Friday, March 11, 2016

பீமசேனனின் ஆற்றல்! - பீஷ்ம பர்வம் பகுதி – 114

The prowess of Bhimasena! | Bhishma-Parva-Section-114 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 72)

பதிவின் சுருக்கம் : பீமசேனனுடன் போரிட்ட பத்து கௌரவ வீரர்கள்; கிருபரின் வில்லை அறுத்த பீமன்; ஜெயத்ரதனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று, அவனுடைய வில்லையும் அறுத்த பீமன்; பீமனின் தேரோட்டியான விசோகனைத் துளைத்த சல்லியன்; கிருதவர்மனனின் வில்லை அறுத்த பீமன்; பல வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமனைக் கண்ட அர்ஜுனன் அந்த இடத்திற்கு வந்தது; வெற்றியில் நம்பிக்கை இழந்த கௌரவர்கள்; பீமனையும் அர்ஜுனனையும் கொல்ல சுசர்மனை ஏவிய துரியோதனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயரான்ம துரோணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பகதத்தன், கிருபர், சல்லியன், கிருதவர்மன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், சித்திரசேனன், விகர்ணன், துர்மர்ஷணன் ஆகிய உமது படையின் பத்து வீரர்களும், இன்னும் பிறரும், பீஷ்மருக்கான போரில் உயர்ந்த புகழை வெல்ல விரும்பி, பல நாடுகளைச் சேர்ந்த பெரும் படைகளுடன் பீமசேனனுடன் போரிட்டனர்.


சல்லியன் ஒன்பது {10} கணைகளால் பீமனைத் தாக்கினான், கிருதவர்மன் மூன்றாலும் {3}, கிருபர் ஒன்பதாலும் {9} அவனைத் தாக்கினர். சித்திரசேனன், விகர்ணன் மற்றும் பகதத்தன் ஆகியோர் ஒவ்வொருவரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பத்து {10x3} கணைகளால் அவனைத் தாக்கினர். சிந்துக்களின் ஆட்சியாளன் (ஜெயத்ரதன்}, மூன்றால் {3 கணைகளால்} அவனைத் தாக்கினான், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் ஒவ்வொருவரும் ஐந்து {5x2} கணைகளாலும் அவனைத் தாக்கினர். துரியோதனன் இருபது {20} கூரிய கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைத்} தாக்கினான்.

பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலக மனிதர்களில் முதன்மையானவர்களும், தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த மன்னர்கள் ஒவ்வொருவரையும், ஒருவர் பின் ஒருவராகப் பதிலுக்குத் தாக்கினான். பகை வீரர்களைக் கொல்பவனான அந்தத் துணிச்சல்மிக்கப் பாண்டவன் {பீமன்}, சல்லியனை ஏழு {7} கணைகளாலும், கிருதவர்மனை எட்டாலும் {8 கணைகளாலும்} துளைத்தான். மேலும் அவன் {பீமன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிருபரின் கணை பொருத்தப்பட்ட வில்லை நடுவில் இரண்டாகப் பிளந்தான். அவன் {பீமன்}, இப்படி அவரது {கிருபரின்} வில்லை வெட்டிய பிறகு, மீண்டும் ஏழு {7} கணைகளால் கிருபரைத் துளைத்தான். விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் ஒவ்வொருவரையும் மூன்று {3} கணைகளால் அவன் {பீமன்} தாக்கினான். துர்மர்ஷணனை இருபது {20} கணைகளாலும், சித்திரசேனனை ஐந்தாலும் {5}, விகர்ணனைப் பத்தாலும் {10}, ஜெயத்ரதனை ஐந்தாலும் {5} அவன் {பீமன்} துளைத்தான். மேலும் மூன்று {3} கணைகளால் சிந்துக்களின் ஆட்சியாளனைத் {ஜெயத்ரதனைத்} தாக்கிய அவன் {பீமன்}, மகிழ்ச்சியால் நிறைந்து உரக்கக் கூச்சலிட்டான்.

பிறகு, தேர்வீரர்களில் முதன்மையானவரான கௌதமர் {கிருபர்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பத்து {10} கூரிய கணைகளால் கோபத்துடன் பீமனைத் துளைத்தார். அங்குசத்தால் துளைக்கப்பட்ட பெரும் யானையைப் போல அந்தப் பத்து கணைகளால் துளைக்கப்பட்ட அந்த வீர பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து அந்தப் போரில் பல கணைகளால் கௌதமரைத் {கிருபரைத்} தாக்கினான்.

யுக முடிவில் தோன்றும் யமனின் காந்தியைக் கொண்ட பீமசேனன், மூன்று {3} கணைகளால் சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} குதிரைகளையும், அவனது தேரோட்டியையும் காலனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். அதன் பேரில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (அதாவது, ஜெயத்ரதன்), குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து விரைவாகக் கீழே குதித்து, கூர்முனை கணைகள் பலவற்றை அந்தப் போரில் பீமசேனன் மேல் ஏவினான். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இரண்டு பல்லங்களைக் கொண்டு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் உயர் ஆன்ம மன்னனின் {ஜெயத்ரதனின்} வில்லை நடுவில் வெட்டினான். தன் வில் அறுபட்டு, தேரிழந்து, தன் குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்ட ஜெயத்ரதன், பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் தேரில் விரைவாக ஏறிக் கொண்டான்.

உண்மையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரையும் துளைத்து, {அவர்களை} முன்னேற விடாமல் தடுத்து, படைகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சிந்துக்கள் ஆட்சியாளனின் {ஜெயத்ரதனின்} தேரை இழக்கச் செய்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அந்தப் போரில் மிக அற்புதமான சாதனையை அடைந்தான்.

பீமசேனன் வெளிப்படுத்திய ஆற்றலைப் பொறுக்க முடியாத சல்லியன், அவனிடம் {பீமனிடம்}, “நில், நில்” என்று சொல்லி, கொல்லர்களின் கைகளால் நன்கு பளபளப்பாக்கப்பட்ட கூரிய கணைகள் பலவற்றைக் குறிபார்த்து, அவற்றைக் கொண்டு அந்தப் போரில் பீமனைத் துளைத்தான். கிருபர், கிருதவர்மன், வீர பகதத்தன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், சித்திரசேனன், துர்மர்ஷணன், விகர்ணன், சிந்துக்களின் வீர ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் அனைவரும் அந்தப் போரில் சல்லியனுக்காகப் பீமனை விரைவாகத் துளைத்தனர்.

பீமன் பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து {5} கணைகளால் துளைத்தான். அவன் {பீமன்}, சல்லியனை எழுபது {70} கணைகளாலும், பிறகு மறுபடியும் பத்தாலும் {10} துளைத்தான். சல்லியன் அவனை {பீமனை} ஒன்பது {9} கணைகளாலும், பிறகு மறுபடியும் ஐந்தாலும் {5 கணைகளாலும்} துளைத்தான். மேலும் அவன் {சல்லியன்}, பல்லம் ஒன்றினால், பீமசேனனின் தேரோட்டியுடைய உயிர் நிலைகளில் ஆழமாகத் துளைத்தான். தன் தேரோட்டியான விசோகன் ஆழமாகத் துளைக்கப்பட்டதைக் கண்ட வீரப் பீமசேனன், மத்ரர்கள் ஆட்சியாளனின் {சல்லியனின்} மார்பிலும் கரங்களிலும் மூன்று {3} கணைகளை ஏவினான்.

பெரும் வில்லாளிகளான பிறரைப் பொறுத்தவரை, அவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று நேரான கணைகளால் அந்தப் போரில் துளைத்த அவன் {பீமன்}, பிறகு சிங்கம் போல உரக்க முழங்கினான். பிறகு, உறுதியுடன் முயன்ற அந்தப் பெரும் வில்லாளிகள் ஒவ்வொருவரும், போரில் திறம் பெற்ற அந்தப் பாண்டு மகனின் {பீமனின்} உயிர் நிலைகளில் மூன்று {மும்மூன்று} கணைகளால் துளைத்தனர். வலிமைமிக்க வில்லாளியான அந்தப் பீமசேனன், ஆழத் துளைக்கப்பட்டாலும், மேகங்கள் பொழியும் மழைத்தாரைகளில் நனைந்த மலையைப் போல (உறுதியாக நின்றானேயன்றி) நடுங்கவில்லை.

பிறகு, பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரனாகக் கொண்டாடப்படும் அந்த வீரன் {பீமன்}, கோபத்தால் நிறைந்து, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} மூன்று கணைகளால் துளைத்தான். பிறகு அவன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நூறு {100} கணைகளால் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனைத் {பகதத்தனைத்} துளைத்தான். பெரும் புகழ்பெற்ற அவன் {பீமன்}, பல கணைகளால் கிருபரைத் துளைத்து, பிறகு தன் பெரும் கர வேகத்தை வெளிப்படுத்தி, கூர்முனை கொண்ட க்ஷுரப்ரத்தால், உயர் ஆன்ம கிருதவர்மனின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்தான். பிறகு, எதிரிகளை எரிப்பவனான அந்தக் கிருதவர்மன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, நாராசம் ஒன்றினால் விருகோதரனின் {பீமனின்} புருவங்களுக்கு இடையில் தாக்கினான்.

எனினும், பீமன், அந்தப் போரில் முழுக்க இரும்பாலான ஒன்பது {9} கணைகளால் சல்லியனையும், பகதத்தனை மூன்றாலும் {3}, கிருதவர்மனை எட்டாலும் {8} துளைத்து, கௌதமரைத் {கிருபரைத்} தலைமையாகக் கொண்ட பிறர் ஒவ்வொருவரையும் இரண்டு {2x2 இரண்டு இரண்டு} கணைகளால் துளைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்களும், கூர்முனை கணைகளால் பதிலுக்கு அவனைத் {பீமனைத்} துளைத்தனர். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களின் அனைத்து வகையிலான ஆயுதங்களால் பீடிக்கப்பட்டாலும், அவை அனைத்தையும் துரும்பாகக் கருதிய அவன் {பீமன்}, களத்தில் கவலையேதும் இல்லாமல் திரிந்து கொண்டிருந்தான். தேர்வீரர்களின் முதன்மையான அவர்களோ (மறுபுறம்), பெரும் பொறுமையுடன், பீமன் மீது நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கூர்முனை கணைகளை ஏவினர்.

பிறகு, வலிமைமிக்க வீர பகதத்தன், அந்தப் போரில், கடும் வேகம் கொண்டதும், தங்கப்பிடி கொண்டதுமான ஈட்டி {சக்தி} ஒன்றை அவன் {பீமன்} மீது வீசினான். வலிய கரங்களைக் கொண்ட சிந்துமன்னன் {ஜெயத்ரதன்} அவன் {பீமன்} மீது ஒரு வேலையும், ஒரு கோடரியையும் எறிந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} மீது சதக்னி ஒன்றைக் கிருபரும், கணை ஒன்றைச் சல்லியனும் ஏவினர். பெரும் வில்லாளிகளான பிறர் ஒவ்வொருவரும், அவன் {பீமன்} மீது, பெரும் சக்தியுள்ள ஐந்து {ஐந்து ஐந்து} கணைகளை ஏவினர்.

அந்த வாயு தேவனின் மகன் {பீமன்}, கூரிய க்ஷுரப்ரம் ஒன்றால் {ஜெயத்ரதனின்} அந்த வேலை இரண்டாக அறுத்தான். பிறகு அவன் {பீமன்}, ஏதோ எள்ளுச்செடியின் தண்டை வெட்டுவது போல மூன்று கணைகளால் அந்தக் கோடரியையும் வெட்டினான். கங்கப் பறவையின் இறகுகளால் அமைந்த சிறகைக் கொண்ட ஐந்து {5} கணைகளால், {கிருபரின்} அந்தச் சதக்னியை துண்டுகளாக வெட்டினான். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {பீமன்}, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஏவிய கணையை வெட்டி, அந்தப் போரில் பகதத்தனால் ஏவப்பட்ட ஈட்டியையும் {சக்தியையும்} பலமாக வெட்டினான். பிற கணைகளைப் பொறுத்தவரை, போரில் தன் சாதனைகளால் பெருமை கொண்டவனான பீமசேனன், நேரான தன் கணைகளால் அவை ஒவ்வொன்றையும் மூன்று {மூன்று மூன்று} துண்டுகளாக வெட்டினான். மேலும் அவன் {பீமன்}, அந்தப் பெரும் வில்லாளிகள் ஒவ்வொருவரையும் மூன்று {மூன்று மூன்று} கணைகளால் தாக்கினான்.

அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்த போது, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் (பலரை எதிர்த்துப்) போரிட்டு, எதிரியைத் தாக்கிக் கொண்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பீமனைக் கண்டு அவ்விடத்திற்குத் தன் தேரில் வந்தான். பிறகு, உமது படையின் அந்த மனிதர்களில் காளையர், பாண்டுவின் இரண்டு உயர் ஆன்ம மகன்களையும் ஒன்றாகக் கண்டு, வெற்றிக்கான நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்தனர்.

பிறகு பீஷ்மரைக் கொல்ல விரும்பித் தன் முன்னே சிகண்டியை நிறுத்தி வந்த அந்த அர்ஜுனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமனை அணுகி, உமது படையின் கடும் போராளிகளான அந்தப் பத்து {10} பேர் மீதும் பாய்ந்தான். பிறகு அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, பீமனுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனுடன் போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரர்கள் அனைவரையும் துளைத்தான்.

பிறகு, மன்னன் துரியோதனன், அர்ஜுனன் மற்றும் பீமசேனன் ஆகிய இருவரின் அழிவுக்காகச் சுசர்மனிடம், “ஓ! சுசர்மா, பெரும் படையொன்றால் ஆதரிக்கப்பட்டு விரைந்து செல்வாயாக. தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் விருகோதரன் ஆகிய பாண்டுவின் மகன்கள் இருவரையும் கொல்வாயாக” என்று சொல்லித் தூண்டினான். பிரஸ்தாலம் என்றழைக்கப்படும் நாட்டை ஆள்பவனான அந்தத் திரிகர்த்த மன்னன் {சுசர்மன்}, அவனது {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு, பீமன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இரண்டு வில்லாளிகளுடன் போரிட விரைந்து, பல்லாயிரம் தேர்களால் அவர்கள் இருவரையும் {பீமன், அர்ஜுனனை} சூழ்ந்து கொண்டான். பிறகு அர்ஜுனனுக்கும், எதிரிக்கும் இடையில் கடும் போரொன்று தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English