Arjuna in Dwaraka! | Mausala-Parva-Section-5 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : ஹஸ்தினாபுரம் சென்ற தாருகன்; யாதவர்கள் அழிந்ததை பாண்டவர்களுக்குத் தெரிவித்தது; துவாரகை சென்று கிருஷ்ணனின் மனைவியரைத் தேற்றி வசுதேவரிடம் சென்ற அர்ஜுனன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதேவேளையில் தாருகன், குருக்களிடம் சென்று, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பிருதையின் {குந்தியின்} மகன்களைக் கண்டு, இரும்பு உலக்கைகளைக் கொண்டு விருஷ்ணிகள் எவ்வாறு ஒருவரையொருவர் கொன்றனர் என்பதைச் சொன்னான்.(1) போஜர்கள், அந்தகர்கள் மற்றும் குகுரர்களுடன் சேர்ந்து விருஷ்ணிகள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கேட்ட பாண்டவர்கள், துயரால் எரிந்து பெருங்கலக்கமடைந்தனர்.(2) கேசவனின் அன்பு நண்பனான அர்ஜுனன், அவர்களிடம் {பாண்டவர்களிடம்} விடைபெற்றுக் கொண்டு, தன் தாய்மானை {வசுதேவரைக்} காணப் புறப்பட்டுச் சென்றான். அவன் அனைத்திற்கும் அழிவு ஏற்படும் என்று சொன்னான்[1].(3)
[1] கும்பகோணம் பதிப்பில், "வாஸுதேவருக்குப் பிரியமுள்ள தோழனான அர்ஜுனன் அவர்களிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு அம்மானைப் பார்ப்பதற்குச் சென்றான். "இது இல்லை; என்றும் சொன்னான்" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், "இப்படி நேர்ந்திராது என்பது" என்றிருக்கிறது.
ஓ! பலமிக்க மன்னா {ஜனமேஜயா}, தாருகனோடு சேர்ந்து விருஷ்ணிகளின் நகரத்திற்குச் சென்ற அந்த வீரன், கணவனை இழந்த ஒரு பெண்ணைப் போலத் தெரிந்த துவாரகை நகரத்தைக் கண்டான்.(4) முன்னர், அண்டத்தின் தலைவனையே {கிருஷ்ணனையே} தங்கள் பாதுகாவலனாகக் கொண்டிருந்த அந்தப் பெண்கள், இப்போது தலைவனற்றவர்களாக இருந்தனர். தங்களைப் பாதுகாக்க பார்த்தன் {அர்ஜுனன்} வந்திருப்பதைக் கண்ட அவர்கள் அனைவரும் உரக்க ஓலமிட்டனர்.(5) பதினாறாயிரம் பெண்கள் {16,000} வாசுதேவனை {கிருஷ்ணனைத்} திருமணம் செய்திருந்தனர். உண்மையில், அர்ஜுனன் வருவதைக் கண்ட அவர்கள் அனைவரும் கவலையால் உரக்கக் கதறினர்.(6)
கிருஷ்ணனின் பாதுகாப்பை இழந்த அந்த அழகிகளையும், அவர்களது மகன்களையும் குரு இளவரசன் சந்தித்ததும், பார்வையைத் தடுக்கும் கண்ணீரினால் அவனால் அவர்களைப் பார்க்க முடியவில்லை.(7) துவாரகையெனும் ஆறானது, விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் அதன் நீராகவும், குதிரைகளை மீன்களாகவும், தேர்களைத் தெப்பங்களாகவும், இசைக்கருவிகளின் ஒலிகளையும், தேர்களின் சடசடப்பொலியையும் அதன் அலைகளாகவும், வீடுகள், மாளிகைகள் மற்றும் பொதுச் சதுக்கங்கள் ஆகியவற்றைத் தடாகங்களாகவும் கொண்டிருந்தது. ரத்தினங்களும், விலைமதிப்புமிக்கக் கற்களும் அதன் பாசிகளாக இருந்தன. வஜ்ரதாலான சுவர்களை {பிரகாரங்களை} அதில் மிதக்கும் மலர் மாலைகளாகக் கொண்டிருந்தது. வீதிகளும், சாலைகளும், பரப்பில் சுழிகளுடன் கூடிய பெரும் நீரோட்டமாக இருந்தன. பெரிய திறந்த வெளிகள் பெரும் ஏரிகளாக இருந்தன. ராமனும் {பலராமனும்}, கிருஷ்ணனும் அதன் இரு பெரும் முதலைகளாக இருந்தனர். இனிமையான அந்த ஆறு இப்போது காலனின் வலைக்குள் கட்டப்பட்ட கடும் வைதரணீ ஆற்றைப் போல அர்ஜுனனுக்குத் தெரிந்தது.(8-10)
உண்மையில், பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசவன் மகன் {அர்ஜுனன்}, விருஷ்ணி வீரர்களை இழந்திருந்த அந்த நகரத்தை இவ்வாறே கண்டான்.(11) அழகை இழந்து, முற்றிலும் மகிழ்ச்சியற்றதாக இருந்த அது, குளிர் காலத் தாமரையைப் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தியது. துவாரகை அளிக்கும் காட்சியைக் கண்டும், கிருஷ்ணனின் எண்ணற்ற மனைவியரைக் கண்டும், கண்ணீரால் குளித்த கண்களுடன் கூடிய அர்ஜுனன் உரக்க ஓலமிட்டபடியே பூமியில் விழுந்தான்.(12) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சத்ரஜித்தின் மகளான சத்யை {சத்தியபாமா}, ருக்மிணி ஆகியோரும் தனஞ்சயனுக்கு அருகில் கீழே விழுந்து துன்பத்துடன் உரக்க ஓலமிட்டனர்.(13) அவனை எழச் செய்து ஒரு பொன் இருக்கையில் அவனை அமரச் செய்தனர். பெண்கள், அந்த உயர் ஆன்மாவைச் சூழ்ந்து அமர்ந்து, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.(14) கோவிந்தனைப் புகழ்ந்து, அந்தப் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அவர்களுக்கு ஆறுதலளித்து, தன் தாய்மானை {வசுதேவரைக்} காணச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(15)
மௌஸலபர்வம் பகுதி – 5ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |