Oridnances for listening Mahabharata! | Svargarohanika-Parva-Section-6 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : மஹாபாரதம் உரைக்கும்போது கேட்பதற்குரிய விதி முறைகள்; மஹாபாரதம் கேட்ட பிறகு கொடுக்கப்பட வேண்டிய சிராத்த காணிக்கைகள்; மஹாபாரதப் பாராயணத்தைக் கேட்ட பிறகு பொதுவாகக் கொடுக்கப்பட வேண்டிய கொடைகள்; பாராயணம் செய்பவருக்குரிய தகுதிகள்; பாராயணம் செய்ய வேண்டிய முறை; ஒவ்வொரு பாராயணத்தின் முடிவிலும் கிட்டும் பலன்கள்; ஒவ்வொரு பர்வத்தின் நிறைவிலும் கொடுக்கப்பட வேண்டிய கொடைகள்; மஹாபாரதத்தின் புண்ணியங்கள்; மஹாபாரதத்தைக் கேட்பதன் மூலம் கொடும்பாவங்களில் இருந்தும் தூய்மையடையலாம் என்பது...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! புனிதமானவரே, கல்விமான்கள் எந்தச் சடங்குகளின்படி பாரதத்தைக் கேட்க வேண்டும். (பாரதத்தைக் கேட்பதன் மூலம் அடையப்படும்) கனிகள் பலன்கள் என்னென்ன? பல்வேறு பாரணங்களின் {உண்ணா நோன்பிருந்து உண்ணும்} போது வழிபடப்பட வேண்டிய தேவர்கள் யாவர்?(1) ஓ! புனிதமானவரே, ஒவ்வொரு பர்வத்தின் போதும், அல்லது (பாராயணம் தொடர்கையில் வரும்) புனித நாளின் போதும் ஒருவன் கொடுக்க வேண்டிய கொடைகள் என்னென்ன? பாராயணம் செய்பவரின் தகுதிகள் என்ன? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக[1]" என்றான்.(2)
[1] "ஒரு பர்வம் என்பது ஒரு புனித நாளாகும், பொதுவாக இது முழு நிலவு {பௌர்ணமி}, புது நிலவு {அமாவாசை} நாட்கள் அவ்வாறு அழைக்கப்படுகின்றன.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, ஓ! பாரதா, அதன் நடைமுறை என்ன என்பதையும், (பாரதம் உரைக்கப்படும்போது) கேட்பவனுக்குக் கிடைக்கும் கனிகள் {பலன்கள்} என்னென்ன என்பதையும் கேட்பாயாக. ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, இதையே நீ என்னிடம் கேட்டாய்.(3) ஓ! பூமியின் ஆட்சியாளா, சொர்க்கத்தின் தேவர்கள் விளையாடுவதற்காக {தெய்வசெயல் புரிவதற்காக} இந்த உலகத்திற்கு வந்தனர். தங்கள் பணியை முடித்துக் கொண்டு அவர்கள் மீண்டும் சொர்க்கத்திற்குச் சென்றனர்.(4) நான் உனக்குச் சுருக்கமாகச் சொல்லப் போவதைக் கேட்பாயாக. மஹாபாரதத்தில் முனிவர்களின் பிறப்பு மற்றும் பூமியில் வந்த தேவர்களின் பிறப்பு ஆகியவை காணக்கிடைக்கின்றன.(5) ஓ! பாரதக் குலத்தோனே, பாரதம் என்றழைக்கப்படும் இந்த ஆய்வில் நித்தியமான ருத்திரர்கள், சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், ஆதித்யர்கள், அஸ்வினிகள் என்றழைக்கப்படும் இரு தேவர்கள், லோகபாலர்கள், பெரும் முனிவர்கள், குஹ்யர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், வித்யாதரர்கள், சித்தர்கள், பல்வேறு தேவர்கள், உடலில் புலப்படும் சுயம்பு, தவசிகள் பலர், மலைகள், குன்றுகள், பெருங்கடல்கள், கடல்கள், ஆறுகள், பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த அப்சரஸ்கள், கோள்கள், வருடங்கள், அயனங்கள் {அரை வருடங்கள்}, பருவ காலங்கள், அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடியதும், தேவர்கள் மற்றும் அசுரர்களுடன் கூடியதுமான மொத்த அண்டமும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன.(6-9)
ஒரு மனிதன் பயங்கரப் பாவங்களைச் செய்தவனாக இருந்தாலும், இதில் சொல்லப்படும் அவர்களின் {மேற்கண்டவர்களின்} பெயர்கள், சாதனைகள், புகழ் ஆகியவற்றைக் கேட்பதன் மூலம், அவற்றில் இருந்து தூய்மையடைகிறான்.(10) ஓ! பாரதா {ஜனமேஜயா}, குவிந்த ஆன்மாவுடனும், தூய உடலுடனும் இந்த வரலாற்றைத் தொடக்கம் முதல் முடிவு வரை முறையாகக் கேட்ட ஒருவன், (அதில் குறிப்பிடப்படும் முதன்மையான மனிதர்களுக்கு) சிராத்தக் காணிக்கைகளை அளிக்க வேண்டும். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தன் சக்திக்கு தகுந்த படி பிராமணர்களுக்கும் பிராமணர்களுக்கும் அர்ப்பணிப்புடன் கொடைகளை அளிக்க வேண்டும்.(11,12) பல்வேறு வகை ரத்தினங்கள், பசுக்கள், பசுக்களில் பால் கறப்பதற்கான வெண்கலப் பாத்திரங்கள், அனுபவிக்கத்தகுந்த அனைத்து வகைச் சாதனைகளையும் கொண்டவர்களும், அனைத்து வகை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான கன்னிகைள், பல்வேறு வகையான வாகனங்கள், அழகிய மாளிகைகள், நிலங்கள் மற்றும் துணிகள் ஆகியனவும் காணிக்கை அளிக்கப்பட வேண்டும்.(13,14) குதிரைகள், மதப்பெருக்குள்ள யானைகள் உள்ளிட்ட விலங்குகளும், படுக்கைகள், மனிதர்களின் தோள்களில் சுமக்கப்படும் பல்லக்குகள், நன்கு அலங்கரிக்கப்பட்ட தேர்கள் ஆகியவையும் கொடை அளிக்கப்பட வேண்டும்.(15) வீட்டிற்குரிய எந்தப் பொருளிலும் முதன்மையானவையும், பெரும் மதிப்புமிக்கச் செல்வமும் பிராமணர்களுக்குக் கொடையளிக்கப்பட வேண்டும். உண்மையில், ஒருவன் தன்னையும், மனைவிகளையும், பிள்ளைகளையும் கொடையளிக்க வேண்டும்.(16)
பாரதத்தைக் கேட்க விரும்பும் ஒருவன், ஐயுணர்வு இல்லாத இதயத்துடனும், உற்சாகத்துடனும், இன்பமாகவும் அதைக் கேட்க வேண்டும்; உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அவன் தன் சக்திக்குத் தகுந்த வகையில் பெரும் அர்ப்பணிப்புடன் கொடைகளைக் கொடுக்க வேண்டும்[2].(17) வாய்மை மற்றும் நேர்மையில் அர்ப்பணிப்புள்ளவனும், தற்கட்டுப்பாடுடையவனும், (மனம்) தூய்மையானவனும், நம்பிக்கையுடன் கூடியவனும், கோபத்தை அடக்கியவனுமான ஒரு மனிதன், (பாரதம் உரைக்கும் காரியத்தின் மூலம்) வெற்றியை எவ்வாறு அடைகிறான் என்பதைக் கேட்பாயாக.(18) அவன் (உடல் அளவில்) தூய்மையானவனும், நல்லொழுக்கம் ஒழுகுபவனும், வெள்ளுடை உடுத்தியவனும், தன் ஆசைகளை முழுமையாக ஆள்பவனும், குற்றங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனும், கல்வியின் பிரிவுகள் அனைத்தையும் அறிந்தவனும், நம்பிக்கையுடன் கூடியவனும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனும்,(19) நல்ல குணங்களைக் கொண்டவனும், அருள் நிறைந்தவனும், தற்கட்டுப்பாடுடையவனும், வாய்மைநிறைந்தவனும், ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பவனும், கொடையளிப்பதால் அனைவராலும் விரும்பப்படுபவனும், கௌரவம் கொண்டவனுமான ஒருவனை உரைப்பவனாக {பாராயணம் செய்பவனாக} நியமிக்க வேண்டும்.(20)
[2] "நான் இந்த ஸ்லோகத்திற்குச் சரியாகப் பொருள் கொண்டிருக்கிறேனா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்த நாள்வரை, எந்த மனிதனின் வீட்டில் பாரதம் உரைக்கப்படுகிறதோ, அவன் ஒவ்வொரு நாளும் உரையின் முக்கிய நிலைகளில் கொடைகளை அளிக்கிறான். ஒரு சில தருணங்களை எடுத்துக்காட்டுகளாகச் சொல்வதற்கு, திரௌபதி சுயம்வரப் பகுதி வரும்போது, ஏதோ உரைக்கச் செய்பவரே துருபதன் என்ற வகையில் உரைப்பவருக்கு விலைமதிப்புமிக்கக் கொடைகள் அளிக்கப்படுகின்றன. அதே போலத் துர்வாசரின் பாரணம் {நோன்பு முடிக்கும் நேரம்} வரும்போது, ஏதோ அந்த இல்லரவாசியே அந்தக் கோபக்கார தவசிக்கும் அவரது சீடர்களுக்கு உணவு தயாரிக்கும் மன்னன் யுதிஷ்டிரன் என்பதைப் போல, அனைத்து வகை உணவுகளுடன் கூடிய கொடையை அளிக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தப் பகுதி இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில், கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் உள்ளதை அடுத்த அடிக்குறிப்பில் சொல்லியிருக்கிறேன்.
{பாரதம்} உரைப்பவன் {பாராயணம் செய்பவன்}, உடல் கோளாறுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, சுகமாக அமர்ந்து கொண்டு, குவிந்த கவனத்துடனும், போதுமான சக்தியுடனும், எழுத்துகள், சொற்களுக்குள் குழப்பிக் கொள்ளாமல், இனிய பேச்சுடனும், சொற்களுடனும் கூடியவனாக, உணர்வைக் குறிக்கும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உரையை மெதுவாகவோ, வேகமாகவோ சொல்லாமல் எழுத்துகள் அமையும் எட்டு இடங்களில் இருந்து அறுபத்துமூன்று எழுத்துகளையும் முழுமையாகச் சொல்ல வேண்டும்.(21,22) நாராயணனையும், மனிதர்களில் முதன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும்.(23) ஓ! மன்னா, பாரதம் உரைக்கப்படும்போது, கேட்கும் இவ்வகையானவன், நோன்புகளை நோற்று, தொடக்கச் சடங்குகளால் தூய்மையடைந்து மதிப்புமிக்கப் பலன்களை அடைகிறான்.(24)
{உண்ணா நோன்பிருந்து உண்ணும்} முதல் பாரணத்தை எட்டும்போது, கேட்பவன், விரும்பத்தக்க பொருட்களைக் கொடுத்துப் பிராமணர்களை நிறைவடையச் செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம் ஒருவன் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்[3].(25) அவன் தனக்குப் பணிவிடை செய்யக்கூடிய பல்வேறு வகை அப்சரஸ்கள் நிறைந்த ஒரு பெரிய (தெய்வீகத்) தேரை அடைகிறான். மகிழ்ச்சியான இதயத்துடனும், தேவர்களின் துணையுடனும் அவன் (இன்பத்தில்) திளைத்த இதயத்துடன் சொர்க்கத்திற்குச் செல்கிறான்.(26) இரண்டாம் பாரணத்தை எட்டும்போது, கேட்டுக் கொண்டிருப்பவன் அதிராத்ர நோன்பை நோற்றதற்கான பலன்களை அடைகிறான். உண்மையில் அவன் முற்றிலும் விலைமதிப்புமிக்க ரத்தினங்களாலான ஒரு தெய்வீகத் தேரில் உயர்கிறான்.(27) தெய்வீக மலர்மாலைகளையும், ஆடைகளையும் அணிந்து கண்டு, தெய்வீகக் களிம்புளைப் பூசிக் கொண்டு, எப்போதும் தெய்வீக நறுமணத்தைப் பொழிந்தபடியே அவன் சொர்க்கத்தில் உயர்ந்த கௌரவங்களை அடைகிறான்.(28) மூன்றாவது பாரணத்தை எட்டும்போது, அவன் துவாதசாஹ நோன்றை நோற்றதற்கான பலன்களை அடைகிறான். உண்மையில் அவன், ஒரு தேவனைப் போலப் பல வருடங்கள் சொர்க்கத்தில் வசிக்கிறான்.(29)
[3] ஸ்லோகம் எண் 17 முதல் 25 வரையுள்ள செய்தி கும்பகோணம் பதிப்பில், "சுத்தனும், நல்ல ஸ்வபாவமும், ஒழுக்கமுமுள்ளவனும், வெள்ளையாடை உடுத்தவனும், இந்திரியங்களை ஜயித்தவனும், ஸம்ஸ்காரம் பெற்றவனும், எல்லாச் சாஸ்திரங்களையுதம் அறிந்தவனும், ஸ்ரத்தையுள்ளவனும், அஸூயையில்லாதவனும், சிறந்த வடிவமுள்ளவனும், அழகுள்ளவனும், இந்திரியங்களை அடக்கினவனும், ஸத்தியவாதியும் இந்திரியங்களை ஜயித்தவனும், கொடையும், கௌரவமும் பொருந்தியவனுமாக இருப்பவன் சொல்லுகிறவனாகச் செய்யப்படத் தகுந்தவன். சொல்லுகிறவன் கவலையற்றவனும் நன்கு மன அடக்கமுள்ளவனுமாக நன்கு உட்கார்ந்து கொண்டு தாமதமில்லாமலும், ஸ்ரமமில்லாமலும், வேகமில்லாமலும், வித்வான்களால் பூஜிக்கப்பட்டதாகவும், அக்ஷரங்களும், பதங்களும் கலக்காமலும் ஸ்வரத்தோடும், அபிப்பிராயத்தோடும் கூடினதாகவும் அறுபத்துமூன்று அக்ஷரங்களோடு* கூடினதாகவும், எட்டு ஸ்தானங்களின்றும்* உண்டானதாகவும் இருக்கும்படி சொல்ல வேண்டும். நாராயணரையும், நரோத்தமனான நரனையும், ஸரஸ்வதீ தேவியையும், வியாஸரையும் நமஸ்கரித்து, பிறகு, ஜயமென்னும் பாரதத்தைச் சொல்ல வேண்டும். ராஜரே, பாரதரே, கேட்பவன் நியமமுள்ளவனும், சுத்தனுமாக இரந்து கொண்டு இவ்விதமாக இருக்கும் சொல்லுகிறவனிடமிருந்து பாரதத்தைக் கேட்டால் அவன் கேட்டதினாலாகிய பயனை அடைவான். மனிதன் முதன்முறை முடித்தலை அடைந்து பிராம்மணர்களை இஷ்டங்களால் திருப்தியடையும்படி செய்தால், அக்னிஷ்டோமமென்னும் யாகத்தின் பயனை அடைகிறான்" என்றிருக்கிறது. அறுபத்துமூன்று அக்ஷரங்களோடு என்பதன் அடிக்குறிப்பில், "எழுதக்கூடாய 52 அக்ஷரங்களும், எழுதக்கூடாமல் ஒலிவடிவமாக மாத்ரமுள்ள நாதம் முதலிய 11 அக்ஷரங்களும்" என்றிருக்கிறது. எட்டு ஸ்தானங்களினின்றும் என்பதன் அடிக்குறிப்பில், "அக்ஷரங்கள் பிறக்குமிடம் எட்டு. அவை: மார்பு, மிடறு, தலை, நாவினடி, பற்கள், மூக்கு, உதடுகள், மோவாய் என்பன" என்றிருக்கிறது.
நான்காவது பாரணத்தில் அவன் வாஜபேய வேள்வி செய்ததன் பலன்களை அடைகிறான். ஐந்தாவதில் இதற்கும் இரு மடங்கு பலன்களை அடைகிறான். உதயச் சூரியனையோ, சுடர்மிக்க நெருப்பையோ போன்ற ஒரு தெய்வீகத் தேரில் ஏறி, தேவர்களின் துணையுடன் சொர்க்கத்திற்குச் செல்லும் அவன், இந்திரனின் வசிப்பிடத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் இன்பநிலையில் திளைக்கிறான்.(30,31) ஆறாவது பாரணத்தில் இதனிலும் இரு மடங்கையும், ஏழாவது மும்மடங்கு பலன்களையும் அடைகிறான். (அழகில்) கைலாச மலையின் சிகரத்திற்கு ஒப்பானதும், வைடூரியத்தாலும், வேறு ரத்தினங்களாலும் அமைக்கப்பட்ட பீடங்களைக் கொண்டதும், பல்வேறு வகை அழகிய பொருட்களால் சூழப்பட்டதும், ரத்தினங்கள் மற்றும் பவழங்கள் நிறைந்ததும், செலுத்துபவனின் விருப்பத்திற்கேற்ப நகர்வதும், பணிவிடை செய்வதற்கான அப்சரஸ்கள் நிறைந்ததும், ஒரு தெய்வீவக் தேரில் ஏறும் அவன், இரண்டாவது சூரிய தேவனைப் போல இன்பலோகங்கள் எங்கும் பவனி வருகிறான்.
எட்டாவது பாரணத்தில் அவன் ராஜசூய வேள்வியின் பலன்களை அடைகிறான்.(32-34) உதயச் சந்திரனைப் போன்றதும், சந்திரக்கதிர்களைப் போன்று வெண்மையான குதிரைகள் பூட்டப்பட்டதும், எண்ணத்தின் வேகம் கொண்டதுமான அழகிய தேரில் அவன் ஏறுகிறான்.(35) முதன்மையான அழகைக் கொண்டவர்களும், சந்திரன் போன்ற அழகிய முகங்களைக் கொண்டவர்களுமான பெண்களால் அவன் பணிவிடை செய்யப்படுகிறான். அவர்கள் இடுப்புகளில் வளைந்திருக்கும் மாலைகள் மற்றும் கணுக்கால்களில் வளைந்திருக்கும் நுபுரங்களின் இசையை அவன் கேட்கிறான்.(36) அழகில் விஞ்சிய பெண்களின் மடியில் தலை வைத்து உறங்கி பெரும் புத்துணர்ச்சியுடன் அவன் விழித்தெழுகிறான். ஒன்பதாவது பாரணத்தில், ஓ! பாரதா, அவன் வேள்விகளில் முதன்மையான குதிரை வேள்வியைச் செய்த பலன்களை அடைகிறான்.(37) தங்கத் தூண்களால் ஆதரிக்கப்படும் கூடுகளுடன் கூடியதும், வைடூரியக் கற்களால் அமைக்கப்பட்ட இருக்கையுடன் கூடியதும், அனைத்துப் பக்கங்களில் பசும்பொன்னாலான ஜன்னல்களைக் கொண்டதும், அப்சரஸ்கள், கந்தர்வர்கள் மற்றும் வேறு தேவர்களால் நிறைந்ததுமான தேரில் ஏறி காந்தியில் சுடர்விடுகிறான்.(38) தெய்வீக மாலைகள் மற்றும் ஆடைகள் அணிந்து, தெய்வீகக் களிம்புகள் தரித்துக் கொள்ளும் அவன், தேவர்களைத் துணையாகக் கொண்ட இரண்டாவது தேவனைப் போல அருள்நிலையில் விளையாடுகிறான்.(39,40)
பத்தாவது பாரணத்தை அடைந்து, பிராமணர்களை நிறைவடையச் செய்யும் அவன் எண்ணற்ற கிங்கிணி மணிகளுடன் கூடியதும், கொடிகள் மற்றும் பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டதும், விலைமதிப்புமிக்க ரத்தினங்களாலான இருக்கையைக் கொண்டதும், வைடூரியத்தாலான வளைவுகளைக் கொண்டதும், தங்க வலைப் பின்னல் கொண்டதும், பவளத்தாலான கோபுரங்களைக் கொண்டதும், நன்றாகப் பாடும் கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களால் அலங்கரிக்கப்பட்டதும், அறவோர் வசிக்கத் தகுந்ததுமான தேரை அடைகிறான்.(41-43) நெருப்பின் நிறம் கொண்ட கிரீடத்தால் மகுடந்தரித்து, தங்க ஆபரணத்தால் அலங்கரித்துக் கொள்ளும் அவன், தெய்வீக சந்தனக் குழம்பைத் தன் மேனியில் பூசிக்கொண்டு, தெய்வீக மலர்மாலைகள் அணிந்து கொண்டு, பெருங்காந்தியுடன் கூடியவனாக, தேவர்களின் அருளின் மூலம், தெய்வீக உலகங்கள் அனைத்திலும் திரிந்து, தெய்வீகமான இன்ப நுகர் பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான்.(44,45)
இவ்வாறாக இருக்கும் அவன் சொர்க்கத்தில் மிக நீண்ட வருடங்கள் உயர்ந்த கௌரவங்களை அடைகிறான். கந்தர்வர்களின் துணையுடன் கூடிய அவன் முழுமையாக இருபத்தோரு வருடங்கள் இந்திரனின் வசிப்பிடத்தில் இந்திரனின் அருளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் ஒவ்வொருநாளும் பேரழகு படைத்த தெய்வீகக் காரிகையருடன் தெய்வீகத் தேர்களையும், வாகனங்களையும் செலுத்திக் கொண்டு தேவர்களின் பல்வேறு உலகங்களின் பவனி வருகிறான். ஓ! மன்னா, அவன் சூரிய தேவன் மற்றும் சந்திரதேவன், சிவன் ஆகியோரின் வசிப்பிடங்களுக்குச் செல்ல இயன்றவனாகிறான். உண்மையில் அவன் விஷ்ணு லோகத்தில் வாழ்வதிலும் வெற்றியடைகிறான். ஓ! ஏகாதிபதி, இஃது இவ்வாறே இருக்கிறது. இதில் எந்த ஐயமும் இல்லை.(46-49) நம்பிக்கையுடன் கேட்கும் மனிதனும் அவ்வாறே ஆகிறான். இதை என் ஆசான் {வியாசர்} சொல்லியிருக்கிறார். இதை உரைப்பவன் விரும்பும் அனைத்துப் பொருட்களும் அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(50) யானைகள், குதிரைகள், தேர்கள், வாகனங்கள், குறிப்பாக விலங்குகள் மற்றும் அவை இழுக்கும் வண்டிகள், தங்கக் கைவளை, காது வளையங்கள், புனித நூல்கள்,(51) அழகிய ஆடைகள், சிறந்த நறுமணப் பொருட்கள் ஆகியன கொடுக்கப்பட வேண்டும். அவனைத் தேவனாக வழிபடும் ஒருவன் விஷ்ணுலோகத்தை அடைகிறான்.(52)
பாரதம் உரைக்கப்படுகையில், ஒவ்வொரு பர்வத்தையும் அடையும்போது, பிராமணர்களின் பிறப்பு, நாடு, வாய்மை, மகிமை மற்றும் பக்தி ஆகியவற்றை அறிந்து அவர்களுக்கும், அதே போன்றவற்றை அறிந்து கொண்டு க்ஷத்திரியர்களுக்கும் என்னென்ன கொடுக்கப்பட வேண்டும் என்பதை நான் இனி அறிவிக்கப் போகிறேன்[4].(53,54) பிராமணர்களை ஆசி கூறச் செய்து பிறகு உரைக்கும் தொழில் {பாராயணம்} தொடங்கப்பட வேண்டும். ஒரு பர்வம் முடிவடைந்ததும், ஒருவனுடைய சக்திக்குத் தகுந்த வகையில் பிராமணர்கள் வழிபடப்பட வேண்டும்.(55) முதலில் உரைப்பவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, வெள்ளாடை அணிந்து, சந்தனக் குழம்பைப் பூசிக் கொண்டு, தேன் மற்றும் பாயஸம்[5] உண்டிருக்க வேண்டும்.(56)
ஆஸ்தீக பர்வம்<1> உரைக்கப்படும்போது, பிராமணர்களுக்குக் கனிகளும், கிழங்குகளும், பாயஸமும், தேனும், தெளிந்த நெய்யும், பாயஸமும் கொடுக்கப்பட வேண்டும்.(57)
சபா பர்வம்<2> உரைக்கப்படும்போது, ஓ! மன்னா, பிராமணர்கள் உண்பதற்கு அபூபங்கள், பூபங்கள் மற்றும் மோதகங்களுடன் கூடிய ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்[6].(58)
ஆஸ்தீக பர்வம்<1> உரைக்கப்படும்போது, பிராமணர்களுக்குக் கனிகளும், கிழங்குகளும், பாயஸமும், தேனும், தெளிந்த நெய்யும், பாயஸமும் கொடுக்கப்பட வேண்டும்.(57)
சபா பர்வம்<2> உரைக்கப்படும்போது, ஓ! மன்னா, பிராமணர்கள் உண்பதற்கு அபூபங்கள், பூபங்கள் மற்றும் மோதகங்களுடன் கூடிய ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்[6].(58)
[4] "அச்சடிக்கப்பட்ட உரைகள் அனைத்திலும் "க்ஷத்திரியானாம்" என்பது இரண்டம் வரியில் இருக்கிறது. எனினும், கொடைகளைப் பிராணர்களுக்குக் கொடுக்க வேண்டுமேயன்றி க்ஷத்திரியர்களுக்கில்லை. ஏனெனில் க்ஷத்திரியர்கள் கொடையேற்பது அங்கீகரிக்கப்படவில்லை. அதைத் தவிர, பின்வரும் ஸ்லோகத்தில் பிராமணர்களுக்கே குறிப்பாகக் கொடைகள் அறிவிக்கப்படுகின்றன. க்ஷத்திரியர்களுக்குக் கொடை கொடுக்க வேண்டும் என்ற எந்தக் கடப்பாடும் கிடையாது. இந்த இடத்தில் உண்மையான உரை ஏதோ சிதைந்திருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] கோதுமை, பால், சர்க்கரை கலந்த லவங்க மணம் கொண்ட சிறந்த வகைப் பானம்.[6] "ஹவிஷ்யம் என்பது அரிசி, பால் மற்றும் சர்க்கரை கொண்ட ஓர் உணவாகும். இஃது எவ்வகை இறைச்சியுமில்லாத உணவாகும். அபூபங்கள் என்பது கோதுமை மாவாலான பிண்டங்களாகும். பூபங்கள் என்பன அரிசி மாவாலான பிண்டங்கள், மோதகங்கள் என்பன ஒரு வகைத் தின்பண்டங்களாகும்"எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆரண்யக பர்வம்<3> உரைக்கப்படும்போது, மேன்மையான பிராமணர்கள் உண்பதற்குக் கனிகளும், கிழங்குகளும் கொடுக்கப்பட வேண்டும்.
ஆரண்யப் பர்வத்தை<4> அடையும்போது, நீர் நிறைந்த நீர்க்குடங்களைக் கொடையளிக்க வேண்டும்.(59) அரிசி, கனிகள், கிழங்குகள், ஏற்புடைய குணம் கொண்ட உணவுகளும் பல மேன்மையான வகைகளைச் சேர்ந்த இனிய உணவும் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(60)
விராட பர்வம்<5> உரைக்கப்படும்போது, பல்வேறு வகை ஆடைகள் கொடையளிக்கப்பட வேண்டும். ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா},
உத்யோக பர்வத்தின்<6> போது, இரு பிறப்பாளர்களை {பிராமணர்களை} நறுமணப் பொருட்களாலும், மாலைகளாலும் அலங்கரித்து ஏற்புடைய குணம் கொண்ட அனைத்து வகை உணவுகளையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
பீஷ்ம பர்வம்<7> உரைக்கப்படும்போது, ஓ! மன்னர்களின் மன்னா, அவர்களுக்குச் |{பிராமணர்களுக்குச்} சிறந்த தேர்களையும், வாகனங்களையும் கொடுத்துவிட்டு,(61,62) தூய்மையானதும், நன்கு சமைக்கப்பட்டதும், விரும்பத்தக்க ஒவ்வொரு குணமும் கொண்ட உணவைக் கொடுக்க வேண்டும்.
துரோண பர்வத்தின்<8> போது, கல்விமான்களான பிராமணர்களுக்கு,(63) ஓ! ஏகாதிபதி மேன்மையான வகை உணவையும், படுக்கைகளையும், வில் மற்றும் நல்ல வாள்களையும் கொடுக்க வேண்டும்.
கர்ண பர்வம்<9> உரைக்கப்படும்போது, முதன்மையான வகையைச் சார்ந்ததும்,(64) தூய்மையானதும், இல்லறத்தானால் குவிந்த மனத்துடன் நன்கு சமைக்கப்பட்டதுமான உணவை பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
சல்லிய பர்வம்<10> உரைக்கப்படும்போது, ஓ! மன்னர்களின் மன்னா, பண்டங்களையும், பாயஸத்தையும், கோதுமையால் செய்யப்பட்ட பிண்டங்களையும், இனிய சத்தான உணவு மற்றும் பானங்களையும் கொடுக்க வேண்டும்.
கதா {கதாயுத்த} பர்வத்தின்<11> போது, முத்கம்[7] கலந்த உணவைக் கொடுத்துப் பிராமணர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.(65,66)
ஆரண்யப் பர்வத்தை<4> அடையும்போது, நீர் நிறைந்த நீர்க்குடங்களைக் கொடையளிக்க வேண்டும்.(59) அரிசி, கனிகள், கிழங்குகள், ஏற்புடைய குணம் கொண்ட உணவுகளும் பல மேன்மையான வகைகளைச் சேர்ந்த இனிய உணவும் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(60)
விராட பர்வம்<5> உரைக்கப்படும்போது, பல்வேறு வகை ஆடைகள் கொடையளிக்கப்பட வேண்டும். ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா},
உத்யோக பர்வத்தின்<6> போது, இரு பிறப்பாளர்களை {பிராமணர்களை} நறுமணப் பொருட்களாலும், மாலைகளாலும் அலங்கரித்து ஏற்புடைய குணம் கொண்ட அனைத்து வகை உணவுகளையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
பீஷ்ம பர்வம்<7> உரைக்கப்படும்போது, ஓ! மன்னர்களின் மன்னா, அவர்களுக்குச் |{பிராமணர்களுக்குச்} சிறந்த தேர்களையும், வாகனங்களையும் கொடுத்துவிட்டு,(61,62) தூய்மையானதும், நன்கு சமைக்கப்பட்டதும், விரும்பத்தக்க ஒவ்வொரு குணமும் கொண்ட உணவைக் கொடுக்க வேண்டும்.
துரோண பர்வத்தின்<8> போது, கல்விமான்களான பிராமணர்களுக்கு,(63) ஓ! ஏகாதிபதி மேன்மையான வகை உணவையும், படுக்கைகளையும், வில் மற்றும் நல்ல வாள்களையும் கொடுக்க வேண்டும்.
கர்ண பர்வம்<9> உரைக்கப்படும்போது, முதன்மையான வகையைச் சார்ந்ததும்,(64) தூய்மையானதும், இல்லறத்தானால் குவிந்த மனத்துடன் நன்கு சமைக்கப்பட்டதுமான உணவை பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
சல்லிய பர்வம்<10> உரைக்கப்படும்போது, ஓ! மன்னர்களின் மன்னா, பண்டங்களையும், பாயஸத்தையும், கோதுமையால் செய்யப்பட்ட பிண்டங்களையும், இனிய சத்தான உணவு மற்றும் பானங்களையும் கொடுக்க வேண்டும்.
கதா {கதாயுத்த} பர்வத்தின்<11> போது, முத்கம்[7] கலந்த உணவைக் கொடுத்துப் பிராமணர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.(65,66)
[7] "முத்கம் என்பது உளுந்தாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஸ்திரீ பர்வம்<12> உரைக்கப்படும்போது, முதன்மையான பிராமணர்களுக்கு ரத்தினங்களும், விலைமதிப்புமிக்கக் கற்களும் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.
ஐஷீக பர்வம்[8]<13> உரைக்கப்படும்போது, நெய்யில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி முதலில் கொடுக்கப்பட வேண்டும்(67), அதன் பிறகு தூய்மையானதும், நன்கு சமைக்கப்பட்டதும், விரும்பத்தக்க குணங்கள் அனைத்தையும் கொண்டதுமான உணவைக் கொடுக்க வேண்டும்.
சாந்தி பர்வம்<14> உரைக்கப்படும்போது, பிராமணர்கள் உண்பதற்கு ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்.(68)
அஸ்வமேதிக பர்வத்தை<15> அடையும்போது, ஏற்புடைய அனைத்து குணங்களையும் கொண்ட உணவு கொடுக்கப்படவேண்டும்,
ஆஸ்ரமவாஸிக பர்வத்தை<16> அடையும்போது, பிராமணர்களுக்கு ஹவிஷ்யம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.(69)
மௌஸலம்<17> அடையும்போது, நறுமணப் பொருட்களையும், ஏற்புடைய குணங்களைக் கொண்ட மலர்மாலைகளையும் கொடையளிக்க வேண்டும்.
மஹாப்ரஸ்தானிகத்தின்<18> போதும், ஏற்புடைய குணங்களைக் கொண்ட அதே வகைக் கொடைகளை அளிக்க வேண்டும்.(70)
ஸ்வர்க்க பர்வத்தை<19> அடையும்போது, பிராமணர்கள் உண்பதற்கு ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்.
ஹரிவம்சத்தின்<20> முடிவில் ஓராயிரம் பிராமணர்களுக்கு உணவளிக்கப்பட வேண்டும்.(71) அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பசுவையும், சிறிதளவு பொன்னும் கொடுக்கப்பட வேண்டும். ஓ! மன்னா, இவற்றில் பாதியளவை ஒவ்வொரு ஏழைக்கும் கொடுக்கப்பட வேண்டும்.(72)
ஐஷீக பர்வம்[8]<13> உரைக்கப்படும்போது, நெய்யில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி முதலில் கொடுக்கப்பட வேண்டும்(67), அதன் பிறகு தூய்மையானதும், நன்கு சமைக்கப்பட்டதும், விரும்பத்தக்க குணங்கள் அனைத்தையும் கொண்டதுமான உணவைக் கொடுக்க வேண்டும்.
சாந்தி பர்வம்<14> உரைக்கப்படும்போது, பிராமணர்கள் உண்பதற்கு ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்.(68)
அஸ்வமேதிக பர்வத்தை<15> அடையும்போது, ஏற்புடைய அனைத்து குணங்களையும் கொண்ட உணவு கொடுக்கப்படவேண்டும்,
ஆஸ்ரமவாஸிக பர்வத்தை<16> அடையும்போது, பிராமணர்களுக்கு ஹவிஷ்யம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.(69)
மௌஸலம்<17> அடையும்போது, நறுமணப் பொருட்களையும், ஏற்புடைய குணங்களைக் கொண்ட மலர்மாலைகளையும் கொடையளிக்க வேண்டும்.
மஹாப்ரஸ்தானிகத்தின்<18> போதும், ஏற்புடைய குணங்களைக் கொண்ட அதே வகைக் கொடைகளை அளிக்க வேண்டும்.(70)
ஸ்வர்க்க பர்வத்தை<19> அடையும்போது, பிராமணர்கள் உண்பதற்கு ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்.
ஹரிவம்சத்தின்<20> முடிவில் ஓராயிரம் பிராமணர்களுக்கு உணவளிக்கப்பட வேண்டும்.(71) அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பசுவையும், சிறிதளவு பொன்னும் கொடுக்கப்பட வேண்டும். ஓ! மன்னா, இவற்றில் பாதியளவை ஒவ்வொரு ஏழைக்கும் கொடுக்கப்பட வேண்டும்.(72)
[8] ஐஷீக பர்வம், ஸ்திரீ பர்வத்திற்கு முன்பு வருவதாகும்.
அனைத்துப் பர்வங்களின் முடிவில் ஞானம் கொண்ட ஓர் இல்லறத்தான், சிறிதளவு பொன்னுடன் ஒரு மஹாபாரதப் பிரதியை அதை உரைத்தவனுக்குக் கொடுக்க வேண்டும்.(73) ஓ! மன்னா, ஹரிவம்ச பர்வம் உரைக்கப்படும்போது, அடுத்தடுத்த பாரணங்களின் போது பிராமணர்கள் பருகுவதற்குப் பாயஸம் கொடுக்கப்பட வேண்டும்.(74) சாத்திரங்களை அறிந்த ஒருவன், அனைத்துப் பர்வங்களையும் முடித்துவிட்டு, தன்னை முறையாகத் தூய்மைப்படுத்தி, வெள்ளுடை உடுத்தி, மலர்மாலைகள் சூடி, ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, ஒரு மங்கலமான இடத்தில் மஹாபாரதப் பிரதியை வைத்து, அதைப் பட்டுத் துணியால் மூடி, நறுமணப் பொருட்கள், மற்றும் மலர் மாலைகளைக் கொண்டு உரிய சடங்குகளின் படி அதை வழிபட வேண்டும்.(75,76) உண்மையில், இந்த ஆய்வின் பல்வேறு பகுதிகளும் ஒருவனால் அர்ப்பணிப்புடனும், குவிந்த மனத்துடனும் வழிபடப்பட வேண்டும். பல்வேறு வகை உணவுகள், மலர்மாலைகள், பானங்கள் மற்றும் அனுபவிக்கத்தகுந்த பல்வேறு மங்கலப் பொருட்கள் ஆகியவற்றையும் காணிக்கையளிக்க வேண்டும்.(77) பொன்னும், வேறு விலைமதிப்புமிக்க உலோகங்களும் தக்ஷிணையாகக் கொடுக்கப்பட வேண்டும். தேவர்கள் அனைவரின் பெயர்களும், நரன் மற்றும் நாராயணனின் பெயர்களும் சொல்லப்பட வேண்டும்.(78) பிறகு, சில முதன்மையான பிராமணர்களின் மேனியை நறுமணப் பொருட்களாலும், மலர்மாலைகளாலும் அலங்கரித்து, அவர்களுக்கு அனுபவிக்கத்தகுந்த பல்வேறு பொருட்களையும், மேன்மையான விலைமதிப்புமிக்கப் பொருட்களையும் கொடுத்து நிறைவடையச் செய்ய வேண்டும்.(79) இதைச் செய்வதன் மூலம் ஒருவன் அதிராத்ர வேள்வி செய்த பலன்களை அடைகிறான் உண்மையில், அடுத்தடுத்த ஒவ்வொரு பர்வத்தின் போதும், வேள்வி செய்வதால் உண்டாகும் புண்ணியங்களை அவன் அடைகிறான்.(80)
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, உரைப்பவர், கல்விமானாகவும், நல்ல குரல் கொண்டவராகவும், எழுத்துகள், சொற்கள் ஆகிய இரண்டையும் தெளிவாக உச்சரிப்பவராகவும் இருக்க வேண்டும். ஓ! பாரதர்களின் தலைவா, அத்தகைய மனிதன் ஒவ்வொருவனும் பாரதம் உரைக்க வேண்டும்.(81) பெரும் எண்ணிக்கையிலான முதன்மையான பிராமணர்களை மகிழ்ச்சியடையச் செய்து, விதிப்படியான கொடைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். ஓ! பாரதர்களின் தலைவா, உரைப்பவரும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு முழுமையாக உண்ணக் கொடுக்கப்பட வேண்டும்.(82) உரைப்பவர் நிறைவடைந்தால், அந்த இல்லறத்தான், சிறந்த மங்கலமான மனநிறைவை அடைகிறான். பிராமணர்கள் நிறைவடையச் செய்யப்பட்டால், தேவர்கள் அனைவரும் நிறைவடைகின்றனர்.(83) அதன்பிறகு, ஓ! பாரதர்களின் தலைவா, அனுபவிக்கத்தகுந்த பல்வேறு மேன்மையான பொருட்களால் பிராமணர்கள் முறையாக மகிழ்ச்சியடையச் செய்யப்பட வேண்டும்.(84)
இவ்வாறே, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உன் கேள்விகளுக்குப் பதிலாக (இந்தச் சாத்திரங்களை உரைக்கும் வழிமுறைக்கு) உரிய விதிமுறைகளைக் குறிப்பிட்டேன். நீ இவற்றை நம்பிக்கையுடன் கடைப்பிடிக்க வேண்டும்.(85) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பாரதம் உரைக்கப்படுவதைக் கேட்கும்போது, ஒவ்வொரு பாரணத்திலும் ஒருவன் உயர்ந்த நன்மையை அடைய விரும்பி பெருங் கவனத்துடன் கேட்க வேண்டும்.(86) ஒருவன் ஒவ்வொரு நாளும் பாரதத்தைக் கேட்க வேண்டும். ஒருவன் ஒவ்வொரு நாளும் பாரதத்தின் புண்ணியங்களை அறிவிக்க வேண்டும். எவனுடைய வீட்டில் பாரதம் உரைக்கப்படுகிறதோ, அவன் தன்னுடைய கரங்களில் ஜெயம் என்ற பெயரில் அறியப்படும் சாத்திரங்கள் அனைத்தையும் கொண்டிருப்பான்[9].(87) பாரதம் பாவம் போக்குவதும், புனிதமானதுமாகும். பாரதத்தில் பல்வேறு தத்துவங்கள் இருக்கின்றன. பாரதம் தேவர்களாலேயே வழிபடப்படுகிறது. பாரதம் உயர்ந்த இலக்காகும்.(88) ஓ! பாரதர்களின் தலைவா, பாரதம் சாத்திரங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். ஒருவன் பாரதத்தின் மூலம் முக்தியை {மோட்சத்தை} அடைகிறான். நான் உனக்குச் சொல்லும் இது முற்றான உண்மையாகும்.(89) மஹாபாரதம் என்றழைக்கப்படும் இந்த வரலாற்றின் புண்ணியங்களையும், பூமி, பசு, {வாக்கின் தேவியான} சரஸ்வதி, பிராமணர், கேசவன் ஆகியோரின் புண்ணியங்களையும் அறிவிக்கும் ஒருவன், ஒருபோதும் சோர்வடைய மாட்டான்.(90)
[9] "ஜெயம் என்பது குறிப்பிட்ட சாத்திரங்களுக்குக் கொடுக்கப்படும் பெயராகும். பாரதம் அந்தச் சாத்திரங்களுக்கு இணையானதாகும். எனவே, ஒருவன் தன் வீட்டில் பாரதத்தை வைத்திருந்தால், அவன் ஜெயம் என்ற பெயரில் அறியப்படும் சாத்திரங்கள் அனைத்தையும் கொண்டிருப்பவனாகக் கருதப்படுவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, வேதம், இராமாயணம், புனித பாரதம் ஆகியவற்றில் தொடக்கம், நடு மற்றும் இறுதியில் ஹரியே பாடப்படுகிறான்.(91) விஷ்ணு மற்றும் நித்திய ஸ்ருதிகள் தொடர்புடைய சிறந்த வாக்கியங்கள் எதில் நேர்கின்றனவோ, {அவை} உயர்ந்த இலக்கை அடைய விரும்பும் மனிதர்களால் கேட்கப்பட வேண்டும்.(92) புனிதப்படுத்துவதான இது, கடமைகள் குறித்த அடையாளங்காட்டும் உயர்ந்த ஆய்வாகும். இஃது அனைத்துப் புண்ணியங்களையும் கொண்டதாகும். செழிப்பை விரும்பும் ஒருவன் இதைக் கேட்க வேண்டும்.(93) உடலால் இழைக்கப்பட்ட பாவங்களும், சொல் மற்றும் மனத்தால் இழைக்கப்பட்ட பாவங்கள் அனைத்தும் சூரிய உதயத்தின் போது இருளைப் போல (பாரதம் கேட்பதன் மூலம்) அழிவை அடைகின்றன.(94) விஷ்ணுவிடம் பக்தி கொண்ட ஒருவன், இந்தப் பதினெட்டுப் புராணங்களைக் கேட்பதன் மூலம் அடையப்படும் புண்ணியத்தை (இதன் மூலம்) அடைகிறான். இதில் ஐயமேதும் இல்லை.(95) (இதைக் கேட்பதன் மூலம்) ஆண்களும் பெண்களும் விஷ்ணுவின் நிலையை நிச்சயம் அடைவார்கள். பிள்ளைகளை விரும்பும் பெண்கள், விஷ்ணுவின் புகழை அறிவிக்கும் இதை நிச்சயம் கேட்க வேண்டும்.(96)
பாரதம் உரைப்பதால் உண்டாகும் பலனை அடைய விரும்பும் ஒருவன், உரைப்பவருக்குத் தன் சக்திக்கேற்றபடி பொன்னாலான வெகுமானத்தைத் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்.(97) தன் நன்மையை விரும்பும் ஒருவன், உரைப்பவருக்குத் தங்கக்கவசம் பூண்ட ஒரு கபிலை பசுவையும், துணியால் மறைக்கப்பட்ட அவளது கன்றையும் கொடையளிக்க வேண்டும்.(98) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தோள்களுக்கும், காதுகளுக்கும் ஆபரணங்கள் கொடுக்கப்பட வேண்டும். இதையும் தவிர, வேறு வகையான செல்வங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.(99) ஓ! மனிதர்களின் மன்னா, உரைப்பவருக்கு நிலக் கொடை அளிக்க வேண்டும். வேறெந்த கொடையும் ஒருபோதும் நிலக் கொடை போல் ஆகாது, அல்லது இருக்காது.(100) (பாரதத்தைக்) கேட்பவன் அல்லது பிறருக்கு உரைக்கும் மனிதன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, விஷ்ணுவின் நிலையை அடைகிறான்.(101) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அத்தகைய மனிதன் ஏழு தலைமுறை மூதாதையரையும், தன்னையும், தன் மனைவி மற்றும் மகன்களையும் மீட்கிறான்.(102) ஓ! மன்னா, பாரதம் உரைப்பதை நிறைவு செய்ததும் ஒருவன் பத்துப் பாகங்களுடன் கூடிய ஹோமம் செய்ய வேண்டும்.
இவ்வாறே, ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, உன் முன்னிலையில் நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன்.(103) இந்தப் பாரதத்தைத் தொடக்கம் முதல் அர்ப்பணிப்புடன் கேட்டு வரும் ஒருவன், பிராமணக் கொலைக் குற்றம் புரிந்தவனாகவோ, ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியவனாகவோ, மது பருகுபவனாகவோ, அடுத்தவர் உடைமைகளைக் களவு செய்பவனாகவோ, சூத்திர வகையில் பிறந்தவனாகவோ இருப்பினும் அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(104) இருளை அழிக்கும் நாள் சமைப்பவனைப் போலத் தன் பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் அத்தகைய மனிதன், விஷ்ணுவைப் போலவே, விஷ்ணுவின் உலகில் இன்பத்தில் திளைப்பான்[10]" {என்றார் வைசம்பாயனர்}.(105)
[10] மஹாபாரதத்தைத் தொடங்கும் சௌதி முந்தைய அத்யாயத்திலேயே முடித்துவிட்டார். இறுதிப் பகுதியான இந்த அத்யாயம் ஜனமேஜயன் கேட்பதாகத் தொடங்கி, வைசம்பயனர் சொல்லி முடிப்பதாக முடிகிறது. இது மஹாபாரதப் பாராயணம் மற்றும் ஸ்ரவணத்திற்கான சிறப்பு அத்யாயமாக பின்னர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 6ல் உள்ள சுலோகங்கள் : 105
*****ஸ்வர்க்காரோஹணிக பர்வம் முற்றும்*****
***முழு மஹாபாரதம் முற்றிற்று***
ஆங்கிலத்தில் | In English |