Dwaraka drowned! | Mausala-Parva-Section-7 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : வசுதேவரைத் தேற்றி யாவரையும் இந்திரப்ரஸ்தம் செல்லச் சொன்ன அர்ஜுனன்; யோகத்தால் உடலை விட்ட வசுதேவர்; வசுதேவர், கிருஷ்ணன் ஆகியோரைத் தகனஞ்செய்த அர்ஜுனன்; கள்வர்களால் கொள்ளையிடப்பட்டது; வஜ்ரனுக்கு முடிசூட்டியது; ருக்மிணி தீக்குளித்தது; ஸத்யபாமை தவம் செய்யச் சென்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பகைவரை எரிப்பவனான பீபத்சு {அர்ஜுனன்} இவ்வாறு தன்னுடைய தாய்மாமனால் {வசுதேவரால்} சொல்லப்பட்டதும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடியவனாக, அதேபோல உற்சாகமற்றிருந்த வசுதேவரிடம்,(1) "ஓ! மாமா, விருஷ்ணி குலதைச் சேர்ந்த அந்த வீரனையும் {கிருஷ்ணனையும்}, என்னுடைய உற்றார் உறவினரான வேறு சிலரையும் இழந்திருக்கும் இந்தப் பூமியை என்னால் பார்க்க முடியவில்லை.(2) மன்னர் {யுதிஷ்டிரன்}, பீமசேனர், சகாதேவன், நகுலன், எண்ணிக்கையில் ஆறாவதாக யாஜ்ஞசேனி ஆகியோரும் இக்காரியத்தில் என்னைப் போலவே மனம் கொண்டுள்ளனர்.(3) மன்னர் புறப்படுவதற்கான காலமும் வந்துவிட்டது. நாங்கள் புறப்படுவதற்கான நேரமும் மிக அருகில் இருக்கிறது. காலப்போக்கை நன்கு அறிந்தோரில் நீர் முதன்மையானவராக இருக்கிறீர்.(4) எனினும், ஓ! பகைவரைத் தண்டிப்பவரே, விருஷ்ணி குலத்தின் பெண்கள், பிள்ளைகள் மற்றும் முதியோரை முதலில் இந்திரப்ரஸ்தத்திற்கு அனுப்புவீராக" என்றான்.(5)
தன் மாமனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, அடுத்ததாகத் தாருகனிடம் அர்ஜுனன், "தாமதமேதும் இல்லாமல் விருஷ்ணி வீரர்களில் முக்கியத் தலைவர்களை நான் காண விரும்புகிறேன்" என்றான்.(6) இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு (கொல்லப்பட்ட) பெருந்தேர்வீரர்களுக்காக வருந்தி, சுதர்மம் என்றழைக்கப்படும் யாதவர்களின் பெருஞ்சபைக்குள் நுழைந்தான்.(7) அவன் அமர்ந்ததும், பிராமணர்கள் உள்ளிட்ட குடிமக்கள் அனைவரும், நாட்டின் அமைச்சர்கள் அனைவரும் வந்து அங்கே அவனைச் சூழ்ந்து அமர்ந்தனர்.(8)
அப்போது அவர்கள் வருந்தியதைவிட அதிகம் வருந்திய பார்த்தன் {அர்ஜுனன்}, வருத்தத்திலிருந்தவர்களும், உற்சாகமற்றவர்களாக இருந்தவர்களும், உயிரில்லாத இறந்தவர்களைப் போல இருந்தவர்களுமான குடிமக்கள் மற்றும் அதிகாரிகளிடம், அந்தச் சந்தர்ப்பத்திற்குப் பொருந்திய இந்தச் சொற்களைச் சொன்னான்:(9) "விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் எஞ்சியிருப்போரை நான் என்னுடன் அழைத்துச் செல்லப் போகிறேன். விரைவில் பெருங்கடல் இந்நகரத்தை {துவாரகையை} விழுங்கப் போகிறது.(10) உங்கள் தேர்களை ஆயத்தம் செய்து, அவற்றில் உங்கள் செல்வங்கள் அனைத்தையும் வைத்துக் கொள்வீராக. (கிருஷ்ணனின் பேரனான {கொள்ளுப்பேரனான}) இந்த வஜ்ரன்[1] சக்ரப்ரஸ்தத்தில் {இந்திரப்ரஸ்தத்தில்} உங்கள் மன்னனாக இருப்பான்.(11) இன்றிலிருந்து ஏழாவது நாள் சூரிய உதயத்தில் நாம் புறப்படுவோம். தாமதமில்லாமல் ஆயத்தமாவீராக" என்றான் {அர்ஜுனன்}.(12)
[1] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னன், பிரத்யும்னன் மகன் அநிருத்தன்; அநிருத்தன் மகன் வஜ்ரன்" என்றிருக்கிறது.
தூய செயல்களைக் கொண்ட பிருதையின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பாதுகாப்பை அடையும் ஆவலில் இருந்த அவர்கள் அனைவரும் தங்கள் ஆயத்தங்களை விரைவாகச் செய்தனர்.(13) அர்ஜுனன் அந்த இரவைக் கேசவனின் மாளிகையில் கழித்தான். அவன், திடீரெனப் பெருந்து துன்பத்தில் மூழ்கிக் கலக்கமடைந்தான்.(14) காலை விடிந்ததும், பெருஞ்சக்தியையும், ஆற்றலையும் கொண்ட வசுதேவர் யோகத்தின் துணையுடன் உயர்ந்த கதியை அடைந்தார்.(15) அப்போது வசுதேவரின் மாளிகையில் இருந்து இதயம் பிளக்கும்படி உரக்க அழுது கொண்டிருந்த பெண்களின் ஒலி கேட்கப்பட்டது.(16) அவர்கள் கலைந்த கேசம் கொண்டவர்களாகவும், ஆபரணங்களோ, மலர்மாலைகளோ அற்றவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் கைகளால் மார்பில் அடித்துக் கொண்டு இதயத்தைப் பிளக்கும் ஒப்பாரியில் ஈடுபட்டனர்.(17) பெண்களில் முதன்மையானவர்களான தேவகி, பத்ரை, ரோஹினி, மதிரை ஆகியோர் தங்கள் தலைவனின் உடல் மீது விழுந்தார்கள்.(18) அப்போது பார்த்தன் தன் மாமனின் உடலை, மனிதர்களால் சுமக்கப்படும் ஒரு விலைமதிப்புமிக்க வாகனத்தில் சுமந்து வரச் செய்தான்.(19) அப்போது துன்பத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்டவர்களும், இறந்து போன வீரரிடம் பேரன்பு கொண்டவர்களுமான துவாரகையின் குடிமக்களும், மாகாணத்து மக்கள் அனைவரும் அதை {அந்த வாகனத்தைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(20)
அந்த வாகனத்திற்கு முன்பு, அவர் {வசுதேவர்} வாழ்ந்த போது நிறைவு செய்த குதிரை வேள்வியின் முடிவில் தலைக்கு மேல் பிடிக்கப்பட்ட குடைகளும், அவர் தினமும் வழிபட்ட சுடர்மிக்க நெருப்புகளும் சுமந்து செல்லப்பட்டன; அவற்றைக் கவனித்துக் கொண்ட புரோகிதர்களும் முன்சென்றனர்.(21) அந்த வீரரின் உடலானது, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களது மனைவிகளாலும், அவர்களைச் சூழ்ந்த ஆயிரக்கணக்கான பெண்களாலும், ஆயிரக்கணக்கான மருமகள்களாலும் பின்தொடரப்பட்டது.(22) இறுதிச் சடங்குகள், அவர் வாழ்ந்த போது அவருக்கு ஏற்புடையதாக இருந்த இடத்திலேயே செய்யப்பட்டது.(23) வீரரான அந்தச் சூரன் மகனின் {வசுதேவரின்} நான்கு மனைவிகளும் ஈமச் சிதையில் ஏறித் தங்கள் தலைவனின் உடலுடன் எரிந்தனர். அவர்கள் அனைவரும் அவருக்கு உரிய இன்பலோகங்களையே அவருடன் அடைந்தனர்.(24) பாண்டுவின் மகன் தன் மாமனையும், அவரது நான்கு மனைவியரின் உடல்களையும், நறுமணமிக்கப் பல்வேறு வகை நறுமணப் பொருட்கள் மற்றும் கட்டைகளைப் பயன்படுத்தி எரித்தான்.(25) ஈமச் சிதை எரிந்தபோது, சாமங்கள் ஓதும் தெளிவான ஒலி மற்றும் குடிமக்கள் மற்றும் அந்தச் சடங்கைப் பார்த்துக் கொண்டிருந்தோரின் ஓலம் ஆகியவற்றுடன் மரமும், வேறு எரியும் பொருட்களும் எரியும் உரத்த ஒலியும் எழுந்தது.(26)
அது முடிந்ததும், வஜ்ரனின் தலைமையிலான விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தின் சிறுவர்கள், அந்த உயர் ஆன்ம வீரருக்கு நீர்க்காணிக்கைகளைச் செலுத்தினர்.(27) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஒவ்வொரு கடமையையும் கவனமாகச் செய்த பல்குனன் {அர்ஜுனன்}, இந்தக் கடமையைச் செய்துவிட்டு, அந்த இடத்திற்கு அருகிலேயே இருந்த விருஷ்ணிகள் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்றான்.(28) சுற்றிலும் கொல்லப்பட்டுக் கிடக்கும் அவர்களைக் கண்ட குரு இளவரசன் பெரிதும் மகிழ்ச்சியற்றவனானான். எனினும், நடந்ததைக் கருத்தில் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதை அவன் செய்தான்.(29) ஏரகப் புற்களாலானவையும், பிராமணர்களிட்ட சாபத்தின் குணத்தில் பிறந்தவையுமான இரும்பு உலக்கைகளால் {முசலங்களால்} கொல்லப்பட்ட அந்த வீரர்களின் உடல்களுக்கு வயது முதிர்வின் அடிப்படையிலான வரிசையில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.(30)
ராமர் {பலராமர்} மற்றும் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} உடல்களைத் தேடச் செய்த அர்ஜுனன், அச்செயலில் திறம்பெற்ற மனிதர்களைக் கொண்டு அவற்றை எரிக்கச் செய்தான்.(31) அடுத்து இறந்தோருக்குச் செய்யப்படும் சடங்குக்களை முறையாகச் செய்த அந்தப் பாண்டுவின் மகன், ஏழாம் நாளில் தன் தேரில் ஏறி விரைவாகப் புறப்பட்டான்.(32) விருஷ்ணி வீரர்களின் விதவைகள், காளைகள், கோவேறுகழுதைகள் மற்றும் ஓட்டகங்களால் இழுக்கப்பட்ட தேர்களில் அந்த உயர் ஆன்ம பாண்டுவின் மகனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(33) அவர்கள் அனைவரும் பெருந்துன்பத்தில் இருந்தனர். விருஷ்ணிகளின் பணியாட்களும், குதிரைவீரர்களும், தேர்வீரர்களும் கூட அந்த ஊர்வலத்தைப் பின்தொடர்ந்தனர். அந்த நாட்டின் குடிமக்களும் அங்கே வசித்தவர்களும், பிருதை மகனின் ஆணையின் பேரில், வீரர்களற்றதும், பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்களை மட்டுமே கொண்டதுமான அந்தக் குதிரைப்படை அணிவகுப்பைச் சூழ்ந்து கொண்டு ஒரே நேரத்தில் புறப்பட்டுச் சென்றனர்.(35)
யானைகளின் முதுகுகளில் இருந்து போரிட்ட போர்வீரர்கள் மலைகளைப் போன்று பெரியவையாக இருந்த யானைகளில் சென்றனர். காலாட்படை வீரர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.(36) அந்தக, விருஷ்ணி குலங்களின் பிள்ளைகள் அனைவரும் அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்றனர். பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், செல்வந்தர்களாக இருந்த சூத்திரர்கள் ஆகியோரும், வாசுதேவனின் அந்தப்புரத்தில் அமைந்தவர்களான பதினாறாயிரம் {1600} பெண்களையும், கிருஷ்ணனின் நுண்ணறிவுமிக்கப் பேரனான {கொள்ளுப்பேரனான} வஜ்ரனையும் முன்னிட்டுக் கொண்டு சென்றனர்.(38) போஜ, விருஷ்ணி, அந்தகக் குலத்தைச் சேர்ந்த பிற வீரர்களின் மனைவிகளும், இப்போது தலைவனற்றவர்களாக இருந்தவர்களுமான பெண்கள் லட்சக்கணக்கில் அர்ஜுனனுடன் புறப்பட்டுச் சென்றனர்.(39) தேர்வீரர்களில் முதன்மையானவனும், பகை நகரங்களை வெல்பவனுமான அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, செல்வம் நிறைந்ததும், பெருங்கடலைப் போலத் தெரிந்ததுமான விருஷ்ணிகளின் இந்தப் பெரும் ஊர்வலத்தின் வழியைப் பாதுகாத்துச் சென்றான்.(40) மக்கள் அனைவரும் புறப்பட்டதும், சுறாக்கள் மற்றும் முதலைகளின் இல்லமான பெருங்கடலானது, இன்னும் அனைத்து வகைச் செல்வங்களுடன் நிறைந்திருந்த துவாரகையைத் தன் நீரில் மூழ்கச் செய்தது[2].(41) எந்த நிலப்பகுதி கடக்கப்பட்டதோ அஃது உடனடியாகப் பெருங்கடலின் நீரில் மூழ்கியது.(42) அற்புதம் நிறைந்த இந்தக் காட்சியைக் கண்ட துவாரகாவாசிகள், வேக வேகமாக நடந்து, "விதியின் போக்கு அற்புதம் நிறைந்தது" என்றனர்[3].(43)
[2] கும்பகோணம் பதிப்பில், "அந்த ஜனங்கள் வெளியில் சென்றவுடன், மகரங்களுக்கு இருப்பிடமான ஸமுத்திரமானது, ரத்தினங்கள் நிறைந்த துவாரகையை ஜலத்தால் மூழ்கச் செய்தது" என்றிருக்கிறது.[3] கும்பகோணம் பதிப்பில், "புருஷஸ்ரேஷ்டனான அர்ஜுனன் பூமியினுடைய எந்த எந்த இடத்தை விட்டானோ அந்த அந்த இடத்தை அந்த ஸமுத்திரமானது ஜலத்தால் மூழ்கச் செய்தது. அந்த ஆச்சரியத்தைக் கண்டு துவாரகாவாஸிகளான ஜனங்கள் "ஓ! ஓ! தெய்வமே" என்று சொல்லிக் கொண்டு மிக்க வேகமாகச் சென்றார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "துவாரகாவாசிகள் இயல்புக்குமீறிய இந்தக் காட்சியைக் கண்டனர். இது விதியைத்தவிர வேறெதுமில்லை என்று சொல்லிக்கொண்டு வேக வேகமாக முன்னேறிச் சென்றனர்" என்றிருக்கிறது.
தனஞ்சயன் {அர்ஜுனன்}, துவாரகையைக் கைவிட்ட பிறகு, இனிமையான காடுகள், மலைகள் மற்றும் இனிமை நிறைந்த ஓடைகளின் ஓரத்தில் விருஷ்ணி பெண்களை ஓய்ந்திருக்கச் செய்து மெதுமெதுவாக அணிவகுத்துச் சென்றான்.(44) ஐந்து நீர்நிலைகளைக் கொண்ட நாட்டை {பஞ்சநதம் / பஞ்சாப்} அடைந்த பலமிக்கத் தனஞ்சயன், அந்நிலத்தின் மத்தியில் தானியங்கள், பசுக்கள் மற்றும் பல விலங்குகள் நிறைந்த ஒரு பெரிய முகாமை அமைத்தான்.(45) ஓ! பாரதா {ஜனமேஜயா}, தலைவர்களற்ற அந்த விதவைகளின் பாதை பிருதையின் மகனால் {அர்ஜுனனால்} மட்டுமே பாதுகாக்கப்படுவதைக் கண்ட கள்வர்கள், (கொள்ளையிடுவதற்காகப்) பேராசை கொண்டனர்.(46) அப்போது, பேராசையில் மூழ்கிய இதயங்களைக் கொண்டவர்களும், இழிந்த பாவிகளும், மங்கலமற்றவர்களாகத் தோன்றுபவர்களுமான ஆபிரர்கள், ஒன்று கூடி தங்களுக்கு ஆலோசனை நடத்தினார்கள்.(47) அவர்கள், "இங்கே ஒரேயொரு வில்லாளியான அர்ஜுனன் மட்டுமே இருக்கிறான். இந்தக் குதிரைப்படை அணிவகுப்பில் பிள்ளைகளும், முதியவர்களும் இருக்கிறார்கள். நம்மை மீறி அவன் அவர்களின் வழியைப் பாதுகாத்து வருகிறான். (விருஷ்ணி) போர்வீரர்கள் சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்" என்றனர்.(48)
ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தவர்களும், தண்டங்கள் தரித்தவர்களுமான அந்தக் கள்வர்கள் கொள்ளையிட விரும்பி விருஷ்ணிகளை நோக்கி முன்னேறினர்.(49) முரண்பட்ட காலப்போக்கால் தூண்டப்பட்ட அவர்கள், உரத்த சிங்க முழக்கங்களுடனும், கொல்லும் விருப்பத்துடனும் அச்சுறுத்தியவாறு அந்தப் பெருங்கூட்டத்தின் மீது பாய்ந்தனர்.(50) குந்தியின் மகன் {அர்ஜுனன்} பாதையின் வழியே முன்னேறாமல் திடீரென நின்று தன் தொண்டர்களுன் திரும்பி, ஊர்வலத்தைத் தாக்கும் கள்வர்கள் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான்.(51)
அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரன் {அர்ஜுனன்}, தாக்கிக் கொண்டிருப்பவர்களிடம் சிரித்தவாறே, "இழிந்த பாவிகளே, உங்கள் உயிர்கள் மீது உங்களுக்கு ஆசையிருந்தால் இதைத் தவிர்ப்பீராக. நான் என் கணைகளால் உங்கள் உடல்களைத் துளைத்து உயிரை எடுக்கும்போது இதற்காக வருந்துவீர்கள்" என்றான்.(52)
அந்த வீரனால் இவ்வாறு சொல்லப்பட்டும் அவற்றை அலட்சியம் செய்த அவர்கள், மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டாலும் அர்ஜுனன் மீது பாய்ந்தனர்.(53) அப்போது அர்ஜுனன், பெரியதும், அழிவற்றதுமான தன் தெய்வீக வில்லுக்கு நாண்பூட்ட முயற்சித்தான்.(54) போர் கடுமையாக இருந்தபோது, பெரும் சிரமத்துடன் அதில் நாண்பூட்டுவதில் வென்றான். அப்போது அவன் தன் தெய்வீக ஆயுதங்களை நினைக்கத் தொடங்கினாலும் அவை மனத்தில் தோன்றவில்லை.(55) போரின் கடுமையையும், தன் ஆயுத வலிமையின் இழப்பையும், தெய்வீக ஆயுதங்கள் தோன்றாமையையும் கண்ட அர்ஜுனன் பெரிதும் வெட்கமடைந்தான்.(56) காலாட்படை, யானை வீரர்கள், தேர்வீரர்கள் உள்ளிட்ட விருஷ்ணி வீரர்களுடன் சேர்ந்து கள்வர்களால் அபகரிக்கப்பட்ட விருஷ்ணி பெண்களையும் மீட்பதில் அவன் தவறினான்.(57) அந்தக் கூட்டம் மிகப் பெரியதாக இருந்தது. கள்வர்கள் அதைப் பல்வேறு முனைகளில் தாக்கினர். அர்ஜுனன் தன்னால் முடிந்த அளவு அதைப் பாதுகாக்க முயன்றாலும், அவனால் வெல்ல முடியவில்லை.(58) போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பெண்களில் முதன்மையான பலர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர், அதேவேளையில் வேறு சிலர் தாங்களே விரும்பி அந்தக் கள்வர்களுடன் சென்றனர்[4].(59)
[4] கும்பகோணம் பதிப்பில், "அர்ஜுனன் (விருஷ்ணிகளுடைய மனைவிகள்) அதிகமாக இருப்பதால் (திருடர்கள்) ஆங்காங்கு வரும்பொழுது (அந்த) ஜனத்தை ரக்ஷிப்பதில் முயற்சி செய்தான். பிறகு, எல்லா யுத்த வீரர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே அந்த உத்தம ஸ்திரீகள் நான்கு பக்கத்திலும் இழுக்கப்பட்டார்கள். மற்றவர்கள் இஷ்டப்படி ஓடினார்கள்" என்றிருக்கிறது.
பலமிக்க அர்ஜுனன், விருஷ்ணிகளின் பணியாட்களால் ஆதரிக்கப்பட்டவனாகக் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் கள்வர்களைத் தாக்கினான்.(60) ஓ! மன்னா {ஜனமேஜயா}, எனினும் விரைவில் அவனது கணைகள் தீர்ந்தன. முற்காலங்களில் அவனது கணைகள் வற்றாதவையாக இருந்தன. எனினும் இப்போது அவை வேறுவகையில் ஆகின.(61) தன் கணைகள் தீர்ந்ததைக் கண்ட அவன் பெருந்துன்பத்தில் ஆழமாகப் பீடிக்கப்பட்டான். அப்போது அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்} தன் வில்லின் முனைகளினால் அந்தக் கள்வர்களைத் தாக்கத் தொடங்கினான்.(62) எனினும், ஓ! ஜனமேஜயா, அந்த மிலேச்சர்கள், பார்த்தன் {அர்ஜுனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே விருஷ்ணிகள் மற்றும் அந்தகப் பெண்களில் முதன்மையானோர் பலரை அபகரித்துப் பின்வாங்கினர்.(63) பலமிக்கத் தனஞ்சயன் இவை யாவற்றையும் விதியின் பணியெனக் கருதினான். கவலையால் நிறைந்த அவன், (தெய்வீக) ஆயுதங்கள் தோன்றாமை, தன் கர வலிமையின் இழப்பு, தன் வில் தனக்குக் கீழ்ப்படியாமை ஆகியவற்றை நினைத்து பெருமூச்சுவிட்டான்.(64,65) அவன், இவை அனைத்தும் விதியின் பணியெனக் கருதியவனாகப் பெரிதும் உற்சாகத்தை இழந்தான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, முன்பு கொண்டிருந்த பலத்தை இப்போது தான் கொண்டிருக்கவில்லை என்று சொல்லி அவன் மேலும் முயற்சி செய்வதை நிறுத்தினான்[5].(66) அந்த உயர் ஆன்மா {அர்ஜுனன்}, இன்னும் அவர்களிடம் எஞ்சி இருந்த செல்வத்தையும் மிச்சமிருந்த விருஷ்ணி பெண்களையும் அழைத்துக் கொண்டு குருக்ஷேத்திரம் வந்து சேர்ந்தான்.(67)
[5] கும்பகோணம் பதிப்பில், "அர்ஜுனன் அஸ்திரங்களுடைய நாசத்தினாலும், புஜபலத்தின் குறைவினாலும், வில்லானது வசப்படாமலிருப்பதினாலும், பாணங்களின் நாசத்தினாலும் (இது) தெய்வச்செயலென்றெண்ணி மன வருத்தத்துடன் "இது இல்லை" யென்று எண்ணிக் கொண்டு அவ்விடமிருந்து திரும்பினான். பிறகு சிறந்த புத்தியுள்ளவனான அர்ஜுனன் மிகுதியான ரத்தினங்களைப் பறிகொடுத்து மிச்சமுள்ள விருஷ்ணி ஸ்திரீகளை அழைத்துக் கொண்டு குருக்ஷேத்திரம் வந்திறங்கினான்" என்றிருக்கிறது.
இவ்வாறு எஞ்சியிருந்த விருஷ்ணிகளைக் கொண்டு வந்து சேர்த்த அவன் {அர்ஜுனன்}, அவர்களைப் பல்வேறு இடங்களில் நிறுவினான்.(68) கிருதவர்மனின் மகனை, எஞ்சியிருந்த போஜ மன்னனின் பெண்களுடன் சேர்த்து, மார்த்திகாவதம் என்றழைக்கப்படும் நகரத்தில் நிறுவினான்.(69) சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் ஆகியோருடன் எஞ்சியிருந்தவர்களின் வழியைப் பாதுகாத்த அந்தப் பாண்டுவின் மகன், குதிரைகளற்றவர்களாக இருந்த அவர்களை இந்திரப்ரஸ்த நகரத்தில் நிறுவினான்.(70) அற ஆன்மா கொண்ட அர்ஜுனன், யுயுதானனின் {சாத்யகியின்} அன்பு மகனை, முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்களுடன், சரஸ்வதி ஆற்றங்கரையில் நிறுவினான்.(71) இந்திரப்ரஸ்தத்தின் ஆட்சி {கிருஷ்ணனின் கொள்ளுப்பேரனான} வஜ்ரனுக்குக் கொடுக்கப்பட்டது. அக்ரூரின் விதவைகள் காட்டுக்குள் ஓய்ந்து செல்ல விரும்பினார்கள். வஜ்ரன் மீண்டும் மீண்டும் அவர்களைத் தடுத்தாலும் அவர்கள் அவன் சொல்வதைக் கேட்கவில்லை.(72) ருக்மிணி, காந்தார இளவரசி, சைப்யை, ஹைமவதி, ஜாம்பவதி ஆகியோர் ஈமச் சிதையில் ஏறினர்.(73) சத்யபாமை, மற்றும் கிருஷ்ணனின் மனைவிகளான பிறர், காட்டுக்குச் சென்று தவம் பயில்வதில் தங்களை நிலைக்கச் செய்யத் தீர்மானித்தனர்.(74) அவர்கள் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, ஹரியை தியானித்துக் கொண்ட தங்கள் காலத்தைக் கழித்து வாழத் தொடங்கினர். அவர்கள் இமயத்தைக் கடந்து சென்று கலாபம் என்ற இடத்தில் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்[6].(75) துவாராவதியில் இருந்து அர்ஜுனனைப் பின்பற்றி வந்த மனிதர்கள், குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வஜ்ரனிடம் ஒப்படைக்கப்பட்டனர்.(76) அந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற செயல்கள் அனைத்தையும் செய்த அர்ஜுனன், கண்ணீரால் குளித்த கண்களுடன், வியாசரின் ஆசிரமத்திற்குள் நுழைந்தான். அங்கே தீவில் பிறந்தவரான அந்த முனிவர் சுகமாக அமர்ந்திருப்பதை அவன் கண்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(77)
[6] கலாபம் என்ற இடத்தில் வசித்தனர் என்ற குறிப்புக் கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இல்லை.
மௌஸலபர்வம் பகுதி – 7ல் உள்ள சுலோகங்கள் : 77
ஆங்கிலத்தில் | In English |