The Battle lasted for Twenty Three days! | Udyoga Parva - Section 185 | Mahabharata In Tamil
(அம்போபாக்யான பர்வம் – 12)
பதிவின் சுருக்கம் : பரசுராமரால் துளைக்கப்பட்ட பீஷ்மர் மயங்கி விழுந்தது; பீஷ்மர் இறந்துவிட்டதாக மகிழ்ந்த பரசுராமர்; உணர்வற்றுக் கிடந்த பீஷ்மரை எட்டு அந்தணர்கள் சுமந்து கொண்டு அவருக்கு ஆறுதலளித்தது; கங்கா தேவியே பரசுராமரின் தேரை வழிநடத்தியது; மூர்ச்சை தெளிந்த பீஷ்மரால் அடிக்கப்பட்ட கணையொன்றால் தாக்கப்பட்ட பரசுராமர் முழங்காலை ஊன்று சுயநினைவற்றுப் பூமியில் விழுந்தது; அப்போது தோன்றிய தீய சகுனங்கள்; திடீரென எழுந்த பரசுராமர் பீஷ்மரைத் தாக்கியது; மாலை வந்ததும் போர் நின்றது...
அம்பையால், பரசுராமர் - பீஷ்மர் மோதல் |
பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "அடுத்த நாள் காலையில், ஓ! மன்னா {துரியோதனா}, சூரியன் பிரகாசமாக உதித்த போது, எனக்கும், பிருகு குலத்தவருக்கு {பரசுராமருக்கும்} இடையிலான போர் மீண்டும் தொடங்கியது. பிறகு, அந்த அடிப்பவர்களில் முதன்மையானவர் {பரசுராமர்}, விரைவாக நகரும் தனது தேரில் நிலைபெற்று, மலையின் மார்பில் விழும் மேகங்களைப் போல, என் மீது கணைமாரியைப் பொழிந்தார். அந்தக் கணை மழையால் பீடிக்கப்பட்ட எனது அன்புக்குரிய தேரோட்டி, தேரில் தனது இடத்தில் இருந்து நழுவி விழுந்ததால், அவன் {தேரோட்டி} நிமித்தமாகத் துயரம் என்னை நிறைத்தது. அவனோ சுய நினைவு முழுவதையும் இழந்தான். இப்படி அந்தக் கணைமாரியால் காயமடைந்த அவன் {தேரோட்டி}, மயங்கி பூமியில் சாய்ந்தான். ராமரின் {பரசுராமரின்} கணைகளால் பீடிக்கப்பட்ட அவன் {தேரோட்டி}, விரைவில் தனது உயிரையும் விட்டான்.
பிறகு, ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, அச்சம் எனது இதயத்தில் நுழைந்தது. எனது தேரோட்டியின் மரணத்தால் ஏற்பட்ட சோகத்தின் விளைவாக நான் அழுது கொண்டிருந்த போதே, ராமர் {பரசுராமர்}, மரணத்தைக் கொடுக்கும் பல கணைகளை என் மீது தொடுத்தார். உண்மையில், ஆபத்திலிருந்த நான் எனது தேரோட்டியின் மரணத்துக்காக அழுது கொண்டிருந்த போது, தனது வில்லைப் பலங்கொண்டமட்டும் இழுத்த அந்தப் பிருகு குலத்தவர் {பரசுராமர்}, கணை ஒன்றால் என்னை ஆழத் துளைத்தார். ஓ! மன்னா {துரியோதனா}, இரத்தத்தைக் குடிக்கும் அந்தக் கணை என் மார்பின் மீது விழுந்து என்னை ஆழமாகத் துளைத்ததன் தொடர்ச்சியாக நான் பூமியில் விழுந்தேன்.
பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, நான் இறந்ததாக நினைத்த ராமர் {பரசுராமர்}, மேகங்களைப் போல மீண்டும் மீண்டும் கர்ஜித்து மிகவும் மகிழ்ந்தார். உண்மையில் ஓ! மன்னா {துரியோதனா}, நான் அப்படிப் பூமியில் விழுவதைக் கண்டு, எனக்குப் பின்னால் இருந்த கௌரவர்களும், அந்தப் போரைச் சாட்சியாகக் காண வந்தவர்களும் பெரிதும் வருந்திக் கொண்டிருக்கையில், மகிழ்ச்சி நிறைந்த ராமர் {பரசுராமர்}, தனது தொண்டர்களுடன் சேர்ந்து உரத்த கர்ஜனைகளை வெளியிட்டார். அப்படி நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த போது, ஓ! மன்னர்களில் சிங்கமே {துரியோதனா}, சூரியனைப் போன்றோ, நெருப்பைப் போன்றோ பிரகாசம் கொண்ட எட்டு {8} அந்தணர்களை நான் கண்டேன். அந்தப் போர்க்களத்தில் என்னைச் சூழ்ந்திருந்த அவர்கள், தங்கள் கரங்களால் என்னைச் சுமந்து கொண்டிருந்தனர். உண்மையில் அந்த அந்தணர்களால் சுமக்கப்பட்டதால், நான் தரையைத் தொடவேண்டிய நிலையில் இல்லை.
நண்பர்கள் தாங்கிக் கொள்வது போல, பெருமூச்சு வாங்கிக் கொண்டிருந்த என்னை ஆகாயத்தில் அவர்கள் {8 அந்தணர்கள்} தாங்கிக் கொண்டனர். மேலும் அவர்கள் நீர்த்துளிகளை என் மீது தெளித்தனர். நின்று கொண்டே என்னைச் சுமந்த அவர்கள், ஓ! மன்னா {துரியோதனா}, என்னிடம் மீண்டும் மீண்டும், "அஞ்சாதே! செழிப்பு உனதாகட்டும்" என்றனர். அவர்களது வார்த்தைகளால் ஆறுதல் அடைந்த நான், விரைவாக எழுந்தேன்.
பிறகு நான், நதிகளில் முதன்மையான எனது தாய் கங்கை, என் தேரில் நிலைபெற்றிருப்பதைக் கண்டேன். உண்மையில், ஓ! குருக்களின் மன்னா {துரியோதனா}, (எனது தேரோட்டி விழுந்த பிறகு) பெரும் நதியான அந்தத் தேவியே {கங்காதேவியே} எனது குதிரைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். பிறகு எனது தாயின் பாதங்களையும், எனது மூதாதையர்களின் ஆவிகளையும் வழிபட்ட நான், எனது தேரில் ஏறினேன். பிறகு எனது தாய் எனது தேர், குதிரைகள் மற்றும் போருக்கான அனைத்து கருவிகளுக்கும் தனது பாதுகாப்பை அளித்தாள். கூப்பிய கரங்களுடன் நான் அவளைச் செல்லுமாறு வேண்டினேன். இப்படி அவளை வழியனுப்பிய நானே, காற்றின் வேகம் கொண்ட எனது குதிரைகளைக் கட்டுப்படுத்தி, ஓ! பாரதா {துரியோதனா}, அந்த நாளின் முடிவு வரை ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} போரிட்டேன்.
பிறகு, ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, அந்தப் போரின் போக்கில் நான் பலமிக்க ராமரின் {பரசுராமரின்} மேல், இதயத்தைத் துளைக்கும் பெருவேகம் கொண்ட கணையொன்றை அடித்தேன். அந்தக் கணையால் பீடிக்கப்பட்ட ராமர் {பரசுராமர்}, பிறகு, வில்லில் இருந்த தனது பிடியைத் தளர்த்தி, முழந்தாழ்களை ஊன்றியபடி பூமியில் சுயநினைவின்றி விழுந்தார்.
பல்லாயிரம் (தங்க நாணயங்களைத்) தானமளித்த ராமர் {பரசுராமர்} விழுந்த போது, ஆகாயத்தில் மேகத்திரள் சூழ்ந்து, இரத்த மழையை அதிகமாகப் பொழிந்தது. நூற்றுக்கணக்கான எரிகற்கள் விழுந்தன. அனைத்தையும் நடுங்கச் செய்யும் இடிமுழக்கங்கள் கேட்டன! சுடர் மிகும் சூரியனைத் திடீரென ராகு மறைத்தான். கடுங்காற்று வீசத்தொடங்கியது! இந்தப் பூமியே நடுங்கத் தொடங்கியது. கழுகுகள், காகங்கள், நாரைகள் ஆகியன மகிழ்ச்சியால் விழத் தொடங்கின. அடிவானத்தின் புள்ளிகள் {திசைகள்} பற்றி எரிவதாகத் தோன்றின. நரிகள் மீண்டும் மீண்டும் கடுமையாக ஊளையிடத் தொடங்கின. (மனித கரங்களால்) அடிக்கப்பட்ட துந்துபிகள் கடுமையான ஒலியை வெளியிடத் தொடங்கின. உண்மையில், அந்த உயர் ஆன்ம ராமர் {பரசுராமர்}, சுயநினைவை இழந்து, பூமியை அரவணைத்த போது, அச்சந்தரும் இந்தத் தீய சகுனங்கள் அனைத்தும் காணப்பட்டன.
பிறகு, திடீரென எழுந்த ராமர் {பரசுராமர்}, ஓ! கௌரவா {துரியோதனா}, அனைத்தையும் மறந்துவிட்டு, கோபத்தால் உணர்வுகளை இழந்து மீண்டும் ஒரு முறை என்னை அணுகினார். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அவர் {பரசுராமர்}, பெரும் வலுவுடைய தனது வில்லையும், மரணத்துக்கு ஒப்பான ஒரு கணையையும் எடுத்தார். எனினும், நான் அவரை வெற்றிகரமாகத் தடுத்தேன். அந்தப் பிருகு குலத்தவர் {பரசுராமர்} பெரும் கோபத்துடன் இருந்தாலும், (அங்கே நின்று கொண்டிருந்த) பெருமுனிவர்க்ள அனைவரும் அந்தக் காட்சியைக்கண்டு பரிதாபத்தால் நிறைந்தனர். யுகத்தின் முடிவில் தோன்றும் சுடர்மிகும் நெருப்பைப் போன்ற கணையொன்றை நான் எடுத்தேன், எனினும், அளவிலா ஆன்மா கொண்ட அந்த ராமர் {பரசுராமர்} அந்த எனது ஆயுதத்தைக் கலங்கடித்தார்.
புழுதி மேகத்ததால் மறைக்கப்பட்டிருந்த சூரிய வட்டிலின் பிரகாசம் மங்கியது; சூரியனும் மேற்கு மலைக்குச் சென்றுவிட்டான். குளிர்ந்த இனிய தென்றலுடன் இரவும் வந்தது. பிறகு நாங்கள் இருவரும் போரில் இருந்து விலகினோம். இவ்வழியிலேயே, ஓ! மன்னா {துரியோதனா}, மாலை வந்ததும் கடும்போர் நின்றது. மேலும் (அடுத்த நாளில்) சூரியன் மீண்டும் தோன்றிய போது, அது {போர்} தொடங்கியது. அது {அந்தப் போர்} தொடர்ச்சியாக இருபத்து மூன்று {23} நாட்களுக்கு நீடித்தது" என்றார் {பீஷ்மர்}.