Bhishma laughed aloud at Karna! | Udyoga Parva - Section 196 | Mahabharata In Tamil
(அம்போபாக்யான பர்வம் – 23)
பதிவின் சுருக்கம் : கண்ணுக்கு எதிரே நின்ற பெரும் பாண்டவப்படையைக் கண்ட துரியோதனன், அந்தப் படையைப் பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமன் ஆகியோர் ஒவ்வொராலும் தனித்தனியாக எவ்வளவு காலத்தில் அழிக்க முடியும் என்று கேட்டது; ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற காலத்தைச் சொன்னது; கர்ணன் சொன்னதைக் கேட்ட பீஷ்மர் உரக்கச் சிரித்தது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இரவு கடந்து, காலை வந்ததும், துருப்புகள் அனைத்தின் மத்தியில் வைத்து, உமது மகன் {துரியோதனன்}, மீண்டும் ஒருமுறை தனது பாட்டனிடம் {பீஷ்மரிடம்}, "ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, போரிடத் தயாராக இருக்கும் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} இந்தப் படை, மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவை நிரம்பி, மஹாரதர்கள் கூட்டத்தால் நிரம்பி, லோகபாலர்களைப் போன்றோரும், ஒப்பற்றவர்களும், தாக்குப்பிடிக்கப்பட இயலாதவர்களுமான பெரும் பலத்தைக் கொண்ட வலிமைமிக்க வில்லாளிகளான பீமன், அர்ஜுனன், திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பிறர் ஆகியோருடன் கட்டுக்கடங்காத கடலைப் போல இருக்கிறது. போரில் தேவர்களாலும் கலங்கடிக்கப்பட முடியாத வீரர்கள் அடங்கிய இந்தப் படையை, ஓ! கங்கையின் மைந்தரே, ஓ! பெரும் பிரகாசம் கொண்டவரே {பீஷ்மரே}, உம்மால் எத்தனை நாட்களில் அழிக்க முடியும். வலிமைமிக்க வில்லாளியான எங்கள் ஆசானால் {துரோணரால்} எவ்வளவு காலத்தில் முடியும், வலிமைமிக்கக் கிருபரால் எவ்வளவு காலத்திலும், போரில் விருப்பம் கொண்ட கர்ணனால் எவ்வளவு காலத்திலும், அந்தணர்களில் சிறந்தவரான துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} எவ்வளவு காலத்திலும் அழிக்க முடியும்? எனது படையில் இருக்கும் நீங்கள் அனைவரும் தெய்வீக ஆயுதங்களை அறிந்தவராவீர்! எனது இதயத்தில் நான் உணரும் ஆவல் பெரிதாக இருப்பதால், இதை அறிய நான் விரும்புகிறேன்! ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, இதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்", என்றான் {துரியோதனன்}.
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! குருக்களில் முதன்மையானவனே, ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, எதிரியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து நீ விசாரிக்கிறாய். உண்மையில், இஃது உனக்குத் தகுந்ததே. போரில் எனது சக்தி, அல்லது எனது ஆயுதங்களின் ஆற்றல், அல்லது எனது கரங்களின் வலிமை ஆகியவற்றின் எல்லையை நான் சொல்கிறேன் கேள். சாதாரணப் போராளிகளைப் பொறுத்தவரை, இடைவிடாமல் அவர்களுடன் ஒருவன் போரிட வேண்டும். மாயசக்திகள் கொண்டோரைப் பொறுத்தவரை, அவர்களுடன் ஒருவன் மாய வழிகளின் துணை கொண்டே ஒருவன் போரிட வேண்டும். இதுவே போராளிகளின் கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! அருளப்பட்ட ஏகாதிபதி {துரியோதனா}, ஒவ்வொரு காலையிலும் பத்தாயிரம் {10000} (சாதாரண) போராளிகளையும், ஓராயிரம் {1000} தேர்வீரர்களையும் எனது பங்காகக் கொண்டு, பாண்டவப்படையை நான் அழிப்பேன். கவசம்பூண்டபடி, எப்போதும் சுறுசுறுப்பாக உழைக்கும் நான், ஓ! பாரதா {துரியோதனா}, எண்ணிக்கை மற்றும் காலத்துடைய இந்த ஏற்பாட்டின் படி இந்தப் பெரும் படையை அழிப்பேன். எனினும், போரில் நிலைத்திருக்கும் நான், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லும் எனது பெரும் ஆயுதங்களை அடித்தால், ஓ! பாரதா {துரியோதனா}, என்னால் ஒரு மாதத்தில் இந்தப் படுகொலையை முடிக்க முடியும்" என்றார் {பீஷ்மர்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் பிறகு, அங்கிரச குலத்தின் முதன்மையானவரான துரோணரிடம், "ஓ! ஆசானே {துரோணரே}, எவ்வளவு காலத்தில் நீர் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} துருப்பபுகளை அழிப்பீர்?" என்று கேட்டான். இப்படிக் கேட்கப்பட்ட துரோணர் புன்னகையுடன், "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நான் கிழவன். எனது சக்தி, செயல்பாடு ஆகிய இரண்டும் பலவீனமடைந்திருக்கிறது. எனது ஆயுதங்களின் நெருப்பால், சந்தனுவின் மகனான பீஷ்மரைப் போலவே, என்னால் இந்தப் பாண்டவப் படையை ஒரு மாத காலத்தில் எரிக்க முடியும் என நான் நினைக்கிறேன். இதுவே எனது சக்தியின் எல்லை. இதுவே எனது பலத்தின் எல்லையுமாகும்" என்றார். பிறகு சரத்வானின் மகனான கிருபர் இரண்டு {2} மாத காலத்தில் எதிரியைத் தன்னால் அழிக்க முடியும் என்றார். துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), பத்து {10} இரவுகளில் பாண்டவப் படையை அழிப்பதாக உறுதி அளித்தான். எனினும், உயர் திறம் படைத்த ஆயுதங்களைக் கொண்டிருந்த கர்ணன், தன்னால் ஐந்து {5} நாட்களில் அந்தச் சாதனையைச் செய்ய முடியும் என்று உறுதியளித்தான். கடலுக்குச் செல்பவளுடைய (கங்கையின்) மகன் {பீஷ்மர்}, சூதனின் மகனுடைய {கர்ணனின்} வார்த்தைகளைக் கேட்டு உரக்க சிரித்தபடி, "ஓ! ராதையின் மகனே {கர்ணா}, கணைகள், சங்கு, விற்கள் ஆகியவற்றுடன் கூடியவனும், வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தனது துணைவனாகக் கொண்டு மோதலுக்கு விரைந்து வருபவனுமான பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} போரில் நீ மோதாத வரை நீ அப்படி நினைத்துக் கொள்வாயாக. இதற்கு மேலும் உன் விருப்பப்படி எதையும் சொல்ல இயன்றவன்தான் நீ" என்றார் {பீஷ்மர்}.