Thursday, January 09, 2020

கிருஷ்ணனின் சொற்கள்! - மௌஸலபர்வம் பகுதி – 6

The words of Krishna! | Mausala-Parva-Section-6 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : யாதவ அழிவுக்கான காரணத்தை அர்ஜுனனிடம் சொல்லிப் புலம்பிய வசுதேவர்; கிருஷ்ணன் சொன்னதை அர்ஜுனனிடம் சொன்னது; நாட்டையும் ஒப்படைத்துவிட்டு உயிர்விட நிச்சயித்த வசுதேவர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தமது மகன்கள் குறித்த சோகத்தினால் எரிந்து தரையில் கிடந்தவரும், வீரரும், உயர் ஆன்மாவுமான அனகதுந்துபியை {வசுதேவரை} அந்தக் குரு இளவரசன் {அர்ஜுனன்} கண்டான்.(1) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அகன்ற மார்பையும், வலி கரங்களையும் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன் மாமனைவிட அதிகம் பீடிக்கப்பட்டுக் கண்ணீரில் குளித்த கண்களுடன், தன் மாமனின் பாதங்களைத் தீண்டினான்.(2) ஓ! பகைவரைக் கொல்பவனே {ஜனமேஜயனே}, வலிய கரங்களைக் கொண்ட அனகதுந்துபி, தமது தங்கை மகனின் தலையை முகர விரும்பினாலும் அதைச் செய்யத் தவறினார்.(3) வலிய கரங்களைக் கொண்டவரும், ஆழமாகப் பீடிக்கப்பட்டவருமான அந்த முதிய மனிதன் {வசுதேவர்}, தமது கரங்களால் பார்த்தனை {அர்ஜுனனை} ஆரத்தழுவிக் கொண்டு, தமது மகன்கள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள், மகள்களின் மகன்கள் மற்றும் நண்பர்களை நினைத்து உரக்க அழுதார்.(4)


வசுதேவர், "ஓ! அர்ஜுனா, பூமியின் மன்னர்கள் அனைவரையும், தைத்தியர்களை நூறுமுறையும் அடிபணியச்செய்த அந்த வீரர்களைக் காணாமல் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். நான் இறப்பது கடினம் என்பதை நான் காண்கிறேன்.(5) ஐயோ, ஓ! பார்த்தா, அர்ஜுனனின் அன்புக்குரிய சீடர்களும், அவனால் பெரிதும் மதிக்கப்பட்டவர்களுமான அந்த இரு வீரர்களின் {சாத்யகி மற்றும் பிருத்யும்னன் ஆகியோரின்} குற்றத்தால் விருஷ்ணிகள் அழிந்தனர்.(6) விருஷ்ணிகளில் முதன்மையான அதிரதர்களாக எந்த இருவர் கருதப்பட்டனரோ, உரையாடல்களின் போது யாவரின் பெயரைக் குறிப்பிட்டால் நீ பெருமைப்படுவாயோ,(7) ஓ! குரு குலத்தின் தலைவா, கிருஷ்ணனின் அன்புக்குரியவர்களாக யாவர் இருந்தனரோ, ஓ! தனஞ்சயா, அந்த இருவரே {சாத்யகி மற்றும் கிருதவர்மன் ஆகியோரே} விருஷ்ணிகளின் அழிவுக்கு முக்கியக் காரணங்களாக இருந்தனர்.(8)

ஓ! அர்ஜுனா நான் சிநியின் மகனையோ {சாத்யகியையோ}, ஹிருதிகளின் மகனையோ {கிருதவர்மனையோ} நான் நிந்திக்கவில்லை. அக்ரூரனையோ, ருக்மிணியின் மகனையோ {பிரத்யும்னனையோ} நான் நிந்திக்கவில்லை. (முனிவர்களின்) சாபமே ஒரே காரணம் என்பதில் ஐயமில்லை.(9) கேசி, கம்சன், செருக்கில் பெருகிய சைத்யன் {சேதி நாட்டு சிசுபாலன்}, நிஷாதர்களின் ஆட்சியாளனுடைய மகனான ஏகலவ்யன், கலிங்கர்கள், மகதர்கள், கந்தாரர்கள், காசியின் மன்னன், பாலைவனத்திற்கு மத்தியில் ஒன்று கூடியிருந்த பல ஆட்சியாளர்கள், கிழக்குக்கும், தெற்குக்கும் உரிய பல வீரர்கள், மலைசார்ந்த பகுதிகளைச் சேர்ந்த பல மன்னர்கள் ஆகியோரை அழிப்பதற்குத் தன் ஆற்றலை வெளிப்படுத்திய அண்டத்தின் தலைவனான மதுசூதனன், ஐயோ, முனிவர்கள் இட்ட சாபத்தின் மூலம் எழும் பேரிடரில் எவ்வாறு அலட்சியமாக இருந்தான்?(10-12)

நீயும், நாரதரும், முனிவர்களும், அவனை மங்கா மகிமை கொண்ட, பாவமற்ற நித்திய தேவன் கோவிந்தனாக அறிவீர்கள்.(13) ஐயோ, பலமிக்க விஷ்ணுவேயான அவன், எதிலும் தலையிடாமல், தன் உற்றார் உறவினரின் அழிவைக் கண்டிருக்கிறான். என் மகனே {கிருஷ்ணனே} இவையனைத்தையும் நடக்க அனுமதித்திருக்க வேண்டும்.(14) அவனே அண்டத்தின் தலைவனாக இருந்தான். எனினும், ஓ! பகைவரை எரிப்பவனே, காந்தாரி மற்றும் முனிவர்களின் சொற்களை அவன் பொய்யாக்க விரும்பவில்லை.(15) ஓ! வீரா, அஸ்வத்தாமனால் கொல்லப்பட்ட உன் பேரனை நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் சக்தியின் மூலம் அவன் உயிர்மீட்டான்.(16) எனினும், உன்னுடைய நண்பனான அவன் {கிருஷ்ணன்}, தன் உற்றார் உறவினரைக் காக்க விரும்பவில்லை.

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கண்டு, அவன் என்னிடம் இந்தச் சொற்களைச் சொன்னான், "இறுதியில் நம் குலத்திற்கும் அழிவு வந்தது.(17,18) துவாராவதி நகருக்கு பீபத்சு {அர்ஜுனன்} வருவான். விருஷ்ணிகளுக்கு நேரிட்ட பேரழிவை அவனுக்குச் சொல்வீராக.(19) யதுக்களின் அழிவைக் கேட்ட உடனேயே, வலிமையும், சக்தியுமிக்க அந்த வீரன் நிச்சயம் காலந்தாழ்த்தாமல் இங்கே வருவான்.(20) ஓ! தந்தையே, நானே அர்ஜுனன், அர்ஜுனனே நான் என்பதை அறிவீராக. நீர் செய்ய வேண்டியதை அவன் சொல்வான்.(21) பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் எது சிறந்ததோ அதைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} செய்வான். அவனே உமது ஈமச் சடங்குகளையும் செய்வான்.(22) அர்ஜுனன் சென்றதும், எந்தத் தாமதமும் இல்லாமல், சுவர்கள் {பிரகாரங்கள்}, மாடமாளிகைகளுடன் கூடிய இந்தத் துவாராவதி நகரம், பெருங்கடலால் விழுங்கப்படும்.(23) என்னைப் பொறுத்தவரையில், புனிதமான ஏதோவோரிடத்தில் ஓய்ந்திருந்து, நுண்ணறிவுமிக்க ராமரின் {பலராமரின்} துணையுடன், கடும் நோன்புகளை நோற்றுக் கொண்டு என் காலத்திற்காகக் காத்திருக்கப் போகிறேன்" என்றான்.(24)

நினைத்துப் பார்க்கமுடியாத ஆற்றலைக் கொண்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, பிள்ளைகளுடன் என்னை விட்டுவிட்டு, நான் அறியாத ஏதோவோரிடத்திற்குச் சென்றுவிட்டான்.(25) உன்னுடைய மைத்துனர்களான அந்த உயர் ஆன்மாக்கள் {பலராமன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய} இருவரையும், என் உற்றார் உறவினருக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பயங்கரப் பேரழிவையும் நினைத்து உணவனைத்தையும் கைவிட்டு, துன்பத்தால் மெலிந்திருக்கிறேன்.(26) நான் உண்ணவும் மாட்டேன், வாழவும் மாட்டேன். ஓ! பாண்டுவின் மகனே நீ என்னைச் சந்தித்தது நற்பேற்றாலேயே. ஓ! பார்த்தா, கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் நீ நிறைவேற்றுவாயாக.(27) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இந்தப் பெண்கள் அனைவருடனும், இங்கே இருக்கும் இந்தச் செல்வம் அனைத்துடனும் கூடிய இந்த நாடு இப்போது உனதாகும். என்னைப் பொறுத்தவரையில், ஓ! பகைவரைக் கொல்பவனே, எனது அன்புக்குரியதாக இருந்தாலும் என் உயிர்மூச்சைக் கைவிடுவேன்" என்றார் {வசுதேவர்}.(28)

மௌஸலபர்வம் பகுதி – 6ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English