Thursday, May 19, 2016

பிருஹத்பலனைக் கொன்ற அபிமன்யு! - துரோண பர்வம் பகுதி – 045

Abhimanyu killed Vrihadvala! | Drona-Parva-Section-045 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 15)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்ட ஆறுவீரர்கள்; ஜெயத்ரதன் தலைமையில் யுதிஷ்டிரனை எதிர்த்த கௌரவவீரர்கள்; பிருந்தாரகனைக் கொன்ற அபிமன்யு; தன்னைச் சூழ்ந்து கொண்ட ஆறு வீரர்களையும் தாக்கியது; கோசல மன்னன் பிருஹத்பலனைக் கொன்ற அபிமன்யு...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வெல்லப்பட முடியாதவனும், போரில் புறமுதுகிடாதவனுமான அந்த இளமைநிறைந்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, மூன்று வயதே ஆன பெரும் பலம் கொண்ட சிறந்த குதிரைகளால் சுமக்கப்பட்டு, நமது வியூகத்தைப் பிளந்த பின்பு, வெளிப்படையாக ஆகாயத்தில் நடப்பவன் போலத் தன் பரம்பரைக்குத் தகுந்த சாதனைகளை அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்ட என்படையின் வீரர்கள் யாவர்?” என்று கேட்டான்.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டு குலத்தின் அபிமன்யு, நம் வியூகத்தில் ஊடுருவிய பிறகு, தன் கூரிய கணைகளால் மன்னர்கள் அனைவரையும் போரில் இருந்து புறமுதுகிடச் செய்தான். அப்போது, துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஹத்பலன், ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், கர்ணன் ஆகிய ஆறு வீரர்களும் அவனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். உமது படையின் மற்ற போராளிகளைப் பொறுத்தவரை, (பாண்டவர்களைத் தடுக்கும்) கனமான சுமையை ஏற்றுக் கொண்ட ஜெயத்ரதனைக் கண்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனை ஆதரிப்பதற்காக யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தனர். பெரும் பலம் கொண்ட அவர்களில் பலர், முழுமையாக ஆறு முழம் நீளம் கொண்ட தங்கள் விற்களை வளைத்தபடி, மழைத்தாரைகளைக் கொட்டுவதைப் போலச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது தங்கள் கணை மழையைப் பொழிந்தனர். எனினும், பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, கல்வியின் அனைத்துக்கிளைகளையும் அறிந்த அந்தப் பெரும் வில்லாளிகள் அனைவரையும் தன் கணைகளாலேயே முடக்கினான்.

அவன் {அபிமன்யு}, ஐம்பது கணைகளால் துரோணரையும், இருபதால் பிருஹத்பலனையும் துளைத்தான். எண்பது கணைகளால் கிருதவர்மனையும், அறுபதால் கிருபரையும் அவன் துளைத்தான். மேலும் அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளும், பெரும் வேகமும் கொண்டவையுமான பத்து கணைகளால் அஸ்வத்தாமனைத் துளைத்தான். மேலும், அந்தப் பல்குனன் மகன் {அபிமன்யு}, பிரகாசமானதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், பெரும் சக்தி கொண்டதுமான கர்ணி {சிறகுகளைக் கொண்ட கணை} ஒன்றால் தன் எதிரிகளின் மத்தியில் இருந்த கர்ணனுடைய காதுகளில் ஒன்றைத் [1] துளைத்தான். கிருபரின் தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளையும், அவரது பார்ஷினி தேரோட்டிகளையும் வீழ்த்திய அபிமன்யு, பத்து கணைகளால் கிருபரின் நடுமார்பைத் துளைத்தான்.

[1] கங்குலியில் இது "தேர்களில் ஒன்றை" என்றே இருக்கிறது. அதாவது, "And the son of Phalguni pierced Karna, in the midst of his foes, in one of his cars, with a bright, well-tempered, and bearded arrow of great force." என்றே இருக்கிறது. எனினும், வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும், "காதுகளில் ஒன்று " என்றே இருக்கிறது. கங்குலியில் அச்சுப்பிழை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதி, மேலே காதுகள் என்றே இட்டிருக்கிறேன்.

பிறகு வலிமைமிக்க அந்த அபிமன்யு, உமது வீர மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குருக்களின் புகழை அதிகரிப்பவனும், துணிவுமிக்கவனுமான பிருந்தாரகனைக் [2] கொன்றான். இப்படி அபிமன்யு, அவனது எதிரிகளில் முதன்மையான வீரர்களை ஒருவர் பின் ஒருவராக அச்சமற்ற வகையில் கொன்று வரும்போது, துரோணரின் மகனான அஸ்வத்தாமன் இருபத்தைந்து க்ஷுத்ரகங்களால் {குறுங்கணைகளால்} அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தான். எனினும், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} தார்தராஷ்டிரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கூர்மையாக்கப்பட்ட கணைகளால் அஸ்வத்தாமனை பதிலுக்கு விரைவாகத் துளைத்தான். எனினும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பெரும் வேகமுடைய மிகக் கூர்மையான அறுபது கடுங்கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தாலும், பின்னவன் {அபிமன்யு} மைநாக மலையைப் போல அசையாமல் நின்றதால் அவனை நடுங்கச் செய்வதில் தோல்வியுற்றான். பெரும் சக்தியும் வலிமையும் கொண்ட அபிமன்யு, தங்கச் சிறகுகளைக் கொண்ட நேரான எழுபத்து மூன்று கணைகளால் தன் எதிராளியை {அஸ்வத்தாமனைத்} துளைத்தான்.

[2] இவன் யாரெனத் தெரியவில்லை. துரோண பர்வம் பகுதி 124ல் பீமன், மற்றொரு பிருந்தாரகனைக் கொல்வதாக வருகிறது.

அப்போது, தன் மகனைக் காக்கவிரும்பிய துரோணர், நூறு கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தார். அஸ்வத்தாமன், தன் தந்தையைக் காக்க விரும்பி அறுபது கணைகளால் அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தான். இருபத்திரண்டு பல்லங்களால் கர்ணன் அவனைத் துளைத்தான். பதினான்கால் கிருதவர்மன் அவனைத் துளைத்தான். அது போன்ற ஐம்பது கணைகளால் பிருஹத்பலன் அவனைத் துளைத்தான். சரத்வானின் மகனான கிருபரோ பத்து கணைகளால் துளைத்தார். எனினும், அபிமன்யு, அவர்கள் ஒவ்வொரையும் பத்து {பத்து பத்து} கணைகளால் துளைத்தான்.

கோசலத்தின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்} ஒரு கர்ணியால் அபிமன்யுவை அவனது மார்பில் அடித்தான். எனினும் அபிமன்யுவோ, தன் எதிராளியின் குதிரைகள், கொடிமரம், வில் மற்றும் தேரோட்டியை விரைவாகப் பூமியில் சாய்த்தான். இப்படித் தன் தேரை இழந்த அந்தக் கோசல ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அபிமன்யுவின் அழகிய தலையை அவனது உடலில் இருந்து துண்டிக்க விரும்பி ஒரு வாளை எடுத்தான். அப்போது அபிமன்யு, கோசலர்களின் ஆட்சியாளனான மன்னன் பிருஹத்பலனின் மார்பை ஒரு பலமான கணையால் துளைத்தான். இதனால் பின்னவன் {பிருஹத்பலன்} இதயம் பிளக்கப்பட்டுக் கீழே விழுந்தான். இதைக் கண்டு, அணிவகுப்புப் பிளக்கப்பட்ட சிறப்புமிக்க மன்னர்கள் பத்தாயிரம் பேர் தப்பி ஓடினர். வாள்கள், விற்கள் ஆகியவற்றைத் தரித்திருந்த அம்மன்னர்கள், (மன்னன் துரியோதனனின் விருப்பத்திற்கு) மாறான {அமங்கலமான} வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே தப்பி ஓடினர். இப்படிப் பிருஹத்பலனைக் கொன்ற சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, மழையைப் போன்ற அடர்த்தியான தன் கணை மழையால் உமது வீரர்களான அந்தப் பெரும் வில்லாளிகளை முடக்கியபடி போரில் திரிந்து கொண்டிருந்தான்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English