Thursday, January 09, 2020

பரமெய்திய நாயகன்! - மௌஸலபர்வம் பகுதி – 4

Krishna ascended to heaven! | Mausala-Parva-Section-4 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பலராமனைக் கண்டடைந்த கிருஷ்ணன்; தாருகனைப் பாண்டவரிடம் அனுப்பியது; சேஷனாகிக் கடலிற் சென்ற பலராமன்; உடலைக் கைவிட யோகத்தில் கிடந்த கிருஷ்ணன்; கிருஷ்ணனின் பாதங்களைத் தாக்கிய ஜரன்; அவனுக்கு முக்தியளித்துப் பரம்பதமெய்திய கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தாருகன், கேசவன், பப்ரு ஆகியோர் அந்த இடத்தைவிட்டு அகன்று, ராமன் {பலராமன்} இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றனர். அளவற்ற சக்தி கொண்ட அந்த வீரன், பூமியில் தனிமையான ஓர் இடத்தில் மரமொன்றில் சாய்ந்தவாறு சிந்தனையுடன் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டனர்.(1) பேரான்மா கொண்ட ராமனைக் கொண்ட கிருஷ்ணன், தாருகனுக்கு ஆணையிடும் வகையில், "குருக்களிடம் சென்று யாதவர்களுடைய படுகொலையைப் பார்த்தனுக்கு அறிவிப்பாயாக. பிராமணர்களின் சாபத்தின் மூலம் யாதவர்களுக்கு நேர்ந்த இந்த முடிவைக் கேட்டு அர்ஜுனன் இங்கே விரைவாக வரட்டும்" என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட தாருகன், துயரில் புலனுணர்வை இழந்தவனாகக் குருக்களின் (தலைநகரை நோக்கி) தேரில் சென்றான்.(3)


தாருகன் சென்ற பிறகு, தன்னிடம் காத்திருக்கும் பப்ருவைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்} அவனிடம் இந்தச் சொற்களில், "பெண்களைப் பாதுகாப்பதற்கு நீ விரைந்து செல்வாயாக. (அவர்களிடம் உள்ள) செல்வத்தால் ஈர்க்கப்படும் கள்வர்கள் அவர்களுக்குத் தீங்கேதும் செய்யாதிருக்கட்டும்" என்றான்.(4)

கேசவனால் இவ்வாறு சொல்லப்பட்ட பப்ரு, மதுவால் இன்னும் கதியற்றவனாகவும், தன் உற்றார் உறவினர்கள் கொல்லப்பட்டதால் மகிழ்ச்சியற்றவனாகவும் அங்கிருந்து சென்றான். அவன் கேசவனின் அருகில் சிறிது நேரம் ஓய்ந்திருந்து, அங்கிருந்து புறப்பட்டபோது, வேடனின் கைகளின் மூலம் ஒரு மரச்சம்மட்டியில் இணைக்கப்பட்டிருந்த இரும்பு உலக்கையானது {முசலமானது}, யாதவக் குலத்தில் எஞ்சியிருந்த ஒரேயொருவனும், பிராமணர்களால் சபிக்கப்பட்டவனுமான அவன் {பப்ரு} மீது திடீரெனப் பாய்ந்து அவனைக் கொன்றது[1].(5) பெருஞ்சக்தி கொண்ட கேசவன், பப்ரு கொல்லப்பட்டதைக் கண்டு தன் அண்ணனிடம், "ஓ! ராமரே {பலராமரே}, பெண்களை உற்றார் உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை எனக்காக இங்கே காத்திருப்பீராக" என்றான்.(6)

[1] "இந்த ஸ்லோகம் அமைந்திருக்கும் இலக்கணத்தை நீலகண்டரின் விளக்கத்தின்படி பொருள் கொண்டால், 'வேடனின் கரங்களால் ஒரு மரச்சம்மட்டியில் இணைக்கப்பட்ட இரும்பு உலக்கையானது, சாபம் பெற்றிருந்த பப்ருவிடம் தானே சென்று கொன்றது' என்று வரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கேசவரால் உத்தரவு செய்யப்படவனும், மதத்தால் கவரப்பட்டவனும், ஞாதிகளுடைய வதத்தினால் வருத்தமுற்றவனுமான அவன் புறப்பட்டான். ஒருவனாக விரைந்து செல்லுகின்றவனும், பிராம்மணனால் சபிக்கப்பட்டவனுமான அந்தப் பப்ருவைக் கிருஷ்ணருக்கருகிலேயே யந்திரத்தில் கட்டப்பட்டிருந்ததும், பெரிதுமான வேடனுடைய உலக்கையானது வேகமாக (விழுந்து) கொன்றது" என்றிருக்கிறது.

துவாராவதி நகரத்திற்குள் நுழைந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் தந்தையிடம் {வசுதேவரிடம்}, "தனஞ்சயன் {அர்ஜுனன்} வரும்வரை நம் வீட்டுப் பெண்கள் அனைவரையும் பாதுகாப்பீராக.(7) காட்டின் எல்லைப்புறத்தில் ராமர் {பரசுராமர்} எனக்காகக் காத்திருக்கிறார். நான் அவரை இன்று சந்திக்கப் போகிறேன். குரு குலத்தில் முதன்மையான க்ஷத்ரியர்களுக்கு நேர்ந்த பேரழிவை நான் ஏற்கனவே கண்டதைப் போலவே யதுக்களின் பேரழிவையும் கண்டேன்.(8) என்னருகில் யதுக்கள் இல்லாமல் யாதவர்களின் நகரத்தை என்னால் காண இயலாது[2]. காட்டுக்குச் சென்று, ராமரின் {பலராமரின்} துணையுடன் நான் தவம்பயிலப் போகிறேன் என்பதை அறிவீராக" என்றான் {கிருஷ்ணன்}.(9)

[2] "அந்த வீரர்கள் இல்லாத யதுக்களின் நகரத்தைக் காண்பதற்கு என்னால் முடியாது என்ற பொருள்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தன் தந்தையின் பாதத்தைத் தலையால் தீண்டி, விரைவாக அவரது முன்னிலையைவிட்டு அகன்றான். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் பிள்ளைகளிடம் இருந்து கவலையால் உரத்த ஓலம் எழுந்தது.(10) உரக்க ஓலமிட்டு அழுத அந்தப் பெண்மணிகளின் ஒலியைக் கேட்டு, தன் பாதச் சுவடுகளை மீண்டும் பின்பற்றிச் சென்று, அவர்களிடம், "அர்ஜுனன் இங்கே வருவான். மனிதர்களில் முதன்மையான அவன் உங்களைத் துயரில் இருந்து விடுவிப்பான்" என்றான்.(11)

பிறகு, காட்டுக்குச் சென்ற கேசவன் {கிருஷ்ணன்}, அங்கே தனிமையான இடத்தில் அமர்ந்திருக்கும் ராமனைக் கண்டான். ராமன் யோகத்தில் நிலைத்திருப்பதையும், அவன் வாயில் இருந்து ஒரு பெரும்பாம்பு வெளியே வந்ததையும் அவன் கண்டான்.(12) அந்தப் பாம்பு வெண் நிறத்தில் இருந்தது. ஆயிரம் தலைகளைக் கொண்டவனும், மலையைப் போன்ற பெருவடிவம் கொண்டவனும், சிவந்த கண்களைக் கொண்டவனுமான அந்த உயர் ஆன்ம நாகன் {பலராமன்}, (இவ்வளவு காலம் தான் வசித்த அந்த) மனித உடலை விட்டகன்று கடலுக்கு வழிவகுக்கும் பாதையில் சென்றான்.(13) சமுத்திரனும், தெய்வீகப் பாம்புகள் பலரும், புனித ஆறுகள் பலவும் அவனைக் கௌரவமாக வரவேற்பதற்காக அங்கே இருந்தனர். அங்கே கார்க்கோடகன், வாசுகி, தக்ஷகன், பிருதுசிரவஸ், வருணன் {அருணன்}, குஞ்சரன்,(14) மிச்ரி, சங்கன், குமுதன், புண்டரீகன், உயர் ஆன்ம திருதராஷ்டிரன், ஹிராதன், கிராதன், கடுஞ்சக்தி கொண்ட சிதிகந்தன் {சிதிப்ருஷ்டன்}, {நிகேது}, சக்ரமந்தன், அதிஷண்டன்,(15) முதன்மையான நாகர்களாக அழைக்கப்படும் துர்முகன், அம்பரீஷன், மற்றும் மன்னன் வருணன் ஆகியோர் அங்கே இருந்தனர். முன் சென்று வரவேற்று, அவனுக்கு அர்க்கியமும், கால் கழுவ நீரும் பல்வேறு சடங்குகளுடன் அளித்து, அந்த வலிமைமிக்க நாகனை வழிபட்டு வணங்கிய அவர்கள் அனைவரும் அவனிடம் வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர்.(16)

அண்ணன் {பலதேவன்/ பலராமன்} இவ்வாறு (மனிதர்களின்) உலகில் இருந்து சென்றதும், தெய்வீகப் பார்வையைக் கொண்டவனும், அனைத்தின் கதியையும் முழுமையாக அறிந்தவனுமான வாசுதேவன் சிந்தனையிலேயே சில காலம் காட்டில் தனியாகத் திரிந்து கொண்டிருந்தான். பெருஞ்சக்தி கொண்ட அவன் வெறும் பூமியில் அமர்ந்தான்.(17) அதற்கு முன்பு, முற்காலத்தில் காந்தாரி முன்னறிவிக்கும் வகையில் சொன்ன சொற்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தான். (கிருஷ்ணனின் வீட்டில் விருந்தினராக வந்திருந்த) துர்வாசர் உண்டு எஞ்சிய பாயஸத்தை அவனுடைய உடலில் பூசிய போது சொன்ன சொற்களையும் அவன் நினைவுகூர்ந்தான்.(18) விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவையும், அதற்கு முன்பு நடந்த குருக்களின் படுகொலையையும் நினைத்துப் பார்த்த அந்த உயர் ஆன்மா {கிருஷ்ணன்}, (உலகை விட்டு தான் செல்ல வேண்டிய) நேரம் வந்துவிட்டதெனத் தீர்மானித்தான். அப்போது அவன் தன் புலன்களை (யோகத்தில்) அடக்கினான்.(19) அனைத்தையும் குறித்த உண்மையை அறிந்தவனான வாசுதேவனே, பரம தேவனென்றாலும், அனைத்து ஐயங்களையும் விலக்குவதற்காகவும், (மனித இருப்பின் காரியத்தில்) குறிப்பிட்ட விளைவுகளை நிறுவுவதற்காகவும், மூவுலகங்களை ஆதரித்து அத்ரி மகனின் {துர்வாசரின்} சொற்களை உண்மையாக்குவதற்காகவும் அவன் இறக்க விரும்பினான்[3].(20)

[3] "பாயஸம் பூசப்பட்டபோது கிருஷ்ணனின் உடலில் அனைத்துப் பகுதிகளிலும் பூசப்பட்டாலும், அவனுடைய பாதத்தில் பூசப்படவில்லை. அத்ரியின் மகன் துர்வாசர், கிருஷ்ணனின் பாதங்களைத் தவிர்த்து அனைத்தையும் காயப்படுத்த இயலாததாகச் செய்திருந்தான். அந்த முனிவரின் சொற்களை உண்மையாக்கும் வகையில் கிருஷ்ணன் இறக்க விரும்பினான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எல்லாப் பொருள்களின் தத்வத்தையும் உணர்ந்தவரான அவர் தாம் தேவராக இருந்தும் மூவுலகங்களையும் பரிபாலிப்பதற்காகவும், துர்வாஸருடைய சாபத்தைக் காப்பதற்காகவும் சரீரத்தை விட வேண்டிய நிமித்த காரணத்தை விரும்பினார்" என்றிருக்கிறது.

கிருஷ்ணன், தன்னுடைய புலன்கள், வாக்கு, மனம் ஆகியவை அனைத்தையும் கட்டுப்படுத்தி உயர்ந்த யோகத்தில் {படுத்துக்} கிடந்தான். ஜரன் என்ற பெயரைக் கொண்ட ஒரு கடும் வேடன், மான்களை விரும்பி அங்கே வந்தான்.(21) உயர்ந்த யோகத்தில் பூமியில் நீண்டு கிடந்த கேசவனை மானாக நினைத்து, ஒரு கணையைக் கொண்டு அவனது குதிங்காலில் துளைத்து, தன் இரையைக் கைப்பற்றுவதற்காக அந்த இடத்திற்கு விரைந்து வந்தான்.(22) அங்கே வந்த {வேடன்} ஜரன், யோகத்தில் குவிந்தவனும், பல கைகளைக் கொண்டவனும், மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியிருந்தவனுமான ஒரு மனிதனைக் கண்டான். தன்னைக் குற்றவாளியாக நினைத்து அச்சத்தில் நிறைந்த அவன் கேசவனின் பாதங்களைப் பற்றினான்.(23) அந்த உயர் ஆன்மா அவனுக்கு {ஜரனுக்கு} ஆறுதலளித்த பிறகு, தன் காந்தியால் மொத்த ஆகாயத்தையும் நிறைத்தபடியே மேல்நோக்கி உயர்ந்தான்.(24)

அவன் {கிருஷ்ணன்} சொர்க்கத்தை அடைந்தபோது, வாசவன், அஸ்வினி இரட்டையர்கள், ருத்ரன், ஆதித்யர்கள், வசுக்கள், விஸ்வேதேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், முதன்மையான கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்கள் ஆகியோர் முன் வந்து அவனை வரவேற்றனர்.(25) அப்போது, ஓ! மன்னா, சிறப்புமிக்கவனும், கடுஞ்சக்தி கொண்டவனும், அனைத்தையும் படைத்து அழிப்பவனும், யோக ஆசானுமான நாராயனன், தன் காந்தியால் சொர்க்கத்தை நிறைத்தபடியே, நினைத்தற்கரியதான தன்னுலகை {வைகுண்டத்தை} அடைந்தான்.(26) அப்போது, தேவர்கள், (தெய்வீக) முனிவர்கள், சாரணர்கள், கந்தர்வர்களில் முதன்மையானவர்கள், அழகிய அப்சரஸ்கள், சித்தர்கள் மற்றும் சாத்யர்கள் பலரையும் கிருஷ்ணன் சந்தித்தான். அவர்கள் அனைவரும் பணிவுடன் குனிந்து அவனை வழிபட்டனர்.(27) ஓ! ஏகாதிபதி, தேவர்கள் அனைவரும் அவனை வணங்கினர், முனிவர்களில் முதன்மையானோர் பலரும், அனைவரின் தலைவனான அவனை வழிபட்டனர். கந்தவர்கள் அவனது புகழைப் பாடிக் கொண்டிருந்தனர், இந்திரனும் இன்பமாக அவனைத் துதித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(28)

மௌஸலபர்வம் பகுதி – 4ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English