Parasurama began to bleed copiously! | Udyoga Parva - Section 184 | Mahabharata In Tamil
(அம்போபாக்யான பர்வம் – 11)
பதிவின் சுருக்கம் : பீஷ்மருக்கும் பரசுராமருக்கும் இடையில் நடைபெற்ற போரின் வர்ணனை; தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்திய பரசுராமரும், பீஷ்மரும்; பரசுராமரின் வேலை மூன்றாக வெட்டிய பீஷ்மர்; ராமரின் மேலும் பனிரெண்டு வேலாயுதங்களைப் பீஷ்மர் கலங்கடித்தது; பரசுராமரின் கணைகளைக் கேடயம் மற்றும் வாளால் கலங்கடித்த பீஷ்மர்; பீஷ்மரின் கணைமழையால் துளைக்கப்பட்ட பரசுராமருக்கு இரத்தம் அதிகமாகக் கொட்டியது; சூரியன் மறைந்ததும் அந்த நாளின் போர் முடிவுக்கு வந்தது...
பீஷ்மர் - பரசுராமர் |
பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "அடுத்த நாள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, எனக்கும் ராமருக்கும் {பரசுராமருக்கும்} இடையில் மீண்டும் ஒரு முறை நடைபெற்ற மோதல் அச்சந்தருவதாக இருந்தது. தெய்வீக ஆயுதங்களை அறிந்தவரும், அறம்சார்ந்த ஆன்மா கொண்ட வீரருமான தலைவன் ராமர் {பரசுராமர்}, நாளுக்கு நாள் பல்வேறு விதங்களிலான தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார். தியாகம் செய்வதற்குக் கடினமான உயிரையே துச்சமாக மதித்த நான், அந்தக் கடும் மோதலில், ஓ! பாரதா {துரியோதனா}, அவற்றைக் கலங்கடிக்கச் செய்யும் அதே போன்ற எனது ஆயுதங்களால் அவற்றைக் கலங்கடித்தேன்.
மேலும், ஓ! பாரதா {துரியோதனா}, பல்வேறு விதமான ஆயுதங்களும் இவ்வழியில் மட்டுப்படுத்தப்பட்டு, பதில் ஆயுதங்களின் மூலம் கலங்கடிக்கப்பட்ட போது, பெரும் சக்தி கொண்ட ராமர் {பரசுராமர்}, உயிரைத் துச்சமாக மதித்து எனக்கெதிராகப் போரிட ஆரம்பித்தார். தனது ஆயுதங்கள் அனைத்தும் கலங்கடிக்கப்படுவதைக் கண்ட அந்த உயர் ஆன்ம ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, சுடர்விடும் வாயுடன் கூடியதும் எரிந்து கொண்டு வருவதுமான எரிநட்சத்திரத்திரம் போன்றதுமான ஒரு கடும் வேலாயுதத்தை என் மீது வீசினார். மரணத்தால் {காலனால் - எமனால்} வீசப்பட்ட கணையைப் போன்று, தனது பிரகாசத்தால் உலகையே நிறைத்தபடி அது வந்தது. எனினும் நான், எனக்கு எதிராக விரைந்து வந்ததும், யுகத்தின் முடிவில் எழும் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்தச் சுடர்மிகும் வேலை எனது கணைகளால் மூன்று துண்டுகளாக வெட்டினேன்.
அப்போது, நறுமணம் நிரம்பிய தென்றல் (என்னைச் சுற்றி) வீச ஆரம்பித்தது. தனது வேல் வெட்டப்பட்டதைக் கண்ட ராமர், எரியும் கோபத்துடன், பனிரெண்டு {12} கடும் வேலாயுதங்களை வீசனார். அவற்றின் {அந்த 12 வேலாயுதங்களின்} வடிவங்களை, ஓ! பாரதா {துரியோதனா}, அவற்றின் பிரகாசம் மற்றும் வேகத்தின் விளைவாக நான் விபரிக்க இயலாதவனாக இருக்கிறேன். உண்மையில், அவற்றின் வடிவங்களை நான் விளக்குவது எப்படி? நெருப்பின் நீள நாக்குகளைப் போலவும், பிரளய காலத்தில் உதிக்கும் பனிரெண்டு சூரியனைகளைப் போலவும் கடும் சக்தியுடன் சுடர்விட்டுக் கொண்டு அனைத்துப் புறங்களில் இருந்தும் என்னை அணுகிய அந்த வித்தியாசமானவற்றைக் கண்டு, நான் அச்சத்தால் நிறைந்தேன். ஒரு கணை வலையே என்னை நோக்கி முன்னேறி வருவதைக் கண்ட நான், எனது கணை மழையால் அவற்றைக் கலங்கடித்து, மேலும் பனிரெண்டு {12} கணைகளை அடித்து, ராமரின் {பரசுராமரின்} அந்தக் கடுமையான சக்தி கொண்ட கணைகளை எரித்தேன்.
பிறகு, ஓ! மன்னா {துரியோதனா}, அந்த உயர் ஆன்ம ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, பார்க்கக் கடுமையானவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுப் பலவண்ணங்களில் இருந்தவையும், தங்கச் சிறகுகள் படைத்தவையும், சுடர்மிகும் எரிகற்களைப் போல இருந்தவையுமான எண்ணற்ற கணைகளை என் மீது அடித்தார். எனது கேடயம் மற்றும் வாளினால் அந்தக் கடும் கணைகளைக் கலங்கடித்து, அந்த மோதலில் அவற்றைத் தரையில் விழ வைத்த நான், சிறந்தவையான கணை மேகங்களால் ராமரின் {பரசுராமரின்} அற்புதக் குதிரைகளையும், அவரது தேரோட்டியையும் மூழ்கடித்தேன்.
பிறகு, ஹேஹயர்களின் தலைவனை {கார்த்தவீரியார்ஜுனனைக்) [1] கொன்ற அந்த உயர் ஆன்ம தலைவர் {பரசுராமர்}, தங்கப் பிடி கொண்டவையும், பொந்துகளில் இருந்து வெளிவரும் பாம்புகளைப் போன்றவையுமான எனது வேலாயுதங்களைக் கண்டு கோபத்தால் நிறைந்து, மீண்டும் ஒருமுறை தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார். வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போன்றிருந்த அந்தக் கடுங்கணைகளின் கூட்டம் என் மேல் விழுந்து, என்னையும், எனது குதிரைகளையும், எனது தேரோட்டியையும், எனது தேரையும் மூழ்கடித்தது.
[1] கார்த்தவீரியார்ஜுனன் என்றும் அழைக்கப்பட்டவனும், ராவணனை வீழ்த்தியவனும், ஹேஹய குல க்ஷத்திரியர்களின் தலைவனும், நர்மதைக் கரையில் உள்ள மாஹிஷ்மதி என்ற தலைநகரைக் கொண்டவனுமான ஆயிரங் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், ராமரால் {பரசுராமரால்} கொல்லப்பட்டவனாவான். என்கிறார் கங்குலி.
உண்மையில், ஓ! மன்னா {துரியோதனா}, எனது தேர், குதிரைகள், தேரோட்டி ஆகிய அனைத்தும் அந்தக் கணைகளால் மறைக்கப்பட்டன! அந்தக் கணை மழையால், எனது தேரின் நுகத்தடி, மூக்கணை {தேரின் ஏர்க்கால்}, சக்கரங்கள், அச்சுமரம் ஆகியன அறுக்கப்பட்டு உடனே முறிந்தன. எனினும், அந்தக் கணைமழையின் முடிவில், நானும் எனது ஆசானை {பரசுராமரை} அடர்த்தியான கணை மழையால் மறைத்தேன். பிரம்மத் தகுதியின் இருப்பிடமான அவர் {பரசுராமர்}, அந்தக் கணை மழையால் சிதைக்கப்பட்டதால், அவரது உடலில் இருந்து இரத்தம் தொடர்ச்சியாகக் கொட்டத் தொடங்கியது. உண்மையில், எனது கணை மேகங்களால் ராமர் {பரசுராமர்} துன்புற்றது போலவே, அவரது கணைகளால் நானும் அடர்த்தியாகத் துளைக்கப்பட்டு இருந்தேன். இறுதியாக மாலையில், மேற்கு மலைகளுக்குப் பின்னால் சூரியன் மறைந்ததும், எங்கள் மோதல் ஒரு முடிவுக்கு வந்தது" என்றார் {பீஷ்மர்}.