Thursday, May 19, 2016

லக்ஷ்மணனைக் கொன்ற அபிமன்யு! - துரோண பர்வம் பகுதி – 044

Abhimanyu killed Lakshmana! | Drona-Parva-Section-044 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 14)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவை எதிர்த்த எட்டு வீரர்கள்; அவர்களைத் தாக்கிய அபிமன்யு; துரியோதனனையும், துரியோதனன் மகனையும் சேர்த்து பத்து வீரர்களாக அபிமன்யுவைத் தாக்கிய கௌரவர்கள்; துரியோதனன் மகன் லக்ஷ்மணனைக் கொன்ற அபிமன்யு; அபிமன்யுவைச் சூழ்ந்த கொண்ட ஆறு வீரர்கள்; அவர்களை வீழ்த்தி ஜெயத்ரதனிடம் சென்ற அபிமன்யு; அபிமன்யுவைத் தடுத்த கிராதன்; அபிமன்யுவால் கொல்லப்பட்ட கிராதனின் மகன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, {தனி} ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த அந்தப் பயங்கரமான கடும்போரைக் குறித்தும், சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} ஆற்றலைச் சொல்லும் நிகழ்வான அந்தச் சிறப்புமிக்கவனின் வெற்றியைக் குறித்தும் நீ எவற்றைச் சொல்கிறாயோ, அவை மிக அற்புதமானதெனவும், கிட்டத்தட்ட நம்பமுடியாததெனவும் நீ எனக்குச் சொல்கிறாய். எனினும், நீதியை {அறத்தைத்} தங்கள் புகலிடமாகக் கொண்டோரின் வழக்கில், அவற்றை நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமாக நான் கருதவில்லை. நூறு இளவரசர்கள் கொல்லப்பட்டு, துரியோதனன் அடித்து விரட்டப்பட்ட பிறகு, சுபத்திரையின் மகனுக்கு {அபிமன்யுவுக்கு} எதிராக என் படையைச் சேர்ந்த போர்வீரர்கள் என்ன வழியை மேற்கொண்டனர்?” என்று கேட்டான்.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவர்களின் வாய்கள் உலர்ந்தன; கண்கள் ஓய்வற்றதாகின {சஞ்சலமடைந்தன}; அவர்களது உடலை வியர்வை மூடியது; அவர்களின் மயிர்கள் சில்லிட்டு நின்றன {அவர்களுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது}. தங்கள் எதிரியை வீழ்த்துவதில் நம்பிக்கையிழந்த அவர்கள் களத்தை விட்டு ஓடத் தயாரானார்கள். காயம்பட்ட தங்கள் சகோதரர்கள், தந்தைமார், மகன்கள், நண்பர்கள், திருமணத்தால் ஏற்பட்ட உறவினர்கள், சொந்தங்கள் ஆகியோரைக் கைவிட்டுத் தங்கள் குதிரைகளையும் யானைகளையும் மிக வேகமாகச் செலுத்தி தப்பி ஓடினர்.

அவர்கள் பிளக்கப்பட்டு முறியடிக்கப்பட்டதைக் கண்ட துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஹத்பலன், கிருபர், துரியோதனன், கர்ணன், கிருதவர்மன், சுபலனின் மகன் (சகுனி) ஆகியோர் வெற்றி கொள்ளப்பட முடியாத சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து பெரும் கோபத்துடன் விரைந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே உமது பேரனால் {அபிமன்யுவால்} தாக்கப்பட்டு, விரட்டப்பட்டனர்.

ஆடம்பரத்தில் வளர்ந்தவனும், கணைகளில் சாதித்தவனும், பெரும் சக்தி கொண்டவனும், அனுபவமின்மை மற்றும் செருக்கின் விளைவால் அச்சமற்றவனாக இருந்தவனுமான லக்ஷ்மணன் மட்டுமே, தனி ஒரு வீரனாக அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} அப்போது எதிர்த்துச் சென்றான். தன் மகனைக் {லக்ஷ்மணனைக்} குறித்துக் கவலைப்பட்ட அவனது தந்தை (துரியோதனன்) அவனைப் பின்தொடர்ந்து செல்வதற்காகத் திரும்பினான். வலிமைமிக்கத் தேர்வீரர்களான பிறரும் துரியோதனனைப் பின்தொடர்வதற்காகத் திரும்பினர். பிறகு, அவர்கள் அனைவரும், மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமழையால் அபிமன்யுவை நனைத்தனர். எனினும், அபிமன்யு, தன்னந்தனியாகவே, அனைத்துத் திசைகளிலும் வீசும் உலர்ந்த காற்று, கூடியிருக்கும் மேகங்களின் திரள்களை அழிப்பதைப் போல அவர்களை நசுக்கத் தொடங்கினான்.

சினங்கொண்ட யானையொன்று மற்றொரு யானையோடு மோதுவதைப் போலவே அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பெரும் அழகு கொண்டவனும், பெரும் துணிவு கொண்டவனும், தன் தந்தையின் அருகே வளைக்கப்பட்ட வில்லுடன் நின்றவனும், அனைத்து ஆடம்பரங்களுடனும் வளர்க்கப்பட்டவனும், யக்ஷர்களின் இரண்டாவது இளவரசனுக்கு {குபேரனின் மகனுக்கு} ஒப்பானவனும், வெல்லப்பட முடியாதவனுமான உமது பேரன் லக்ஷ்மணனுடன் மோதினான். பகைவீரர்களைக் கொல்பவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, லக்ஷ்மணனோடு மோதித் தன் கூரிய கணைகளால் அவனது கரங்கள் இரண்டையும் மார்பையும் தாக்கினான்.

உமது பேரனான வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த அபிமன்யு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (தடியால்) தாக்கப்பட்ட பாம்பைப் போலச் சினத்தால் நிறைந்து, உமது (மற்றொரு) பேரனிடம் {லக்ஷ்மணனிடம்} “விரைவில் அடுத்த உலகத்திற்குச் செல்லவிருப்பதால், நீ இவ்வுலகை நன்றாகப் பார்த்துக் கொள்வாயாக. உன் சொந்தங்களின் பார்வைக்கு முன்பாகவே, நான் உன்னை யமலோகத்திற்கு அனுப்புவேன்” என்றான்.

பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, இப்படிச் சொல்லிவிட்டு, அப்போதுதான் சட்டை உரித்து வந்த பாம்புக்கு ஒப்பான ஒரு பல்லத்தை எடுத்தான். அபிமன்யுவின் கரங்களால் ஏவப்பட்ட அந்தக் கணையானது, அழகிய மூக்கு, அழகிய புருவங்கள், அழகாகத் தெரியும் சுருள் முடி ஆகியவற்றைக் கொண்டவனும், குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுவனுமான லக்ஷ்மணனின் அழகிய தலையைத் துண்டித்தது. லக்ஷ்மணன் கொல்லப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள், “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சலிட்டன.

தன் அன்புக்குரிய மகன் கொல்லப்பட்டதால் துரியோதனன் சினத்தால் நிறைந்தான். க்ஷத்திரியர்களில் காளையான அவன் {துரியோதனன்}, “இவனைக் கொல்வீர்” என உரக்கச் சொல்லி, தனக்குக் கீழிருந்த க்ஷத்திரியர்களைத் தூண்டினான். பிறகு, துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஹத்பலன், ஹிருதிகனின் மகனான கிருதவர்மன் ஆகிய ஆறு வீரர்கள் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களைக் கூரிய கணைகளால் துளைத்துத் தன்னிடம் இருந்து விரட்டிய {அவர்களைப் புறங்காட்டி ஓடச் செய்த} அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஜெயத்ரதனின் பரந்த படையின் மேல் பெரும் வேகத்துடனும் மூர்க்கத்துடனும் பாய்ந்தான்.

அதன்பேரில், கவசமணிந்தவர்களான கலிங்கர்கள், நிஷாதர்கள், கிராதனின் வீர மகன் [1] ஆகியோர் தங்கள் யானைப் படையின் மூலம் அவனது பாதையைத் தடுத்து, அவனைச் சூழ்ந்து கொண்டனர். அதன்பிறகு, பல்குனன் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்}, அந்த வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது மூர்க்கமானதாகவும், கடுமையானதாகவும் இருந்தது. பிறகு, அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஆகாயத்தில் திரண்டிருக்கும் மேகக்கூட்டங்களை அனைத்துத் திசையிலும் செல்லும் காற்றானது அழிப்பதைப் போல அந்த யானைப் படையை அழிக்கத் தொடங்கினான்.

[1] சுபர்ச நாட்டு மன்னன் கிராதன் பீமனால் திக்விஜயத்தின் போது வீழ்த்தப்பட்டதாகச் சபாபர்வம் பகுதி 29ல் ஒரு குறிப்பு இருக்கிறது. http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section29.html கிராதனுடைய மகனின் பெயர் என்ன என்பது தெரியவில்லை. இவனது தந்தையான கிராதன் கர்ண பர்வம் பகுதி 51ல் பீமனால் கொல்லப்படுகிறான். விதர்பனின் மகன் கிராதன் என்றும் கிராதனுக்குக் குந்தி என்ற மகன் இருந்ததாகவும், அவனுக்குத் திருஷ்டி பிறந்ததாகவும், அதன்பிறகு நிர்விருத்தி வந்ததாகவும் பாகவதம் 9:24 சொல்கிறது. இந்தக் கிராதனும் அந்தக் கிராதனும் ஒன்றா என்பது தெரியவில்லை.

அப்போது அந்தக் கிராதன் {கிராதன் மகன்}, கணைகளின் மழையால் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} மறைத்தான். அதேவேளையில், துரோணர் தலைமையிலான பிற தேர்வீரர்களும் களத்திற்குத் திரும்பி கூர்மையும் வலிமையும் மிக்க ஆயுதங்களை இறைத்தபடி அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர். அவ்வாயுதங்கள் அனைத்தையும் தன் கணைகளால் தடுத்த அர்ஜுனன் மகன், தன் எதிராளியைக் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, பெரும் வேகத்தோடு ஏவப்பட்ட தடையற்ற கணைகளின் மழையால் கிராதனின் மகனைப் பீடிக்கத் தொடங்கினான்.

பின்னவனின் {கிராதன் மகனின்} வில், கணைகள், தோள்வளைகள், ஆயுதங்கள், கிரீடத்துடன் கூடிய தலை, குடை, கொடிமரம், தேரோட்டி, குதிரைகள் ஆகிய அனைத்தையும் அபிமன்யு வெட்டி வீழ்த்தினான். உன்னதப் பரம்பரை, நன்னடத்தை, சாத்திர அறிவு, பெரும் பலம், புகழ், ஆயுத பலம் ஆகியவற்றைக் கொண்ட அந்தக் கிராதனின் மகன் கொல்லப்பட்ட போது, வீரப் போராளிகள் பிறரில் கிட்டத்தட்ட அனைவரும் போரைவிட்டுத் திரும்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English