The third test! | Svargarohanika-Parva-Section-3 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் உறுதியைக் கண்டு வந்த இந்திரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த யமன்; தெய்வீக உடல் பெற்று தெய்வீக முனிவர்கள் துதிக்கத் தம்பியரிடம் சென்ற யுதிஷ்டிரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! குரு குலத்தோனே பிருதையின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அங்கே ஒரு கணம் நிற்பதற்குள் இந்திரனின் தலைமையிலான தேவர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு வந்தனர்.(1) அறத் தேவன் {தர்மதேவன்}, அந்த ஏகாதிபதியைக் காணத் தன் உடல் கொண்ட வடிவத்துடன் அந்த இடத்திற்கு வந்தான்.(2) ஒளியுடல் பெற்றவர்களும், புனிதமானவர்களும், உன்னதச் செயல்களைச் செய்பவர்களுமான தேவர்கள் அந்த இடத்திற்கு வந்ததும், அந்தப் பகுதியை மூழ்கடித்த இருள் உடனே விலகியது.(3) பாவச் செயல்களைச் செய்தோர் அப்போது மேலும் துன்புறுத்தப்படவில்லை. வைதரணீ ஆறு, முள்ளிலவமரம்,(4) இரும்புக் குடுவைகள், பார்ப்பதற்குப் பயங்கரமான பாறைகளாலான இரும்புத் திரள்களும் காட்சியில் இருந்து மறைந்து போயின. வெறுத்தொதுக்கப்படுவதும், குரு மன்னனால் {யுதிஷ்டிரனால்} பார்க்கப்பட்டதுமான பல்வேறு சடலங்கள் ஒரே நேரத்தில் மறைந்து போயின.(5) ஓ! பாரதா, இனிமையானதும், முற்றிலும் தூய்மையானதும், குளுமையானதும், இனிய நறுமணமிக்கதுமான தென்றல் தேவர்கள் இருப்பதன் விளைவால் அந்த இடத்தில் வீசத் தொடங்கியது.(6) மருத்துகள், இந்திரன், அசுவினி இரட்டையர்களுடன் கூடிய வசுக்கள், சாத்யர்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், சொர்க்கவாசிகள் பிறர்,(7) சித்தர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் அனைவரும் பெருஞ்சக்தி கொண்ட தர்மனின் அரசமகன் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.(8)
அப்போது தேவர்களின் தலைவனும், சுடர்மிக்கச் செழிப்புடன் கூடியவனுமான சக்ரன், யுதிஷ்டிரனிடம் அவனுக்கு ஆறுதலளிக்கும் வகையில்,(9) "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, வா, ஓ! மனிதர்களின் தலைவா, வருவாயாக. ஓ! பலமிக்கவனே, இந்தத் தோற்ற மயக்கங்கள் முடிந்தன.(10) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன்னால் வெற்றி அடையப்பட்டது, (இன்பம் நிறைந்த) நித்திய உலகங்களும் உனதாகின. நீ கோபவசப்படாதே. என்னுடைய இந்தச் சொற்களைக் கேட்பாயாக.(11) ஓ! மகனே, ஒவ்வொரு மன்னனாலும் நரகம் நிச்சயம் பார்க்கப்பட வேண்டும். ஓ! மனிதர்களின் தலைவா, நல்லவையும் அல்லவையும் இங்கே அதிகமாக இருக்கின்றன.(12)
முதலில் தன் நற்செயல்களுக்கான கனியை அனுபவிப்பவன் அதற்கடுத்து நரகத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும். மறுபுறம், முதலில் நரகத்தைத் தாங்கிக் கொண்டவன் அதன் பிறகு சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டும்.(13) எவன் பாவச் செயல்களை அதிகம் செய்திருக்கிறானோ அவன் சொர்க்கத்தை முதலில் அனுபவிப்பான். ஓ! மன்னா, இதன் காரணமாகவே, உனக்கு நல்லதைச் செய்ய விரும்பிய நான், உன்னை முதலில் நரகத்தைக் காணச் செய்தேன்.(14) நீ பாசாங்கு செய்து துரோணரை அவரது மகன் {அஸ்வத்தாமன்} காரியத்தில் வஞ்சித்தாய். அதன் விளைவாகவே, ஒரு வஞ்சகச் செயலின் மூலம் உனக்கு நரகம் காட்டப்பட்டது.(15) உனக்கு ஏற்பட்டதைப் போலவே, பீமன், அர்ஜுனன், திரௌபதி ஆகிய அனைவருக்கும் ஒரு வஞ்சகச் செயல் மூலம் பாவிகளின் இடம் {நரகம்} காட்டப்பட்டது.(16)
ஓ! மனிதர்களின் தலைவா, வா, அவர்கள் அனைவரும் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தனர்.(17) உன் தரப்பில் இருந்து போரில் கொல்லப்பட்ட மன்னர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர். ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, வா, வந்து அவர்களைக் காண்பாயாக.(18) யாருக்காக நீ வருந்திக் கொண்டிருந்தாயோ அந்த வலிமைமிக்க வில்லாளியும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணனும், உயர்ந்த வெற்றியை அடைந்திருக்கிறான்.(19) ஓ! பலமிக்கவனே, மனிதர்களில் முதன்மையான சூரியனின் மகனை {கர்ணனை} இதோ பார். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவன் தனக்குரிய இடத்தில் இருக்கிறான். ஓ! மனிதர்களின் தலைவா, உன்னுடைய இந்தக் கவலையைக் கொல்வாயாக.(20) உன்னுடன் பிறந்தோரையும், பிறரையும், உன் தரப்பில் இருந்த மன்னர்களையும் இதோ பார். இவர்கள் அனைவரும் தங்களுக்குரிய (இன்ப) உலகங்களை அடைந்திருக்கின்றனர்.(21)
முதலில் கொஞ்சம் துன்பத்தை அனுபவித்த நீ, ஓ! குரு குலத்தின் மகனே, இந்நேரத்தில் இருந்து துயரங்களற்றவனாக, நோய்கள் அனைத்தும் விலகியவனாக என்னுடன் இன்பமாக விளையாடிக் கொண்டிருப்பாய்.(22) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! மன்னா, உன் அறச்செயல்கள் அனைத்தின் மூலம் வென்ற வெகுமதிகளையும், உன் தவங்கள் மற்றும் உன் கொடைகள் அனைத்தின் மூலமாக நீ அடைந்த உலகங்களையும் இனி நீ அனுபவிப்பாயாக.(23) தேவர்கள், கந்தர்வர்கள், தூய உடைகள் மற்றும் சிறந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வீக அப்சரஸ்கள் உனக்காகக் காத்திருந்து, உன் மகிழ்ச்சிக்காகத் தொண்டாற்றட்டும்.(24) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன்னால் பயன்படுத்தப்பட்ட வேள்வி வாளால் மேம்படுத்தப்பட்ட சிறப்புகளுடன் நீ செய்த ராஜசூய வேள்வியின் மூலம் உனதாகியிருக்கும் இந்த உலகங்களை இனி நீ அனுபவிப்பாயாக. உன் தவங்களின் உயர்ந்த கனிகளை நீ அனுபவிப்பாயாக.(25)
ஓ! யுதிஷ்டிரா, உன் உலகங்கள் அந்த மன்னர்களின் உலகங்களை விட மிக உயரத்தில் இருக்கின்றன. ஓ! பிருதையின் மகனே, அவை ஹரிச்சந்திரனின் உலகங்களுக்கு இணையானவை. வா, அங்கே அருள்நிலையில் நீ விளையாடிக் கொண்டிருப்பாயாக.(26) அரசமுனியான மாந்தாத்ரி {மாந்தாதா} எங்கே இருக்கிறானோ, மன்னன் பகீரதன் எங்கே இருக்கிறானோ, துஷ்மந்தன் {துஷ்யந்தன்} மகனான பரதன் எங்கிருக்கிறானோ அங்கே நீயும் அருள்நிலையில் விளையாடிக் கொண்டிருப்பாய்.(27) புனிதமானவளும், மூவுலகங்களையும் புனிதப்படுத்துபவளுமான தெய்வீக கங்கை {ஆகாயக் கங்கை} இதோ இருக்கிறாள். இவள் தெய்வீக கங்கை என்றழைக்கப்படுகிறாள். இதில் மூழ்கி நீ உன் சொந்த உலகத்திற்குச் செல்வாயாக[1].(28) இந்த ஓடையில் {கங்கையில்} நீராடும் நீ உன் மனித இயல்பை இழப்பாய். உண்மையில் உன் துயரம் அகன்று, நோய்கள் வெல்லப்பட்டு, பகைமைகள் அனைத்தில் இருந்தும் நீ விடுபடுவாய்" என்றான் {இந்திரன்}.(29)
