Duryodhana turned back from fighting Abhimanyu! | Drona-Parva-Section-043 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 13)
பதிவின் சுருக்கம் : சத்தியசிரசைப் பீடித்த அபிமன்யு; அபிமன்யுவை நோக்கி விரைந்த ருக்மரதன்; அபிமன்யுவைப் பீடித்த ருக்மரதனின் நண்பர்கள்; நூற்றுக்கணக்கான இளவரசர்களைக் கொன்ற அபிமன்யு; அச்சத்தால் நிறைந்து அபிமன்யுவை எதிர்த்த துரியோதனன் புறமுதுகிட வேண்டிவந்தது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "துணிவுமிக்க வீரர்களின் உயிரை எடுப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அண்ட அழிவின் தொடக்கத்தில் அனைத்து உயிரினங்களின் உயிரையும் எடுக்கும் யமனுக்கு ஒப்பானவனாக இருந்தான். சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான ஆற்றலைக் கொண்ட சக்ரனின் மகனுக்கு மகனான அந்த வலிமைமிக்க அபிமன்யு, கௌரவப் படையைக் கலங்கடித்துக் கொண்டு மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கௌரவப் படைக்குள் ஊடுருவியவனும், யமனுக்கு ஒப்பானவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை அழிப்பவனுமான அவன் {அபிமன்யு}, சீற்றமிக்கப் புலியொன்று மானொன்றைப் பிடிப்பதைப் போலச் சத்தியசிரவசைப் பிடித்தான். சத்தியசிரவஸ் [1] அவனால் {அபிமன்யுவால்} பிடிக்கப்பட்டதைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் பல்வேறு விதங்களிலான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அவனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர்.
[1] இவன் யார் என்பது தெரியவில்லை. இவன் இங்கே அபிமன்யுவால் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.
உண்மையில், க்ஷத்திரியர்களில் காளையரான அவர்கள், பகையுணர்வின் காரணமாக, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைக்} கொல்ல விரும்பி, “நான் முதலில் செல்கிறேன், நான் முதலில் செல்கிறேன்” என்று சொல்லிக் கொண்டு அவனை நோக்கி விரைந்தனர். கடலில் உள்ள திமிங்கலம் ஒன்று சிறுமீன்களின் கூட்டத்தை மிக எளிமையாகப் பிடிப்பதைப் போலவே, அபிமன்யுவும் விரைந்துவரும் அந்த க்ஷத்திரியர்களின் மொத்த படையணியையும் வரவேற்றான் {எதிர்த்தான்}. கடலை அடையும் நதிகள் திரும்பாததைப் போலவே, பின்வாங்காத அந்த க்ஷத்திரியர்களில் எவரும் அபிமன்யுவை அடைந்த பிறகு திரும்பவில்லை. வலிமைமிக்கச் சூறாவளியில் அகப்பட்டு, பலமான காற்றால் உண்டான பீதியால் பீடிக்கப்பட்டுப் பெருங்கடலில் தூக்கி வீசப்படும் (படகு குழுவினருடன்) படகைப் போல அந்தப் படை சுழன்றது.
அப்போது, மத்ரர்கள் ஆட்சியாளனுடைய {சல்லியனின்} மகனான வலிமைமிக்க ருக்மரதன், பீதியடைந்த துருப்புகளுக்கு நம்பிக்கையளிப்பதற்காக அச்சமற்ற வகையில், “வீரர்களே, அஞ்சாதீர்! நான் இங்கிருக்கும்போது, அபிமன்யுவினால் என்ன {செய்ய முடியும்}? இவனை நான் உயிருடன் பிடிப்பேன் என்பதில் ஐயங்கொள்ளாதீர்” என்றான். இவ்வார்த்தைகளைக் சொன்ன அந்த வீர இளவரசன் {ருக்மரதன்}, நன்கு தயாரிக்கப்பட்ட தன் அழகான தேரால் சுமக்கப்பட்டு அபிமன்யுவை நோக்கி விரைந்தான். மூன்று கணைகளால் அபிமன்யுவின் மார்பையும், மூன்றால் வலது கரத்தையும், மேலும் மூன்றால் இடது கரத்தையும் துளைத்த அவன் பெருமுழக்கம் முழங்கினான். எனினும் பல்குனன் மகனோ {அபிமன்யுவோ}, அவனது {ருக்மரதனின்} வில்லையும், அவனது வலது மற்றும் இடது கரங்களையும், அழகான கண்களும், புருவங்களும் கூடிய அவனது {ருக்மரதனது} தலையையும் விரைவாகப் பூமியில் வீழ்த்தினான்.
தன் எதிரியை {அபிமன்யுவை} எரிக்கவோ, உயிருடன் பிடிக்கவோ சபதம் செய்திருந்தவனும், சல்லியனின் மதிப்பு மிக்க மகனுமான அந்த ருக்மரதன், சுபத்திரையின் சிறப்புமிக்க மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்டதைக் கண்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களைக் கொண்டவர்களும் போரில் எளிதாக வீழ்த்தப்பட முடியாதவர்களும், சல்லியன் மகனின் {ருக்மரதனின்} நண்பர்களுமான இளவரசர்கள் பலர் {அபிமன்யுவை எதிர்த்துப்} போரிட வந்தனர். முழுதாக ஆறு முழம் நீளமுள்ள தங்கள் விற்களை வளைத்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அர்ஜுனனின் மகன் {அபிமன்யு} மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்த படி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
தனியாக இருப்பவனும், துணிவுமிக்கவனும், வெல்லப்பட முடியாதவனுமான சுபத்திரையின் மகனுடன் {அபிமன்யுவுடன்}, இளமையும், பலமும், பயிற்சியால் அடையப்பட்ட திறனும், வீரமும் கொண்ட அந்தக் கோபக்கார இளவரசர்கள் அனைவரும் மோதி கணைகளின் மழையால் அவனை மறைப்பதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த துரியோதனன், ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்குச் சென்ற ஒரு விருந்தினன் என்றே அபிமன்யுவைக் கருதினான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாகவே, அந்த இளவரசர்கள், பல்வேறு வடிவங்களும், பெரும் வேகமும், தங்கச் சிறகுகளும் கொண்ட தங்கள் கணைகளின் மூலம் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைக்} காண முடியாதபடி செய்தனர் {மறைத்தனர்}. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவனையும் {அபிமன்யுவையும்}, அவனது கொடிமரத்தையும், அவனது தேரையும் வெட்டுக்கிளிகள் நிறைந்த மரங்களைப் போலக் கண்டோம் [2].
[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, “அம்புகளால் நான்கு பக்கங்களிலும் நிறைக்கப்பட்டிருக்கிற அந்த அபிமன்யுவை, முட்களாலே நான்கு பக்கங்களிலும் வியாபிக்கப்பட்டிருக்கிற காட்டுப் பன்றியைப் போலக் கண்டோம்” என்று இருக்கிறது.
ஆழத்துளைக்கப்பட்ட அவன் {அபிமன்யு}, அங்குசத்தால் தாக்கப்பட்ட யானை ஒன்றைப் போலச் சினத்தால் நிறைந்தான். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பிறகு அவன் {அபிமன்யு}, காந்தர்வ ஆயுதத்தையும், அதன் தொடர்ச்சியான மாயையையும் {காந்தர்வாஸ்திரத்தையும், ரதம் சம்பந்தமான மாயையையும்} பயன்படுத்தினான். தவத்துறவுகள் பயின்ற அர்ஜுனன், அந்த ஆயுதத்தைக் கந்தர்வனான தும்புருவிடம் இருந்தும், {கந்தர்வர்கள்} பிறரிடம் இருந்தும் {தும்புரு முதலான கந்தர்வர்களிடம் இருந்து} அடைந்திருந்தான். அபிமன்யு, இப்போது அந்த ஆயுதத்தைக் கொண்டே தன் எதிரிகளைக் குழப்பினான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களை விரைவாக வெளிப்படுத்திய அவன் {அபிமன்யு}, அந்தப் போரில் நெருப்பு வளையம் போலச் சுழன்று, சில நேரங்களில் தனி நபராகவும், சில நேரங்களில் நூற்றுக்கணக்கானோராகவும், சில நேரங்களில் ஆயிரக்கணக்கானோராகவும் காட்சியளித்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களுடைய விளைவின் மூலம் உண்டான மாயைக் கொண்டு வழிநடத்தப்பட்ட தன் தேரின் திறமையால் தன் எதிரிகளைக் குழப்பிய அவன் {அபிமன்யு}, (தன்னை எதிர்த்த) மன்னர்களின் உடல்களை நூறு துண்டுகளாக வெட்டினான். அவனது {அபிமன்யுவனது} கூரிய கணைகளின் விளைவால், உயிரினங்களின் உயிர்கள் வாங்கப்பட்டன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் உடல்கள் கீழே பூமியில் விழுகையில், அவை {உயிர்கள்} மறு உலகத்தை அடைந்தன.
அவர்களின் விற்கள், குதிரைகள், தேரோட்டிகள், கொடிமரங்கள், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்கள், தலைகள் ஆகியவற்றைப் பல்குனன் மகன் {அபிமன்யு} தன் கூரிய கணைகளால் அறுத்தான். ஐந்து வயதான மாமரங்களைக் கொண்ட {மாமரத்} தோப்பு ஒன்று, சரியாகக் கனி தாங்கும் சமயத்தில் (புயலால்) வீழ்த்தப்படுவதைப் போல, அந்த நூறு இளவரசர்களும் சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} கொன்று வீழ்த்தப்பட்டனர்.
அனைத்து ஆடம்பரங்களுடன் வளர்க்கப்பட்டவர்களும், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பானவர்களும் இளமைநிறைந்தவர்களுமான அவ்விளவரசர்கள் அனைவரும் தனி ஒருவனான அபிமன்யுவால் கொல்லப்பட்டதைக் கண்ட துரியோதனன் அச்சத்தால் நிறைந்தான். (தன்) தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோர் நொறுக்கப்பட்டதைக் கண்ட அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கோபத்துடன் அபிமன்யுவை எதிர்த்து வேகமாகச் சென்றான். அவர்களுக்கிடையில் குறுகிய காலமே நீடித்த அந்த முடிக்கப்படாத போர் மிக உக்கிரமடைந்தது. பிறகு, அபிமன்யுவின் கணைகளால் பீடிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்} போரில் இருந்து புறமுதுகிட வேண்டியிருந்தது” {என்றான் சஞ்சயன்} [3].
[3] வேறொரு பதிப்பில் இவ்வரி "அவ்விருவருக்கும் க்ஷண காலமே அபூர்வமான யுத்தம் நேர்ந்தது. பிறகு, உம்முடைய மகன் அபிமன்யுவின் அநேக அம்புகளால் அடிக்கப்பட்டுப் புறங்காட்டியோடினான்" என்று இருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |