Word of Gandhari! | Mausala-Parva-Section-02 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : துவாரகையில் தீய சகுனங்களைக் கண்ட கிருஷ்ணன்; காந்தாரியின் சாபத்தை நினைத்து அதை உண்மையாக்க விரும்பியது; யாதவர்களைத் தீர்த்தயாத்திரை செல்லக் கட்டளையிட்டது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விருஷ்ணிகளும், அந்தகர்களும் (எக்கணமும் நிகழுமென அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பேரிடரைத் தவிர்க்க) இவ்வாறு முயற்சித்தபோது, உடல் வடிவம் கொண்ட காலன் ஒவ்வொருநாளும் அவர்களுடைய இல்லங்களில் திரிந்து கொண்டிருந்தான்.(1) பயங்கரமும், கடுமையும் நிறைந்த மனிதனாக அவன் தெரிந்தான். வழுக்கைத் தலை கொண்ட அவன், நிறத்தில் கறுப்பும் பழுப்பும் கொண்டவனாக இருந்தான். சில வேளைகளில் விருஷ்ணிகள் அவனைத் தங்கள் இல்லங்களுக்குள் உற்று நோக்குபவனாகக் கண்டார்கள்.(2) விருஷ்ணிகளுள் வலிமைமிக்க வில்லாளி அவன் மீது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினாலும், அவன் உயிரினங்கள் அனைத்தின் அந்தகனின்றி வேறில்லை என்பதால் எக்கணையும் அவனைத் துளைப்பதில் வெல்லவில்லை.(3)
நாளுக்கு நாள் காற்று பலமாக வீசியது, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவை முன்னறிவிக்கும் பயங்கரமான பல்வேறு தீய சகுனங்கள் எழுந்தன.(4) வீதிகளில் எலிகளும், சுண்டெலிகளும் மொய்த்துக் கொண்டிருந்தன. எந்த வெளிப்படை காரணமும் இன்றி மண்குடங்கள் பிளவுபட்டவையாக, உடைந்தவையாகத் தெரிந்தன. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் முடி மற்றும் நகங்களை எலிகளும், சுண்டெலிகளும் தின்றன.(5) சாரிகைகள் {நாகணவாய்ப் பட்சிகள் / பூவைப் பறவைகள்} விருஷ்ணிகளின் வீடுகளுக்குள் அமர்ந்து கொண்டே {சீசீ கூசீ என்ற} குற்றொலிகளை எழுப்பிக் கொண்டிருந்தன. அந்தப் பறவைகளால் உண்டான ஒலி இரவும், பகலும் குறுகிய நேரமும் நிற்கவில்லை.(6)
ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஸாரஸங்கள், ஆந்தையின் கூவலைப் பின்பற்றுவதும், ஆடுகள் குள்ளநரிகளின் ஊளையைப் பின்பற்றுவதும் கேட்கப்பட்டன.(7) மங்கிய நிறம் கொண்டவையும், சிவந்த நிறக் கால்களைக் கொண்டவையுமான {கபோதங்களெனும்} பறவைகள் பலவும் காலனால் தூண்டப்பட்டு அங்கே தோன்றின. புறாக்கள் எப்போதும் விருஷ்ணிகளின் வீடுகளில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தன.(8) பசுக்களுக்குக் கழுதைகளும், கோவேறு கழுதைகளுக்கு யானைகளும் பிறந்தன. நாய்களுக்குப் பூனைகளும், கீரிப்பிள்ளைக்கு எலியும் பிறந்தன.(9)
பாவச்செயல்களைச் செய்யும் விருஷ்ணிகள் வெக்கமெதையும் உணர்வதாகக் காணப்படவில்லை. அவர்கள் பிராமணர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களிடம் அலட்சியம் காட்டினர்.(10) அவர்கள் தங்கள் ஆசான்களையும், பெரியோர்களையும் அவமதித்துத் தாழ்த்தினர். ராமனும் {பலராமனும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} மட்டும் வேறு வகையில் செயல்பட்டனர். மனைவியர் கணவர்களை வஞ்சித்தனர், கணவர்கள் மனைவியரை வஞ்சித்தனர்.(11) நெருப்பு மூட்டப்பட்ட போது அதன் தழல்கள் இடப்புறம் நோக்கி எரிந்தன. சில வேளைகளில் அவை நீல மற்றும் சிவப்பு நிற காந்தியுடன் தழல்களைச் செலுத்தின.(12)
சூரியன் அந்த நகரத்தில் எழும்போதோ, மறையும்போது, மனித வடிவிலான தலைற்ற முண்டங்களால் அது சூழப்பட்டதாகக் காணப்பட்டது.(13) சமையலறைகளில் நன்கு சமைக்கப்பட்ட தூய்மையான உணவை உண்பதற்காகப் படைக்கும்போது அதில் பல்வேறு வகையான எண்ணற்ற புழுக்கள் காணப்பட்டன.(14) கொடைகளைப் பெறும் பிராமணர்கள் அந்த நாளுக்கு அல்லது (அந்த நிகழ்வு நடக்கும்) அந்த நேரத்திற்கு ஆசி கூறும்போது, அல்லது உயர் ஆன்ம மனிதர்கள் அமைதியான ஜபத்தில் ஈடுபடும்போது, எண்ணற்ற மனிதர்கள் ஓடும் ஒலி கேட்கப்படுகிறது.(15) நட்சத்திரக்கூட்டங்கள் மீண்டும் மீண்டும் கோள்களால் தாக்கப்பட்டன. எனினும் யாதவர்களில் ஒருவரும் தன் பிறவிக்கான நட்சத்திரக்கூட்டத்தின் காட்சியைப் பெற முடியவில்லை[1].(16) அவர்களுடைய வீடுகளில் பாஞ்சஜன்யம் முழக்கப்படும்போது, கழுதைகளின் முரண்பட்ட பயங்கரக் குரல் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உரக்கக் கனைத்தது[2].(17)
[1] கும்பகோணம் பதிப்பில், "புண்யாஹ மந்திரம் சொல்லும்படி செய்து மஹாத்மாக்கள் ஜபம் செய்து கொண்டிருக்கும்போது, ஜனங்கள் ஓடும் ஒலிகள் கேட்கப்பட்டன; ஒருவனும் காணப்படவில்லை. அவர்களெல்லாரும் க்ரஹங்களால் அடிக்கடி ஹிம்ஸிக்கப்படும் ஒருவர் மற்றவருடைய நக்ஷத்திரத்தைப் பார்த்தார்கள். எவ்விதத்திலுல் தம் நக்ஷத்திரத்தைப் பார்க்கவில்லை" என்றிருக்கிறது.[2] "சங்கொலி நல்ல நிமித்தமாகக் கருதப்படுகிறது. எனினும், யாதவர்களின் வீடுகளில் சங்கு முழக்கப்படும்போது, அதைச் சுற்றிலும் கழுதைகள் கனைக்கின்றன. இது தீய நிமித்தமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
காலத்தின் விபரீதப் போக்கைக் குறிக்கும் அடையாளங்களைக் கண்டு, புதுநிலவு நாள் {அமாவாசை} பதிமூன்றாவது (மற்றும் பதினான்காவது) சந்திர நாளுடன் இணங்குவதைக் கண்டும் யாதவர்களை அழைத்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்} அவர்களிடம்,(18) "பதினான்காவது சந்திர நாள் {திதி} மீண்டும் ஒருமுறை ராஹுவினால் பதினைந்தாவதாகச் செய்யப்பட்டது. அத்தகைய ஒரு நாள் பாரதர்களின் பெரும்போர் நடந்த காலத்தில் தோன்றியது. அது மீண்டும் நமது அழிவுக்காகத் தோன்றுகிறது" என்றான்.(19). கேசியைக் கொன்றவனான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, காலம் காட்டும் நிமித்தங்களை நினைத்து முப்பத்தாறாம் ஆண்டு வந்ததெனவும், காந்தாரி தன் பிள்ளைகளின் மரணத்திலும், தன் உற்றார் உறவினர் அனைவரையும் இழந்ததிலும் ஏற்பட்ட துயரில் எரிந்து சொன்னது நடக்கப் போகிறது என்பதையும் புரிந்து கொண்டான்.(20,21)
{கிருஷ்ணன், தனக்குள்ளேயே}, 'போருக்காக இருபடைகளும் அணிவகுக்கப்பட்ட காலத்தில், யுதிஷ்டிரர் கண்ட மிகக் கொடிய தீச்சகுனங்களைப் போலவே தற்போதும் நேர்கிறது' {என்று நினைத்தான்}. இவ்வாறு சொன்ன வாசுதேவன் {கிருஷ்ணன்}, காந்தாரியின் சொற்களை உண்மையாக்கக் கூடிய நிகழ்வுகளை உண்டாக்க முயற்சி செய்தான். பகைவரைத் தண்டிப்பவனான அவன் ஏதாவது புனித நீர்நிலைக்குப் புனிதப் பயணம் {தீர்த்தயாத்திரை} மேற்கொள்ளுமாறு விருஷ்ணிகளுக்கு ஆணையிட்டான்.(23) பெருங்கடலின் புனித நீரில் நீராட விருஷ்ணிகள் கடற்கரைக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கேசவனின் ஆணையைத் தூதர்கள் அறிவித்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(24)
மௌஸலபர்வம் பகுதி – 2ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |