Thursday, June 02, 2016

மன்னன் மாந்தாதா! - துரோண பர்வம் பகுதி – 062

King Mandhatri {Mandhata}! | Drona-Parva-Section-062 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 32)

பதிவின் சுருக்கம் : மன்னன் மாந்தாதாவின் கதையைச் சொன்ன நாரதர்; மாந்தாதா பிறந்த விதம்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, யுவனாஸ்வன் மகனான மாந்தாதாவும் [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் வீழ்த்தியவனாவான். தேவர்களான அசுவினி இரட்டையர்கள், அவனை {மாந்தாதாவை} அவனது தந்தையின் {யுவனாஸ்வனின்} கருவறையில் இருந்து அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்தனர்.


[1] மாந்தாதாவைக் குறித்து வனபர்வம் பகுதி 126ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு சமயம் மன்னன் யுவனாஸ்வன், காட்டில் மானைத் துரத்திச் சென்ற போது, மிகவும் தாகமடைந்தான், அவனது குதிரைகளும் மிகவும் களைத்துப் போயிருந்தன. {தூரத்தில்} புகைச்சுருளைக் கண்ட அம்மன்னன் {யுவனாஸ்வன்}, (அதனைப் பின்பற்றி) ஒரு வேள்விசாலையை அடைந்து, அங்கே சிதறிக் கிடந்த புனிதமான வேள்வி நெய்யைக் குடித்தான் [2]. (இதனால் அந்த மன்னன் கருவுற்றான்). குழந்தையைக் கொண்டிருக்கும் அந்த மன்னன் யுவனாஸ்வனைக் கண்டு, தேவர்களில் சிறந்த மருத்துவர்களான அசுவினி இரட்டையர்கள்,  அவனது கருவறையில் இருந்து அந்தக் குழந்தையை வெளிக்கொணர்ந்தனர்.

[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, "புகையைக் கண்டு சென்று ஒரு யாகசாலையை அடைந்து, தயிர்த்துளிகள் கலந்த நெய்யைப் பானஞ்செய்தான்" என்று இருக்கிறது.

தன் தந்தையின் {யுவனாஸ்வனின்} மடியில் தெய்வீகப் பிரகாசத்துடன் இருந்த அந்தக் குழந்தையை {மாந்தாதாவைக்} கண்ட தேவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர், "இந்தக் குழந்தை எதனால் {எதை உண்டு} வாழும்?" என்று வினவினர். அப்போது வாசவன் {இந்திரன்}, "குழந்தை என் விரல்களை உறிஞ்சட்டும்" என்றான். அதன் பேரில், அமுதம் போன்ற இனிமையான பாலை இந்திரனின் விரல்கள் சுரந்தன. இந்திரன் தன் கருணையால், "இவன், தன் பலத்தை என்னிடமே பெற்றுக் கொள்வான்" என்று சொல்லி அவனிடம் {மந்தாதாவிடம்} அன்பு கொண்டதால் தேவர்கள் அந்தக் குழந்தைக்கு மாந்தாதா என்று பெயரிட்டனர் [3]. பிறகு, உயர் ஆன்ம இந்திரனின் கரங்களில் இருந்து யுவனாஸ்வன் மகனுடைய {மந்தாதாவினுடைய} வாயில் தாரை தாரையாகப் பாலும், தெளிந்த நெய்யும் கொட்டின.

[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, "இந்திரன் கருணையினால், "என்னை அடைந்து பானஞ்செய்யப்போகிறான்" என்று அன்போடு கூறியதால், "மாந்தாதா" என்றே அக்குழந்தைக்கு அற்புதமான பெயர் ஏற்படுத்தப்பட்டது" என்று இருக்கிறது.

அந்தச் சிறுவன் {மாந்தாதா}, இந்திரனின் கரத்தைத் தொடர்ச்சியாக உறிஞ்சி, அதன் மூலமே வளர்ந்தான். பனிரெண்டு {12} நாட்களிலேயே அவன் {மந்தாதா} பனிரெண்டு {12} முழ உயரத்தையும், பெரும் ஆற்றலையும் அடைந்தான் [4]. அவன் முழு உலகத்தையும் ஒரே நாளில் வென்றான். அறம் சார்ந்த ஆன்மாவும், பெரும் புத்திக்கூர்மையும் கொண்டு, வீரனாகவும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனுமாக இருந்த அந்த மாந்தாதா, தன் வில்லைக் கொண்டு, ஜனமேஜயன், சூதன்வான், ஜயன் {கயன்}, சுனன் {பூரு} [5], பிருஹத்ரதன், நிருகன் ஆகியோரை வென்றான். சூரியன் உதிக்கும் மலைக்கும் {உதய மலைக்கும்}, அவன் {சூரியன்} மறையும் மலைக்கும் {அஸ்த மலைக்கும்} இடையில் கிடக்கும் நிலம் மாந்தாதாவின் ஆட்சிப்பகுதி {மாந்தாதாக்ஷேத்ரம்} என்றே இந்நாள் வரை அறியப்படுகிறது.

[4] வேறொரு பதிப்பில் இவ்வரி, "வீரியமுள்ள அக்குழந்தை பனிரெண்டு நாளில் பனிரெண்டு வயதுடையவனுக்குச் சமனாக ஆயிற்று" என்று உள்ளது.

[5] பம்பாய் பதிப்பில் இது பூரு என்றிருப்பதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார். அப்படியெனில் மேற்கண்டது வங்கப் பதிப்பில் உள்ளதாக இருக்க வேண்டும்.

நூறு குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூய வேள்விகளையும் செய்த அவன் {மாந்தாதா}, ஓ! ஏகாதிபதி {சிருஞ்சயா}, பத்து யோஜனை நீளமும், ஒரு யோஜனை அகலமும் உள்ள தங்கத்தாலான ரோகித மீன்களைக் பிராமணர்களுக்குத் தானமளித்தான் [6]. பிராமணர்களை உபசரித்த பிறகு, (அவனது வேள்விகளுக்கு வந்த) பிறர், சுவையான உணவு மற்றும் பல வகைத் தின்பண்டங்களாலான மலைகளை உண்டு, மேலும் {தங்களுக்குக் கிடைத்த} பங்களிப்புகளாலும் மனம் நிறைந்தனர். பெரும் அளவிலான உணவு, தின்பண்டங்கள், பானங்கள் ஆகியவையும், அரிசிகளாலான {சோற்று} மலைகளும் பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தன. தெளிந்த நெய்யைத் தடாகங்களாகவும், பல்வேறு வகைகளிலான ரசங்களைத் தங்கள் சேறாகவும், தயிரைத் தங்கள் நுரையாகவும், பாயசங்களைத் தங்கள் நீராகவும் கொண்டு அழகாகத் தெரிந்த பல {பான} ஆறுகள், தேனையும் பாலையும் வீசிக்கொண்டு, உணவுப் பொருள்களாலான திடமான மலைகளைச் சுற்றி வளைத்தன.

[6] வேறொரு பதிப்பில், "நூறு அஸ்வமேதங்களாலும், நூறு ராஜசூய யாகங்களாலும் தேவர்களைப் பூஜித்த அந்த அரசன், பத்மராகரத்னம் விளையக்கூடியதும், பொன்னுக்கு விளைவிடமாயுள்ளதும், மேன்மை தங்கிய ஜனங்களுக்கு இருப்பிடமானதும் நூறு யோசனை தூரம் நீண்டிருக்கிறதுமா மத்ஸ்ய தேசத்தைப் பிராமணர்களுக்குத் தானஞ்செய்தான்" என்று இருக்கிறது.

தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பாம்புகள் மற்றும் பறவைகளும், வேதங்களையும் அவற்றின் கிளைகளையும் {அங்கங்களையும்} அறிந்த பிராமணர்கள் பலரும், முனிவர்கள் பலரும் அவனது {மாந்தாதாவின்} வேள்விக்கு வந்தனர். அங்கே இருந்தவருள் கற்றறியாதவர்களாக எவரும் இல்லை. ஆழி சூழ் உலகையும் {கடல்களால் சூழப்பட்ட உலகத்தையும்}, செல்வங்கள் அனைத்தையும் பிராமணர்களுக்கு அளித்த மன்னன் மாந்தாதா, இறுதியாகத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் தன் புகழால் நிறைத்தபடி, அறவோர் உலகங்களை அடைந்து, சூரியனைப் போல மறைந்து போனான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {மாந்தாதாவே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English