Saturday, May 09, 2015

குதிரைகளும் யானைகளும் மலஜலங்கழித்தன! - உத்யோக பர்வம் பகுதி 83ஆ

Steeds and elephants passed urine and excreta! | Udyoga Parva - Section 83b | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –12)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன், பிற பாண்டவர்கள் மற்றும் மன்னர்கள் ஆகியோர் ஹஸ்தினாபுரம் செல்லும் கிருஷ்ணனைத் தொடர்ந்து செல்வது; யுதிஷ்டிரன் தனது தாய் குந்தி குறித்து வருந்தியது; அவளைத் தன் சார்பாக நலன்விசாரித்து ஆலிங்கணம் செய்யுமாறு கிருஷ்ணனிடம் யுதிஷ்டிரன் சொன்னது; முடிந்தவரை சமாதானம் பேசும்படியும், கௌரவர்கள் அதற்கு இணங்க மறுத்தால் க்ஷத்திரிய குலமே தன்னால் அழியும் என்றும் அர்ஜுனன் சொன்னது; அர்ஜுனனின் பேச்சைக் கேட்ட பீமன் பயங்கரமாகக் கர்ஜித்தது; பிறகு கிருஷ்ணனின் அனுமதியுடன் அவர்கள் அனைவரும் திரும்பியது; கிருஷ்ணன் பயணப்பட்ட வழியில் முனிவர்கள் அவனைச் சந்திப்பது; பரசுராமர் முனிவர்க்கூட்டத்தின் நோக்கத்தைக் கிருஷ்ணனிடம் சொல்வது....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அப்படிக் கிருஷ்ணன் சென்றபோது, குந்தியின் மகனான யுதிஷ்டிரரும், பீமன், அர்ஜுனன், மாத்ரியின் இரட்டை மகன்களான   அந்த மற்ற பாண்டவர்களும் {நகுல சகாதேவர்களும்} அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றனர். வீரமிக்கச் சேகிதானன், சேதிகளின் ஆட்சியாளனான திருஷ்டகேது, துருபதன், காசி மன்னன், பெரும் வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், தனது மகன்களோடு கூடிய விராடன், கேகய இளவரசர்கள் ஆகிய இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும். அவனை {கிருஷ்ணனை} மதிக்கும் வகையில், அந்த க்ஷத்திரியக் குலத்துக் காளையைப் {யுதிஷ்டிரனைப்} பின் தொடர்ந்து சென்றார்கள்.


ஒப்பற்ற மன்னனும் நீதிமானுமான யுதிஷ்டிரன், சிறிது தூரத்திற்குக் கோவிந்தனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்று, அந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் பேசினான். ஆசையினாலோ, கோபத்தினாலோ, அச்சத்தினாலோ, லாப நோக்கத்தாலோ சிறிய தவறைக் கூட இழைக்காதவனும், என்றும் உறுதியான மனம் படைத்தவனும், பேராசைக்கு அந்நியனும், அறநெறிகளை அறிந்தவனும், பெரும் புத்திக்கூர்மை மற்றும் ஞானத்தைக் கொண்டவனும், அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் அறிந்தவனும், அனைவருக்கும் தலைவனும், தேவர்களுக்குத் தேவனும், நித்தியமாக நிலைத்திருப்பவனும், அனைத்து அறங்களைக் கொண்டவனும், தனது மார்பில் மங்கலக்குறியைக் கொண்டவனுமான அந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனை {கிருஷ்ணனை} குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} அணைத்துக் கொண்டான். அவனை {கிருஷ்ணனை} அணைத்தவாறே, அவன் {கிருஷ்ணன்} என்ன செய்ய வேண்டும் என்பதை மன்னன் {யுதிஷ்டிரன்} குறிப்பிடத் தொடங்கினான்.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "குழந்தையாக இருந்ததில் இருந்து எங்களை வளர்த்தவளும்; உண்மைகளிலும், துறவு நோன்புகளிலும், தீயனத் தணிக்கும் சடங்குகளிலும் எப்போதும் ஈடுபடுபவளும்; தேவர்களையும், விருந்தினர்களையும் வணங்குவதில் அர்ப்பணிப்பு கொண்டவளும்; தனது மகன்களிடம் அன்போடிருக்கும் பெரியவர்களுக்காக எப்போதும் காத்திருப்பவளும்; தனது மகன்களிடம் எல்லையில்லா பாசம் கொண்டவளும், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எங்களால் எப்போதும் அன்போடு விரும்பப்படுபவளும்; ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே {கிருஷ்ணா}, உடைந்த கப்பலில் இருக்கும் பயணிகளைப் பயங்கரக் கடலில் இருந்து காக்கும் படகைப் போல, துரியோதனனின் வலைகளில் இருந்து எங்களை எப்போதும் காத்தவளும், ஓ! மாதவா {கிருஷ்ணா}, துன்புறத்தகாதவளும், எங்களின் நிமித்தமாக எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தவளுமான அந்த மங்கையிடம் {குந்தியாகிய எங்கள் தாயிடம்} நலன்விசாரித்து, அவளை {குந்தியை} வணங்கித் தழுவி கொண்டு, மகன்களின் நிமித்தமான அவளது துயரத்தில் இருந்து அவளுக்கு ஆறுதல் அளிப்பதற்காகப் பாண்டவர்களைக் குறித்து மீண்டும் மீண்டும் அவளிடம் {குந்தியிடம்} பேசுவாயாக.

என்னதான் அவள் {குந்தி} துன்ப துயரத்தை அடையத் தகாதவள் என்றாலும், தனக்குத் திருமணம் ஆனது முதலே, தனது மாமனாரின் நடத்தையால் {griefs due to the conduct of her father-in-law} {மாமனார் விசித்திரவீரியன் வீட்டில்} அவற்றுக்குப் {துன்ப துயரங்களுக்குப்} பலியாகி வருகிறாள். பாடு என்பதே  {கஷ்டப்படுதலே} அவளது நிலையாக இருக்கிறது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, எனது துயரங்கள் அனைத்தும் தீர்ந்து, துன்பமிக்க என் தாயை மகிழ்வுறச் செய்யும் நேரத்தை நான் காண்பேனா? {காண மாட்டேனா?} நாங்கள் நாடுகடத்தப்பட்ட போது {வனவாசம் அனுப்பப்பட்ட போது}, தன் பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தால் கசந்து அழுது, துயரத்தால் எங்கள் பின்னே ஓடி வந்தாள். ஆனால், அவளை {குந்தியை} விட்டுவிட்டு, நாங்கள் காட்டுக்குச் சென்றோம். துயரம் அவளைக் கொன்றிருக்காது {என நம்புகிறேன்}. எனவே, தன் மகன்களின் நிமித்தமாகத் துயரத்தில் இருந்தாலும், ஆனர்த்தர்களால் உற்சாகப்படுத்தப்படும் அவள் உயிரோடு இருக்கச் சாத்தியம் இருக்கிறது.

ஓ! மகிமைமிக்கக் கிருஷ்ணா, அவளையும் {குந்தியையும்}, மன்னன் திருதராஷ்டிரரையும், எங்கள் வயதைவிட முதிர்ந்த ஏகாதிபதிகள் அனைவரையும், பீஷ்மர், துரோணர், கிருபர், மன்னன் பாஹ்லீகர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, சோமதத்தர், உண்மையில் பாரதக் குலத்தவர் அனைவரையும், குருக்களின் ஆலோசகரும் {அமைச்சரும்}, ஆழ்ந்த அறிவு கொண்டவரும், அறநெறிகளை நுண்மையாக அறிந்தவரும், பெரும் ஞானம் கொண்டவருமான விதுரரையும் என்சார்பாக நீ வணங்கி, ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா} அவர்கள் அனைவரையும் தழுவுவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.

மன்னர்களின் முன்னிலையில் இந்த வார்த்தைகளைக் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்ன யுதிஷ்டிரன், கிருஷ்ணனின் அனுமதியுடன், அவனை {கிருஷ்ணனை} வலம் வந்து திரும்பினான். பிறகு, சில எட்டுகளை எடுத்து வைத்த அர்ஜுனன், தனது நண்பனும், மனிதர்களில் காளையும், எதிரி வீரர்களைக் கொல்பவனும், தாசார்ஹ குலத்தின் ஒப்பற்ற வீரனுமானவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஒப்பற்ற கோவிந்தா {கிருஷ்ணா}, ஆலோசனையின் போது, எங்கள் நாடு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்க்கப்பட்டதை மன்னர்கள் அனைவரும் அறிவார்கள். எங்களை அவமதிக்காமல், உன்னை மதித்து, நாங்கள் கோருவதை, நேர்மையாக அவர்கள் {கௌரவர்கள்} கொடுத்தார்களானால், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, எனக்கு மனநிறைவைக் கொடுத்து, பயங்கர ஆபத்தில் இருந்து அவர்கள் தப்புவார்கள். எனினும், எப்போதும் முறையற்ற வழிகளையே பின்பற்றும் திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்}, வேறுவிதமாக நடந்து கொண்டானேயானால், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பின்பு நான் க்ஷத்தரிய குலத்தையே அழிப்பேன் என்பது நிச்சயம்" என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அர்ஜுனன் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, விருகோதரன் {பீமன்} மகிழ்ச்சியால் நிறைந்தான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தொடர்ந்து கோபத்தால் நடுங்கினான், மேலும் மேலும் அவன் கோபத்தால் நடுங்கிக் கொண்டிருந்தாலும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வார்த்தைகள், தனது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பியதால் பயங்கரமாகக் கர்ஜனை செய்தான். அவனது கர்ஜனையைக் கேட்ட வில்லாளிகள் அனைவரும் அச்சத்தால் நடுங்கினர். குதிரைகளும், யானைகளும் மலமும் சிறுநீரும் கழித்தன.

கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} தனது தீர்மானத்தைக் குறித்துச் சொன்ன பிறகு, ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} தழுவி கொண்ட அர்ஜுனன், அவனது {கிருஷ்ணனின்} அனுமதியின் பேரில் திரும்பினான். மன்னர்கள் அனைவரும் அவனைத் {கிருஷ்ணனைத்} தொடர்வதை நிறுத்திய பின், சைப்யம், சுக்ரீவம் மற்றும் பிறவற்றால் இழுக்கப்பட்ட தேரில், உற்சாகம் நிறைந்த இதயத்துடன் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} புறப்பட்டான். {கிருஷ்ணனின் தேரோட்டியான} தாருகனால் உந்தப்பட்ட வாசுதேவனின் அந்தக் குதிரைகள், வானத்தை விழுங்கி, சாலையைக்  குடித்தபடி தொடர்ந்து சென்றன.{And those steeds of Vasudeva, urged by Daruka, coursed onwards, devouring the sky and drinking the road.}

அப்படி வலிமை நிறைந்த கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} சென்று கொண்டிருந்த வழியில், சாலையின் இரு மருங்கிலும் அந்தணக் காந்தியுடன் சுடர்விட்டுக் கொண்டிருந்த முனிவர்களைக் கண்டான். விரைந்து தனது தேரைவிட்டு இறங்கிய ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அவர்களை மரியாதையுடன் வணங்கினான். அவர்களை முறையாக வழிபட்ட அவன் {கிருஷ்ணன்}, அவர்களிடம் {பிராமணர்களிடம்}, "உலகம் அனைத்திலும் அமைதி இருக்கிறதா? அறம் முறையாகப் பயிலப்படுகிறதா? பிற மூவகையினரும் அந்தணர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்களா?" என்று கேட்டான். பிறகு அவர்களை முறையாக வழிபட்ட அந்த மதுவைக் கொன்றவன் {மதுசூதனன்}, மீண்டும் அவர்களிடம் {பிராமணர்களிடம்}, "வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டீர்களா? எங்கே எந்த நோக்கத்திற்காகச் செல்கிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? எது உங்களைப் பூமிக்குக் கொண்டு வந்தது?" என்று கேட்டான் {கிருஷ்ணன்}.

இப்படிச் சொல்லப்பட்டவரும், ஜமதக்னியின் மகனும், தேவர்கள் மற்றும் அசுரர்களுக்குத் தலைவனுமான பிரம்மனின் நண்பர் {பரசுராமர்}, மதுவைக் கொன்றவனான கோவிந்தரை அணுகி, அவனைத் தழுவி கொண்டு, "தேவர்கள் மற்றும் அசுரர்களின் முந்தைய செயல்களை அறிந்தவர்களான நற்செயல்கள் புரியும் தெய்வீக முனிவர்களும், சாத்திரங்களைப் பரந்த அளவில் அறிந்த அந்தணர்களும், அரச முனிவர்களும் [1], ஓ! தாசர்ஹா, ஓ! ஒப்பற்றவனே, அனைத்துப் புறங்களில் இருந்தும் ஓரிடத்தில் கூடும் பூமியின் க்ஷத்திரியர்களையும், சபையில் அமர்ந்திருக்கும் ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்}, மன்னர்களையும், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உண்மையின் உருவமான உன்னையும் காண விரும்புகிறார்கள். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அந்தப் பிரம்மாண்ட காட்சியைக் காண நாங்கள் அங்கே வருவோம்.

[1] இந்த முனிவர்கள் கூட்டத்தில், அதஸ்சிரஸ், சர்ப்பமாலீ, பெரும் முனிவரான தேவலர், அர்வாவசு, சுஜானு, மைத்திரேயர், சனகர், பலி, பகர், தாலப்யர், ஸ்தூலசிரஸ், கிருஷ்ணத்வைபாயனர் {வியாசர்}, ஆபோத்தௌமியர், தௌமியர், ஆணிமாண்டவ்யர், கௌசிகர் {விஸ்வாமித்ரர்}, தர்மோஷணீஷர், பர்ணாதர், கடஜானுகர், மௌஞ்சாயனர், வாயுபக்ஷர், பாராசர்யர், சாலிகர், சீலவான், அசனி, தாதா, சூனியபாலர், அக்ருதவரணர், ஸ்வேதகேது, கஹோளர், பரசுராமர், நாரதர் ஆகியோர் இருந்ததாக ஒரு பதிப்பில் இருக்கிறது.

ஓ! மாதவா, மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும், குருக்களிடம் நீ பேசப் போகும் அறம் மற்றும் பொருள் நிறைந்த பேச்சைக் கேட்க நாங்கள் ஆவலாக உள்ளோம். உண்மையில், பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரோடு ஒப்பற்ற விதுரன், மற்றும் யாதவர்களில் புலியான நீ ஆகிய அனைவரும் ஒன்றாகச் சபையில் கூடப் போகிறீர்கள். ஓ! மாதவா {கிருஷ்ணா}, கேட்பதற்கு அருமையானதும், உண்மை நிறைந்ததும் நன்மைக்கு வழிவகுப்பதுமான உனது பேச்சையும், ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அவர்கள் பேசும் பேச்சையும் கேட்க நாங்கள் விரும்புகிறோம். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, எங்கள் நோக்கத்தை இப்போது உன்னிடம் தெரிவித்து விட்டோம். உன்னை நாங்கள் மீண்டும் சந்திக்கிறோம். ஓ! வீரா {கிருஷ்ணா}, நீ அங்கே பாதுகாப்பாகச் செல்வாயாக. உனது ஆற்றல், வலிமை ஆகியவற்றைச் சேகரித்து, சபைக்கு மத்தியில் அற்புதமான இருக்கையில் அமர்ந்திருக்கும் உன்னைக் காண்போம் என நாங்கள் நம்புகிறோம்" என்றார் {பரசுராமர்}.