Thursday, March 10, 2016

“அர்ஜுனன் பாதை தவிர்ப்பாயாக” என்ற துரோணர்! - பீஷ்ம பர்வம் பகுதி – 113

“Avoid Arjuna’s path” said Drona! | Bhishma-Parva-Section-113 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 71)

பதிவின் சுருக்கம் : துரோணர் கண்ட சகுனங்கள்; அர்ஜுனனின் பாதையில் குறுக்கிட வேண்டாம் என்றும், எனினும் பீஷ்மரைக் காக்க வேண்டும் என்றும் அஸ்வத்தாமனிடம் அறிவுறுத்திய துரோணர்; அர்ஜுனனின் பெருமையைச் சொன்ன துரோணர் அஸ்வத்தாமனைப் போரிடத் தூண்டியது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மதங்கொண்ட யானையின் ஆற்றலைக் கொண்டவரும், பெரும் வில்லாளியும், பெரும் வலிமை கொண்டவர்களுள் முதன்மையானவருமான வீரத் துரோணர், மதங்கொண்ட யானையையே தடுக்கவல்ல தனது பெரிய வில்லை எடுத்து, (தன் கைகளால்) அதை அசைத்தபடி {வில்லில் நாணிழுத்தபடி} பாண்டவப் படையணியினருக்கு மத்தியில் ஊடுருவி அவர்களைப் பீடித்துக் கொண்டிருந்தார்.


அனைத்து சகுனங்களையும் அறிந்தவரான வீரமிக்க அந்தப் போர்வீரர் {துரோணர்}, அனைத்துப் புறங்களிலும் சகுனங்களைக் கண்டு, பகையணிகளை எரித்துக் கொண்டிருந்த தன் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! மகனே {அஸ்வத்தாமா}, போரில் பீஷ்மரைக் கொல்ல விரும்பும் வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, போரில் தன் முழு வலிமையாலும் முயலப் போகும் அந்த நாள் இதுவே {இந்நாளே}.

என் கணைகள் (அம்பறாத்தூணியில் இருந்து, தாமாகவே) வெளியே வருகின்றன. என் வில் கொட்டாவி விடுவதாகத் தெரிகிறது [1]. எனது ஆயுதம் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லை [2], மேலும் என் இதயமும் உற்சாகமற்றிருக்கிறது. விலங்குகளும், பறவைகளும் அச்சம் நிறைந்து இடைவிடாமல் கதறுகின்றன. பாரதத் துருப்புகளின் பாதங்களுக்குக் கீழே கழுகுகள் மறைவதாகத் தெரிகிறது [3]. சூரியனும் தன் நிறத்தை இழந்தவனாகத் தெரிகிறான். திசைகள் அனைத்தும் எரிந்து கொண்டிருக்கின்றன. பூமி அலறுவதாகவும், அஞ்சுவதாகவும் தெரிந்து எங்கும் நடுங்குகிறது. கங்கங்கள் {ஒரு வகைக் கழுகு}, கழுகுகள், நாரைகள் ஆகியன அடிக்கடி அலறுகின்றன. மங்கலமற்ற கடும் ஊளைகளை இடும் நரிகள் பெரும் ஆபத்தை முன்னறிவிக்கின்றன. சூரிய வட்டிலின் மத்தியில் இருந்து பெரும் எரி கோள்கள் விழுவதாகத் தெரிகிறது. பரிகம் என்றழைக்கப்படும் நட்சத்திரக்கூட்டம் சூரியனைச் சுற்றி உடலற்ற வடிவில் தோன்றுகிறது. சந்திர சூரிய வட்டில்கள், க்ஷத்திரியர்களின் உடல்கள் சிதைவடையப் போவதை முன்னறிவிக்கும் வகையில் பயங்கரத்தை அடைந்திருக்கின்றன [4]. குரு மன்னனின் கோவில்களில் உள்ள அவனது சிலைகள் [5] நடுங்கவும், சிரிக்கவும், நடனமாடவும், அழவும் செய்கின்றன. சிறப்பு வாய்ந்த சந்திரன் தன் கொம்புகள் கீழ் நோக்கியவாறு எழுகிறான் [6]. குரு படையைச் சேர்ந்த மன்னர்கள் அனைவரின் உடல்களில் கவசங்கள் இருந்தாலும், அவை ஒளியிழந்து மங்கியிருப்பதாகத் தெரிகிறது,

