Thursday, July 30, 2015

"நியாயமான போரைச் செய்வோம்!" என்ற அர்ஜுனன் - உத்யோக பர்வம் பகுதி 197

"We'll have a fair fight!" said Arjuna | Udyoga Parva - Section 197 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 24)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமன், கர்ணன் ஆகியோர் சொன்னதை ஒற்றர்கள் மூலம் அறிந்த யுதிஷ்டிரன், அர்ஜுனனிடம் தங்கள் எதிரிகளான கௌரவர்களை வீழ்த்தும் காலத்தைக் குறித்துக் கேட்டது; கிருஷ்ணனைத் துணையாகக் கொண்ட தன்னால் ஒரு நொடிப்பொழுதில் மூவுலகையும் அழித்துவிட முடியும் என்று அர்ஜுனன் சொன்னது; எனினும் சாதாரண மனிதர்கள் மீது தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், நியாயமான போரைக் கைக்கொண்டே நாம் வென்றுவிடலாம் என்றும் அர்ஜுனன் சொல்வது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(குரு {கௌரவப்} படையின் தலைவர்கள் சொன்ன) இவ்வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது தம்பிகள் அனைவரையும் அழைத்து, அவர்களிடம் தனிமையில் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

யுதிஷ்டிரன், "திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} படையில் நான் அமர்த்திய ஒற்றர்கள், இந்தச் செய்தியை இன்று காலை என்னிடம் கொண்டு வந்தார்கள். பெரும் நோன்புகள் கொண்ட கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} துரியோதனன், "ஓ! தலைவா {பீஷ்மரே}, பாண்டு மகன்களின் துருப்புகளை நீர் எவ்வளவு காலத்தில் அழிப்பீர்?" என்று கேட்டான். உண்மையில், அந்தத் தீய துரியோதனனுக்கு அவர் அளித்த பதில், "ஒரு மாதம்!" என்பதாகும். துரோணரும், அதே சாதனையை அதே காலத்தில் {ஒரு மாத காலத்தில்} தன்னால் சாதிக்க முடியும் என்று அறிவித்தார். கௌதமர் (கிருபர்) அந்தக் காலத்தில் இரட்டிப்பானதைக் {இரண்டு மாத காலத்தைக்} குறிப்பிட்டார் என்று நாம் கேள்விப்படுகிறோம். உயர்ந்த திறம் கொண்ட ஆயுதங்களை அறிந்தவரான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, (தன்னைப் பொறுத்தவரை) பத்து இரவுகளாகும் என்று அறிவித்தார். உயர்ந்த திறம் கொண்ட ஆயுதங்களை அறிந்தவனான கர்ணனும், குருக்கள் மத்தியில் வைத்துக் கேட்கப்பட்ட போது, ஐந்து நாட்களில் அந்தப் படுகொலையை தன்னால் நிகழ்த்தி விடமுடியும் என்று அறிவித்தான். எனவே, ஓ! அர்ஜுனா, நானும் உனது வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறேன். ஓ! பல்குனா {அர்ஜுனா}, எதிரியை எவ்வளவு காலத்தில் நீ அழிப்பாய்?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.


இப்படி மன்னனால் {யுதிஷ்டிரனால்} கேட்கப்பட்டவனும், சுருள் முடி கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மீது தனது பார்வையை வீசியபடி, "அவர்கள் அனைவரும் (பீஷ்மரும், பிறரும்) உயர் ஆன்மா கொண்டோரும் (போர்வீரர்களும்), ஆயுதங்களில் சாதித்தவர்களும், போர் முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமாவர். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, (நமது படைகளுடன் கூடிய) நம்மை அவர்கள் சொன்னது போலவே அழித்துவிட அவர்களால் முடியும் என்பதில் ஐயமில்லை! எனினும், உமது இதயத்தின் வருத்தம் அகலட்டும்! வாசுதேவனை {கிருஷ்ணனை} எனது கூட்டாளியாகக் கொண்டு, தனித்தேரில் செல்லும் என்னால், உண்மையில், தேவர்களுடன் கூடிய மூன்று உலகையும், அதன் அசையும் மற்றும் அசையா உயிரினங்களுடன் சேர்த்து கண்ணிமைப்பதற்குள் பூண்டோடு அழித்து விட முடியும் என்பதை உமக்கு நான் உண்மையாகச் சொல்கிறேன். இதையே நான் நினைக்கிறேன்.

அனைத்து உயிரினங்களின் தலைவன் (மகாதேவன்) {சிவன்}, வேடனாக (வேடந்தரித்து) என்னோடு கைக்குக் கை மோதிய நிகழ்வின் போது, அவனால் {சிவனால்} எனக்கு அளிக்கப்பட்ட அந்தப் பயங்கரமானதும் வலிமையானதுமான ஆயுதம் {பாசுபத அஸ்திரம்} இன்னும் என்னிடம் இருக்கிறது. உண்மையில், ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, யுகத்தின் முடிவின் போது, படைக்கப்பட்ட அனைத்தையும் அழிப்பதற்காக அனைத்து உயிரினங்களின் தலைவனால் {சிவனால்} பயன்படுத்தப்படும் அந்த ஆயுதம் {பாசுபத அஸ்திரம்} என்னிடம் இருக்கிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த ஆயுதத்தைக் கங்கையின் மைந்தரோ {பீஷ்மனோ}, துரோணரோ, கௌதமரோ (கிருபதரோ), துரோணரின் மகனோ {அஸ்வத்தாமரோ} அறியமாட்டார்கள்! எனவே, சூதனின் மகனால் {கர்ணனால்} அதை எப்படி அறிந்திருக்க முடியும்? எனினும், இது போன்ற தெய்வீக ஆயுதங்களைப் போரில் சாதாரண மனிதர்களைக் கொல்லப் பயன்படுத்துவது முறையாகாது.

(மறுபுறம்) ஒரு நியாயமான போரின் மூலமே நாம் நமது எதிரிகளை வெற்றியடையலாம். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மேலும் இந்த மனிதர்களில் புலிகள் அனைவரும் உமது கூட்டாளிகளாய் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தெய்வீக ஆயுதங்களை நன்கு அறிந்தவர்களாகவும், போருக்கு ஆவலுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வேதங்களில் குறிப்பிட்ட தொடக்கங்களைச் {சடங்குகளை} செய்து, வேள்விகளில் இறுதி நீராடலையும் மேற்கொண்டவர்கள் ஆவர் [1]. இவர்கள் அனைவரும் வீழ்த்தப்படாதவர்களும் தேவர்களின் படையையே கூடப் போரில் கொல்வதற்குத் திறம் வாய்ந்தவர்களுமாவர்.

[1] "வேதாந்தாவப்ருதஸநாதா' என்பது மூலம் "வேதாத்யஅயனம் செய்து முடித்த பிறகு, திருமணம் செய்து கொண்டு, வேள்வியைச் செய்தவர்கள்" என்பது பழைய உரை என்றும். திருமணம் செய்து கொள்ளாதவன் வேள்வி செய்யலாகாது என்பதால் திருமணம் செய்து கொண்டு என்ற பொருள் இங்கே ஒலிக்கும். இதனால், "அனைவரும் இம்மையில் அடைய வேண்டியவற்றை அடைந்துவிட்ட படியால் மரணத்திற்கு அஞ்சமாட்டார்கள்" என்பது குறிப்பு என்று வேறொரு பதிப்புச் சொல்கிறது.

நீர் உமது கூட்டாளிகளாக, சிகண்டி, யுயுதானன், பிருஷதக் குலத்து திருஷ்டத்யும்னன்; மேலும் பீமசேனன் மற்றும் இந்த இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, யுதாமன்யு, உத்தமௌஜஸ், மற்றும் பீஷ்மருக்கும், துரோணருக்கும் போரில் இணையானவர்களான விராடர், துருபதர்; வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சங்கன், பெரும் வலிமைமிக்க ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, மற்றும் அவனது {கடோத்கசனின்} மகனும், பெரும் வலிமை மற்றும் ஆற்றலைக் கொண்டவனுமான அஞ்சன்பர்வன்; போரில் நன்கு தேர்ச்சி பெற்றவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சினிக்களின் வழித்தோன்றல் {சாத்யகி}, வலிமைமிக்க அபிமன்யு, திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோரைக் கொண்டிருக்கிறீர்.

மேலும், நீரே கூட, மூவுலகங்களையும் அழிக்கும் திறம் பெற்றவராக இருக்கிறீர். ஓ! சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான பிரகாசம் கொண்டவரே, ஓ! கௌரவரே {யுதிஷ்டிரரே}, நீர் உமது கண்களை  வெளிப்படையாக ஒரு மனிதனின் மீது கோபத்துடன் செலுத்தினால், அவன் அழிந்து போவது உறுதி என்பதை நான் அறிவேன்" என்றான் {அர்ஜுனன்}.