Monday, January 13, 2020

அடையாள பவனி! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 4

Identity jaunt! | Svargarohanika-Parva-Section-4 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன், கர்ணன் முதலியோரைக் கண்ட யுதிஷ்டிரன்; தங்கள் தங்களுக்குரிய கதியை அடைந்தவர்களை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டிய இந்திரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தேவர்கள், மருத்துகள் மற்றும் முனிவர்களால் இவ்வாறு புகழப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், குரு குலத்தின் முதன்மையானோர் இருந்த இடத்திற்குச் சென்றான்.(1) அவன் கோவிந்தனை {கிருஷ்ணனை} அவனது பிரம்ம வடிவில் கண்டான். ஏற்கனவே தான் கண்டிருந்த வடிவத்திற்கு ஒப்பானதாக இருந்தது அடையாளம் காண துணை புரிந்தது.(2) தன்னுடைய அந்த வடிவில் அவன், பயங்கரமான சக்கரம் போன்ற தெய்வீக ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒளிபொருந்தியவனாக இருந்தான். மற்ற ஆயுதங்கள் தங்களுக்குரிய உடல் வடிவங்களைப் பெற்று இருந்தன.(3)


அவன் {கிருஷ்ணன்} சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட வீரப் பல்குனனால் {அர்ஜுனனால்} துதிக்கப்பட்டான். குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, மதுசூதனனை அவனுடைய சொந்த வடிவில் கண்டான்.(4) தேவர்களால் துதிக்கப்பட்ட அவ்விருவரும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} யுதிஷ்டிரனைக் கண்டு, அவனை உரிய மதிப்புடன் வரவேற்றனர்.(5) மற்றோரிடத்தில், அந்தக் குருக்களைத் திளைக்கச் செய்பவன் {யுதிஷ்டிரன்}, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், காந்தியில் பனிரெண்டு சூரியர்களுக்கு ஒப்பானவனுமான கர்ணனைக் கண்டான்.(6)

மற்றொரு பகுதியில், மருத்துகளுக்கு மத்தியில் சுடர்மிக்க வடிவில் அமர்ந்திருக்கும் பெரும்பலம் கொண்ட பீமசேனனைக் கண்டான்[1].(7) அவன் {பீமன்} உடல் வடிவத்துடன் கூடிய வாயு தேவனின் அருகில் அமர்ந்திருந்தான். உண்மையில், அப்போது தெய்வீக வடிவில் பேரெழிலுடன் திகழ்ந்த அவன் உயர்ந்த வெற்றியை அடைந்திருந்தான்.(8) அந்தக் குருக்களைத் திளைக்கச் செய்பவன் {யுதிஷ்டிரன்}, அஸ்வினிகளுக்குரிய இடத்தில் சுயப் பிரகாசத்தில் சுடர்விடும் நகுலனையும், சகாதேவனையும் கண்டன்.(9)

[1] "தேவனை முதலிய என்பது பீமன் பூமியில் கண்ட அதே வடிவில் காணப்பட்டான் எனப் பொருள்படலாம். உண்மையில், கோவிந்தன், பல்குனன், பீமன் ஆகியோர் அனைவரும் சுடர்மிக்க வடிவங்களில் இருந்தாலும், பூமியில் இருந்த தங்கள் வடிவங்களுடன் ஒத்த வடிவங்களைக் கொண்டிருந்தனர் என்று பல இடங்களில் பொருள்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மேலும் அவன், தாமரை மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பாஞ்சால இளவரசியையும் {திரௌபதியையும்} கண்டான். சொர்க்கத்தை அடைந்த அவள், சூரியப்பிரகாசத்துடன் கூடிய வடிவில் அங்கே அமர்ந்து கொண்டிருந்தாள்.(10) மன்னன் யுதிஷ்டிரன் திடீரென அவளைக் {திரௌபதியைக்} கேள்வி கேட்க விரும்பினான். அப்போது தேவர்களின் தலைவனான இந்திரன், அவனிடம் {யுதிஷ்டிரனிடம்},(11) "இவள் ஸ்ரீ {திருமகள்} ஆவாள். ஓ! யுதிஷ்டிரா, மனிதர்களுக்கு மத்தியில் ஏற்புடைய நறுமணத்துடனும், மொத்த உலகத்தையும் மகிழ்ச்சியடையச் செய்யும் வல்லமையுடனும், எந்தத் தாயின் கருவறையில் இருந்தும் வெளிப்படாமல் துருபதன் மகளாக இவள் {திரௌபதி} உனக்காகவே பிறந்தாள்.(12) திரிசூலபாணியால் உன் இன்பத்திற்காகவே இவள் படைக்கப்பட்டாள். துருபதன் குலத்தில் பிறந்த இவள் உங்கள் அனைவராலும் அனுபவிக்கப்பட்டாள்.(13)

ஓ! மன்னா, நெருப்பின் பிரகாசத்தையும் பெருஞ்சக்தியையும், உயர்ந்த அருளையும் கொண்ட இந்த ஐந்து கந்தர்வர்களும், திரௌபதிக்கும் உனக்கும் மகன்களாக இருந்தனர்.(14) பெரும் ஞானம் கொண்டவனும், கந்தர்வர்களின் மன்னனுமான திருதராஷ்டிரனைப் பார். இவனே உன் தந்தையின் {பாண்டுவின்} அண்ணன் என்பதை அறிவாயாக.(15)

நெருப்பின் பிரகாசம் கொண்டவனும், குந்தியின் மகனுமான இவன் {கர்ணன்} உன் அண்ணனாவான். சூரியனின் மகனும், உன் அண்ணனும், மனிதர்களில் முதன்மையானவனுமான இவனே ராதையின் மகனாக {கர்ணனாக} அறியப்பட்டான்.(16) இவன் சூரியனின் துணையுடன் திரிகிறான். இந்த முதன்மையானவனைப் பார். சாத்யர்கள், தேவர்கள், விஷ்வேதேவர்கள், மருத்துகளின் இனக்குழுக்களுக்கு மத்தியில்,(17) ஓ! மன்னர்களின் மன்னா, சாத்யகியைத் தங்களில் முதல்வனாகக் கொண்ட வீரர்களும், போஜர்களில் வலிமைமிக்கவர்களுமான விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரர்களைப் பார்.(18) போரில் வெல்லப்பட முடியாதவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு} இப்போது சோமனுடன் இருப்பதைப் பார். இரவின் பேரொளிக் கோளின் மென்மையான பிரகாசத்துடன் கூடியவனாக இருக்கும் இவனே வலிமைமிக்க வில்லாளியான அபிமன்யு ஆவான்.(19)

குந்தி மற்றும் மாத்ரியுடன் இப்போது சேர்ந்திருக்கும் வலிமைமிக்க வில்லாளியான பாண்டு இதோ இருக்கிறான். உன் தந்தை {பாண்டு} தன் சிறந்த தேரில் அடிக்கடி என்னிடம் வருவான்.(20) இப்போது வசுக்களின் மத்தியில் இருக்கும் சந்தனுவின் மகனான அரசன் பீஷ்மரைப் பார். இதோ பிருஹஸ்பதியின் அருகில் இருக்கும் இவர் உன் ஆசானான துரோணர் என்பதை அறிவாயாக.(21) ஓ! பாண்டுவின் மகனே, இவர்களும், உன் தரப்பில் இருந்து போரிட்ட பிற வீரர்களும், இப்போது கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் வேறு புனிதர்களுடன் நடமாடுகிறார்கள்.(22) ஓ! மன்னா, சிலர் குஹ்யர்களின் நிலையை அடைந்திருக்கின்றனர். தங்கள் உடல்களைக் கைவிட்ட அவர்கள், சொல், எண்ணம் மற்றம் செயலின் மூலம் அடைந்த தகுதியைக் கொண்டு சொர்க்கத்தை வென்றனர்" என்றான் {இந்திரன்}".(23)

ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 4ல் உள்ள சுலோகங்கள் :23
இன்னும் 2 பகுதிகளே உள்ளன. அத்துடன் முழு மஹாபாரதம் நிறைவுபெறுகிறது.


ஆங்கிலத்தில் | In English