Saturday, March 12, 2016

பீமார்ஜுனர்களின் ஆற்றல்! - பீஷ்ம பர்வம் பகுதி – 115

The prowess of Bhima and Arjuna! | Bhishma-Parva-Section-115 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 73)

பதிவின் சுருக்கம் : கௌரவப் படையைப் பீடித்த அர்ஜுனன்; அர்ஜுனனையும் பீமனையும் தங்கள் கணைகளால் துளைத்த கௌரவர்கள்; பீமார்ஜுனர்களை எதிர்த்த துரோணரும், ஜெயத்சேனனும்; ஜெயத்சேனனின் தேரோட்டியை வீழ்த்திய பீமன்; பீமனுக்கும் துரோணருக்கும் ஏற்பட்ட மோதல்; சுசர்மனின் துருப்புகளை அழித்த அர்ஜுனன்; போர் பீஷ்மரை மையமாகக் கொண்டு இயங்கியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனன், போரில் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியனைத் தன் நேரான கணைகளால் மறைத்தான். அவன் {அர்ஜுனன்}, சுசர்மன் மற்றும் கிருபர் ஆகியோர் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.

அந்தப் போரில், அதிரதனான அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன், சித்திரசேனன், விகர்ணன், கிருதவர்மன், துர்மர்ஷணன், அவந்தியின் இளவரசர்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவர் {விந்தன் மற்றும் அனுவிந்தன்} ஆகியோர் ஒவ்வொருவரையும் கங்க மற்றும் மயில் இறகுகளால் அமைந்த சிறகைக் கொண்ட மூன்று {மூன்று மூன்று} கணைகளால் தாக்கி உமது படையைப் பீடித்தான்.


சித்திரசேனனின் தேரில் இருந்த ஜெயத்ரதன், (பதிலுக்குப்) பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பிறகு, நேரத்தை இழக்காமல், பீமனையும் தன் கணைகளால் துளைத்தான். சல்லியன், தேர்வீரர்களில் முதன்மையான கிருபர் ஆகிய இருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல பல்வேறு வகையான கணைகளால் ஜிஷ்ணுவை {அர்ஜுனனைத்} துளைத்தனர். சித்திரசேனனின் தலைமையிலான உமது மகன்கள் ஒவ்வொருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அர்ஜுனனையும், பீமசேனனையும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஐந்து கூரிய கணைகளால் விரைவாகத் துளைத்தனர்.

எனினும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும் பாரதக் குலக் காளைகளுமான அந்தக் குந்தியின் மகன்கள் இருவரும் {பீமனும், அர்ஜுனனும்}, அந்தப் போரில் திரிகர்த்தர்களின் வலிமைமிக்கப் படையைப் பீடிக்கத் தொடங்கினர். ஒன்பது {9} கணைகளால் பார்த்தனைப் {அர்ஜுனனைப்} பதிலுக்குத் துளைத்த சுசர்மன், (பாண்டவர்களின்) அந்தப் பெரும்படையை அச்சுறுத்தும் வகையில் பெரும் கூச்சலிட்டான். வீரமிக்கத் தேர்வீரர்கள் பிறர், தங்கச் சிறகுகளைகளையும், கூர் முனைகளையும் கொண்ட நேராகச் செல்லும் கணைகள் பலவற்றால் பீமசேனனையும், தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} துளைத்தனர்.

எனினும், பாரதக் குலக்காளைகளும், பெரும் தேர்வீரர்களுமான அந்தக் குந்தியின் மகன்கள் இருவரும் {பீமனும், அர்ஜுனனும்}, இந்தத் தேர்வீரர்களுக்கு மத்தியில் மிக அழகாகத் தெரிந்தனர். பசு மந்தைகளுக்கு மத்தியில் உள்ள மூர்க்கமான சிங்கங்கள் இரண்டைப் போல, அவர்களுக்கு {எதிர்த்த கௌரவ வீரர்களுக்கு} மத்தியில் அவர்கள் {பீமனும், அர்ஜுனனும்}, விளையாடுவதைப் போலத் தெரிந்தது. அந்தப் போரில் துணிச்சல் மிக்க வீரர்கள் பலரின் விற்கள் மற்றும் கணைகளைப் பல்வேறு வழிகளில் வெட்டிய அந்த வீரர்கள் இருவரும் {பீமனும், அர்ஜுனனும்}, போராளிகளின் தலைகளை நூறு நூறாக வீழ்த்தினார்கள்.

எண்ணற்ற தேர்கள் நொறுக்கப்பட்டன, நூற்றுக்கணக்கான குதிரைகளும், பல யானைகளும் அவற்றைச் செலுத்துபவர்களுடன் சேர்த்துக் கொல்லப்பட்டு, அந்தப் பயங்கரப் போர்க்களத்தில் கீழே கிடந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், யானைப்பாகன்கள் ஆகியோர் உயிரிழந்து துடித்துக்கொண்டே நகர்வது களமெங்கும் காணப்பட்டது. கூட்டமாகக் கொல்லப்பட்ட யானைகள் மற்றும் காலாட்படையினர், உயிரிழந்த குதிரைகள், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்ட தேர்கள் ஆகியவற்றால் பூமி மறைக்கப்பட்டிருந்தது.

அனைத்து வீரர்களையும் தடுத்து, பெரும் படுகொலையை நிகழ்த்திய வலிமைமிக்க வீரனான அந்தப் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} நாங்கள் அங்கே கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது. {இருப்பினும்}, கிருபர், கிருதவர்மன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் போரைக் கைவிடவில்லை. பிறகு, பெரும் வில்லாளியான பீமனும், வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனனும், கௌரவர்களின் அந்தக் கடும் படையை அந்தப் போரில் முறியடிக்கத் தொடங்கினர்.

(அந்த {கௌரவப்} படையின்) மன்னர்கள் விரைவாகத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேர் மீது மயிலிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட லட்சக்கணக்கான எண்ணற்ற கணைகளை ஏவினர். எனினும், பார்த்தன் {அர்ஜுனன்}, தன் கணை மழையால் அந்தக் கணைகளைத் தடுத்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை யமலோகம் அனுப்பத் தொடங்கினான்.

பிறகு, அந்தப் போரில் விளையாடிக் கொண்டிருப்பவனைப் போல இருந்த பெரும் தேர்வீரனான சல்லியன், கோபத்தால் தூண்டப்பட்டு, நேரான சில பல்லங்களால் அர்ஜுனனின் மார்பைத் தாக்கினான். பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, ஐந்து {5} கணைகளின் மூலம் சல்லியனின் வில்லையும், தோலுறையையும் அறுத்து, கூர் முனை கொண்ட கணைகள் பலவற்றால் பின்னவனின் {சல்லியனின்} உயிர்நிலைகளை ஆழமாகத் துளைத்தான்.

பெரும் வலிமையைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, பிறகு, மூன்று கணைகளால் ஜிஷ்ணுவையும் {அர்ஜுனனையும்}, ஐந்தால் {5} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} மூர்க்கமாகத் தாக்கினான். மேலும் ஒன்பது கணைகளால் பீமசேனனின் கரங்களையும் மார்பையும் தாக்கினான்.

பிறகு, துரியோதனனின் உத்தரவுக்கிணங்க, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த மகதர்களின் ஆட்சியாளன் {ஜெயத்சேனன்} ஆகிய இருவரும், குரு மன்னனின் வலிமைமிக்கப் படையைப் படுகொலை செய்து கொண்டிருந்த இரு வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் பீமசேனன் ஆகியோர் இருக்கும் இடத்தை அடைந்தனர்.

பிறகு, (மகதர்களின் மன்னன்) ஜெயத்சேனன், ஓ! பாரதக்குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, போரில் பயங்கர ஆயுதங்களைத் தரித்திருக்கும் அந்தப் பீமனை எட்டு கூரிய கணைகளால் துளைத்தான். எனினும், பீமன் (பதிலுக்கு) பத்து கணைகளாலும், பிறகு மீண்டும் ஐந்தாலும் அவனைத் {ஜெயத்சேனனைத்} துளைத்தான். பிறகு அவன் {பீமன்}, பல்லம் ஒன்றினால் ஜெயத்சேனனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து விழச்செய்தான். கட்டுப்பாட்டை இழந்த (அவனது {ஜெயத்சேனனது} தேரின்) குதிரைகள் திசைகள் அனைத்திலும் மூர்க்கமாக ஓடி, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மகதர்களின் ஆட்சியாளனை {ஜெயத்சேனனை} (போரை விட்டு வெளியே) கொண்டு சென்றன.

அதே வேளையில், ஒரு திறப்பை {வாய்ப்பைக்} கண்ட துரோணர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தவளையின் வாய் வடிவத் தலைகளைக் கொண்ட எட்டு {8} கணைகளால் பீமசேனனைத் துளைத்தார். எனினும், போரில் எப்போதும் மகிழ்பவனான பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தந்தையைப் போல மதிக்கத்தக்க ஆசானை {துரோணரை} ஐந்து பல்லங்களாலும், பிறகு மேலும் அறுபது {60} கணைகளாலும் துளைத்தான்.

அர்ஜுனன், (முழுவதும்) இரும்பாலான எண்ணற்ற கணைகளால் சுசர்மனைத் துளைத்து, வலிமைமிக்க மேகத் திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அவனது {சுசர்மனின்} துருப்புகளை அழித்தான்.

பிறகு, பீஷ்மர், {கௌரவ} மன்னன் (அதாவது துரியோதனன்), கோசலர்களின் ஆட்சியாளன் பிருஹத்பலன் ஆகியோர் சினத்தால் தூண்டப்பட்டு, பீமசேனன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரிடம் முன்னேறிச் சென்றனர். இதன் காரணமாக, பாண்டவப் படையின் வீரமிக்கப் போர்வீரர்களும், பிருஷதன் {துருபதன்} மகன் திருஷ்டத்யும்னனும், வாயை அகலத்திறந்து காலனைப் போல முன்னேறி வரும் பீஷ்மரை எதிர்த்து விரைந்தான்.

சிகண்டியும், பாரதர்களின் பாட்டனைப் {பீஷ்மரைக்} கண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, வலிமைமிக்க அந்தத் தேர்வீரர் {பீஷ்மர்} மீது கொண்ட அச்சத்தைக் கைவிட்டு, அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான். பிறகு, யுதிஷ்டிரனைத் தங்கள் தலைமையில் கொண்ட பார்த்தர்கள் அனைவரும், சிகண்டியைத் தங்கள் முன்னணியில் கொண்டும், சிருஞ்சயர்களுடன் {பாஞ்சாலர்களுடன்} சேர்ந்தும், போரில் பீஷ்மருடன் போரிட்டனர். அதே போல உமது படையின் வீரர்கள் அனைவரும், ஒழுங்கான நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைத் தங்கள் முன்னணியில் கொண்டு, போரில் சிகண்டியின் தலைமையிலான பார்த்தர்கள்  {பாண்டவர்கள்} அனைவருடன் போரிட்டனர்.

பிறகு, பீஷ்மரின் வெற்றிக்காக கௌரவர்களுக்கும், அல்லது பீஷ்மரை வெல்வதற்காகக்  பாண்டுவின் மகன்களுக்கும் {பாண்டவர்களுக்கு} இடையில் தொடங்கிய அந்தப் போர் மிகப் பயங்கரமானதாக இருந்தது. உண்மையில், வெற்றிக்காக, அல்லது தோல்விக்காக விளையாடப்பட்ட அந்தப் போர் விளையாட்டில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது படையின் வெற்றிக்கு யாரை நம்பியிருந்தனரோ, அந்தப் பீஷ்மர் பந்தயப் பொருளானார்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்துக்கும் ஆணையிட்ட திருஷ்டத்யும்னன், “கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எதிர்த்து விரைவீராக. தேர்வீரர்களில் சிறந்தவர்களே, அஞ்சாதீர்” என்றான். தங்கள் படைத்தலைவனின் அவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்களின் படை, அந்தப் பயங்கரப் போரில் தங்கள் உயிரையும் விடத் தயாராகப் பீஷ்மரை எதிர்த்து விரைந்து முன்னேறினர்.

தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீஷ்மர், கொந்தளிக்கும் கடலை ஏற்கும் நிலத்தை {கரையைப்} போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் அந்தப் பெரும்படையை ஏற்றார் {வரவேற்றார்}” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English