Reappearance of the dead! | Asramavasika-Parva-Section-34 | Mahabharata In Tamil
(புத்ரதர்சன பர்வம் - 6)
பதிவின் சுருக்கம் : மாண்டோர் மீள்வதெப்படி என்று கேட்ட ஜனமேஜயன்; காரணத்துடன் விடையளித்த வைசம்பாயனர்...
சௌதி சொன்னார், "பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் ஜனமேஜயன், தன் மூதாதையர்கள் மீண்டும் தோன்றி மறைந்த கதையைக் கேட்டு உயர்வான நிறைவையடைந்தான்.(1) இன்பத்தால் நிறைந்த அவன், மீண்டும் வைசம்பாயனரிடம், இறந்தோர் மீண்டும் தோன்றும் காரியத்தைக் குறித்துக் கேட்கும் வகையில், "உடல் அழிந்தவர்கள் அதே வடிவில் மீண்டும் தோன்றுவது எவ்வாறு சாத்தியம்?" என்று கேட்டான்.(2) இவ்வாறு கேட்கப்பட்டவரும், பேசுபவர்களில் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான அந்த வியாசரின் சீடர் {வைசம்பாயனர்}, ஜனமேஜயனிடம் இவ்வாறு பதிலளித்தார்.(3)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "செயல்கள் (அதன் விளைவுகளை அனுபவிக்காமல், அல்லது தாங்கிக் கொள்ளாமல்) ஒருபோதும் அழிவடைவதில்லை என்பது நிச்சயமானது. ஓ! மன்னா, செயல்களின் மூலமே உடல்கள் பிறக்கின்றன; குணங்களும் பிறக்கின்றன.(4) அடிப்படையான பெரும்பூதங்களுக்கும், அனைத்தின் தலைவனுக்கு உள்ள உறவின் விளைவால் அவை நித்தியமானவையாக இருக்கின்றன. அவை நித்தியமானவற்றுடனே இருக்கின்றன. அதே போலவே, நித்தியமற்றவை அழியும்போது அவை அழிவடைவதில்லை.(5) முயற்சியின்றிச் செய்யப்படும் செயல்கள் உண்மையானவையும், முதன்மையானவையும், உண்மை பயனைக் கொடுப்பவையுமாகும். எனினும், சாதிப்பதற்கு முயற்சி தேவைப்படும் செயல்களுடன் தொடர்புடைய ஆன்மா இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.(6)
அவ்வாறு (இன்ப துன்பத்துடன்) இணைந்திருந்தாலும், ஒரு கண்ணாடியில் உயிரினங்கள் பிரதிபலிக்கப்படுவதைப் போலவே அவற்றால் அஃது ஒருபோதும் மாற்றமடைவதில்லை என்பது ஒரு குறிப்பிட்ட உள்ளுணர்வாகும். அஃது ஒருபோதும் அழிவடைவதில்லை[1].(7) (நல்ல அல்லது தீய கனிகளை {பலன்களைத்} தாங்கிக் கொள்வதன் மூலமோ, அனுபவிப்பதன் மூலமோ) ஒருவனுடைய செயல்கள் தீராதவரை, அவன் உடலையே சுயமென {ஆத்மாவெனக்} கருதுகிறான். எனினும், செயல்கள் தீர்ந்த மனிதன், உடலை சுயமெனக் கருதமால் சுயத்தை வேறொன்றாக ஏற்றுக் கொள்கிறான்.(8) (அடிப்படை பூதங்கள், புலன்கள் முதலியன உள்ளிட்ட) இருப்பிலுள்ள பல்வேறு பொருட்கள் ஓர் உடலை அடைந்து ஒன்று கலக்கின்றன. (உடலுக்கும், சுயத்திற்கும் இடையில் உள்ள) வேறுபாட்டைப் புரிந்த ஞானம் கொண்ட மனிதர்களுக்கு அந்தப் பொருட்களே நித்தியமானவையாகின்றன[2].(9)
[1] கும்பகோணம் பதிப்பில், "கருதாமல் செய்த கர்மத்திற்கும் பயன் கிடைக்குமென்பது (பெரியோரின்) கருத்து. ஜீவன் இந்தக் கர்மங்களோடு கூடினவனாகி ஸுகதுக்கங்களை அனுபவிக்கிறான். ஆத்மாவானவன் எக்காலத்திலும் அழியும்படி செய்யப்பட முடியாதவனென்பது நிச்சயம்" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "எதுவரையில் கர்மாவானது அழியவில்லையோ, அதுவரையில் அந்தச் சரீரமானது ஸ்வரூபத்துடன் கூடினதாக இருக்கும். கர்மமானது அழிந்தவுடன் உலகத்தில் மனிதன் வேறு சரீரத்தை அடைகிறான். வெவ்வேறாயிருக்கும் இந்திரியம் முதலானவைகள் சரீரத்தை அடைந்து ஒன்றாயிருக்கும் தன்மையை அடைகின்றன. சரீரத்தைக் காட்டிலும் ஜீவன் வேறு என்று அறிபவர்களுக்கு அவைகள் நித்யமானவைகளாகின்றன" என்றிருக்கிறது.
குதிரை வேள்வியில், குதிரையைக் கொல்லும் காரியத்தில் இந்த ஸ்ருதி கேட்கப்படுகிறது. உடல்படைத்த உயிரினங்களின் நிச்சய உடைமைகளான உயிர்மூச்சுகள் (மற்றும் புலன்கள் முதலியவை), அவை மறுமைக்குச் செல்லும்போதும் நித்தியமாக நீடித்திருக்கின்றன.(10) ஓ! மன்னா {ஜனமேஜயா}, உனக்கு ஏற்புடையதாக இருந்தால், நான் உனக்கான நன்மையைச் சொல்வேன். நீ வேள்வி செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தேவ பாதைகள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பாய்.(11) உன்னுடைய எந்த வேள்விக்குமான ஆயத்தங்கள் செய்யப்பட்ட போது, தேவர்கள் உனக்கு நன்மை செய்ய விரும்பினர். உண்மையில், தேவர்கள் இவ்வாறான மனோநிலையை அடைந்து உன் வேள்விக்கு வந்த போது, கொல்லபட்ட விலங்குகளை (இம்மையில் இருந்து மறுமைக்கு இட்டுச் செல்லும்) பாதையின் தலைவர்களாக அவர்களே இருந்தனர்[3].(12)
[3] கும்பகோணம் பதிப்பில், "யாகத்தைச் செய்தால் தேவையான மார்க்கங்கள் உண்டென்று நீர் கேட்டிருக்கிறீரன்றோ? நீர் எப்பொழுது யாகத்தை நன்றாகச் செய்கிறீரோ அப்பொழுதே தேவர்கள் உமக்கு ஹிதர்களாகிறார்கள். பிராணிகளை அந்த அந்த உலகங்களை அடையும்படி செய்வதில் ஈஸ்வரர்களான தேவர்கள் அப்பொழுதே ஒன்று சேர்ந்தவர்களாகின்றனர்.
இந்தக் காரணத்தினாலேயே, நித்தியமானவர்கள் (ஜீவர்கள்), வேள்விகளில் தேவர்களைத் துதிப்பதன் மூலம் சிறந்த கதிகளை அடைவதில் வெல்கிறார்கள். அடிப்படையான ஐந்து பூதங்கள் நித்தியமானவையெனும்போது, ஆன்மாவும் நித்தியமெனும்போது, (உறையில் பொதிந்த ஆன்மாவான) புருஷன் என்றழைக்கப்படுபவனும் அவ்வாறே ஆகிறான்.(13) இஃது இவ்வாறிருக்கும்போது, ஓர் உயிரினம் பல்வேறு வடிவங்களை ஏற்கும் எனக் காண்பவன், பிழையான புரிதலைக் கொண்டவன் என்று கருதப்படுகிறான். பிரிவில் அதீத துயரில் ஈடுபடுபவன் முட்டாளென நான் நினைக்கிறேன்.(14) பிரிவில் தீமையைக் காணும் ஒருவன், சேர்க்கையைக் கைவிட வேண்டும். தனியாக நிற்பதன் மூலம் சேர்க்கைகள் அமையாமல், பிரிவிலேயே உலகத் துன்பங்கள் பிறக்கின்றன என்பதால் கவலைகள் கைவிடப்படுகின்றன[4].(15)
[4] கும்பகோணம் பதிப்பில், "ஐந்து பூதங்களின் சேர்க்கையாலாகிய இச்சரீரமும் ஆத்மாவும் நித்யமானவைகளாகையால், எந்தப் புருஷன் இந்தச் சரீரத்திற்கு நாசத்தையும் சேர்க்கையையும் பார்க்கிறானோ அவன் வீணான புத்தியுள்ளவன். பிரிவில் தோஷத்தைப் பார்ப்பவன் சேர்க்கையை விலக்க வேண்டும். பற்றுதலற்ற ஆத்மாவுக்குச் சேர்க்கையும், பிரிவாலுண்டாகும் துக்கமும் உண்டாக மாட்டா" என்றிருக்கிறது.
உடலுக்கும், சுயத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்பவன் மட்டுமே, பிழையான தீர்மானத்தில் {தவறான நம்பிக்கையில்} இருந்து விடுபடுகிறான், வேறு எவரும் விடுபடுவதில்லை. மற்றொன்றை (சுயத்தை) அறிந்தவன் உயர்ந்த புத்தியை அடைந்து, பிழையில் இருந்து விடுபடுகிறான்[5].(16) உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை புலப்படாத நிலையில் இருந்து தோன்றி, மீண்டும் புலப்படாத நிலைக்குள்ளேயே மறைந்து போகின்றன. நான் அவனை அறிவதில்லை. அவனும் என்னை அறிவதில்லை. என்னைப் பொறுத்தவரையில், துறவு இன்னும் எனதாகவில்லை[6].(17) பலமற்றவன் எந்த உடலில் இருந்து தன் செயல்கள் அனைத்தையும் செய்கிறானோ அவன் தன் செயல்களுக்கான கனிகளை இன்புறவோ, பொறுத்துக் கொள்ளவோ செய்கிறான்.(18) அந்தச் செயல் மனச்செயலாக இருந்தால் அதன் விளைவுகளும் மனத்தால் தாங்கவோ, இன்புறவோ கூடியதாக இருக்கும், அஃது உடலைக் கொண்டு செய்யப்படுவதாக இருந்தால், அதன் விளைவுகளும் உடலால் தாங்கவோ, இன்புறவோ கூடியதாக இருக்கும்" {என்றார் வைசம்பாயனர்}.(19)
[5] கும்பகோணம் பதிப்பில், "தத்வஞானமில்லாதவனோ பராபரங்களை அறிந்தவனும், அபிமானமற்றவனும், ஸகுணப் பிரம்மத்தை அறிந்தவனுமாகிப் (பிறகு) மேலான பிரம்மஞானத்தை அடைந்து அஜ்ஞானத்திலிருந்து விடப்படுகிறான்" என்றிருக்கிறது.[6] கும்பகோணம் பதிப்பில், "(முக்தனானவன்) அறியமுடியாத வஸ்துவினிடமிருந்து வந்தவன், மறுபடியும் அறியமுடியாத வஸ்துவை அடைந்தான். நானும் அவனை அறிகிறேனில்லை. அவனும் என்னை அறிகிறானில்லை; எனக்கோ வைராக்யமுண்டாகவில்லை" என்றிருக்கிறது.
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |