Thursday, December 17, 2015

கடோத்கசன் பகதத்தன் மோதல்! - பீஷ்ம பர்வம் பகுதி - 064ஆ

The encounter between Ghatotkacha and Bhagadatta! | Bhishma Parva - Section 064b | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 22)

பதிவின் சுருக்கம் : பீமனை மயக்கமடையச் செய்த பகதத்தன்; கோபமடைந்த கடோத்கசன் பகதத்தனைத் தாக்கியது; கடோத்கசன் மீது கொண்ட அச்சத்தால் கௌரவர்கள் நான்காம் நாள் போரான அன்றைய போரை நிறுத்தியது....

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்  தொடர்ந்தான்}, "மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட யானையின் மீதிருந்த பகதத்தன், பீமசேனன் எங்கே இருந்தானோ அந்த இடத்திற்குத் திடீரென விரைந்தான். அங்கே நடந்த மோதலில், அவன் {பகதத்தன்}, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல, சாணைக்கல்லில் கூர்த்தீட்டப்பட்ட தனது கணைகளைக் கொண்டு பீமனை மறைத்து கண்ணிற்குப் புலப்படாதவனாக்கினான்.


எனினும், தங்கள் கரங்களின் ஆற்றலையே நம்பியிருந்த (பாண்டவப் படையின்) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் (பகதத்தனின் கணைமாரியால்) பீமன் மறைக்கப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே, அனைத்துப் புறங்களிலும் பகதத்தனைச் சூழ்ந்து கொண்ட அவர்கள் {பாண்டவப் படையினர்}, அவன் {பகதத்தன்}  மீது கணைமாரியைப் பொழிந்தனர். மேலும் அவர்கள் அவனது {பகதத்தனின்} யானையின் மீதும் கணைமாரியைப் பொழிந்தனர்.

பிராக்ஜோதிஷதர்கள் ஆட்சியாளனின் {பகதத்தனின்} யானை, வலிமைமிக்கத் தேர்வீரர்களால் பொழியப்பட்ட, பல்வேறு வகைகளிலான கடுங்கணைகளின் காரணமாக, உடல் முழுவதும் இரத்தஞ்சொட்டி, சூரியக் கதிர்களால் கோர்க்கப்பட்ட மேகத்திரள்களைப் போல அந்தப் போர்க்களத்தைப் பார்ப்பதற்கு அழகாக்கியது. பகதத்தனால் தூண்டப்பட்டதும், மதநீர் பெருக்கும் தன்மை கொண்டதும், அந்தகனைப் போன்றதுமான அந்த யானை, தன் முந்தைய வேகத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் ஓடி, தனது நடையால் பூமியையே நடுங்கச் செய்தது. அவ்விலங்கின் கொடூர முகத்தைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரும் அதைத் தடுக்கமுடியாததாகக் கருதி உற்சாகமிழக்கத் தொடங்கினர்.

பிறகு, கோபத்தில் தூண்டப்பட்டவனும், மன்னர்களில் புலியுமான மன்னன் பகதத்தன், நேரான தனது கணையொன்றால் பீமசேனனை நடுமார்பில் அடித்தான். மன்னனுடைய {பகதத்தனுடைய} அந்தக் கணையால் ஆழமாகத் துளைக்கப்பட்ட பெரும் வில்லாளியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அவன் {பீமன்}, மயக்கத்தின் விளைவாகத் தன் உறுப்புகளின் உணர்வுகளை இழந்து, தனது கொடிமரத்தைப் பிடித்தபடி தனது தேரில் அமர்ந்தான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அச்சமடைந்ததையும், பீமசேனன் மயக்கமடைந்ததை கண்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான பகதத்தன் உரக்க முழக்கமிட்டான்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனை அந்த நிலையில் கண்டவனும், பயங்கரமானவனுமான ராட்சசன் கடோத்கசன், கோபத்தால் தூண்டப்பட்டு, அப்போதைக்கப்போது காட்சியில் இருந்து மறைந்தான். பயங்கர மாயையை உண்டாக்கி, மருண்டவர்களின் அச்சத்தை அதிகரித்துக் கொடும் வடிவத்தை ஏற்று ஒரு கணத்தில் மீண்டும் அவன் {கடோத்கஜன்} தோன்றினான். தன் மாய சக்திகளால் உண்டாக்கப்பட்ட ஐராவதத்தில் தானே பயணித்து, இன்னும் பிற திக்கஜங்களான அஞ்சனம், வாமனம், நல்லொளி பொருந்திய மகாபத்மம் ஆகியவற்றில் பிறரும் தன்னைப் பின்தொடரச் செய்தான். ராட்சசர்களால் செலுத்தப்பட்டவையும், பெரும் வடிவத்திலானவையுமான அந்த வலிமைமிக்க மூன்று யானைகளும் மும்மதங்களையும் பெருக்கியபடி, பெரும் வேகத்துடனும், ஆற்றலுடனும் இருந்தன.

