Mandhata, the son of Yuvanaswa | Vana Parva - Section 126 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
யுவனாஸ்வன் நாட்டைத் துறந்து கானகத்தில் தவமிருப்பது; தாக மிகுதியால் அர்ச்சனை செய்யப்பட்ட நீரைப் பருகுவது; அந்நீரின் தன்மையால் யுவனாஸ்வன் தனது உடலிலேயே மாந்தாதாவைப் பெறுவது; மாந்தாதாவின் பெயர்க்காரணம்; மாந்தாதா செய்த சாதனைகள்...
யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், "ஓ பெரும் அந்தணரே, யுவனாஸ்வனின் மகனும், ஏகாதிபதிகளில் சிறந்தவனும், மூவுலகங்களாலும் கொண்டாடப்படுபவனுமான மன்னர்களில் புலி போன்ற மாந்தாதா எப்படிப் பிறந்தான்? அளவற்ற காந்தி கொண்ட அவன் {மாந்தாதா}, பெரும் ஆத்மா கொண்ட {மஹாத்மாவான} விஷ்ணுவுக்கு மூவுலகங்களும் கீழ்ப்படிந்திருப்பது போல, தனது சக்திக்கும் கீழ்ப்படிந்திருக்கும்படி எப்படி வசப்படுத்தினான். அந்த அறிவுநுட்பமுடைய ஏகாதிபதியின் வாழ்வையும், அவன் {மாந்தாதா} செய்த சாதனைகளையும் நான் அறிய விரும்புகிறேன். சம்பவங்களை விவரிக்கும் கலையில் நீர் சிறந்திருப்பதால், இந்திரனின் காந்தியைப் பழிக்கும் வகையில் இருந்த அவனுக்கு மாந்தாதா என்ற பெயர் எப்படித் தோன்றியது என்பதையும், ஒப்பற்ற சக்தியுடன் அவன் {மாந்தாதா} எப்படிப் பிறந்தான் என்பதையும் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்" என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் ஆன்மா கொண்ட {மகாத்மாவான} அந்த ஏகாதிபதி மாந்தாதா என்ற பெயரால் உலகம் முழுவதும் ஏன் கொண்டாடப்பட்டான் என்பதைக் கவனத்துடன் கேள். பூமியின் ஆட்சியாளனான யுவனாஸ்வன் இக்ஷவாகு குலத்தில் உதித்தான். அந்தப் பூமியின் பாதுகாவலன் மிகச்சிறந்த பரிசுகளுக்காக அறியப்பட்ட எண்ணற்ற வேள்விகளைச் செய்தான். அறம் சார்ந்த மனிதர்களில் மிகவும் அற்புதமான அவன் ஆயிரம் குதிரை வேள்விகளைச் செய்தான். மேலும் அவன் உயர்ந்த வகையிலான பல வேள்விகளை அபரிமிதமான பரிசுகளுடன் செய்தான். ஆனால் அந்தத் தவசியான மன்னனுக்கு {யுவனாஸ்வனுக்கு} ஒரு மகன் இல்லை. பெரும் ஆன்மாவும், கடும் நோன்புகளும் கொண்ட அவன், அமைச்சர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு, தொடர்ந்து கானகத்தில் வசிக்க ஆரம்பித்தான். பண்பட்ட ஆன்மாகக் கொண்ட அவன் {மன்னன் யுவனாஸ்}, புனிதமான ரித்துகளில் சொல்லப்பட்ட உபதேசத்தின்படி அர்ப்பணிப்புடன் நடந்து வந்தான்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் அந்த மனிதர்களின் பாதுகாவலன் {யுவனாஸ்வன்} உண்ணா நோன்பு இருந்தான். அவன் பசியால் மிகவும் துன்பப்பட்டான். அவனது அந்தரங்க ஆன்மா கூடத் தாகத்தால் வறண்டதாகத் தோன்றியது. (அந்த நிலையில்) அவன் {யுவனாஸ்} பிருகுவின் ஆசிரமத்துக்குள் நுழைந்தான். ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, அந்த இரவில்தான், பிருகு குலத்தின் மகிழ்ச்சியான அந்தப் பெரும் தவசி, சௌதியும்னிக்கு {சௌதியும்னியின் மகன் யுவனாஸ்வனுக்கு} ஒரு மகன் பிறக்கும் நோக்கில் ஒரு அறச்சடங்கை நடத்தியிருந்தார். ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, {அச்சடங்கில்} புனிதப் பாடல்களை {மந்திரங்களை} ஒப்புவித்து {பாராயணம் செய்து} புனிதப்படுத்தப்பட்ட நீரைக் கொண்டு நிரப்பப்பட்ட ஒரு பெரிய குடுவை அந்த இடத்தில் இருந்தது. சௌதியும்னியின் {யுவனாஸ்வனின்} மனைவி அந்நீரைப் பருகினால், தேவனைப் போன்ற ஒரு மகன் பிறக்கக்கூடிய தன்மை கொண்டதாக அது இருந்தது. அந்த வலிமைமிக்கத் தவசிகள் அக்குடுவையை ஒரு பீடத்தில் மேல் வைத்துவிட்டு, இரவு விழித்திருந்த களைப்பால் உறங்கச் சென்றுவிட்டனர்.
பெரும் தாகத்தால் அவதியுற்று மேல்வாயும் வறண்டிருந்த சௌதியும்னி {யுவனாஸ்வன்} அவர்களைக் கடந்து சென்றான். அம்மன்னனுக்குக் குடிப்பதற்கு நீர் மிகத் தேவையாக இருந்தது. அவன் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்து நீரை யாசித்தான். அவன் மிகவும் களைத்திருந்ததால், வறண்ட தொண்டையில் இருந்து தளர்ந்த குரலுடன் கேட்டான். அக்குரல் பலவீனமான பறவையின் வலுவற்ற ஒலி போல இருந்தது. அவனது குரல் யாருடைய காதுகளையும் சென்றடையவில்லை. பிறகு அம்மன்னன் நீர் நிறைந்த குடுவையைக் கண்டான். அவன் விரைவாக அதனிடம் ஓடி, நீரைப் பருகி குடுவையைக் கீழே வைத்தான். அம்மன்னன் {யுவனாஸ்வன்} பெருத்த தாகத்தில் இருந்ததால், குளிர்ந்த அந்நீர் உடனடியாக அந்த அறிவுநுட்பமுடையை ஏகாதிபதியின் {யுவனாஸ்வனின்} தாகத்தைத் தணித்தது.
பிறகு அந்தத் தவசிகளும், துறவை செல்வமாகக் கொண்டவரும் உறகத்திலிருந்து எழுந்தனர். அனைவரும் குடுவையில் இருந்த நீர் இல்லை என்பதைக் கண்டனர். அதன்பேரில் அவர்கள் அனைவரும் கூடி ஒருவருக்கொருவர், யார் இதைச் செய்திருக்கக்கூடும் என்று வினவினர். பிறகு யுவனாஸ்வன் தனது செயலை உண்மையாக ஒப்புக்கொண்டான். பிறகு பிருகுவின் மரியாதைக்குரிய மகன் {சியவனரா? ரிசீகரா தெரியவில்லை}, "இது சரியில்லை. புதிரான மறைகுணம் {Occult Virtue} உட்செலுத்தப்பட்ட நீர் அது. கடும் தவத்தை மேற்கொண்டு, எனது அறச்செயல்களின் தன்மைகளையெல்லாம், உனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டி அந்நீரில் உட்செலுத்தியிருந்தேன். ஓ! உடல்வலிமையும் பராக்கிரமும் கொண்ட தவசியான மன்னா {யுவனாஸ்வா}, இதனால் உனக்குப் பலத்திலும் பராக்கிரமத்திலும் மிகுந்தவனும், இந்திரனையே மரணதேவன் வசிப்பிடத்திற்கு அனுப்பும் வீரம் கொண்டவனுமான ஒரு மகன் தவச்சக்தியின் வல்லமையால் பிறந்திருப்பான்.
ஓ! மன்னா {யுவனாஸ்வா}, இவ்வகையிலேயே இந்நீர் என்னால் தயாரிக்கப்பட்டது. ஓ! மன்னா, இந்நீரைப் பருகியதால், நீ முற்றும் தகாத ஒன்றைச் செய்திருக்கிறாய். ஆனால் நடந்த விபத்திலிருந்து மீள்வது இப்போது இயலாது. நீ செய்த செயல் நிச்சயமாக விதியின் செயலாகத் தான் இருக்க வேண்டும். ஓ! பெரும் மன்னா {யுவனாஸ்வா}, எனது தவ உழைப்பின் அறத்தாலும், ஒப்புவிக்கப்பட்ட {பாராயணம் செய்யப்பட்ட} புனிதமான பாடல்களாலும் {மந்திரங்களாலும்} நிறைந்த அந்நீரைத் தாகத்தால் நீ பருகியதால், மேற்கண்ட குணங்கள் படைத்த ஒரு மகனை உனது சொந்த உடலில் இருந்தே பெற வேண்டும். உன்னைப் போன்ற வீரம் கொண்டவனும், இந்திரனுக்குச் சமமானவனுமான ஒரு மகனை நீ பெறுவாய். இப்படி ஒரு முடிவேற்பட்டதால், அற்புதமான விளைவு கொண்ட ஒரு வேள்வியை நாங்கள் உனக்காகச் செய்கிறோம். அதன்காரணமாகப் பிரசவ வலியோ அல்லது எந்தப் பிரச்சனையோ ஏற்படாது" என்றார்.
பிறகு நூறு வருடம் கடந்ததும், சூரியனைப் போன்ற ஒளிகொண்ட ஒரு மகன் {மாந்தாதா}, பெரும் ஆன்மாக் கொண்ட அம்மன்னனின் {யுவனாஸ்வனின்} இடதுபுறத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்தான். அந்த மகன் பெரும் பலத்தைக் கொண்டிருந்தான். யுவனாஸ்வன் இறக்காதது ஆச்சரியமாக இருந்தது. பிறகு பெரும் பலம்வாய்ந்த இந்திரன் அவனை {யுவனாஸ்வனின் அந்த மகனைக்} காண வந்தான். அப்போது தேவர்கள் அந்தப் பெரும் இந்திரனிடம், "இந்தப் பிள்ளை எதைக் குடிப்பான்?" என்று விசாரித்தனர். அப்போது இந்திரன் தனது சுட்டுவிரலை {ஆட்காட்டி விரல், forefinger} அவன் {அக்குழந்தையின்} வாய்க்குள் கொடுத்தான். பிறகு அந்த இடியைத் தாங்குபவன் {இந்திரன்}, "அவன் என்னைப் பருகுவான்" என்றான். ஆகவே தேவலோகவாசிகள் அனைவரும் கூடி அந்தப் பிள்ளைக்கு "என்னைப் பருகுவான்" என்ற பொருள் கொண்ட "மாந்தாதா" என்ற பெயரைச் சூட்டினர்.
பிறகு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா} இந்திரன் நீட்டிய சுட்டுவிரலைச் சுவைத்த அப்பிள்ளை, பெரும் பலத்தை அடைந்து, பதிமூன்று முழம் உயரத்திற்கு வளர்ந்தான். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, புனிதமான ஆயுத அறிவியலுடன் கூடிய அனைத்து புனிதமான கல்வியையும் ஆதிக்கம் நிறைந்த அப்பிள்ளை அடைந்தான். இவை அனைத்தையும் {அனைத்து ஞானத்தையும்} அவன் {மாந்தாதா} தனது எண்ணச்சக்தியின் துணை இல்லாமலேயே அடைந்தான். ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, ஆஜகவம் என்ற வில்லும், மருப்புகளாலான {விலங்கின் கொம்பு} எண்ணிலடங்கா கணைகளும், பிளக்க முடியாத கவசமும் உடனே, அந்த நாளே அவனை வந்தடைந்தன. இந்திரனால் அவன் அரியணையில் அமர்த்தப்பட்டு, மூன்று உலகத்தையும் நேர்மையான வழியில் மூன்று காலடிகளால் அடைந்த விஷ்ணுவைப் போல வெற்றிக் கொண்டான். அந்தப் பெரும் பலம் வாய்ந்த மன்னனின் {மாந்தாதாவின்} தேர்ச்சக்கரம் எந்த வழியில் சென்றாலும் அது (உலகம் முழுவதும்) தடுக்கமுடியாததாக இருந்தது. ரத்தினங்கள் அனைத்தும் தானாகவே அந்தத் தவத்தன்மை வாய்ந்த மன்னனிடம் வந்தன.
ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, பூமி மேல் இருக்கும் பாதை அந்த மன்னனுக்குச் சொந்தமானதே. இது செல்வம் நிறைந்ததாக இருக்கிறது. அவன் பல வகைப்பட்ட எண்ணிலடங்கா வேள்விகளைச் செய்து, அபரிமிதமான கொடைகளைப் புரோகிதர்களுக்குக் கொடுத்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் சக்தியும், அளவற்ற காந்தியும் கொண்ட அவன், புனிதக் குவியல்களை {Sacred piles} அமைத்து, பக்தி நிறைந்த அற்புதமான சாதனைகளைச் செய்து, இந்திரனின் அருகில் அமரும் நிலையை அடைந்தான். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அசைக்க முடியாத பக்தியால் கட்டளைகளையிட்டு, அதன் அறத்தின் தன்மையால் மட்டுமே கடல், ரத்தினங்களின் தோற்றுவாய் மற்றும் அனைத்து நகரங்களுடன் கூடிய பூமியை வென்றான். அவனால் உண்டாக்கப்பட்ட வேள்விக்களங்கள் பூமியெங்கும் எல்லாப்புறத்திலும் இருக்கின்றன. {அவனது வேள்வி மேடைகளால்} மறைக்கப்படாத இடம் எதுவும் இல்லை.
ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் பலம் வாய்ந்த ஏகாதிபதி {மாந்தாதா}, அந்தணர்களுக்குப் பத்தாயிரம் பத்மங்கள் {பத்துலட்சம் கோடி [1000000,00,00,000} எண்ணிக்கையிலான} பசுக்களைக் கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து பனிரெண்டு வருடங்களுக்கு {மழையில்லாமல்} பஞ்சமேற்பட்டபோது, அந்தப் பெரும்பலம்வாய்ந்த மன்னன் {மாந்தாதா} இடியைத் {வஜ்ரத்தைத்} தாங்குபவனான இந்திரனைக் கவனிக்காமல் {லட்சியம் செய்யாமல்}, அவன் {இந்திரன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே பயிர் செழிக்க மழை பொழிய ஏற்பாடு செய்தான். பெரும் கர்ஜனை செய்து கொண்டிருந்த, சந்திர வம்சத்தில் தோன்றிய மகிமையுள்ள காந்தார மன்னன், அவனது {மாந்தாதாவின்} அம்புகளால் அடித்துக் கொல்லப்பட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பண்படுத்தப்பட்ட ஆன்மா கொண்ட அவனால் நால்வகை மக்களும் காக்கப்பட்டனர். பெரும் சக்தி கொண்ட அவனது தவம் மற்றும் நேர்மையான வாழ்வின் அறத்தால் உலகம் எந்தத் தீங்கும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது, இந்த இடத்தில் தான் சூரியனைப் போன்ற அவன் {மாந்தாதா}, தேவர்களுக்கு வேள்வி செய்தான். இதைப் பார்! இதோ இருக்கிறது! குருக்களின் களத்திற்கு மத்தியில் இருக்கும் இந்தப் பாதையே அனைத்திலும் புனிதம் வாய்ந்தது. ஓ பூமியின் குருவே {யுதிஷ்டிரா}, உன்னால் கோரப்பட்ட படி நான் மாந்தாதாவின் பெரும் வாழ்வையும், அவன் பிறந்த முறையையும், இயல்புக்குமிக்க வகையிலான அவனது பிறப்பையும் உரைத்தேன்" என்றார் {லோமசர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, சக்திமிக்கத் தவசியான லோமசரால் இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, சோமகன் குறித்த புதிய கேள்விகளைக் கேட்டான்"
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.