The hell! | Svargarohanika-Parva-Section-2 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : தன்னைச் சேர்ந்தவர்களுடன் வசிக்க விரும்பிய யுதிஷ்டிரன்; உறவினர்களைக் காட்ட யுதிஷ்டிரனை நரகத்திற்கு அழைத்துச் சென்ற தேவதூதன்; காணப் பொறாமல் திரும்பிய யுதிஷ்டிரன்; அவர்கள் தன்னைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து தூதனிடம் வர மறுத்தது; தூதன் இந்திரனுக்குச் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், (யுதிஷ்டிரன் தேவர்களிடம்} "தேவர்களே, அளவற்ற ஆற்றலைக் கொண்ட ராதையின் மகன் {கிருஷ்ணன்}, என்னுடன் பிறந்த உயர் ஆன்மாக்கள், யுதாமன்யு, உத்தமௌஜஸ்,(1) போர் நெருப்பில் (ஆகுதிகளாகத்) தங்கள் உடல்களை ஊற்றிய பெரும் வீரர்கள், எனக்காகப் போரில் மரணமடைந்த மன்னர்கள் மற்றும் இளவரசர்களை நான் இங்கே காணவில்லை.(2) புலிகளின் ஆற்றலைக் கொண்ட அந்தப் பெருந்தேர்வீரர்கள் எங்கே? அந்த முதன்மையான மனிதர்கள் இந்த உலகத்தை அடைந்தனரா?(3) தேவர்களே, அந்தப் பெருந்தேர்வீரர்கள் இந்த உலகத்தை அடைந்திருந்தால் மட்டுமே நான் அந்த உயர் ஆன்மாக்களோடு இங்கே வசிப்பேன் என்பதை அறிவீராக.(4)
தேவர்களே, மங்கலமான இந்த நித்திய உலகம் அந்த மன்னர்களால் அடையப்படவில்லையெனில், என் உடன்பிறந்தவர்களும், என் உற்றார் உறவினர்களும் இல்லாத இந்த இடத்தில் நான் வாழ மாட்டேன்.(5) (போருக்குப் பிறகு) நீர்ச்சடங்குகள் செய்த போது, என் தாய் {குந்தி}, "கர்ணனுக்கும் நீர்க்காணிக்கைகளைச் செலுத்துவாயாக" என்று சொன்னதைக் கேட்டேன். என் தாயின் அந்தச் சொற்களைக் கேட்டதிலிருந்து நான் துன்பத்தால் எரிந்து வருகிறேன்.(6) தேவர்களே, என் தாயின் பாதங்கள், அளவிட முடியாத ஆன்மாவைக் கொண்ட கர்ணருடைய பாதங்களுக்கிடையிலான ஒற்றுமையை நான் கண்டபோதே, பகையணிகளைப் பீடிப்பவரான அவரின் கீழ் என்னை நான் நிறுத்திக் கொள்ளவில்லையே என நான் அடிக்கடி வருந்தினேன். நாங்களும் கர்ணரும் சேர்ந்திருந்தால், சக்ரனாலும் போரில் எங்களை வீழ்த்த இயலாது[1].(7,8)
[1] "யுதிஷ்டிரன், குந்தியின் பாதங்களுக்கும், கர்ணனின் பாதங்களுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையைக் கண்டதும், கர்ணனிடம் தான் கொண்ட ஏக்கத்தை யுதிஷ்டிரனால் விளக்க முடியாதுதும் இங்கே சுட்டிக் காட்டப்படுகிறது. பகடையில் தோற்ற பிறகு அவனிடமும், அவனுடன் பிறந்தோரிடமும் குரு சபையில் வைத்து துரியோதனன் பேசிய கொடும்பேச்சுகளை அவன் கேட்காதவனாக இருக்கும் அளவுக்கு யுதிஷ்டிரனிடம் இந்த ஒற்றுமை குறித்த நினைப்பு இருந்தது. கர்ணன் யார் என்பதைப் போருக்குப் பின் யுதிஷ்டிரன் அறியும் வரை அந்தக் குழப்பம் அவனுக்கு இருந்து கொண்டே இருந்தது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சூரியனின் பிள்ளையான அவர் {கர்ணர்} எங்கிருக்கிறாரோ அங்கே அவரை நான் காண விரும்புகிறேன். ஐயோ அவருடனான உறவை நாங்கள் அறியாதிருந்தோம். அவரைக் {கர்ணரைக்} கொல்லும்படி அர்ஜுனனை நானே ஏவினேன்.(9) பயங்கர ஆற்றலைக் கொண்டவனும், என் உயிர் மூச்சைவிட எனதன்புக்குரியவனுமான பீமனையும், இந்திரனுக்கு ஒப்பான அர்ஜுனனையும், ஆற்றலில் அந்தகனுக்கு ஒப்பான இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்},(10) நான் பார்க்க விரும்புகிறேன். எப்போதும் அறம் ஒழுகிய பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} நான் காண விரும்புகிறேன். நான் இங்கே இருக்க விரும்பவில்லை. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்.(11) தேவர்களில் முதன்மையானவர்களே, என்னுடன் பிறந்தோரிடம் இருந்து நான் துண்டிக்கப்பட்டால் சொர்க்கத்திற்கும் எனக்கும் என்ன இருக்கிறது? என்னுடன் பிறந்தவர்கள் எங்கிருக்கிறார்களோ அதுவே என் சொர்க்கம். என் கருத்தின்படி இது சொர்க்கமல்ல" என்றான்.(12)
தேவர்கள் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மகனே, நீ அங்கே செல்ல ஏங்குகிறாயெனில் தாமதமில்லாமல் அங்கே செல்வாயாக. தேவர்கள் தலைவனின் ஆணையின்படி நாங்கள் உனக்கு ஏற்புடையதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்" என்றனர்".(13)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பகைவரை எரிப்பவனே, இவ்வாறு சொன்ன தேவர்கள், ஒரு தேவ தூதனை அழைத்து அவனிடம்,(14) "யுதிஷ்டிரனுக்கு அவனுடைய நண்பர்களையும், உற்றார் உறவினர்களையும் காட்டுவாயாக" என்றனர்.(14)
ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அப்போது குந்தியின் அரச மகனும் {யுதிஷ்டிரனும்}, அந்தத் தேவ தூதனும் சேர்ந்து (யுதிஷ்டிரன் பார்க்க விரும்பிய) அந்த மனிதர்களின் தலைவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.(15) தேவதூதன் முதலில் சென்றான், மன்னன் அவனுக்குப் பின்னால் அவனைப் பின்தொடர்ந்து சென்றான். அந்தப் பாதை மங்கலமற்றதாகவும், கடினமானதாகவும், பாவச் செயல்களைச் செய்யும் மனிதர்களால் நடக்கப்படுவதாகவும் இருந்தது.(16) அடர்த்தியான இருளில் மூழ்கியிருந்த அது, மயிர் மற்றும் பாசி ஆகியவற்றால் மூடப்பட்ட புல்வெளியைப்போல அமைந்தது. பாவிகளின் துர்நாற்றத்தால் மாசடைந்து, தசை மற்றும் குருதிச் சேறுடன் கூடியதாக,(17) காட்டு ஈக்கள் நிறைந்ததாக, கொட்டும் வண்டுகள் மற்றும் கொசுக்களுடன் கூடியதாகப் பயங்கரக் கரடிகளின் அத்துமீறல்களுடன் கூடியதாக அஃது {அந்தப் பாதை} இருந்தது. அழுகும் சடலங்கள் ஆங்காங்கே கிடந்தன.(18)
எலும்புகளும், மயிர்களும் நிறைந்திருந்த அது புழு பூச்சிகளின் கேடு விளைவிக்கக்கூடிய வாடையுடன் கூடியதாக இருந்தது. சுடர்மிக்க நெருப்பால் வழிநெடுகிலும் சூழ்ந்திருந்தது.(19) இரும்பு அலகுகளைக் கொண்ட காக்கைகள், வேறு பறவைகள் மற்றும் கழுகுகளும், ஊசிகள் போன்ற நீண்ட கூரிய வாய்களைக் கொண்ட தீய பிரேதங்களும் அங்கே மொய்த்தன. மேலும் அது விந்திய மலையைப் போல அடைதற்கரி காடுகளால் நிறைந்திருந்தது.(20) கொழுப்பு மற்றும் குருதி பூசப்பட்டவையும், கரங்கள் மற்றும் தொடைகள் வெட்டப்பட்டவையும், கால் துண்டிக்கப்பட்டவையும், குடல்கள் வெளியே வந்தவையுமான மனித சடலங்கள் அங்கே விரவிக் கிடந்தன.(21) ஏற்பற்ற சடலங்களின் கடுநெடி நிறைந்ததும், பயங்கரமான வேறு நிகழ்வுகள் நிகழ்வதுமான அந்தப் பாதையில் பல்வேறு எண்ணங்களுடன் மன்னன் சென்று கொண்டிருந்தான்.(22)
கொதிக்கும் நீர் நிறைந்ததும், கடப்பதற்கரிதானதுமான ஓர் ஆற்றையும், கூரிய வாள்கள் மற்றும் கத்திகளை இலைகளாகக் கொண்ட மரங்கள் நிறைந்த காடுகளையும் {அஸிபத்ரவனத்தையும்} அங்கே அவன் கண்டான்.(23) அங்கே பெரும் வெப்பத்துடன் கூடிய மென்மையான வெண்மணல்களும், இரும்பினால் செய்யயப்பட்ட பாறைகளும் கற்களும் நிறைந்திருந்தன. அங்கே சுற்றிலும் இரும்பினால் செய்யப்பட்ட பல குடுவைகள் கொதிக்கும் எண்ணையுடன் {எண்ணெயக்குடங்கள்} இருந்தன.(24) அங்கே முட்களுடன் கூடிய குடசால்மலிகங்கள் {முள்ளிலவமரங்கள்} பல இருந்தன, எனவே தீண்டுவதற்குத் துன்பம் நிறைந்ததாக இருந்தது. குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} அங்கே பாவிகளுக்குக் கொடுக்கப்படும் சித்திரவதைகளைக் கண்டான்.(25)
அனைத்து வகைக் குற்றங்களுடன் கூடிய அந்த மங்கலமற்ற உலகத்தைக் கண்ட யுதிஷ்டிரன், அந்தத் தேவதூதனிடம், "இது போன்ற பாதையில் இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும்?(26) என்னுடன் பிறந்தோர் எங்கே இருக்கின்றனர் என்பதைச் சொல்வதே உனக்குத் தகும். தேவர்களுக்குரிய எந்த உலகம் இஃது என்பதையும் நான் அறிய விரும்புகிறேன்" என்றான்.(27)
நீதிமானான யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்ட தேவ தூதன், தன் நடையை நிறுத்தி, "இவ்வளவு தொலைவே உமது வழியாகும்.(28) சொர்க்கவாசிகள் உம்மை இவ்வளவு தொலைவே அழைத்துச் சென்று நிற்குமாறே எனக்கு ஆணையிட்டனர். ஓ! மன்னர்களின் மன்னா, உமக்குக் களைப்பாயிருந்தால் நீர் என்னுடன் திரும்பலாம்" என்றான்.(29) எனினும், யுதிஷ்டிரன் தாள முடியாத பெருஞ்சோகத்துடனும், கடும் நெடியால் கலங்கடிக்கப்பட்டவனாகவும் இருந்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, திரும்பத் தீர்மானித்து அவன் தன் பாதச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கினான்.(30) கவலையாலும், துயரத்தாலும் பீடிக்கப்பட்டு அந்த அற ஆன்ம ஏகாதிபதி திரும்பினான். சரியாக அதே நேரத்தில் சுற்றிலும் பரிதாபகரமான ஒப்பாரியை அவன் கேட்டான்.(31)
"ஓ! தர்மனின் மகனே, ஓ! அரசமுனியே, ஓ! புனிதத் தோற்றம் கொண்டவனே, ஓ! பாண்டுவின் மகனே, எங்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு கணம் நிற்பாயாக.(32) ஓ! வெல்லப்பட முடியாதவனே, நீ வந்த போது, உன் மேனியின் இனிய நறுமணத்தைச் சுமந்தபடி, இனிமையான தென்றால் வீசத் தொடங்கியது. இதனால் எங்களது துயர் பெரிதும் துடைக்கப்பட்டது.(33) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ஓ! மனிதர்களில் முதல்வனே, உன்னைக் கண்டதும் எங்கள் மகிழ்ச்சி பெருகியது. ஓ! பிருதையின் மகனே, மேலும் சில கணங்கள் நீ இங்கே தங்குவதன் மூலம் அந்த மகிழ்ச்சி இன்னும் நீடிக்கட்டும்.(34) ஓ! பாரதா, கொஞ்ச நேரமாவது நீ இங்கே இருப்பாயாக. ஓ! குரு குலத்தோனே, நீ இங்கிருக்கும் வரை கடுநோவு எங்களைப் பீடிப்பதை நிறுத்திக் கொள்ளும்" என்றனர்.(35)
வலியில் துடித்த மனிதர்களின் பரிதாபகரமான குரல்களில் இவையும், இவைபோன்ற இன்னும் வேறு சொற்களும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன் காதுகளுக்கு மிதந்து வருவதை அந்த உலகத்தில் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} கேட்டான். கருணைமிக்க இதயம் கொண்ட யுதிஷ்டிரன், துன்பத்தில் இருந்தவர்களின் அந்தச் சொற்களைக் கேட்டு " ஐயோ, எவ்வளவு துன்பம்" என்று உரக்கச் சொன்னான். பிறகு அந்த மன்னன் அசையாமல் நின்றான்.(37) துயரத்தைத் தூண்டியவையும், துன்புறுத்தப்பட்ட மனிதர்களுக்கு உரியவையுமான பேச்சுகள், ஏற்கனவே கேட்கப்பட்ட குரல்களைக் கொண்டவையாகத் தோன்றினாலும் அந்தப் பாண்டுவின் மகனால் அந்தச் சந்தர்ப்பத்தில் அவற்றை அடையாளம் காண முடியவில்லை.(38) குரல்களை அடையாளம் காண முடியாத தர்மனின் மகன் யுதிஷ்டிரன், "நீங்கள் யார்? ஏன் இங்கே இருக்கிறீர்கள்?" என்று விசாரித்தான்.(39)
இவ்வாறு சொல்லப்பட்டதும் அவர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும், "நான் கர்ணன்", "நான் பீமசேனன்", "நான் அர்ஜுனன்",(40) "நான் நகுலன்", "நான் சகாதேவன்", "நான் திருஷ்டத்யும்னன்", "நான் திரௌபதி", "நாங்கள் திரௌபதியின் மகன்கள்" என்று பதிலளித்தனர். ஓ! மன்னா, இவ்வாறே அந்தக் குரல்கள் பேசின.(41)
ஓ! மன்னா, அந்த இடத்திற்குத் தகுந்த துன்பக் குரல்களில் வெளிவந்த அந்தக் கதறல்களைக் கேட்ட அரசன் யுதிஷ்டிரன், தனக்குள்ளேயே, "என்ன முரண்பட்ட விதியிது?(42) கடும் நெடியும், பெருந்துன்பமும் கொண்ட இந்த உலகத்தில் வசிப்பிடம் ஒதுக்கப்படுவதற்கு, உயர் ஆன்மாக்களான கர்ணர், திரௌபதியின் மகன்கள், கொடியிடையாளான பாஞ்சால இளவரசி {திரௌபதி} ஆகியோரால் இழைக்கப்பட்ட பாவச் செயல்கள் என்னென்ன? அறச்செயல்களைச் செய்த இவர்களால் செய்யப்பட்ட எந்த விதிமீறலையும் நான் உணரவில்லை.(43,44) திருதராஷ்டிரர் மகனான மன்னன் சுயோதனனும் {துரியோதனனும்}, பாவம் நிறைந்த அவனது தொண்டர்களும், இத்தகைய செழிப்பை அடைவதற்கு அவர்கள் செய்த செயலென்ன?(45) பெரும் இந்திரனைப் போலச் செழிப்புடன் கூடிய அவன் இங்கே உயர்வாகத் துதிக்கப்படுகிறான். எந்தச் செயல்களின் விளைவால் இவர்கள் (இந்த உயர் ஆன்மாக்கள்) நரகத்திற்குள் வீழ்ந்தனர்?(46) இவர்கள் அனைவரும், ஒவ்வொரு கடமையையும் அறிந்தவர்களாகவும், வாய்மைக்கும், வேதங்களுக்கும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றியவர்களாகவும், தங்கள் செயல்பாடுகளில் நீதிமிக்கவர்களாகவும், வேள்விகளைச் செய்பவர்களாகவும், பிராமணர்களுக்குப் பெருங்கொடை அளிப்பவர்களாகவும் இருந்தனர்.(47) நான் உறங்குகிறேனா? விழித்திருக்கிறேனா? நான் சுயநினைவுடன் இருக்கிறானா இல்லையா? அல்லது என் மூளை கலங்கி இவையாவும் என் மன மயக்கத்தால் தெரிகிறதா?" என்று {தனக்குள்ளேயே} கேட்டுக் கொண்டான்.(48)
கவலை மற்றும் துன்பத்தில் மூழ்கி, துயரால் கலங்கிய புலன்களுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன் இத்தகைய சிந்தனைகளிலேயே நீண்ட காலம் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(49) பிறகு தர்மனின் அரசமகன் கடுங்கோபத்தை அடைந்தான். உண்மையில், யுதிஷ்டிரன் தேவர்களையும், தர்மனையும் நிந்தித்தான்.(50) கடும் நெடியால் பீடிக்கப்பட்ட அவன் தேவதூதனிடம், "நீ எவர்களுடைய தூதனோ அவர்களிடம் நீ திரும்பிச் செல்வாயாக.(51) அவர்கள் இருக்கும் இடத்திற்கு நான் வர மாட்டேன் என்றும் இங்கே துன்பத்தில் இருக்கும் என்னுடன் பிறந்தோர் என் துணையின் விளைவால் ஆறுதலடைவதால் நான் இங்கேயே தங்கப் போகிறேன் என்று அவர்களிடம் சொல்வீராக" என்றான்.(52)
நுண்ணறிவுமிக்கப் பாண்டுவின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்ட தேவதூதன், நூறு வேள்விகளைச் செய்த தேவர்களின் தலைவன் {இந்திரன்} இருக்கும் இடத்திற்குத் திரும்பிச் சென்றான்.(53) அங்கே அவனிடம் யுதிஷ்டிரனின் செயல்களை விளக்கிச் சொன்னான். உண்மையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, அவன் {தேவதூதன்} தர்மனின் மகன் சொன்ன அனைத்தையும் இந்திரனிடம் தெரிவித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(54)
ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 2ல் உள்ள சுலோகங்கள் : 54
இன்னும் 4 பகுதிகளே உள்ளன. அத்துடன் முழு மஹாபாரதம் நிறைவுபெறுகிறது.
ஆங்கிலத்தில் | In English |