அப்போது, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, பகதத்தனையும், அவனது யானையையும் கொல்ல விரும்பி கடோத்கஜன் அந்தப் போரில் தன் யானையைத் தூண்டினான். அப்போது, பெரும் பலம் மிக்க ராட்சர்களால் தூண்டப்பட்டவையும், உக்கிரமானவையும், நான்கு தந்தங்களைக் கொண்டவையுமான அந்த யானைகள், பகதத்தனின் யானை மீது அனைத்துப் புறங்களில் இருந்தும் பாய்ந்து, தங்கள் தந்தங்களால் அதைப் {பகதத்தனின் யானையைத்} துன்புறுத்தின. இப்படி அந்த யானைகளால் துன்புறுத்தப்பட்ட பகதத்தனின் யானை (ஏற்கனவே) அம்புகளால் அடிபட்டதாலும், பெரும் வலியை உணர்ந்து இந்திரனின் இடிக்கு ஒப்பாக உரக்கப் பிளிறியது.

முழக்கமிடும் அந்த யானையின் பயங்கரமான உரத்தக் கதறல்களைக் கேட்டுத் துரோணர், சுயோதனன் {துரியோதனன்} மற்றும் மன்னர்கள் அனைவரிடமும் பீஷ்மர், "வலிமைமிக்க வில்லாளியான பகதத்தன், கொடிய ஆன்மா கொண்ட ஹிடிம்பையின் மகனிடம் {கடோத்கசனிடம்} போரிட்டு, பெரும் துயரில் விழுந்திருக்கிறான். அந்த ராட்சசன் {கடோத்கசன்} பெரும் வடிவத்தைக் கொண்டவன். அந்த மன்னனும் {பகதத்தனும்} பெரும் கோபம் கொண்டவன். இவர்கள் இருவரும் போரிட்டால், ஒருவரை ஒருவர் கொன்று விடுவார்கள் என்பது நிச்சயம். மகிழ்ச்சி நிறைந்த பாண்டவர்களின் உரத்த ஒலிகள் கேட்கப்பட்டன. (மன்னன் பகதத்தனுடைய) யானையின் பயங்கரமான துயரக் கதறலும் கேட்டது.

நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. மன்னனை {பகதத்தனை} மீட்க நாம் அனைவரும் அங்கே செல்வோமாக. ஏனெனில் இப்போரில் அவன் {பகதத்தன்} பாதுகாக்கப்படாவிட்டால், விரைவில் அவன் தன் உயிரை விட்டுவிடுவான். பெரும் சக்தி கொண்ட வீரர்களே, நான் சொல்வது போல இப்போது நீங்கள் கேளுங்கள். பாவமற்றவர்களே, தாமதிக்காதீர்கள். கடுமையான அந்த மோதல் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உக்கிரமடைகிறது. பெரும் வீரம்படைத்தவனும், உயர் பிறப்பைக் கொண்டவனுமான அந்தப் படைத்தளபதி {பகதத்தன்} நமக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனாவான். மங்காப் புகழ் கொண்ட வீரர்களே, நம்மால் அவன் {பகதத்தன்} பாதுகாக்கப்பட வேண்டியவனாவான்" என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்டவர்களும், பரத்வாஜமகனின் {துரோணரின்} தலைமையிலானவர்களுமான மன்னர்கள் அனைவரும் பகதத்தனை மீட்க விரும்பி, அந்தப் பிராக்ஜோதிஷர்கள் ஆட்சியாளன் {பகதத்தன்} இருக்கும் இடத்திற்குப் பெரும் வேகத்துடன் சென்றனர். எதிரி முன்னேறுவதைக் கண்டவர்களும், யுதிஷ்டிரனின் தலைமையிலானவர்களுமான பாஞ்சாலர்களும், பாண்டவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பெரும் ஆற்றல் கொண்ட அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, முன்னேறி வரும் (எதிரியின்) அந்தப் படைப்பிரிவைக் கண்டு, இடியைப் போன்று ஆழமாக உரக்க கர்ஜித்தான்.

அவனது {கடோத்கஜனின்} முழக்கத்தைக் கேட்டும், போரிடும் யானைகளையும் கண்டும், சந்தனுவின் மகனான பீஷ்மர், மீண்டும் பரத்வாஜரின் மகனிடம் {துரோணரிடம்}, "அந்தத் தீய ஆன்மா கொண்ட ஹிடிம்பையின் மகனிடம் {கடோத்கசனிடம்} போரிட (இன்று) நான் விரும்பவில்லை. பெரும் பலமும் சக்தியும் கொண்ட அவன் {கடோத்கசன்}, தற்போது நன்கு ஆதரிக்கப்பட்டிருக்கிறான். வஜ்ரதாங்கியாலும் {இந்திரனாலும்} கூட இப்போது அவனை {கடோத்கசனை} வீழ்த்த முடியாது. இலக்கின் துல்லியத்திலும், தாக்குவதிலும் அவன் சிறந்தவன். நம்மைப் பொறுத்தவரை, (இன்று) நமது விலங்குகள் களைப்படைந்திருக்கின்றன. பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்களால் நாமும் பெரிதும் சிதைவடைந்திருக்கிறோம். வெற்றிப் பெற்றிருக்கும் பாண்டவர்களுடன் புதிய மோதலை நான் விரும்பவில்லை. எனவே, இன்றைக்கு நமது படையைத் திரும்ப அழைப்பது அறிவிக்கப்படட்டும். நாளை நாம் எதிரியுடன் போரிடலாம்" என்றார் {பீஷ்மர்}.

பாட்டனின் {பீஷ்மரின்} வார்த்தைகளைக் கேட்டவர்களும், கடோத்கசன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களுமான கௌரவர்கள், இரவின் தொடக்கத்தை ஒரு போலிக் காரணமாகக் கொண்டு, பாட்டன் {பீஷ்மர்} சொன்னதை மகிழ்ச்சியுடன் செய்தனர்.

கௌரவர்கள் பின்வாங்கியதும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பாண்டவர்கள், சங்குகள் மற்றும் குழல்களின் இசையுடன் கலந்து சிங்க முழக்கங்களிட்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்படியே குருக்கள் மற்றும் கடோத்கசனைத் தலைமையாகக் கொண்ட பாண்டவர்களுக்கும் இடையிலான அந்த நாளின் {4ஆம் நாளின்} போர் நடந்தது.

பாண்டவர்களால் வீழ்த்தப்பட்ட கௌரவர்கள் நாணிக் குறுகி, இரவு வந்ததும் தங்கள் கூடங்களுக்குச் சென்றனர். வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்கள், கணைகளால் சிதைந்த தங்கள் உடல்களுடன், போரின் விளைவால் நிறைந்து {மகிழ்ந்து}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனன் மற்றும் கடோத்கசனைத் தங்கள் தலைமையில் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் கொட்டகையை நோக்கிச் சென்றனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்களை {பீமனையும், கடோத்கசனையும்} கொண்டாடினார்கள். தூரிய இசையுடன் கலந்து பல்வேறு விதமான முழக்கங்களை இட்டனர். அந்த உயர் ஆன்ம வீரர்களின் முழக்கம் பூமியையே நடுங்கச் செய்து, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் இதயங்களையும் கலங்கடித்தது. இரவு வந்ததும், இப்படி எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் தங்கள் பாசறைகளை நோக்கிச் சென்றனர்.

தன் சகோதரர்களின் மரணத்தால் உற்சாகமிழந்த மன்னன் துரியோதனன், துயர் மற்றும் கண்ணீரையும் மேலிட்ட சிந்தனையில் சில மணிநேரத்தைக் கழித்தான். பிறகு, (படை அறிவியலின்) விதிகளின் படி தன் பாசறைக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அவன் {துரியோதனன்}, தன் தம்பிகளின் {தம்பிகளின் மரணத்தின்} நிமித்தமான சோகத்தினால் பீடிக்கப்பட்டும், துயரால் எரிக்கப்பட்டும், தியானத்தில் {ஆலோசனையில்} பல மணி நேரத்தைக் கழிக்கத் தொடங்கினான்" {என்றான் சஞ்சயன்}.

நான்காம் நாள் போர் முற்றிற்று 
 

ஆங்கிலத்தில் | In English