Wednesday, February 24, 2016

யுதிஷ்டிரனிடம் விரைந்த பீமன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 106

Bhima rushed to Yudhishthira! | Bhishma-Parva-Section-106 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 64)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரைப் பாதுகாக்கத் துச்சாசனனை ஏவிய துரியோதனன்; நகுலன், சகாதேவன், யுதிஷ்டிரன் ஆகியோரைச் சூழ்ந்து கொண்ட சகுனி; துரியோதனன் அனுப்பிய குதிரைகள்; குதிரைப்படையை முறியடித்த பாண்டவர்கள்; யுதிஷ்டிரனுக்கு எதிராகச் சல்லியனை ஏவிய துரியோதனன்; யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்கும், சல்லியனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; யுதிஷ்டிரனைக் காக்க விரைந்து வந்த பீமன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோடை காலத்தின் முடிவில் ஆகாயத்தில் மேகங்களால் சூழப்பட்ட சூரியனைப் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் பாண்டவர்களால் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்ட பீஷ்மர், கோபத்தால் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட துரியோதனன் துச்சாசனனிடம், “பெரும் வில்லாளியும், எதிரிகளைக் கொல்பவருமான இந்த வீரப் பீஷ்மர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துச்சாசனா}, துணிச்சல்மிக்கப் பாண்டவர்களால் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருக்கிறார். ஓ! வீரா {துச்சாசனா}, அந்த ஒப்பற்றவரைப் பாதுகாப்பதே உன் கடமை. நமது பாட்டனான பீஷ்மர், போரில் நம்மால் பாதுகாக்கப்பட்டால் பாண்டவர்களுடன் சேர்த்துப் பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வார். எனவே, பீஷ்மரைப் பாதுகாப்பதே நமது உயர்ந்த கடமை என நான் நினைக்கிறேன். ஏனெனில், நோன்புகளுடன் கூடியவரும், பெரும் வில்லாளியுமான இந்தப் பீஷ்மர் பதிலுக்கு நம்மையும் பாதுகாப்பார். எனவே, போரில் மிகக்கடினமான சாதனைகளை எப்போதும் அடையும் பாட்டனை {பீஷ்மரை} நம் துருப்புகள் அனைத்தாலும் சூழ்ந்து கொண்டு அவரைப் பாதுகாப்பாயாக” என்றான் {துரியோதனன்}.


இப்படித் துரியோதனனால் சொல்லப்பட்ட துச்சாசனன், ஒரு பெரும்படையால் அனைத்துப் புறங்களிலும் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு {போரில்} தன் நிலையை எடுத்துக் கொண்டான். கையில் பளபளக்கும் ஈட்டிகள், வாள்கள் மற்றும் வேல்களைக் கொண்டிருந்தவர்களும், செருக்குடையவர்களும், நன்கு உடுத்தியிருந்தவர்களும், கொடிகளைத் தாங்கும் பலமான உடல் கொண்டவர்களும், நன்கு பயிற்சிபெற்ற, போரில் திறம்பெற்ற சிறந்த காலாட்படை வீரர்களுடன் கலந்து நின்றவர்களுமான நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குதிரைவீரர்களுடன் கூடிய சுபலனின் மகன் சகுனி, மனிதர்களில் சிறந்தோரான நகுலன், சகாதேவன், பாண்டுவின் மகன் யுதிஷ்டிரன் ஆகியோரை அனைத்துப் புறங்களிலும் சூழ்ந்து கொண்டு, அவர்களைத் தடுக்கத் தொடங்கினான்.

பிறகு மன்னன் துரியோதனன், பாண்டவர்களைத் தடுப்பதற்காகத் துணிச்சல்மிக்க (வேறு) குதிரைவீரர்கள் பத்தாயிரம் {10000} பேரை அனுப்பினான். பெரும் மூர்க்கத்துடன் எதிரியை நோக்கிப் பல கருடர்களைப் போல இவை {துரியோதனன் அனுப்பிய குதிரைகள்} விரைந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைக்குளம்புகளால் தாக்கப்பட்ட பூமி நடுங்கி பேரொலியை எழுப்பியது. தீப்பிடித்த மலையில் உள்ள ஒரு பெரும் மூங்கில்காட்டின் ஒலியை ஒத்ததாக அவற்றின் குளம்புகளின் உரத்த சடசடப்பொலிகள் கேட்கப்பட்டன. களத்தில் இவை மோதிய போது, மேகம் போல அங்கே எழுந்த புழுதி, ஆகாயத்தை அடைந்து அந்தச் சூரியனையே மறைத்தது. ஒரு பெரிய தடாகத்தின் மார்பில் {பரப்பில்} அன்னப்பறவை கூட்டங்கள் திடீரென வேகமாக இறங்கி, அது கலக்கப்படுவது போல, மூர்க்கமான அந்தக் குதிரைகளின் விளைவால் அந்தப் பாண்டவப் படை கலக்கப்பட்டது. அவற்றின் கனைப்பொலிகளின் விளைவாக அங்கே வேறு எதையும் கேட்க முடியவில்லை.

பிறகு மன்னன் யுதிஷ்டிரனும், மாத்ரியின் மூலமான பாண்டுவின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, மழைக்காலத்தில் நீர் பெருகி, அலை நிரம்பியபடி ஆர்ப்பரிக்கும் கடலின் சக்தியைத் தாங்கிக் கொள்ளும் நிலத்தை {கரையைப்} போலப் போரில் அந்தக் குதிரைவீரர்களின் தாக்குதலை விரைவாகத் தடுத்தனர். பிறகு அந்த (மூன்று) தேர்வீரர்களும், ஓ! ஏகாதிபதி, தங்கள் நேரான கணைகளால் அந்தக் குதிரைவீரர்களின் தலைகளைத் துண்டித்தனர். உறுதிமிக்க அந்த வில்லாளிகளால் கொல்லப்பட்ட அவர்கள் {குதிரைவீரர்கள்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் யானைகளால் கொல்லப்படும் வலிமைமிக்க யானைகள் மலைக்குகைகளில் விழுவதைப் போலக் கீழே விழுந்தனர்.

உண்மையில், (பாண்டவப் படையின்) அந்த வீரர்கள் களம் முழுவதும் உலாவி கூர்மையான பராசங்கள் {முள்பதித்த கணைகள்} மற்றும் நேரான கணைகள் ஆகியவற்றால் அந்தக் குதிரைப்படை வீரர்களின் தலையை அறுத்தார்கள். வாள்களால் தாக்கப்பட்ட அந்தக் குதிரைவீரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நெடும் மரங்கள் தங்கள் கனிகளை உதிர்ப்பதைப் போலத் தங்கள் தலைகளை உதிர்த்து துன்புற்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓட்டுநர்களோடு கூடிய குதிரைகள் களமங்கும் உயிரற்று விழுந்ததோ, விழுவதோ காணப்பட்டது. (இப்படிக்) கொல்லப்பட்ட போது, பீதியால் பீடிக்கப்பட்ட குதிரைகள், சிங்கத்தைக் கண்டு தங்கள் உயிரைக் காக்க விரும்பும் சிறு விலங்குகளைப் போலத் தப்பி ஓடின. அந்தப் போரில் தங்கள் எதிரிகளை வீழ்த்திய பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் சங்குகளை ஊதி, தங்கள் பேரிகைகளையும் முழக்கினர்.

பிறகு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, துரியோதனன், தன் துருப்புகள் வீழ்த்தப்பட்டதைக் கண்டு துயரில் நிறைந்து, மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “ஓ! தலைவா {சல்லியரே}, அங்கே பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவனின்} துணையுடன், ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {சல்லியரே}, உமது பார்வைக்கு முன்பாகவே போரில் நமது துருப்புகளை முறியடிக்கிறான். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {சல்லியரே}, கடலைத் தடுக்கும் நிலத்தை {கரையைப்} போல அவனை {யுதிஷ்டிரனைத்} தடுப்பீராக. வல்லமை உள்ளவர் என்றும், உமது ஆற்றல் தடுக்கப்பட முடியாதது என்றும் பெரிய அளவில் நீர் நன்கு அறியப்பட்டிருக்கிறீர்” என்றான் {துரியோதனன்}.

உமது மகனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த வீரச் சல்லியன், யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்குத் தன் பெரும் தேர்ப்படையுடன் சென்றான். அதன்பேரில், அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, வலிமைமிக்க அலையைப் போன்ற சக்தியுடன் தன்னை நோக்கி மூர்க்கமாக விரையும் சல்லியனின் அந்தப் பெரும்படையைப் போரில் தடுக்க ஆரம்பித்தான். வலிமைமிக்கத் தேர்வீரனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போரில் பத்து {10} கணைகளால் மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} விரைவாகத் துளைத்தான். நகுலனும், சகாதேவனும் அவனை நேரான ஏழு {7} கணைகளால் தாக்கினர்.

பிறகு, அந்த மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் தாக்கினான். மீண்டும் அவன் {சல்லியன்}, கூர்முனை கொண்ட அறுபது {60} கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {சல்லியன்}, மாத்ரியின் மகன்கள் ஒவ்வொருவரையும் இரு {2} கணைகளால் தாக்கினான். அப்போது, எதிரிகளை வீழ்த்துபவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், மன்னன் {யுதிஷ்டிரன்} அந்தப் போரில், காலனின் கோரப்பற்களுக்கு இடையில் இருப்பதைப் போல, சல்லியனின் தேர் அடையத்தக்க தூரத்தில் {அருகிலேயே} இருப்பதைக் கண்டு, யுதிஷ்டிரனின் பக்கம் விரைவாகச் சென்றான் [1].

[1] வேறு ஒரு பதிப்பில் இந்த வரியைத் தாண்டி மேலும், “பீமன் வரும்போதே முழுமையாக உருக்கினால் செய்யப்பட்ட கூர்மையான நாராசங்களால் மத்ர மன்னனைத் தாக்கினான். பிறகு பீஷ்மர், துரோணர் இருவரும் பெரும்படையுடன் சூழ்ந்து கொண்டும், விரைவாகக் கணைகளைப் பொழிந்து கொண்டும் நீதிமானான யுதிஷ்டிரனை எதிர்த்து வந்தார்கள்” என்று இருக்கிறது.

பிறகு, சூரியன் உச்சிவானைக் கடந்து மூழ்கிக் கொண்டிருந்த போது, கடுமையானதும், பயங்கரமானதுமான ஒரு போர் அங்கே (களத்தின் அந்தப் பகுதியில்) தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English