Wednesday, June 01, 2016

மன்னன் திலீபன்! - துரோண பர்வம் பகுதி – 061

King Dilipa! | Drona-Parva-Section-061 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 31)

பதிவின் சுருக்கம் : மன்னன் திலீபனின் கதையைச் சொன்ன நாரதர்; திலீபனின் பெருமை; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, ஹபிலனின் {Havila or Hvala} மகனான திலீபனும் [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அவனது {திலீபனின்} நூற்றுக்கணக்கான வேள்விகளில், உண்மை அறிவை உறுதியாகக் கொண்டவர்களும், வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவர்களும், குழந்தைகளாலும், பிள்ளைகளின் குழந்தைகளாலும் அருளப்பட்டவர்களுமான பிராமணர்கள் எண்ணிக்கையில் ஆயிரமாயிரமாக இருந்தனர்.


[1] இந்தத் திலீபனைக் குறித்து வனபர்வம் பகுதி 107ல் பேசப்படுகிறது. வனபர்வத்தின் அந்தப் பகுதியில் திலீபனின் தந்தை அன்சுமான் என்றும், திலீபனின் பிள்ளை பகீரதன் என்றும் இருக்கிறது. விஷ்ணு புராணத்தில் இவனது தந்தையின் பெயர் விசுவஸஹன் என்றும், அவனது மகனின் பெயர் தீர்க்கபாகு என்றும் இருக்கிறது. Puranic Encyclopediaவிலோ இவனது தந்தையின் பெயர் மூலகன் என்றும், இவனது பிள்ளையின் பெயர் ரகு என்றும் பகீரதன் திலீபனின் மூதாதையரில் ஒருவனாகவும் சொல்லப்பட்டுள்ளது.

பல்வேறு வேள்விகளைச் செய்த மன்னன் திலீபன், புதையல்களால் {செல்வங்களால்} நிறைந்த இந்தப் பூமியைப் பிராமணர்களுக்குத் தானமளித்தான். திலீபனின் வேள்விகளில் அமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும் தங்கத்தாலானவையாக இருந்தன [2]. இந்திரனின் தலைமையிலான தேவர்களே கூட, அவனையே {திலீபனையே} தர்மனாகக் கருதி அவனிடம் வந்தனர். அவனது {திலீபனது} வேள்விக்கம்புகளின் மேல் மற்றும் கீழ் வளையங்கள் {யூபத்தின் சஷாலம் ப்ரஷாலம் என்ற இரண்டு வளையங்களும்} தங்கத்தாலானவையாக இருந்தன. அவனது வேள்விகளில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் பிற உணவுகளை {ரகக் காண்டவங்களை Raga-Khandavas} உண்ட பலர் சாலையில் படுத்துக் கிடந்தனர் [3].

[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, “திலீபனுடைய யாகங்களில் (“ஹிரண்மய்ய:” என்று தொடங்கும் வேத வாக்கியத்தினால்) யாகபாத்திரங்கள் எல்லாம் தங்கத்தாலேயே செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட விதிமார்க்கமானது (முதன்முதலில்) ஆரம்பிக்கப்பட்டது” என்றிருக்கிறது.

[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, “சர்க்கரைப் பொங்கல் முதலான உணவுகளால் மதமடைந்தவர்கள் மார்க்கங்களில் படுத்திருந்தார்கள்” என்று இருக்கிறது.

திலீபன் நீரில் போரிடும்போது, அவனது தேர்ச்சக்கரங்கள் இரண்டும் எப்போதும் நீரில் மூழ்கியதில்லை. இது மிக ஆச்சரியமானதாகவும் வேறு எந்த மன்னர்களுக்கும் நேராததாகவும் இருந்தது. உறுதிமிக்க வில்லாளியும், எப்போதும் உண்மை பேசுபவனும், தன் வேள்விகளில் அபரிமிதமான பரிசுகளைத் தானமளிப்பவனுமான மன்னன் திலீபனை எவரும் கண்டாலே கூட, அவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வென்றனர் {சொர்க்கத்தையே அடைந்தனர்}. கட்வாங்கன் {Khattanga or Khattwanga என்றும் அழைக்கப்பட்ட திலீபனின் வசிப்பிடத்தில், “வேதம் ஓதும் ஒலி, விற்களின் நாணொலி, குடிப்பீர், மகிழ்வீர், உண்பீர்” என்ற இந்த ஐந்து ஒலிகள் எப்போதும் கேட்டுக் கொண்டே இருந்தன.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {திலீபனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English