(10) "ஓ! ஆஸ்தீகரே, என் கவலைகள் அனைத்தையும் அகற்றியவரும், என்னுடைய தந்தையுமான இவர் {பரிக்ஷித்}, என்னால் காணப்பட்டதால், என்னுடைய இந்த வேள்வி பல அற்புதம் நிறைந்த நிகழ்வுகள் நிறைந்ததாயிற்று" என்றான்.(11)
ஆஸ்தீகர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, தவங்களின் பெரிய கொள்ளிடமும், புராதன முனிவரும், தீவில் பிறந்தவருமான வியாசர் எந்த வேள்வியில் இருக்கிறாரோ, அந்த வேள்வியைச் செய்தவன் நிச்சயம் ஈருலகங்களையும் {இம்மையையும், மறுமையையும்} வெல்வான்.(12) ஓ! பாண்டவர்களின் மகனே, நீ அற்புதம் நிறைந்த ஒரு வரலாற்றைக் கேட்டிருக்கிறாய். பாம்புகள் எரிக்கப்பட்டுச் சாம்பலாகி, உன் தந்தையின் பாதச்சுவடுகளைப் பின்பற்றிச் சென்றன.(13) ஓ! ஏகாதிபதி, தக்ஷகன், உன்னுடைய நேர்மையின் காரணமாகத் துன்பம் நிறைந்த விதியில் இருந்து பெருஞ்சிரமத்துடன் தப்பித்துவிட்டான். முனிவர்கள் அனைவரும் வழிபடப்பட்டனர். உன்னுடைய உயர் ஆன்ம தந்தையால் அடையப்பட்ட கதியையும் நீ கண்டாய்.(14) பாவத்தைத் தூய்மையாக்கும் இந்த வரலாற்றைக் கேட்டதன் மூலம் நீ அபரிமிதமான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டியிருக்கிறாய். இந்த மனிதர்களில் முதன்மையானவனைக் கண்டதன் மூலம் உன் இதயத்தில் உள்ள முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.(15) அறச் சிறகுகளை ஆதரிப்பவர்கள் எவரோ, நல்லொழுக்கமும், சிறந்த மனநிலையும் கொண்டவர்கள் எவரோ, எவரைக் கண்டால் பாவங்கள் பொடிபடுமோ அவர்களை நாம் அனைவரும் வணங்க வேண்டும்" என்றார் {ஆஸ்தீகர்}".(16)
சௌதி தொடர்ந்தார், "மறுபிறப்பாளர்களில் முதன்மையான அவரிடம் {ஆஸ்தீகரிடம்} இருந்து இதைக் கேட்ட மன்னன் ஜனமேஜயன், அனைத்து வழியிலும் அந்த முனிவரை மீண்டும் மீண்டும் கௌரவித்து வழிபட்டான்.(17) கடமைகள் அனைத்தையும் அறிந்த அவன், அதன் பிறகு, மங்கா மகிமை கொண்ட முனிவர் வைசம்பாயனரிடம், மன்னன் திருதராஷ்டிரனனுடைய காட்டு வாசத்தின் தொடர்ச்சியைக் கேட்டான்" {என்றார் சௌதி}.(18)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 35ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |