Abhimanyu deprived of car! | Drona-Parva-Section-046 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 16)
பதிவின் சுருக்கம் : கௌரவ வீரர்கள் பலரைக் கொன்ற அபிமன்யு; அபிமன்யுவிடம் இருந்து துச்சாசனன் மகனைக் காத்த அஸ்வத்தாமன்; துரோணருடன் கர்ணன் செய்த ஆலோசனை; வில், தேர், வாள், கேடயம் ஆகியவற்றை இழந்த அபிமன்யு, தேர்ச்சக்கரத்துடன் துரோணரிடம் விரைந்தது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பல்குனன் மகன் {அபிமன்யு}, கர்ணனின் காதை [1] மீண்டும் ஒரு கர்ணியால் துளைத்து, மேலும் அவனைக் {கர்ணனைக்} கோபமூட்டும் வகையில் ஐம்பது பிற கணைகளால் அவனைத் துளைத்தான். ராதையின் மகனும் {கர்ணனும்} பதிலுக்குப் பல கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தான். அம்புகளால் முழுவதும் மறைக்கப்பட்ட அபிமன்யு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மிக அழகாகத் தெரிந்தான். சினத்தால் நிறைந்த அவன் {அபிமன்யு} கர்ணனைக் குருதியில் குளிக்க வைத்தான். கணைகளால் சிதைக்கப்பட்டுக் குருதியால் மறைக்கப்பட்டிருந்த துணிவுமிக்கக் கர்ணனும் மிகவும் பிரகாசித்தான். கணைகளால் துளைக்கப்பட்டு, குருதியில் குளித்திருந்த அவ்விரு சிறப்புமிக்க வீரர்களும், மலர்ந்திருக்கும் இரண்டு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போல இருந்தனர்.
[1] முந்தைய பகுதியில் உள்ளதைப் போலவே இங்கும் அச்சுப் பிழை ஏற்பட்டிருக்க வேண்டும். இங்கேயும் கங்குலியில் தேர் என்றே இருக்கிறது. வேறு ஒரு பதிப்பில் இது, “கர்ணம்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே “Car” என்றே இருக்கிறது. “மீண்டும்” என்ற சொல் இந்த வரியில் வருவதால், நாம் இங்கே இது “கர்ணனின் காதையே” குறிக்கிறது என்று கொள்கிறோம்.
பிறகு, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, போர்க்கலையின் அனைத்து வகைகளையும் அறிந்தவர்களான கர்ணனின் துணிச்சல் மிக்க ஆலோசகர்கள் அறுவரை, அவர்களது குதிரைகள், தேரோட்டி மற்றும் தேர்கள் ஆகியவற்றோடு சேர்த்துக் கொன்றான். பெரும் வில்லாளிகளான பிறரைப் பொறுத்தவரை, அபிமன்யு, பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் அச்சமற்றவகையில் துளைத்தான். அவனது அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.
அடுத்ததாக மகதர்களின் ஆட்சியாளனுடைய மகனைக் கொன்ற அபிமன்யு, நேரான ஆறு கணைகளால் இளமைநிறைந்த அஸ்வகேதுவை அவனது நான்கு குதிரைகள் மற்றும் தேரோட்டியோடு சேர்த்துக் கொன்றான் [2]. பிறகு, யானைப் பொறிக்கப்பட்ட கொடி கொண்டவனும், போஜ இளவரசனுமான மார்த்திகாவதனை {மார்த்திகாவதகனை} க்ஷுரப்ரம் ஒன்றினால் கொன்ற அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை இறைத்தபடியே உரத்த ஆரவாரம் செய்தான். அப்போது துச்சாசனன் மகன் [3], நான்கு கணைகளால் அபிமன்யுவின் நான்கு குதிரைகளையும், ஒன்றால் தேரோட்டியையும், பத்து கணைகளால் அபிமன்யுவையும் துளைத்தான். அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, வேகமான பத்து கணைகளால் துச்சாசனன் மகனைத் துளைத்து, கோபத்தால் கண்கள் சிவந்து, அவனிடம் உரத்த குரலில், “உன் தந்தை {துச்சாசனன்} போரைக் கைவிட்டு கோழையைப் போல ஓடினார். போரிடுவது எவ்வாறு என்பதை நீ அறிந்திருப்பது நன்றே. எனினும், நீ இன்று உயிருடன் தப்பமாட்டாய்” என்றான் {அபிமன்யு}.
[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, “மகததேசாதிபதியின் மகனும், இளமையுள்ளவனுமான அஸ்வகேதுவைக் குதிரைகளோடும், சாரதியோடும் ஆறு பாணங்களால் கொன்று தள்ளினான்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் மேலே உள்ள வரிகளில் கங்குலியில் உள்ளதைப் போன்றே உள்ளது.[3] இவன் பெயர் துர்மாசனன் என்று இணையதளங்களில் காணப்படுகின்றது. http://religion.answers.wikia.com/wiki/Who_is_the_son_of_Dushasana_who_killed_abhimanyu
இதைச் சொன்ன அபிமன்யு, கொல்லன் கையால் பளபளப்பாக்கப்பட்ட நாராசம் {நீண்ட கணை} ஒன்றை, எதிரியின் {துச்சாசனன் மகன்} மீது ஏவினான். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அந்தக் கணையைத் தன் கணைகள் மூன்றைக் கொண்டு அறுத்தான். அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அஸ்வத்தாமனை விட்டுவிட்டுச் சல்லியனைத் தாக்கினான். அவனோ {சல்லியனோ} பதிலுக்கு அச்சமற்றவகையில், கழுகிறகுகள் கொண்ட ஒன்பது கணைகளால் அவனை {அபிமன்யுவை} மார்பில் துளைத்தான் [4]. இந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது. பிறகு, அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, சல்லியனின் வில்லை அறுத்து, அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றான். மேலும் அபிமன்யு, முழுவதும் இரும்பாலான அறுபது கணைகளால் சல்லியனையும் துளைத்தான். அதன் பேரில் பின்னவன் {சல்லியன்}, குதிரைகளற்ற தன் தேரைவிட்டுவிட்டு மற்றொரு தேரில் ஏறினான்.
[4] வேறொரு பதிப்பில் இவ்வரி, “அர்ஜுனன் மகன் அந்தத் துரோணமகனுடைய {அஸ்வத்தாமனின்} கொடியை அறுத்துச் சல்யனை மூன்று பாணங்களால் அடித்தான். சல்யன் கோபமில்லாதவன் போலவே அந்த அபிமன்யுவைக் கழுகிறகுகள் கட்டின ஒன்பது பாணங்களால் மார்பிலடித்தான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இஃது இல்லை.
பிறகு அபிமன்யு, போர்வீரர்களான சத்ருஞ்சயன், சந்திரகேது, மகாமேகன் {மேகவேகன்}, சுவர்ச்சஸ், சூர்யபாசன் ஆகிய ஐவரைக் கொன்றான். பிறகு அவன் சுபலனின் மகனையும் {சகுனியையும்} துளைத்தான். அபிமன்யுவை மூன்று கணைகளால் துளைத்த பின்னவன் {சகுனி}, துரியோதனனிடம், “நாம் அனைவரும் சேர்ந்து இவனை நொறுக்குவோம், இல்லையெனில், தனியாகவே இவன் நம் அனைவரையும் கொன்றுவிடுவான். ஓ! மன்னா {துரியோதனா}, துரோணர், கிருபர் மற்றும் பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு இவனைக் கொல்லும் வழி குறித்துச் சிந்திப்பாயாக” என்றான் {சகுனி}.
விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணன், துரோணரிடம், “அபிமன்யு எங்கள் அனைவரையும் நொறுக்குகிறான். அவனைக் கொல்லும் வழியை எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டான். இப்படிக் கேட்கப்பட்டவரும், வலிமைமிக்க வில்லாளியுமான துரோணர், அவர்கள் அனைவரிடமும், “விழிப்புணர்வுடன் அவனைக் கவனித்ததில், உங்களில் எவராலும் அந்த இளைஞனிடம் {அபிமன்யுவிடம்} எந்தக் குறையையும் {தவறையும்} கண்டுபிடிக்க முடிந்ததா? அவன் {அபிமன்யு} அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருக்கிறான். இருப்பினும், உங்களில் எவராலும் அவனிடம் ஒரு சின்ன ஓட்டையையாவது கண்டுபிடிக்க முடிந்ததா? மனிதர்களில் சிங்கமான இந்த அர்ஜுனன் மகனின் {அபிமன்யுவின்} கர நளினத்தையும், நகர்வு வேகத்தையும் பாருங்கள். அவனது தேர்த்தடத்தில், வட்டமாக வளைக்கப்பட்ட அவனுடைய வில்லை மட்டுமே காண முடிகிறது, அவ்வளவு விரைவாக அவன் தன் கணைகளைக் குறிப் பார்க்கிறான், அவ்வளவு வேகமாக அவன் அவற்றை ஏவுகிறான்.
பகைவீரர்களைக் கொல்பவனான இந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கணைகளால் என் உயிர் மூச்சையே பீடித்துப் பிரம்மிக்கச் செய்தாலும், உண்மையில், அவன் என்னை மனம்நிறையச் செய்கிறான். கோபத்தால் நிறைந்தவர்களான வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கூட, அவனிடம் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, போர்க்களத்தில் திரிந்து கொண்டிருக்கும் இந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, என்னைப் பெரிதும் மனம் நிறையச் செய்கிறான். காண்டீவதாரிக்கும் {அர்ஜுனனுக்கும்}, போரில் தன் வலிமைமிக்கக் கணைகளால் அடிவானத்தின் புள்ளிகள் அனைத்தையும் நிரப்பிப் பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தும் இவனுக்கும் {அபிமன்யுவுக்கும்} இடையில் நான் எந்த வேறுபாட்டையும் காணவில்லை” என்றார் {துரோணர்}.
இவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன், அர்ஜுனன் மகனின் {அபிமன்யுவின்} கணைகளால் பீடிக்கப்பட்டுத் துரோணரிடம் மீண்டும் ஒருமுறை, “அபிமன்யுவின் கணைகளால் அதீதமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் நான், (ஒரு போர் வீரனாக) இங்கு நிற்க வேண்டும் என்பதற்காகவே போரில் நிற்கிறேன். உண்மையில், பெரும் சக்தி கொண்ட இவனது கணைகள் மிக மூர்க்கமானவையாக இருக்கின்றன. நெருப்பின் சக்தியைக் கொண்ட இந்தப் பயங்கரமான கணைகள் என் இதயத்தைப் பலவீனப்படுத்துகின்றன” என்றான் {கர்ணன்}.
பிறகு ஆசான் {துரோணர்}, புன்னகையுடன், மெதுவாகக் கர்ணனிடம், “அபிமன்யு இளைஞன், அவன் ஆற்றல் பெரியதே. அவனது கவசமோ ஊடுருவப்பட முடியாததாக {பிளக்கப்பட முடியாததாக} இருக்கிறது. தற்காப்புக்காகக் கவசம் அணியும் முறையை, இவனது தந்தைக்கு {அர்ஜுனனுக்கு} நான் புகட்டியிருக்கிறேன். பகை நகரங்களை அடிபணியச் செய்யும் இவன் {அபிமன்யு}, (கவசமணியும்) மொத்த அறிவியலையும் {சாத்திரத்தையும்} நிச்சயமாக அறிந்திருக்கிறான். எனினும், நன்றாக ஏவப்படும் கணைகளால், அவனது வில்லையும், நாண்கயிற்றையும், குதிரைகளின் கடிவாளங்களையும், குதிரைகளையும், இரண்டு பார்ஷினி தேரோட்டிகளையும் நீ வெட்டலாம். ஓ! வலிமைமிக்க வில்லாளியே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, உன்னால் முடியும் என்றால் நீ இதைச் செய்யலாம். (இவ்வழிகளால்) அவனைப் போரிலிருந்து புறங்காட்டச் செய்த பிறகு {பின்னாலிருந்து} [5] அவனைத் தாக்கலாம். கையில் வில்லுடன் கூடிய அவனைத் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து வந்தாலும் வீழ்த்த முடியாது. நீ விரும்பினால் அவனைத் தேரையும், வில்லையும் இழக்கச் செய்வாயாக” என்றார் {துரோணர்}.
[5] வேறொரு பதிப்பில் “பின்னாலிருந்து” என்ற வார்த்தை மறைமுகமாக இல்லாமல் தெளிவாகவே இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே உள்ளது.
ஆசானின் {துரோணரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட விகர்த்தனன் மகன் {கர்ணன்}, பெரும் சுறுசுறுப்புடன் {கணைகளை} ஏவிக் கொண்டிருந்த அபிமன்யுவின் வில்லை {அவன் பார்க்காத போது பின்புறத்தில் இருந்து} [6], தன் கணைகளால் விரைவாக வெட்டினான். போஜ குலத்தைச் சேர்ந்தவன் (கிருதவர்மன்} [7], அவனது குதிரைகளைக் கொன்றான், கிருபரோ அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரைக் கொன்றார். பிறரோ, அவன் {அபிமன்யு} தன் வில்லை இழந்த பிறகு, அவன் மேல் தங்கள் கணை மழையைப் பொழிந்தனர்.
[6] வேறொரு பதிப்பில் இவ்வரி, “அந்த ஆசாரியருடைய வார்த்தையைக் கேட்டு, சூர்யனின் மகனான கர்ணன் விரைந்து கணை தொடுப்பவனும், ஹஸ்தலாகவமுள்ளவனுமான அபிமன்யுவின் வில்லைப் பின்புறத்திலிருந்து அறுத்தான்” என்று {மறைமுகமாக இல்லாமல்} தெளிவாகவே உள்ளது.[7] வேறொரு பதிப்பில் இது “துரோணர்” என்று இருக்கிறது.
வேகம் மிக அவசியமாகத் தேவைப்பட்ட நேரத்தில், பெரும் வேகத்தோடு போரிட்ட அந்தப் பெரும் தேர்வீரர்கள் அறுவரும், அவர்களோடு தனி ஒருவனாகப் போராடிக் கொண்டு, கவனமற்று இருந்த அந்த இளைஞனை {அபிமன்யுவைத்} தங்கள் கணை மாரியால் விரைவாக மறைத்தனர். வில்லற்றவனாக, தேரற்றவனாக இருப்பினும், (போர்வீரனாகத்) தன் கடமையில் கண்கொண்ட அழகிய அபிமன்யு, ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டு வானத்தில் குதித்தான். அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பெரும் பலத்தையும், பெரும் சுறுசுறுப்பையும் காட்டிக் கொண்டு, கௌசிகம் என்று அழைக்கப்பட்ட நடையையும், பிறவற்றையும் {பிற நடைகளையும்} விளக்கிக் கொண்டு, சிறகு படைத்த உயிரினங்களின் இளவரசனை {கருடனைப்} போல வானத்தில் மூர்க்கமாகத் திரிந்தான் [8].
[8] வேறொரு பதிப்பில் இவ்வரிகள், “வில்லற்றவனும், தேரிழந்தவனுமான அந்த அபிமன்யு, தனக்குரிய தர்மத்தைப் பாதுகாப்பவனாகக் கத்தியையும், கேடகத்தையும் கையில் கொண்டு மிக்கக் காந்தியுடன் ஆகாயத்தில் கிளம்பினான். அந்த அர்ஜுனகுமாரன் சர்வதோபத்ரம் {கௌசிகம் என்பது மூலம்} முதலான மார்க்கங்களாலும், லாகவத்தினாலும், பலத்தினாலும் ஆகாயத்தில் கருடன் போல மிக வேகமாகச் சஞ்சாரம் செய்தான்” என்று இருக்கிறது.
அபிமன்யுவின் {சிறு} தாமதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த வலிமைமிக்க வில்லாளிகள், “கையில் வாளோடு என் மீது இவன் பாயப் போகிறான்” என்ற எண்ணத்தோடு, தங்கள் பார்வையை மேலே செலுத்தியபடியே, அந்தப் போரில் அவனைத் துளைக்கத் தொடங்கினர்.
வலிமையும், சக்தியும் கொண்டவரும், எதிரிகளை வெல்பவருமான துரோணர் ஒரு கூரிய கணையைக் கொண்டு ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அபிமன்யுவின் வாள் கைப்பிடியை விரைவாக அறுத்தார். ராதையின் மகனான கர்ணன், கூரிய கணைகளால் அவனது அற்புத கேடயத்தை அறுத்தான். இப்படித் தன் வாளையும் கேடயத்தையும் இழந்த அவன், பலமான உடல் உறுப்புகளுடனே ஆகாயத்தில் இருந்து கீழே பூமிக்கு வந்தான். பிறகு ஒரு தேர்ச்சக்கரத்தை எடுத்துக் கொண்ட அவன் {அபிமன்யு}, கோபத்துடன் துரோணரை எதிர்த்து விரைந்தான். தேர்ச்சக்கரங்களில் உள்ள புழுதியால் பிரகாசித்த உடலுடன், உயர்த்தப்பட்ட தன் கரங்களில் தேர்ச்சக்கரத்தைப் பிடித்துக் கொண்டு, (சக்கரத்துன் கூடிய) வாசுதேவனைப் போலவே மிக அழகாகத் தெரிந்த அந்த அபிமன்யு, சிறிது நேரத்திலேயே அந்தப் போரில் பயங்கர மூர்க்கமாக மாறினான். (அவனது காயங்களில் இருந்து) வடிந்த குருதியால் நனைந்த தன் ஆடைகளுடன், சுருக்கமற்ற புருவங்களுடன், சிங்க முழக்கம் முழங்கியவனும், அளவிலா சக்தி கொண்டவனுமான தலைவன் அபிமன்யு, அந்தப் போர்க்களத்தில் அந்த மன்னர்களுக்கு மத்தியில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |