Bhima killed eight sons of Dhritarashtra! | Bhishma-Parva-Section-064 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 22)
பதிவின் சுருக்கம் : சாத்யகிக்கும், பூரிஸ்ரவசுக்கும் இடையில் நடந்த மோதல்; துரியோதனன் தலைமையிலான திருதராஷ்டிர மகன்களுடன் பீமன் செய்த போர்; திருதராஷ்டிரன் மகன்கள் எண்மரைக் கொன்ற பீமன்; பீஷ்மரின் கட்டளை ....
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட பூரிஸ்ரவஸ், பெரும் யானையை அங்குசத்தால் துளைக்கும் யானைப்பாகனைப் போல, சாத்யகியை ஒன்பது கணைகளால் துளைத்தான். அளவிலா ஆன்மா கொண்டவனான சாத்யகியும், அனைத்துத் துருப்புகளின் பார்வையிலேயே, அந்தக் கௌரவ வீரனை {பூரிஸ்ரவசை} ஒன்பது கணைகளால் துளைத்தான். அப்போது, மன்னன் துரியோதனன், இப்படிப் போராடிக் கொண்டிருந்த சோமதத்தன் மகனைச் {பூரிஸ்ரவசைத்} தனது தம்பிகளுடன் சேர்ந்து சூழ்ந்து கொண்டான். அதே போலப் பெரும் சக்தி வாய்ந்த பாண்டவர்களும், விரைந்து சாத்யகியைச் சூழ்ந்து கொண்டு தங்கள் நிலைகளை அவனைச் {சாத்யகியைச்} சுற்றி அமைத்துக் கொண்டனர்.
கோபம் தூண்டப்பட்டவனும், உயர்த்திய கதாயுதத்துடன் கூடியவனுமான பீமசேனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரியோதனன் தலைமையிலான உமது மகன்கள் அனைவருடனும் மோதினான். பல்லாயிரம் தேர்களுடையவனும், கோபமும், பொறாமையும் கொண்டவனுமான உமது மகன் நந்தகன், கல்லில் கூர்தீட்டப்பட்டுக் கூர் முனைகளைக் கொண்டிருந்தவையும், கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளைச் சிறகுகளாகக் கொண்டவையுமான {ஆறு} கணைகளால் பெரும் பலம் வாய்ந்த பீமசேனனைத் தாக்கினான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு, அந்தப் போரில் சினம் தூண்டப்பட்ட துரியோதனன், ஒன்பது {9} கணைகளால் பீமசேனனை மார்பில் அடித்தான். அப்போது, வலிய கரங்களையும், பெரும் பலத்தையும் கொண்டவனான பீமன் தனது அற்புதத் தேரில் ஏறி (தனது தேரோட்டியான) விசோகனிடம், "துணிவுமிக்கவர்களும், வலிமையானவர்களும், பெரும் தேர் வீரர்களுமான அந்தத் திருதராஷ்டிர மகன்கள் அனைவரும் என் மீது பெருங்கோபம் கொண்டு, என்னைப் போரில் கொல்ல விரும்புகின்றனர். இவர்கள் அனைவரையும் நான் உன் பார்வைக்கு எதிராகவே கொல்வேன் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! தேரோட்டி {விசோகா}, என் குதிரைகளைக் கவனத்துடன் வழிநடத்துவாயாக" என்றான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கூர்முனைக் கணைகளால் உமது மகனைத் {துரியோதனனைத்} துளைத்தான்.
மேலும் அவன் {பீமன்}, மூன்று கணைகளால் நந்தகனை நடு மார்பில் துளைத்தான். அப்போது ஆறு கணைகளால் வலிமைமிக்கப் பீமனைத் துளைத்த துரியோதனன், வேறு மூன்று கூரிய கணைகளால் விசோகனைத் துளைத்தான். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் நகைத்துக் கொண்டே வேறு மூன்று கூரிய கணைகளால் {பல்லங்களால்} பீமனின் பிரகாசமிக்க வில்லை அதன் கைப்பிடியருகே வெட்டினான்.
மனிதர்களில் காளையான அந்தப் பீமன், அம்மோதலில், வில்தரித்த உமது மகனின் {துரியோதனனின்} கூரிய கணைகளால் தனது தேரோட்டியான விசோகன் பீடிக்கப்பட்டதைக் கண்டு, தாங்கிக் கொள்ள முடியாமல், கோபத்தால் தூண்டப்பட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகனின் அழிவுக்காக மற்றொரு அற்புத வில்லை எடுத்தான். பெரும் கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {பீமன்} அற்புதச் சிறகுகளைப் படைத்த க்ஷுரப்ரம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட அம்பு} ஒன்றை எடுத்தான். அதைக் கொண்டு மன்னனின் {துரியோதனனின்} அற்புத வில்லை அறுத்தான் பீமன்.
பிறகு, அதிகபட்ச கோபத்தால் தூண்டப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, அந்த முறிந்த வில்லை ஒரு புறமாக வீசி, மற்றொரு கடினமான வில்லை விரைவாக எடுத்தான். மரணக் கோலைப் {காலமிருத்யுவைப்} போலச் சுடர்விட்ட அந்தப் பயங்கரக் கணையைக் குறிபார்த்த அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, பீமசேனனை நடு மார்பில் அடித்தான். அதனால் ஆழமாகத் துளைக்கப்பட்டு, பெரும் வலியை உணர்ந்த அவன் {பீமன்}, தனது தேரின் தட்டில் அமர்ந்தான். அப்படித் தனது தேர்த்தட்டில் அமர்ந்த அவன் {பீமன்} அப்படியே மயக்கமடைந்தான்.
அபிமன்யுவின் தலைமையில் இருந்த ஒப்பற்றவர்களும், பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் பீமன் இப்படித் துன்புறுவதைக் கண்டு, அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களானார்கள். பெரும் உறுதி கொண்ட அந்த வீரர்கள், உமது மகன் {துரியோதனன்} முடியின் மீது கடும் கணைகளை மழையாகப் பொழிந்தனர். அப்போது, தனது சுயநினைவை அடைந்தவனான வலிமைமிக்கப் பீமசேனன் முதலில் மூன்று [1] கணைகளாலும், பிறகு ஐந்து கணைகளாலும் துரியோதனனைத் துளைத்தான். மீண்டும், வலிமைமிக்க வில்லாளியான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தங்கச்சிறகுகளைக் கொண்ட இருபத்தைந்து {25} கணைகளால் சல்லியனைத் துளைத்தான். இப்படித் துளைக்கப்பட்ட சல்லியன் களத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டான்.
[1] pierced Duryodhana at first with those shafts and then with five. என்று கங்குலி சொல்கிறார். இங்கு those என்று சொல்லி இருப்பது three என்று இருக்க வேண்டும். பிற பதிப்புகளில் மூன்றும், ஐந்தும் என்றே சொல்லப்பட்டுள்ளது. அதனால் நாமும் அதை அச்சுப்பிழையையாகக் கருதி மூன்று என்றே ஏற்கிறோம்.
பிறகு, சேனாபதி, சுஷேணன், ஜலசந்தன் [2], சுலோசனன், உக்ரன், பீமரதன், பீமன், வீரபாகு, அலோலுபன், துர்முகன், துஷ்ப்ரதர்ஷன், விவித்சு, விகடன், சமன் என்கிற உமது பதினான்கு {14} மகன்கள் அந்தப் போரில் பீமசேனனுடன் மோதினார்கள். கண்கள் சிவக்க ஒன்று சேர்ந்து பீமசேனனுக்கு எதிராக விரைந்த அவர்கள் எண்ணற்ற கணைகளைப் பொழிந்து, அவனை {பீமனை} ஆழமாகத் துளைத்தனர். அப்போது, பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனும், வீரனுமான வலிமைமிக்கப் பீமசேனன், உமது மகன்களைக் கண்டு, சிறு விலங்குகளுக்கு மத்தியில் உள்ள ஓநாயைப் போல [3] கடைவாயை நக்கிக் கொண்டு, கருடனைப் போல அவர்கள் மீது மூர்க்கமாக விழுந்தான்.
[2] இங்கு கொல்லப்படுவது, திருதராஷ்டிரன் மகனும், துரியோதனனின் தம்பியுமான ஜலசந்தன் ஆவான். இனி வரும் பகுதிகளில் குறிப்பிடப்படும் ஜலசந்தன் வேறொருவனாவான். அவன் {மற்றொரு ஜலசந்தன்} துரோண பர்வம் பகுதி 114ல் சாத்யகியால் கொல்லப்படுகிறான். அவன் பூரு குலத்தவன் என்றும் குரு வீரன் என்றும் துரோணபர்வம், கர்ண பர்வம் மற்றும் சல்லிய பர்வங்களில் நினைவுகூரப்படுகிறான்.
[3] இதே இடத்தில் வேறொரு பதிப்பில் பசுக்களுக்கு மத்தியில் செந்நாய்ப் பாய்வது போல என்ற உவமை சொல்லப்படுகிறது.
பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, க்ஷுரப்ரம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால் சேனாதிபதியின் தலையைக் கொய்தான்.
பிறகு, மகிழ்ச்சி நிறைந்த ஆன்மாவுடன் இருந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {பீமன்}, சிரித்துக் கொண்டே மூன்று கணைகளால் ஜலசந்தனைத் துளைத்து அவனை {ஜலசந்தனை} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.
அடுத்ததாகச் சுஷேணனை அடித்த அவன் {பீமன்}, அவனை {சுஷேணனைக்} காலனின் {மிருத்யுவின்} முன்னிலைக்கு அனுப்பி வைத்தான்.
பிறகு, நிலவைப் போன்று அழகானதும், தலைப்பாகையுடன் கூடியதும், காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான உக்கிரனின் தலையை ஒரு பல்லத்தினால் பூமியில் விழச் செய்தான்.
மேலும் அந்தப்போரில் பாண்டுவின் மகன் பீமன், எழுபது {70} கணைகளால், குதிரைகளோடும், கொடிமரத்தோடும், தேரோட்டியோடும் கூடிய வீரபாகுவைப் அடுத்த உலகத்திற்கு அனுப்பிவைத்தான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்தபடியே இருந்த பீமசேனன், உமது மகன்களான பீமன் மற்றும் பீமரதன் ஆகிய இரு சகோதரர்களும் யமனின் வசிப்பிடத்தை அடையும்படி செய்தான்.
பிறகு அந்தப் பெரும்போரில், துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு க்ஷுரப்ரத்தால் சுலோசனனையும் மரணவாசலுக்கு அனுப்பி வைத்தான்.
ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எஞ்சி இருந்த உமது மகன்கள் அனைவரும் அந்த ஒப்பற்ற வீரனால் {பீமனால்} தாக்கப்படும்போது, அந்தப் பீமசேனனின் ஆற்றலைக் கண்டும், அவன் {பீமன்} மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டும் போர்க்களத்தை விட்டு ஓடினார்கள்.
பிறகு, நோக்கிய சந்தனுவின் மகன் (பீஷ்மர்), (தனது படையின்) பெரும் தேர்வீரர்கள் அனைவரிடமும், "போரில் கோபத்தால் தூண்டப்பட்டவனும், கடுமையான வில்லாளியுமான அந்தப் பீமன், திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகன்களையும், ஒன்றுசேர்ந்திருக்கும் வீரர்களான பிற தேர்வீரர்களையும் அவர்கள் என்ன ஆயுத அறிவைப் பெற்றிருந்தாலும், என்ன வீரத்தைக் கொண்டிருந்தாலும் கொல்கிறான். எனவே, நீங்கள் அனைவரும் அவனை {பீமனைப்} பிடிப்பீர்களாக" என்றார்.
இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரப் படையின் துருப்புகள் அனைத்தும், கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் வலிமைமிக்கப் பீமசேனனை நோக்கி விரைந்தன" {என்றான் சஞ்சயன்}.
_________________________________________________________________________________
http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section117.html
_________________________________________________________________________________
துரியோதனாதிபதிகள் 100 பேரின் பெயர் பட்டியல்:
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிறப்பின் வரிசையில் அவர்களது பெயர்கள்,
{1} துரியோதனன், {2} யுயுத்சு, {3} துட்சாசனன், {4}துட்சகன், {5} துட்சலன், {6} ஜலசந்தன், {7} சமன், {8} சகன், {9} விந்தன், {10} அனுவிந்தன், {11} துர்த்தர்ஷன், {12} சுபாகு, {13} துஷ்பிரதர்ஷனன், {14} துர்மர்ஷனன், {15} துர்முகன், {16} துஷ்கர்ணன், {17} கர்ணன் {குந்தியின் மகனல்ல}, {18} விவிம்சதி, {19} விகர்ணன், {20} சலன், {21} சத்வன், {22} சுலோச்சனன், {23} சித்ரன், {24} உபசித்ரன், {25} சித்ராக்ஷன், {26} சாருசித்திரன், {27} சரசனன், {28} துர்மதன், {29} துர்விகஹன், {30} விவித்சு, {31} விகாடனானன், {32} ஊர்ணனாபன், {33} சுநாபன், {34} நந்தகன், {35} உபநந்தகன், {36} சித்ரபாணன், {37} சித்திரவர்மன், {38} சுவர்மன், {39} துர்விமோசனன், {40} அயோவாகு, {41} மஹாபாகு, {42} சித்திராங்கன், {43} சித்திரகுண்டாலன், {44} பீமவேகன், {45} பீமவளன், {46} பாலகி, {47} பாலவர்தனன், {48} உக்கிராயுதன், {49} பீமன் {குந்தியின் பீமன் அல்ல}, {50} கர்ணன் (2), {51} கனகயன், {52} திரிதாயுதன், {53} திரிதவர்மன், {54} திரிதாக்ஷத்ரன், {55} சோமகீத்ரி, {56} அனுதரன், {57} திரிதசந்தன், {58} ஜராசந்தன், {59} சத்யசந்தன், {60} சதன், {61} சுவகன், {62} உக்ரசிரவஸ், {63} உக்ரசேனன், {64} சேனானி, {65} துஷ்பாராஜெயா, {66} அபராஜிதன், {67} குண்டசாயின், {68} விசாலாக்ஷன், {69} துரதரன், {70} திரிதஹஸ்தன், {71} சுஹஸ்தன், {72} வாதவேகன், {73} சுவரசன், {74} அதியகேது, {75} வாவஷின், {76} நாகதத்தன், {77} அக்ரயாயின், {78} கவாசின், {79} கிராதனன், {80} குந்தன், {81} குந்தாதரன், {82} தனுர்தரன், வீரர்களான {83} உக்கிரன், {84} பீமரதன், {85} வீரபாகு, {86} அலோலூபன், {87} அபயன், {88} ரௌத்திரகர்மன், {89} திரிதரதன், {90} அனதிரிஷ்யா, {91} குந்தபேதின், {92} விரவி, {93} திரிகலோசன பிரமாதா, {94} பிரமாதி, {95} பலம் வாய்ந்த தீர்க்கரோமன், {96} தீர்க்கவாகு, {97} மஹாவாகு, {98} வியுதோரு, {99} கனகத்வஜன், {100} குந்தாசி, {101} விரஜசன் - See more at: http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section117.htmlஆங்கிலத்தில் | In English |