[1] "கங்கை மூவழிகளைக் கொண்டவளாவாள். சொர்க்கத்தில் சுரதுனி அல்லது மந்தாகினி என்றழைக்கப்படுகிறாள்; பூமியில் கங்கை என்றழைக்கப்படுகிறாள்; பாதாள லோகத்தில் அவள் போகவதி என்றழைக்கப்படுகிறாள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! குரு மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவன் இவ்வாறு யுதிஷ்டிரனிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, உடல் கொண்ட வடிவத்துடன் கூடிய அற தேவன் {தர்மதேவன் யமன்}, தன் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்},(30) "ஓ! மன்னா, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஓ! மகனே, என்னிடம் நீ கொண்டுள்ள அர்ப்பணிப்பிலும், வாக்கில் நீ கொண்டிருக்கும் வாய்மையிலும், நீ கொண்டிருக்கும் பொறுமை மற்றும் தற்கட்டுப்பாட்டிலும் நான் பெரும் நிறைவடைகிறேன்.(31) ஓ! மன்னா, இது நான் உனக்கு வைத்த மூன்றாவது சோதனையாகும். ஓ! பிருதையின் மகனே, நீ உன் இயல்பில் இருந்தோ, அறிவில் இருந்தோ பிறழாதவன்.(32) முன்பு துவைத வனத்தில் அணிக்கட்டைகளை மீட்பதற்காகத் தடாகத்திற்கு வந்தபோது என் கேள்விகளால் நான் உன்னைச் சோதித்தேன். நீ அதை நன்றாகத் தாக்குப்பிடித்தாய்.(33) ஓ! மகனே அதன் பிறகு நாயின் வடிவை ஏற்று, உன்னுடன் பிறந்தோரும், திரௌபதியும் வீழ்ந்தபோது நான் மீண்டும் உன்னைச் சோதித்தேன்.(34)
இஃது உனக்கான மூன்றாவது சோதனையாகும்; உன்னுடன் பிறந்தோருக்காக நீ நரகத்திலேயே வசிப்பதற்கான உன் விருப்பத்தைத் தெரிவித்தாய். ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, நீ தூய்மையடைந்தாய். பாவத்தில் இருந்து தூய்மையடைந்து நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக.(35) ஓ! பிருதையின் மகனே, ஓ! மன்னா, உன்னுடன் பிறந்தோரும் நரகத்திற்குத் தகுந்தவர்களல்ல. இவையனைத்தும் தேவர்களின் தலைவனால் உண்டாக்கப்பட்ட தோற்ற மயக்கங்களாகும்.(36) ஓ! மகனே, மன்னர்கள் அனைவரும் நிச்சயம் ஒருமுறை நரகத்தைப் பார்க்க வேண்டும். எனவே, நீ சிறிது நேரம் இந்தப் பெருந்துன்பத்திற்கு உட்படுத்தப்பட்டாய்.(37) ஓ! மன்னா, பேச்சில் எப்போதும் வாய்மை நிறைந்தவர்களும், பெருந்துணிவைக் கொண்டவர்களுமான அர்ஜுனனோ, பீமனோ, முதன்மையான மனிதர்களான இரட்டையர்களோ {நகுல சகாதேவர்களோ}, கர்ணனோ நீண்ட கால நரகத்திற்குத் தகுந்தவர்களல்ல.(38) ஓ! யுதிஷ்டிரா, இளவரசி கிருஷ்ணையும் {திரௌபதியும்} கூடப் பாவிகளின் இடத்திற்குத் தகுந்தவளல்ல. வா, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, வந்து மூவுலகங்களிலும் தன் ஓடையை விரித்திருக்கும் கங்கையைக் காண்பாயாக" என்றான் {யமன்}.(39)
இவ்வாறு சொல்லப்பட்டவனும், அரசமுனியுமான உன் பாட்டன் {யுதிஷ்டிரன்}, தர்மனுடனும், வேறு தேவர்களுடனும் சென்றான்.(40) புனிதமானதும், புனிதப்படுத்துவதும், முனிவர்களால் எப்போதும் துதிக்கப்படுவதுமான தெய்வீக ஆறான கங்கையில் நீராடி அவன் {யுதிஷ்டிரன்} தன் மனித உடலைக் கைவிட்டான்.(41) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தெய்வீக வடிவை ஏற்றதன் விளைவால், தன் பகைமைகள் மற்றும் துன்பங்கள் அனைத்தும் களைந்தவனானான்.(42) பிறகு, தேவர்களால் சூழப்பட்ட குரு மன்னன் யுதிஷ்டிரன், அந்த இடத்தில் இருந்து சென்றான். தர்மனின் துணையுடன் கூடிய அவன், பெரும் முனிவர்களால் புகழப்பட்டான்.(43) உண்மையில் அவன் {யுதிஷ்டிரன்}, (மனித) கோபத்தில் இருந்து விடுபட்டுத் தங்கள் தங்களுக்குரிய நிலைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், வீரர்களுமான பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் இருந்த இடத்தை அடைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(44)
ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 3ல் உள்ள சுலோகங்கள் :44
இன்னும் 3 பகுதிகளே உள்ளன. அத்துடன் முழு மஹாபாரதம் நிறைவுபெறுகிறது.
ஆங்கிலத்தில் | In English |