Monday, January 13, 2020

பாரத மகிமை! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 5

The greatness of Bharata! | Svargarohanika-Parva-Section-5 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பீஷ்மர் முதலியோர் ஸ்வர்க்கத்தை அனுபவித்துத் தங்கள் தங்கள் தேவ வடிவில் கலந்ததை ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்; ஆஸ்தீகர் முதலியோரை வழிபட்டு, யாகத்தை முடித்து, ஹஸ்தினாபுரம் வந்து அரசாட்சி செய்த ஜனமேஜயன்; பாரதக் கதையை முடித்து அதன் மகிமையைக் கூறிய சௌதி...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "உயர் ஆன்மாக்களான பீஷ்மர் மற்றும் துரோணர் இருவரும், மன்னன் திருதராஷ்டிரன், விராடன், துருபதன், சங்கன், உத்தரன்,(1) திருஷ்டகேது, ஜயத்சேனன், மன்னன் சத்யஜித், துரியோதனனின் மகன், சுபலனின் மகனான சகுனி,(2) பேராற்றல் கொண்ட கர்ணனின் மகன்கள், மன்னன் ஜெயத்ரதன், கடோத்கசன், நீர் குறிப்பிடாத வேறு சிலர்,(3) சுடர்மிக்க வடிவங்களைக் கொண்ட வேறு வீர மன்னர்கள் ஆகியோர் சொர்க்கத்தில் எவ்வளவு காலம் இருந்தனர்.(4) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அவர்களுடைய இடம் சொர்க்கத்தில் நித்தியமானதா? அவர்களுடைய செயல்கள் {கர்ம பலன்கள்} தீர்ந்ததும் அந்த முதன்மையானவர்கள் அடைந்த கதியென்ன?(5) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் இதைக் கேட்க விரும்புவதால் உம்மைக் கேட்கிறேன். உமது ஒளிபொருந்திய தவத்தின் மூலம் நீர் அனைத்தையும் காண்பவராவீர்" என்றான் {ஜனமேஜயன்}".(6)


சௌதி {சௌனகர் தலைமையில் இருந்த முனிவர் கூட்டத்திடம்|} சொன்னார், "இவ்வாறு கேட்கப்பட்ட அந்த மறுபிறப்பாள முனிவர் {வைசம்பாயனர்}, உயர் ஆன்ம வியாசரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, அந்த மன்னனின் கேள்விக்குப் பதிலளிப்பதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(7)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மனிதர்களின் மன்னா, ஒவ்வொருவனும் தன் செயல்களின் இறுதியில் தன் சொந்த இயல்புக்குத் திரும்ப இயன்றவனல்ல. உண்மையில் இஃது இவ்வாறு இருந்தாலும், இல்லாவிட்டாலும் உன்னால் கேட்கப்பட்டது நல்ல கேள்வியே.(8) ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இந்தத் தெய்வீகப் புதிரை {தேவரகசியத்தைக்} கேட்பாயாக. ஓ! கௌரவ்யா, வலிமையும், சக்தியும், தெய்வீகப் பார்வையும், பேராற்றலையும் கொண்டவரும், புராதன தவசியும், பராசரர் மகனும், உயர்ந்த நோன்புகளை எப்போதும் நோற்பவரும், செயல்கள் அனைத்துடன் இணைந்த கதியை அறிந்தவருமான வியாசரால் (எங்களுக்கு) இது விளக்கப்பட்டது.(9,10)

வலிமையும், சக்தியும், பெரும்பிரகாசமும் கொண்ட பீஷ்மர், வசுக்களின் நிலையை அடைந்தார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அஷ்ட வசுக்கள் இப்போது காணப்படுகின்றனர்.(11) துரோணர், அங்கீரஸ வழித்தோன்றல்களில் முதன்மையான பிருஹஸ்பதிக்குள் நுழைந்தார். ஹிருதிகன் மகனான கிருதவர்மன் மருத்துகளுக்குள் நுழைந்தான்.(12) பிரத்யும்னன் சனத்குமாரருக்குள் நுழைந்தான். திருதராஷ்டிரன், அடைதற்கரிதானதும், கருவூலத் தலைவனுக்குரியதுமான உலகத்தை {குபேரலோகத்தை / யக்ஷர்களின் உலகத்தை} அடைந்தான்.(13) புகழ்பெற்றவளான காந்தாரி தன் கணவன் திருதராஷ்டிரன் அடைந்த அதே உலகத்தை அடைந்தாள். பாண்டு தன் இரு மனைவியருடன் பெரும் இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றான்.(14) விராடன், துருபதன், மன்னன் திருஷ்டகேது, நிசடன், அக்ரூரர், சாம்பன், பானுகம்பன், விதூரதன்,(15) பூரிஸ்ரவஸ், சலன், மன்னன் பூரி, கம்ஸன், உக்ரஸேனன், வசுதேவர்,(16) மனிதர்களில் முதன்மையான உத்தரன், சங்கன் ஆகிய முதன்மையான மனிதர்கள் அனைவரும் தேவர்களிடம் நுழைந்தார்கள்.(17)

பேராற்றல் கொண்டவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனும், வர்ச்சஸ் என்ற பெயரைக் கொண்டவனுமான சோமனின் மகன், மனிதர்களில் சிங்கமான பல்குனன் {அர்ஜுனன்} மகனான அபிமன்யுவானான்.(18) க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு இணக்கமான முறையில் வேறு எவராலும் வெளிப்படுத்த முடியாத துணிச்சலுடன் போரிட்ட அந்த வலிய கரங்களைக் கொண்ட அற ஆன்மாவானாவன் சோமனுக்குள் நுழைந்தான்.(19) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, போரில் கொல்லப்பட்ட கர்ணன் சூரியனுக்குள் நுழைந்தான். சகுனி துவாரனுக்குள்ளும், திருஷ்டத்யும்னன் நெருப்பின் தேவனுக்குள்ளும் ஈர்க்கப்பட்டனர்.(20) திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும் கடும் சக்தி கொண்ட ராட்சசர்களாவர். ஆயுதங்களால் அடைந்த மரணத்தால் புனிதமடைந்தவர்களும், பெருஞ்செழிப்பைக் கொண்டவர்களுமான அந்த உயர் ஆன்மாக்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர்.(21) க்ஷத்ரி {விதுரர்}, மன்னன் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும் அற தேவனுக்குள் நுழைந்தனர். புனிதமானவனும், சிறப்புமிக்கவனுமான அனந்தன் (பலராமனாகப் பிறந்தவன்) பூமிக்குக் கீழுள்ள உலகத்திற்குச் சென்றான்.(22) பெரும்பாட்டனின் {பிரம்மனின்} ஆணையின் பேரிலும், யோகசக்தியின் துணையுடனும் அவன் பூமியை ஆதரித்தான்.

வாசுதேவன் {கிருஷ்ணன்}, நாராயணன் என்றழைக்கப்படும் தேவர்களின் நித்திய தேவனுடைய ஒரு பகுதியாவான். அதன்படியே அவன் நாராயணனுக்குள் நுழைந்தான்.(23) பதினாராயிரம் {16,000} பெண்கள் வாசுதேவனுக்கு மனைவியராக மணந்து கொடுக்கப்பட்டனர். ஓ! ஜனமேஜயா, வேளை வந்தபோது அவர்கள் சரஸ்வதிக்குள் மூழ்கினர்.(24) அங்கே அவர்களது (மனித) உடலைக் கைவிட்ட அவர்கள் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர். பிறகு அவர்கள் அப்சரஸ்களாக மாறி, வாசுதேவனின் முன்னிலையை அடைந்தனர்.(25) வீரர்களும், கடோத்கசன் மற்றும் பெரும் போரில் கொல்லப்பட்ட பிறரைப் போன்ற வலிமைமிக்கத் தேர்வீரர்களில் சிலர் தேவர்கள் மற்றும் சிலர் யக்ஷர்கள் என்ற நிலையை அடைந்தனர்.(26) துரியோதனனின் தரப்பில் போரிட்டவர்கள் ராட்சசர்கள் என்று சொல்லப்படுகின்றனர். ஓ! மன்னா, அவர்கள் அனைவரும் படிப்படியாகச் சிறந்த இன்பலோகங்களை அடைந்தனர்.(27) அந்த மனிதர்களில் முதன்மையான சிலர் இந்திரனின் வசிப்பிடத்திற்கும், வேறு சிலர் பெரும் நுண்ணறிவைக் கொண்ட குபேரனின் வசிப்பிடதிற்கும், இன்னும் சிலர் வருணனின் வசிப்பிடத்திற்கும் சென்றனர்.(28) ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, ஓ! பாரதா, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரின் செயல்கள் குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்" {என்றார் வைசம்பாயனர்}".(29)

சௌதி {சௌனகர் தலைமையில் இருந்த முனிவர் கூட்டத்திடம்|}  சொன்னார், "மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, இதை வேள்விச் சடங்குகளின் இடைவெளிகளில் கேட்ட மன்னன் ஜனமேஜயன் ஆச்சரியத்தில் நிறைந்தான்.(30) பிறகு வேள்விப் புரோகிதர்கள், இன்னும் எஞ்சியிருந்த சடங்குகளை நிறைவடையச் செய்தனர். பாம்புகளை (கொடிய மரணத்தில் இருந்து) காத்த ஆஸ்தீகர் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தார்.(31) மன்னன் ஜனமேஜயன் பிராமணர்கள் அனைவருக்கும் அபரிமிதமான கொடைகளைக் கொடுத்து நிறைவடையச் செய்தான். இவ்வாறு மன்னனால் வழிபடப்பட்ட அவர்கள் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(32) கல்விமான்களான அந்தப் பிராமணர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிய மன்னன் ஜனமேஜயன், தக்ஷசீலத்தில் இருந்து யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினான்.(33) மன்னனின் {ஜனமேஜயனின்} பாம்பு வேள்வியில், வியாசரின் ஆணையின் பேரில் வைசம்பாயனர் சொன்ன அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன்.(34)

வரலாறு {இதிஹாஸம்} என்றழைக்கப்படும் இது புனிதமானதும், புனிதப்படுத்துவதும், சிறந்ததுமாகும். ஓ! பிராமணரே {சௌனகரே}, வாய்மைநிறைந்த பேச்சைக் கொண்ட தவசி கிருஷ்ணரால் {வியாசரால்} இது தொகுக்கப்பட்டது.(35) அவர், அனைத்தையும் அறிந்தவரும், விதிகள் அனைத்தையும், அறிந்தவரும், அனைத்துக் கடமைகளின் அறிவைக் கொண்டவரும், பக்தியுடையவரும், புலன்களுக்கு அப்பாற்பட்டவற்றை உணரக்கூடியவரும் {அதீந்திரியரும்}, தூயவரும், தவங்களால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவரும்,(36) ஆறு உயர்ந்த குணங்களைக் கொண்டவரும், சாங்கிய யோகத்திற்குத் தம்மை அர்ப்பணித்தவரும் ஆவார். அவர் {வியாசர்}, பல்வேறு கதைகளால் தூய்மையடைந்த தெய்வீகப் பார்வையில் அனைத்தையும் கண்டு இதைத் தொகுத்தார்.(37) அவர் பாண்டவர்கள் மற்றும் சக்தி எனும் அபரிமித செல்வத்தைக் கொண்ட பிற க்ஷத்திரியர்களின் புகழை உலகம் முழுவதும் பரப்ப விரும்பி இதைச் செய்தார்.(38)

எந்தக் கல்விமான், செவிப்புலம் கேட்பதற்கு மத்தியில் புனித நாட்களில் இந்த வரலாற்றை உரைப்பானோ அவன், அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தவனாகச் சொர்க்கத்தை வென்று, பிரம்ம நிலையை அடைவான்.(39) எந்த மனிதன், (தீவில் பிறந்தவரான) கிருஷ்ணரால் {வியாசரால்} தொகுக்கப்பட்ட இந்த வேதத்தை முழுமையாக உரைக்கும்போது, குவிந்த கவனத்துடன் கேட்பானோ, பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} போன்ற கொடும்பாவங்களின் வரிசையில் வரும் அவனுடைய லட்சக்கணக்கான பாவங்களையும் அது கழுவிவிடும்.(40) ஒரு சிராத்தத்தில் இந்த வரலாற்றின் சிறு பகுதியையாவது உரைக்கும் மனிதனின் பித்ருக்கள், வற்றாத உணவு மற்றும் பானத்தை அடைகிறார்கள்[1].(41) ஒருவன் தன் புலன்களைக் கொண்டோ, மனத்தைக் கொண்டோ பகலில் செய்யும் பாவங்கள், மாலையில் மஹாபாரதத்தின் ஒரே ஒரு பகுதியை உரைப்பதன்மூலம் கழுவப்படுகின்றன.(42) ஒரு பிராமணன் இரவில் பெண்களுக்கு மத்தியில் எத்தகைய பாவங்கள் புரிந்தாலும், விடியலில் மஹாபாரதத்தின் ஒரே ஒரு பகுதியை உரைப்பதன் மூலம் கழுப்படுகின்றன.(43) உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பாரதர்களே {பரதனின் வாரிசுகளே} இதன் தலைப்பாகிறார்கள். எனவே இது பாரதம் என்றழைக்கப்படுகிறது. பாரதர்களையே தலைப்பாகக் கொண்டதும், மேலும் மிக முக்கியமானவற்றைக் கொண்டதுமாக இருப்பதால் இது மஹாபாரதம் என்றழைக்கப்படுகிறது[2].(44) இந்தப் பெரும் ஆய்வின் பொருள் விளக்கங்களை நன்கறிந்த ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அத்தகைய மனிதன் அறம், பொருள் மற்றும் இன்பத்துடன் வாழ்ந்து, வீட்டையும் {மோட்சத்தையும்} அடைகிறான்[3].(45) எது இங்கே தோன்றுமோ அஃது எங்கும் தோன்றும். எது இங்கே தோன்றாதோ அஃது எங்கும் தோன்றாது. இந்த வரலாறு ஜயம் என்ற பெயரில் அறியப்படுகிறது. முக்தியில் {மோட்சத்தில்} விருப்பமுள்ள அனைவராலும் இது கேட்கப்பட வேண்டும்[4].(46)

[1] "பாதம் என்று குறிப்பிடப்படுவது ஒரு சுலோகத்தின் ஓர் அடியைக் குறிக்கும். ஒரு ஸ்லோகத்தில் நான்கு பாதங்கள் இருக்கும். எனவே, ஒருவன் இந்த வரலாற்றின் ஒரு ஸ்லோகத்தின் ஒரேயொரு அடியை உரைத்தாலும் அவன் தன் பித்ருக்களுக்கு வற்றாத உணவையும் பானத்தையும் படைத்தவனாகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "மஹத் என்று சொல்லப்படுவது உயர்ந்தது அல்லது பெரியது என்ற பொருளைத் தரும். எனவே, மஹாபாரதம் என்பது பாரதர்களின் பெரும் வரலாறு அல்லது உயர்ந்த வரலாறு என்ற பொருளைப் பெறும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "நிருக்தம் என்பது வேதங்களில் உள்ள சிறப்புச் சொற்களின் விளக்கங்களாலும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இது மஹத்தாக இருப்பதினாலும், பாரமுள்ளதாக இருப்பதினாலும் மஹாபாரதமென்று சொல்லப்படுகிறது. இதனுடைய நிருக்தத்தை எவன் அறிகிறானோ அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்" என்றிருக்கிறது. மஹத் என்பதன் அடிக்குறிப்பில், "பெரிதாக இருப்பது" என்றும், பாரமுள்ளதாக என்பதன் அடிக்குறிப்பில், "கௌரவமுள்ளது" என்றும், நிறுக்தன் என்பதன் அடிக்குறிப்பில், "பெயரின் உறுப்புகளைப் பிரித்துப் பொருள் சொல்வது" என்றும் இருக்கின்றன.

[4] கும்பகோணம் பதிப்பில் இதன்பிறகு இன்னும் இருக்கிறது. கங்குலியில் பின்வருவது இல்லை. கும்பகோணம் பதிப்பில் "பதினெட்டு புராணங்களும், எல்லாத் தர்மசாஸ்திரங்களும், அங்கங்களுடன் கூடின வேதங்களும் ஒரு தட்டிலும், பாரதம் ஒரு தட்டிலும் இருக்கின்றன. மஹாத்மாவும், பதினெட்டுப் புராணங்களையும் செய்தவரும், வேதத்திற்குப் பெருங்கடலாயிருப்பவருமான அந்த முனிவருடைய இந்த ஸிம்மநாதமானது கேட்கப்படட்டும். பிரபுவும், பகவானுமான வியாஸ முனிவர், சிறந்ததும், புண்யமுமான இந்தப் பாரதம் முழுதினையும் மூன்று வருஷங்களில் செய்தார். ஜயமென்று பெயருள்ள (இந்த) மஹாபாரதத்தை எப்பொழுதும் பக்தியுடன் கேட்டால் அவனுக்குச் செல்வமும், புகழும், கல்வியும் எப்பொழுதும் சேர்ந்தே உண்டாகின்றன. பரதஸ்ரேஷ்டரே, அறம், பொருள், இன்பம் வீடுகளைப் பற்றி இதில் உள்ளதுதான் மற்றதிலும் இருக்கின்றது. இதில் இல்லாதது ஓரிடத்திலும் இல்லை. ஜயமென்று பெயருள்ள மஹாபாரதமானது எப்பொழுதும் எவ்விடத்தில் படிக்கப்படுகிறதோ அவ்விடத்தில் ஸ்ரீயும், கீர்த்தியும், வித்தையும், எப்பொழுதும் ஸந்தோஷமாகிருக்கின்றன. அக்காலத்தில் ஜனமேஜயர் முதலான அரசர்களும், ஆஸ்திகர் முதலான பிராம்மணர்களும் தர்மத்தத்தன் முதலான வைஸ்யர்களும், ஸோம்யவம்ஸ்யன் முதலான சூத்திரர்களும், பாரதத்தைச் சொல்லுகின்றவரும், பிரம்மரிஷியும், மஹாகுருவுமான வைசம்பாயனரைப் பொற்பீடத்தில் வீற்றிருக்கச் செய்து, மஹா குருவான அவரை லக்ஷம் நிஷ்கங்களாலும், பதினாயிரம் நிஷ்கங்களாலும், ஆயிரம் நிஷ்கங்களாலும், நூறு நிஷ்கங்களாலும், பத்து நிஷ்கங்களாலும் பூஜித்தார்கள். மரித்துப் பிறக்கும் புத்திரனுள்ளவன் பத்து நிஷ்கங்களைக் கொடுத்து மரிக்காத புத்திரனுள்ளவனானான். ஜ்வரம் முதலான வியாதிகளுள்ளவன் நூறு நிஷ்கங்களைக் கொடுத்து வியாதியற்றவனானான். ஸந்ததியில்லாதவன் ஆயிரம் நிஷ்கங்களைக் கொடுத்து புத்திர ஸந்ததியுள்ளவனானான். அவர்கள் ஆயுளையும் ஆரோக்கியத்தையும், ஐஸ்வரியத்தையும், அன்னத்தையும், புத்திரர்களையும் அடைந்தார்கள். ஸுவர்ணத்தையும், வெள்ளியையும், ரத்தினத்தையும் எல்லா ஆபரணங்களையும், எல்லா ஸாமக்ரிகளோடுங்கூடினதும், புதையலுடன், பொக்கசத்துடனும் கூடினதும், செங்கல்லுகளாலாகிய சுவர்களுடன் கூடினதும் அக்னி பாதை முதலானவை அற்றதும், தேவர்களைப் பூஜிப்பதற்கும், அக்னிஹோத்ரம் முதலானவை செய்வதற்கும் படிப்பதற்குமுள்ள வீடுகளுள்ளதும், உள்ளிலும், வெளியிலும் மதில்களுள்ளதும் உப்பரிகைகளுடன் கூடினதும் கோசாலைகளுடன் கூடினதுமான வீட்டை ஸ்வர்க்காரோஹண பர்வத்தைக் கேட்குங்காலத்தில் தனித்தனியாகவாவது, சேர்த்தாவது கொடுக்க வேண்டும். மோக்ஷத்தில் விருப்பமுள்ளவனாகக் கொடுத்தால், (அவனுக்கு) மறுபடியும் பிறப்பில்லை. ஆசையுள்ளவனாக இருந்தால் பிரம்ம கல்பம் வரையில் பிரம்மாவின் கிருஹத்தில் ஸுகமாக வஸிப்பான். புராணத்தின் முகமாக வேதந்தஜ்ஞானமானது அடையப்படுகிறது. ஆகையினால், அவர் குருவென்று சொல்லப்பட்டார். அவரைப் பூஜிப்பது ஈஷ்வர பூஜையாகும். பாரதத்தைச் சொல்லுகின்றவனையும், கேட்பவர்களையும், எழுதுகின்றவர்களையும், ஸித்தர்களும், பரமரிஷிகளும், மிக்க ஸந்தோஷத்துடன் பூஜிக்கிறார்கள். மஹாபாரதத்தைச் சொல்பவனை இவ்வுலகில் எந்த மனிதர்கள் பூஜிக்கவில்லையோ அவர்களுடைய எல்ல நற்கர்மங்களும் நசித்துவிடும், தேவர்களும் சபிப்பார்கள்" என்றிருக்கிறது.

பிராமணர்கள், மன்னர்கள், கருத்தரித்த பெண்கள் ஆகியோரால் இது படிக்கப்பட வேண்டும். சொர்க்கத்தை அடைய விரும்புபவன் சொர்க்கத்தை அடைவான்; வெற்றியை விரும்புபவன் வெற்றியை அடைவான்.(47) கருத்தரித்த பெண்கள் உயர்ந்த அருளைக் கொண்ட மகனையோ, மகளையோ ஈன்றெடுப்பார்கள். பலமிக்கவரும், திரும்பி வராதவரும், முக்தியின் அவதாரமும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்}, அற விளைவுகளுக்குத் துணை புரிய விரும்பி பாரதத்தின் சுருக்கத்தைப் படைத்தார்.(48) அறுபது லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட மற்றொரு தொகுப்பையும் அவர் படைத்தார்.(49) இவற்றில் முப்பது லட்சம் ஸ்லோகங்கள் தேவலோகத்தில் வைக்கப்பட்டது. பித்ருக்களின் லோகத்தில் பதினைந்து லட்சம் ஸ்லோகங்கள் இப்போது இருக்கின்றன. அதே வேளையில் பதினைந்து லட்சம் யக்ஷர்களின் உலகில் நடப்பிலுள்ளன.(50) மனிதர்களுக்கு மத்தியில் ஒரு லட்சம் தற்போதிருக்கின்றன. நாரதர் தேவர்களுக்கு மஹாபாரதத்தை உரைத்தார்; அசித தேவலர் பித்ருக்களுக்கும்,(51) சுகர் ராட்சசர்கள் மற்றும் யக்ஷர்களுக்கும், வைசம்பாயனர் மனிதர்களுக்கு மஹாபாரதத்தை உரைத்தனர். இந்த வரலாறு புனிதமானதாகவும், ஆழ்ந்த கருத்துகளை உடையதாகவும், வேதங்களுக்கு நிகரானதாகவும் கருதப்படுகிறது.(52) ஓ! சௌனகரே, ஒரு பிராமணனைத் தன் முன்னிலையில் கொண்டு இந்த வரலாற்றைக் கேட்கும் மனிதன், புகழ் மற்றும் தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைகிறான்.(53) நல்லர்ப்பணிப்புடன் மஹாபாரத உரையைக் கேட்பவன், அதன் மிகச் சிறிய பகுதியைப் புரிந்து கொள்வதன் மூலம் கிட்டும் தகுதியின் விளைவால் உயர்ந்த வெற்றியை அடைகிறான். இந்த வரலாற்றைச் சொல்லும் மனிதனும், அர்ப்பணிப்புடன் கேட்கும் மனிதனும் தங்கள் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றனர்.(54,55)

பழங்காலத்தில் பெரும் முனிவரான வியாசர் இந்த ஆய்வைத் தொகுத்து, இந்த நான்கு ஸ்லோகங்களுடன் சேர்த்து தம்முடன் தமது மகன் சுகரையும்  படிக்கச் செய்தார்[5].(56) "ஆயிரக்கணக்கான தாய்மாரும், தந்தைமாரும், நூற்றுக்கணக்கான மகன்களும், மனைவியரும் உலகில் எழுவார்கள், அதிலிருந்து செல்வார்கள். வேறு சிலரும் (எழுந்து) அதே போலச் செல்வார்கள்.(57) இன்பந்தரும் ஆயிரக்கணக்கான தருணங்களும், அச்சந்தரும் நூற்றுக்கணக்கான தருணங்களும் நேரலாம். இவை அறியாமையில் இருப்பவனைப் பாதிக்குமேயன்றி ஞானியையல்ல.(58) உயர்த்தப்பட்ட கரங்களுடன் நான் உரக்கக் கதறுகிறேன், கேட்பாரெவரும் இல்லை. அறத்தில் இருந்து செல்வமும், செல்வத்திலிருந்து இன்பமும் நேர்கின்றன. எனவே, அறத்தை ஏன் கடைப்பிடிக்கக்கூடாது?(59) இன்பத்திற்காகவோ, அச்சத்திற்காகவோ, பேராசைக்காகவோ ஒருபோதும் ஒருவன் அறத்தைக் கைவிடக்கூடாது. உண்மையில் உயிரின் நிமித்தமாகவும் ஒருவன் அறத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது. அறமே நிலையானது. இன்பதுன்பங்கள் நிலையானவையல்ல. ஜீவன் நிலையானவன். எனினும், உடலில் ஜீவன் பொதியப்படுவதற்கான காரணம் {உடலுடன் கூடிய ஜீவன்} அவ்வாறானதல்ல" {என்ற ஸ்லோகங்களை வியாசர் தம்முடன் சேர்ந்து சுகரையும் படிக்கச் செய்தார்}.(60)

[5] அந்த நான்கு சுலோகங்களும் 57, 58, 59, 60 ஆகிய ஸ்லோகங்களில் வருகின்றன. பம்பாய் பதிப்பு மற்றும் வங்கப்பதிப்பின் உரைகளுக்கிடையில் சிறு வேறுபாடு இருக்கிறது. ஆனால் அந்த வேறுபாடுகளைக் கவனமாகக் கருத்தில் கொண்ட எனக்கு வங்க உரைகளே உண்மைத் தன்மையுடன் இருப்பது தெரிகிறது. இதில் எனக்கு ஐயமில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அந்த மனிதன் விடியலில் எழுந்ததும், {மேற்கண்ட} இந்தப் பாரதச் சாவித்ரியைப் படிப்பானோ[6] அவன் இந்த வரலாற்றை உரைப்பதுடன் தொடர்புடைய வெகுமதிகளை அனைத்தையும் அடைந்து இறுதியாக உயர்ந்த பிரம்மத்தை அடைவான்.(61) புனிதமான பெருங்கடல், இமய மலை ஆகிய இரண்டும் விலைமதிப்புமிக்க ரத்தினங்களின் சுரங்கங்களாகக் கருதப்படுவதைப் போலவே பாரதமும் (விலைமதிப்புமிக்க ரத்தினங்களைக் கொண்ட சுரங்கமாகவே) கருதப்படுகிறது.(62) கல்விமானான மனிதன், (தீவில் பிறந்த) கிருஷ்ணரால் {வியாசரால்} தொகுக்கப்பட்ட இந்த வேதத்தையோ, ஆகமத்தையோ பிறருக்கு உரைப்பதன் மூலம் செல்வத்தை ஈட்டுவான். குவிந்த கவனத்துடன் பாரதம் என்ற இந்த வரலாற்றை உரைக்கும் மனிதன் நிச்சயம் உயர்ந்த வெற்றியை அடைவான்.(63) எனில், புஷ்கரையில் நீர் தெளித்துக் கொண்டு, பாரதம் உரைக்கப்படும் போது கவனமாகக் கேட்கும் மனிதனைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இது தீவில் பிறந்தவரின் உதடுகளில் இருந்து சிந்திய அமுதத்திற்கு ஒப்பானது. இஃது அளக்க முடியாததாகவும், புனிதமானதாகவும், புனிதப்படுத்துவதாகவும், பாவம் போக்குவதாகவும், மங்கலமானதாகவும் இருக்கிறது" {என்றார் சௌதி}.(64)

[6] "சாவித்ரி என்பது காயத்ரியைப் போன்று புனிதமான ஒன்றாகும். காயத்ரி என்பது வேதங்களில் உள்ள புனிதமான மந்திரமாகும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு ஸ்லோகங்களும் பாரதத்தின் "சாவித்ரி" அல்லது "காயத்ரி" ஆகும். அவற்றை {அந்த நான்கு ஸ்லோகங்களையும்} பாராயணம் செய்வது {உரைப்பது}, மொத்த தொகுப்பையும் {முழு மஹாபாரதத்தையும்} பாராயணம் செய்ததற்கு நிகராகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 5ல் உள்ள சுலோகங்கள் : 64

ஆங்கிலத்தில் | In English