பாஞ்சஜன்யத்தின் உரத்த சங்கொலியும், காண்டீவத்தின் நாணொலியும் இரு படைகளின் புறங்கள் அனைத்திலும் கேட்கப்படுகின்றன.

[1] என் கணைகள் மேல் நோக்குகின்றன என்று வேறொரு பதிப்பில் காணக்கிடைக்கிறது. என் வில் துடிப்பது போல் இருக்கிறது.

[2] “அஸ்திரங்கள் நினைவுக்குவரவில்லை” என்றும் கொள்ளலாம் என வேறொரு பதிப்பில் காணக்கிடைக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பில், “வில்லின் நாணில் என் ஆயுதங்களை நான் பொருத்தும்போது, அவை விழுகின்றன” என்று துரோணர் சொல்கிறார்.

[3] அதாவது, தாழப் பறக்கின்றன. மன்மத நாத தத்தரின் பதிப்பில், “பாரதர்களின் வலிமைமிக்கப் படையின் மேல் கழுகுகள் பாய்ந்து விழுகின்றன” என்று இருக்கிறது.

[4] வேறொரு பதிப்பில், “பயங்கரமான பரிவேஷம், அரசர்களின் உடல்களுக்கு அழிவை உண்டாக்ககூடிய பயங்கர அச்சத்தைத் தெரிவிக்கும் வகையில் சந்திர சூரிய மண்டலங்களைச் சுற்றித் தோன்றியுள்ளது” என்று இருக்கிறது.

[5] மகாபாரதக் காலத்தில் கோவில்கள் இருந்தன என்பதற்கு மற்றொரு இந்த வாக்கியம் சான்றாகும். மேலும் மன்னர்களின் சிலைகள் கோவில்களில் இருந்தன என்பது இங்கே கூடுதல் தகவல். The idols of the Kuru king in his temples tremble and laugh and dance and weep. மேற்கண்ட வரி கங்குலியின் பதிப்பில் உள்ளது… வேறொரு பதிப்பில் “குரு மன்னனின் தேவாலயங்களில் உள்ள தேவதைகள் நடுங்குகின்றன; சிரிக்கின்றன; கூத்தாடுகின்றன; அழுகின்றன“ என்று இருக்கிறது. அங்கே தேவதைகளின் சிலைகள் என்று சொல்லப்பட்டுள்ளது. மன்மத நாத தத்தரின் பதிப்பில், “குரு மன்னனின் கோவில்களைப் புனிதமாக்கும் தேவர்களின் பிம்பங்கள் {படங்கள்} சிரிக்கவும், நடுங்கவும், கூத்தாடவும், அழுது புலம்பவும் செய்கின்றன” என்று இருக்கிறது. மூலத்தைச் சரி பார்க்க வேண்டும்.

[6] அதாவது, பிறையானது தலைகீழாயிருப்பது. வேறொரு பதிப்பில் கூடுதல் வரியாக, “ஒளிக்கிரகங்கள் துர்லட்சணங்களுடன் கூடிய சூரியனை இடமாகச் சுற்றுகின்றன” என்று இருக்கிறது. மன்மத நாத தத்தரின் பதிப்பில், மங்கலமற்ற சூரியனைத் தங்கள் இடப்பக்கமாகக் கொண்டு கோள்கள் சுழல்கின்றன” என்று இருக்கிறது.

அர்ஜுனன் தன் பெரும் ஆயுதங்களைச் சார்ந்து, பிற வீரர்களைத் தவிர்த்துப் பாட்டனை {பீஷ்மரை} நோக்கியே முன்னேறுவான் என்பதில் ஐயமில்லை. ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அஸ்வத்தாமா}, பீஷ்மருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடக்க இருக்கும் மோதலை நினைத்து, என் உடலின் நுண்துளைகள் சுருங்குகின்றன, என் இதயமும் சோர்வடைகிறது. பார்த்தன் {அர்ஜுனன்}, தன் முன்னே பாவ ஆன்மாவும், வஞ்சகம் அறிந்தவனுமான பாஞ்சால இளவரசனைக் {சிகண்டியைக்} கொண்டு பீஷ்மருடன் போரிடச் செல்கிறான்.

சிகண்டியைத் தான் கொல்லப் போவதில்லை என்று பீஷ்மர் முன்பே சொல்லியிருக்கிறார். ஏதோ சந்தர்ப்பவசத்தின் தொடர்ச்சியாக அவன் {சிகண்டி} ஆணாக ஆனாலும், படைப்பாளனால் முன்பு அவன் பெண்ணாகப் படைக்கப்பட்டவனாவான். அந்த வலிமைமிக்க யக்ஞசேனன் {துருபதன்} மகனேகூட {சிகண்டியேகூட} (தன்னளவிலேயே) மங்கலமற்ற சகுனமே {அவன் அமங்கலஸ்வரூபியாவான்}. கடலுக்குச் செல்பவளின் மகன் {கங்கையின் மகன் பீஷ்மர்}, தன்னளவில் மங்கலமற்ற அவனைத் {சிகண்டியைத்} தாக்க மாட்டார்.

கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், முதிர்ந்தவரான குரு பாட்டனின் {பீஷ்மரின்} மீது பாயப் போகிறான் என்பதை நினைத்தே என் இதயம் அதீத சோர்வை அடைகிறது. யுதிஷ்டிரனின் கோபம், போரில் பீஷ்மர் அர்ஜுனனுக்கிடையிலான மோதல், இது போன்ற (ஆயுதங்களை ஏவும்) என்னுடைய முயற்சி – ஆகிய இவை (மூன்றும்), உயிரினங்களுக்குப் பெரும் தீங்கை விளைவிப்பன {அமங்கலகரமானவை} என்பது நிச்சயம்.

பெரும் சக்தியைக் கொண்ட அர்ஜுனன், பலமிக்கவனாகவும், துணிச்சலைக் கொண்டவனாகவும், ஆயுதங்களை நன்கு அறிந்தவனாகவும், பெரும் செயல்வேகத்துடன் கூடிய வீரத்தைக் கொண்டவனாகவும் இருக்கிறான். வெகுதூரத்தில் இருந்தே தன் கணைகளால் இலக்கைத் தாக்க வல்லவனும், பலமாக அவற்றை ஏவவல்லவனுமான அவன் {அர்ஜுனன்}, அதையும் தவிர, சகுனங்களை நன்கு அறிந்தவனாகவும் இருக்கிறான். பெரும் வலிமையும், புத்திக்கூர்மையும், களைப்பில்லா தன்மையும் கொண்ட அந்த வீரர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவனாவான். பயங்கர ஆயுதங்களைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, போரில் எப்போதும் வெற்றிகரமானவன் ஆவான்.

ஓ! கடும் நோன்புகளைக் கொண்டவனே {அஸ்வத்தாமா}, அவனது {அர்ஜுனனின்} பாதையைத் தவிர்த்துவிட்டு [7], (பீஷ்மரின் வெற்றிக்காகப்) போருக்குச் செல்வாயாக. இன்று இந்தப் பயங்கரப் போரில் பெரும் படுகொலைகளை நீ காண்பாய். துணிவுமிக்க வீரர்களின் தங்கதால் அலங்கரிக்கப்பட்ட, விலையுயர்ந்த, அழகிய கவசங்கள் நேரான கணைகளால் துளைக்கப்படும். கொடிமரங்களின் நுனிகள், தோமரங்கள், விற்கள், கூர்முனை கொண்ட பளபளப்பான வேல்கள், தங்கத்தால் பிரகாசிக்கும் ஈட்டிகள், யானைகளின் முதுகில் உள்ள கொடிமரங்கள் ஆகியன அனைத்தும் கோபம் கொண்ட கிரீடியால் {அர்ஜுனனால்} வெட்டப்படும்.

[7] வேறொரு பதிப்பில் இந்த வரி, “போரில் எதிரிகளை எதிர்த்துச் செல்பவனும், பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டவனுமான அர்ஜுனனைக் கண்டு, அவன் வரும் வழியை விட்டு விலகி, நீ போருக்குச் செல்வாயாக” என்று இருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பில், “அவனது {அர்ஜுனனின்} பாதையைத் தவிர்த்துவிட்டு, ஒழுங்கான நோன்புகள் கொண்ட பீஷ்மரிடம் செல்வாயாக” என்று இருக்கிறது.

ஓ! மகனே {அஸ்வத்தாமா}, சார்ந்து வாழ்பவர்கள் {வேலைக்காரர்கள்}, தங்கள் உயிர்களைக் கவனித்துக் {காப்பாற்றிக்} கொள்ள வேண்டிய நேரம் இதுவல்ல. சொர்க்கத்தை முன்னிட்டுக் கொண்டு, புகழுக்காகவும், வெற்றிக்காகவும் போரிடச் செல்வாயாக. அங்கே, குரங்குக் கொடியோன் (அர்ஜுனன்), தேர்கள், யானைகள், குதிரைகள் எனும் நீர்ச்சுழல்களைக் கொண்டும், கடப்பதற்குக் கடினமானதுமான போரெனும் பயங்கர ஆற்றைத் தன் தேரில் கடக்கிறான்.

தனஞ்சயன் {அர்ஜுனன்}, வலிமைமிக்கப் பீமசேனன், பாண்டுவின் மூலமான மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரைத் தங்கள் தம்பிகளாகவும், விருஷ்ணி குலத்தின் வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தன் பாதுகாவலனாகவும் கொண்ட யுதிஷ்டிரனிடம் மட்டுமே அந்தணர்களுக்கு மரியாதை, தற்புலனடக்கம் {தன்னடக்கம்}, ஈகை, தவம், உன்னத நடத்தை ஆகியன காணப்படுகின்றன. தவத்தின் தழல்களால் தூய்மையான உடலைக் கொண்ட யுதிஷ்டிரனுடைய துன்பத்தில் பிறந்த {யுதிஷ்டிரனின்} கோபம், தீய ஆன்மா கொண்டவனான திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} மேல் திருப்பட்டு, இந்தப் பாரதப் படையை எரித்து வருகிறது.

அதோ, வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தன் பாதுகாவலனாகக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, (தான் வரும்போதே) இந்தத் தார்தராஷ்டிரப் படையைத் தடுத்துக் கொண்டே அங்கே வருகிறான். முகடுகளைப் போன்ற அலைகளைக் கொண்ட பரந்த கடலைக் கலங்கடிக்கும் பெரிய திமிங்கலம் ஒன்றைப் போல இந்தப் படையைக் கிரீடி {அர்ஜுனன்} கலக்குவதைப் பார். படைக்கு முன்பாகக் குசுகுசுப்பும், துன்பம் மற்றும் சோர்வின் கூச்சல்களும் கேட்கப்படுகின்றன.

போ, பாஞ்சால மன்னனின் வாரிசுடன் {திருஷ்டத்யும்னனுடன்} [8] மோதுவாயாக. என்னைப் பொறுத்தவரை, நான் யுதிஷ்டிரனை எதிர்த்துச் செல்வேன். மன்னன் யுதிஷ்டிரனுடைய பலமிக்க வியூகத்தின் இதயப்பகுதியை அடைவது கடினமாகும். அதிரதர்களால் அனைத்துப் புறங்களிலும் காக்கப்படும் அது {அந்த வியூகம்}, கடலின் உட்பகுதியைப் போன்று அடைவதற்குக் கடினமானதாகும். சாத்யகி, அபிமன்யு, திருஷ்டத்யும்னன், விருகோதரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரே {ஆகிய அந்த அதிரதர்களே}, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரனைக் காக்கிறார்கள்.

[8] முன்பு அர்ஜுனனுடன் மோதாதே என்பது போலத் துரோணர் சொல்கிறார். பின்பு அர்ஜுனனுக்கு முன்பு இருக்கும் சிகண்டியுடன் மோது என்கிறார். அஃதாவது இங்கே குறிப்பிடப்படுபவன் சிகண்டியாக இருந்தால், அஸ்வத்தாமனிடம் துரோணர், சிகண்டியைத் தனியாகப் பிரித்துச் சென்று போரிடச் சொல்கிறார் என நினைக்கிறேன். இது திருஷ்டத்யும்னனாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழலாம். ஆனால் கங்குலி the heir of the Panchala king என்று சொல்வதால் இது சிகண்டியாகவே இருக்க வேண்டும். திருஷ்டத்யும்னன், சிகண்டியை விட இளையவனாவான். பின்வரும் ஒரு பத்தியில் அடைப்புக்குறிக்குள் இது சிகண்டி என்றே சொல்கிறார் கங்குலி.

இந்திரனின் தம்பியைப் போன்று கருமையானவனும், சால மரத்தைப் போன்று உயரமாக எழுந்தவனுமான அபிமன்யு, இரண்டாவது பல்குனனை {அர்ஜுனனைப்} போல (பாண்டவப்) படையின் தலைமையில் நின்று முன்னேறிச் செல்வதைப் பார். உன் வலிமைமிக்க ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, உன் பெரிய வில்லைக் கையில் கொண்டு, பிருஷதனின் அரச மகனையும் (சிகண்டியையும்) {திருஷ்டத்யும்னனையும்} [9], விருகோதரனையும் {பீமனையும்} எதிர்த்துச் செல்வாயாக. தன் அன்புக்குரிய மகன் பல வருடங்கள் வாழ வேண்டும் என்று விரும்பாதவன் எவன் இருக்கிறான். எனினும், க்ஷத்திரியக் கடமைகளை என் முன் கொண்டே, நான் உன்னை (இந்தப் பணியில்) ஈடுபடுத்துகிறேன் [10].

[9] முன்பு துரோணர் சொன்னதும் சிகண்டியைத் தான் என்பதையே இங்குக் கங்குலி உறுதி செய்கிறார். ஆனால் வேறொரு பதிப்பில் இங்கு “பெரிய வில்லை எடுத்துக் கொண்டு, நல்ல ஆயுதங்களைப் பூட்டி திருஷ்டத்யும்னனையும், மன்னனையும், விருகோதரனையும் எதிர்த்து நீ போரிடுவாயாக” என்று இருக்கிறது.

[10] இந்த வரி துரோணர் சிகண்டியையே சொல்லியிருப்பார் எனவே எண்ணத்தூண்டுகிறது. பின்வரும் பகுதிகளில் உள்ள போர்க்கள நிலவரங்களும், துரோணர் சிகண்டியையே சொல்லியிருப்பார் என்றே உறுதிப்படுத்துகின்றன.

அதே போல, பீஷ்மரும், இந்தப் போரில், அதோ வலிமைமிக்கப் பாண்டவப் படையை எரித்துக் கொண்டிருக்கிறார். ஓ! மகனே {அஸ்வத்தாமா}, போரில் அவர் {பீஷ்மர்}, யமனுக்கோ, வருணனுக்கோ இணையானவர் ஆவார்” என்றார் {துரோணர்}” {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English