Saturday, May 09, 2015

கிருஷ்ணனின் புறப்பாடு! - உத்யோக பர்வம் பகுதி 83அ

Krishna set out! | Udyoga Parva - Section 83a | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –12)

பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்கு அறிவுரை கூறி சமாதானத்தை எட்டும்படி கிருஷ்ணனிடம் அர்ஜுனன் சொன்னது; கிருஷ்ணன் அதை ஆமோதித்தது; காலையில் எழுந்து சாத்யகியையும் உடன் அழைத்துக் கொண்டு கிருஷ்ணன் புறப்பட்டது; கிருஷ்ணன் கொண்டிருந்த ஆயுதங்கள், தேர், தேரில் பூட்டப்பட்ட குதிரைகள், அந்தத்தேரில் இருந்தவை ஆகியவற்றின் வர்ணனைகள், கிருஷ்ணன் புறப்பட்ட போது ஏற்பட்ட நல்ல சகுனங்கள் ஆகியவற்றை வைசம்பாயனர் சொன்னது...

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ இப்போது அனைத்து குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} சிறந்த நண்பனாக இருக்கிறாய். இரு தரப்பிடமும் உறவுமுறை கொண்ட நீ, இருவருக்கும் அன்பிற்குரிய நண்பனாகவே இருக்கிறாய். பாண்டவர்களுக்கும் திருதராஷ்டிரர் மகன்களுக்கும் இடையில் சமாதானத்தைக் கொண்டு வருவதே உனக்குத் தகும். ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ திறமையானவன், எனவே, சமரசத்தைக் கொண்டு வருவதே உனக்குத் தகும். ஓ! தாமரைக் கண் கொண்டவனே {கிருஷ்ணா}, இங்கிருந்து சமாதானத்துக்காகச் சென்று, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, எப்போதும் கோபத்துடன் இருக்கும் எங்கள் சகோதரன் சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, உண்மையில் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல். அறம் பொருள் ஆகியவை நிறைந்ததும், மங்கலகரமானதும், நன்மை விளைவிக்கக்கூடியதுமான உனது ஆலோசனைகளை மூடனான துரியோதனன் ஏற்கவில்லையெனில், அவன் விதிக்குப் பலியாகப் போகிறவன் ஆவான்" என்றான் {அர்ஜுனன்}.


அதற்கு அந்தப் புனிதமானவன், "நீதிக்கு இசைவானதையும், நமக்கும், குருக்களுக்கும் நன்மையானதையும் சாதிக்க விரும்பியே நான் மன்னன் திருதராஷ்டிரரிடம் செல்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இரவு கடந்து, ஒளிரும் சூரியன் கிழக்கில் உதித்தான். மைத்திரம் என்ற நேரம் {முகூர்த்தம்} நடந்து கொண்டிருந்தது. சூரியனின் கதிர்கள் இன்னும் மென்மையாகவே இருந்தன. அந்த மாதமானது (கௌமுத கார்த்திகை = கார்த்திகை மாதம்} ரேவதி நட்சத்திரத்தின் கீழ் இருந்தது. {கார்த்திகை மாதத்தின் ரேவதி நட்சத்திர நாளில் கிருஷ்ணன் புறப்பட்டான்}. இலையுதிர் காலம் விடுபட்ட பனிக்காலமாகவும் அஃது இருந்தது. பூமியில் சுற்றிலும் அபரிமிதமான பயிர்கள் நிறைந்திருந்தன {விளைந்திருந்தன}. அத்தகு நேரத்தில் தான், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனும், அருமையான உடல்நிலையைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, (தெய்வீக) முனிவர்களின் துதிகளைக் கேட்கும் வாசவனைப் {இந்திரனைப்} போல, மங்கலகரமானதும், புனித ஒலியுடையதுமான அந்தணர்களின் இனிமையான வார்த்தைகளைக் கேட்டு, காலையில் வழக்கமாகச் செய்யும் செயல்களையும் சடங்குகளையும் செய்து, குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தைலங்களாலும், ஆபரணங்களாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு சூரியன் அக்னி ஆகிய இருவரையும் வழிபட்டான்.

காளையின் வாலைத் தொட்டு, அந்தணர்களை மரியாதையுடன் வணங்கி, புனித நெருப்பை வலம் வந்து, பார்வையில் பட்ட (வழக்கமான) மங்கலப் பொருட்களில் தனது கண்களைச் செலுத்தி, யுதிஷ்டிரனின் வார்த்தையை நினைத்துப் பார்த்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் அருகே அமர்ந்திருந்த சினியின் பேரனான சாத்யகியிடம், "எனது தேர் தயார் செய்யப்படட்டும், எனது சங்கும், கதாயுதத்துடன் கூடிய எனது சக்கரமும், அம்பறாத்தூணிகளும், கணைகளும், தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் பயன்படும் அனைத்து வகையான ஆயுதங்களும் அதில் {அந்தத் தேரில்} இருக்கட்டும். ஏனெனில், துரியோதனன், கர்ணன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோர் தீய ஆன்மா கொண்டவர்களாவர். ஒருவன் வலிமைமிக்கவனாகவே இருந்தாலும், பலத்தில் சிறிய எதிரிகளைக் கூட அவன் அலட்சியப்படுத்தக்கூடாது" என்றான் {கிருஷ்ணன்}.

சக்கரம் மற்றும் காதாயுதத்தைத் தாங்குபவனான கேசவனின் {கிருஷ்ணனின்} விருப்பங்களைப் புரிந்து கொண்ட அவனது பணியாட்கள் {தேருக்கு முன் செல்லும் பரிஜனங்கள்}, அவனது தேரைப் பூட்டச் செய்தனர்.

அண்ட அழிவு நேரத்தில் வெளிப்படும் நெருப்பின் பிரகாசம் கொண்ட அந்தத் தேர் அதே நெருப்பைப் போன்ற வேகமும் கொண்டதாக இருந்தது. அதன் இரண்டு சக்கரங்களும் பிரகாசத்தில் சூரியனையும் சந்திரனையும் ஒத்திருந்தன. பிறை மற்றும் முழு நிலவுகள், மீன்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் ஒப்பனைகளைத் தன்னில் கொண்டு, பல்வேறு வகை மலர்கள், முத்துகள் மற்றும் பல்வேறு வகையான ரத்தினங்களாலான மாலைகளால் அது {அந்தத் தேர்} சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. உதயச் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டிருந்த அது {தேர்}, பெரியதாகவும் அழகாகவும் இருந்தது. பலவண்ண ரத்தினங்களையும் தங்கத்தையும் கொண்டிருந்த அஃது, அழகிய கொடிகளுடன் கூடிய அற்புதமான கொடிக் கம்பங்களைக் கொண்டிருந்தது. தேவையான அனைத்துப் பொருட்களும் நன்கு வழங்கப்பட்டு, எதிரிகளால் தடுக்க இயலாத வகையில் இருந்த அது, புலித் தோல்களால் மூடப்பட்டிருந்தது. ஒவ்வொரு எதிரியின் புகழையும் கவரவல்லதும், யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கவல்லதுமாக அது {அந்தத் தேர்} இருந்தது. சைப்யம், சுக்ரீவம், மேகபுஷ்பம், வலாஹகம் என்ற பெயர்களைக் கொண்ட அற்புத குதிரைகளை நன்கு குளிப்பாட்டி, அழகிய சேணங்களை அவற்றுக்கு உடுத்தி அந்தத் தேரில் பூட்டினர்.

கிருஷ்ணனின் மதிப்பை மேலும் உயர்த்தும்படி, இறகு கொண்ட பிறவிகளுக்குத் {பறவைகளுக்குத்} தலைவனான கருடன் அங்கே வந்து, பயங்கரச் சடசடப்பொலியை எழுப்பும் அந்தத் தேரின் கொடிக்கம்பத்தில் அமர்ந்தான்.

மேருவின் சிகரம் போன்று உயர்ந்ததும், பேரிகைக் கொண்ட மேகங்களைப் போன்ற ஆழ்ந்த உரத்த சடசடப்பொலியை எழுப்பக்கூடியதும், இயக்குபவரின் விருப்பத்திற்கேற்ப செல்லும் தெய்வீகத் தேரை ஒத்திருப்பதுமான அந்தத் தேரில் சௌரி {கிருஷ்ணன்} ஏறினான். சாத்யகியையும் அதில் உடன் ஏற்றிக் கொண்ட அந்த மனிதர்களில் சிறந்தவன் {கிருஷ்ணன்}, தனது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியையும் வானத்தையும் நிறைத்தபடி கிளம்பினான்.

வானம் மேகமற்று இருந்தது, மங்கலகரமான காற்று சுற்றிலும் வீசத் தொடங்கியது, தூசியில் இருந்து விடுபெற்ற சுற்றுச்சூழல் தூய்மையானது. உண்மையில், வாசுதேவன் {கிருஷ்ணன்} அப்படிக் கிளம்பிய போது, மங்கலகரமான விலங்குகளும், பறவைகளும் வலமாகச் சுற்றி அவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றன. கொக்குகள், மயில்கள், அன்னஙகள் ஆகியன நல்ல சகுனங்களைக் கொண்ட ஒலிகளை வெளியிட்டபடியே அந்த மதுவைக் கொன்றவனைத் {மதுசூதனனைத்} தொடர்ந்து சென்றன. மந்திரங்களின் துணையோடு கூடிய ஹோம நீர்க்காணிக்கைகளால் ஊட்டப்பட்ட நெருப்பே கூட, புகையில் இருந்து விடுபட்டு உற்சாகமாகச் சுடர்விட்டு எரிந்து, தனது தழல்களை வலப்புறமாக வெளியிட்டது.

வசிஷ்டர், வாமதேவர், பூரித்யும்னர், கயர், கிரதர், சுக்கிரர், குசிகர், பிருகு மற்றும் பிற பிரம்ம முனிவர்களும் தெய்வீக முனிவர்களும் {நாரதர், வால்மீகர், மருத்தர்} ஒன்றிணைந்து, யாதவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவனும், வாசவனுக்கு {இந்திரனுக்கு} இளைய தம்பியுமான கிருஷ்ணனின் வலப்புறமாக நின்றனர். இப்படி அந்த முனிவர்களாலும், ஒப்பற்ற பிற முனிவர்களாலும், புனிதமானவர்களாலும் வழிபடப்பட்ட கிருஷ்ணன், குருக்களின் வசிப்பிடம் நோக்கிக் கிளம்பினான்" என்றார் {வைசம்பாயனர்}.