Sunday, July 03, 2016

சஞ்சயனும் போரிட்டான்! - துரோண பர்வம் பகுதி – 094

Sanjaya did fought! | Drona-Parva-Section-094 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 10)

பதிவின் சுருக்கம் : துரோணரின் படைக்கும் பாண்டவப்படைக்கும் இடையில் நடந்த மோதல்; துரோணரோடு மோதிய திருஷ்டத்யும்னன் கௌரவப் படையை மூன்றாகப் பிரித்தது; போர்க்களத்தில் நடந்த நூற்றுக்கணக்கான தனிப்போர்கள்; இதை விவரித்துக் கொண்டிருந்த சஞ்சயனும், சேகிதானனுடன் தான் போரிட்டதாகச் சொல்வது; படையின் பின்புறத்தில் அஸ்வத்தாமனாலும், கர்ணனாலும் பாதுகாக்கப்பட்ட ஜெயத்ரதன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},  கௌரவப் படையைப் பிளந்து சென்ற பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் விருஷ்ணிகுலத்தோன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் மனிதர்களில் காளையான அந்தத் துரியோதனன் பின் தொடர்ந்து சென்ற பிறகு, பாண்டவர்கள் சோமகர்களுடன் சேர்ந்து கொண்டு, பெரும் ஆரவாரத்துடன் துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்தனர். பிறகு (அவர்களுக்கும் துரோணரின் துருப்புகளுக்கும் இடையில்) போர் தொடங்கியது. குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையே வியூகத்தின் முகப்பில் நடந்த அந்தப் போரானது, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. அக்காட்சி காண்போரை வியக்கச் செய்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியன் அப்போது உச்சிவானில் இருந்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையில் அம்மோதலானது இதற்கு முன்னர் நாம் காணாதவாறும், கேட்காதவாறும் இருந்தது.


திருஷ்டத்யும்னன் தலைமையிலானவர்களும், தாக்குவதில் சாதித்தவர்களுமான பார்த்தர்கள் அனைவரும், முறையாக அணிவகுத்துச் சென்று, துரோணரின் துருப்புகளைக் கணைமாரியால் மறைத்தனர். ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவரான துரோணரை எங்களுக்கு முன்பு நிறுத்திக் கொண்ட நாங்களும், பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} திரட்டப்பட்டிருந்த அந்தப் பார்த்தர்களை எங்கள் கணைகளால் மறைத்தோம். தேர்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அழகாகத் தெரிந்தவையுமான அந்தப் படைகள் இரண்டும், கோடைகால வானில், எதிர்க்காற்றுகளால் ஒன்றையொன்று நோக்கி ஈர்க்கப்படும் இரு பெரும் மேகத் திரள்களைப் போலத் தோன்றின. தங்களுக்குள் மோதிக் கொண்ட அவ்விரு படைகளும், மழைக்காலத்தில் நீர் பெருகும் கங்கை மற்றும் யமுனை ஆறுகளைப் போலத் தங்கள் வேகத்தை அதிகரித்தன.

தன் முன் வீசும் பல்வேறு விதங்களிலான ஆயுதங்களைக் காற்றாகக் கொண்டதும், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடன் கூடியதும், வீரர்கள் தரித்த கதாயுதங்களை மின்னலாகக் கொண்டதுமான குரு படையாலான அந்த வலிமைமிக்கக் கடும் மேகம், துரோணப் புயலால் உந்தப்பட்டு, இடையறாத கணைப் பொழிவெனும் தன் மழைத்தாரைகளைப் பொழிந்து, எரிந்து கொண்டிருந்த பாண்டவ நெருப்பை அணைக்க முற்பட்டது. கோடைகாலத்தில் கடலைக் கலங்கடிக்கும் ஒரு பயங்கரச் சூறாவளியைப் போலப் பிராமணர்களில் சிறந்த அந்தத் துரோணர் பாண்டவப்படையைக் கலங்கடித்தார். பெரும் ஆவேசத்துடன் தங்களை {போரில்} ஈடுபடுத்திக் கொண்ட பாண்டவர்கள், பலமான அணையைத் துடைத்தழிப்பதற்காக அதை நோக்கிப் பாயும் வலிமைமிக்க நீர்த்தாரைகளைப் போலத் துரோணரின் படையைப் பிளப்பதற்காக, அவரையே நோக்கி விரைந்தனர். எனினும் துரோணர், அந்தப் போரில் சீற்றத்துடன் {தம் படையை நோக்கி} வந்த பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் கேகயர்களை மிகக் கடும் நீரோட்டத்தைத் தடுத்து நிற்கும் அசையாத மலையொன்றைப் போலத் தடுத்தார். பெரும் பலத்தையும், வீரத்தையும் கொண்ட பிற மன்னர்கள் பலரும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பாண்டவர்களைத் தாக்கி, அவர்களைத் தடுக்கத் தொடங்கினர்.

மனிதர்களில் புலியான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, பகைவர் படையைப் பிளப்பதற்காகப் பாண்டவர்களுடன் சேர்ந்து துரோணரைத் தொடர்ச்சியாகத் தாக்கத் தொடங்கினான். உண்மையில் துரோணர், தம் கணைகளைப் பிருஷதன் மகன் மீது பொழிந்த போது, பின்னவனும் {திருஷ்டத்யும்னனும்} துரோணரின் மேல் தன் கணைகளைப் பொழிந்தான். தன் முன் வீசும் கத்திகள் மற்றும் வாள்கள் எனும் காற்றோடு கூடியதும், ஈட்டிகள், வேல்கள், ரிஷ்டிகள் ஆகியவற்றால் சூழப்பட்டதும், நாண்கயிறு எனும் மின்னலைக் கொண்டதும், (நாணொலியாகிய) வில்லொலியைத் தன் முழக்கங்களாகக் கொண்டதுமான திருஷ்டத்யும்ன மேகமானது, அனைத்துப் பக்கங்களிலும் ஆயுதங்களின் தாரைகளெனும் கல்மழையைப் பொழிந்தது.

தேர்வீரர்களில் முதன்மையானவர்களையும், பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளையும் கொன்ற அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, (தன் கணைமாரியால்) பகைவீரர்களின் படைப்பிரிவுகளுக்குள் பிரளயத்தைத் தோற்றுவிப்பதாகத் தெரிந்தது. மேலும் அந்தப் பிருஷதன் மகன், தன் கணைகளால் வீரர்களைத் தாக்கி, எதன் வழியாகச் செல்ல விரும்பினானோ, பாண்டவப் படைப்பிரிவினருக்கும் மத்தியில் இருந்த அந்தப் பாதைகள் அனைத்தில் இருந்தும் துரோணரை விரட்டினான். அந்தப் போரில் துரோணர் கடுமையாக முயன்றாலும், அவரது படையானது திருஷ்டத்யும்னனோடு மோதி மூன்று வரிசைகளாகப் பிரிந்தது. அதில் ஒன்று போஜர்களின் ஆட்சியாளனான கிருதவர்மனை நோக்கியும், மற்றொன்று ஜலசந்தனை நோக்கியும், {மூன்றாவதகாப்} பாண்டவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டவர்கள் துரோணரை நோக்கியும் சென்றனர். தேர்வீரர்களில் முதன்மையான துரோணர் தம் துருப்புகளை மீண்டும் மீண்டும் ஒருங்கிணைத்தார். வலிமைமிக்க வீரரனான திருஷ்டத்யும்னனோ அடிக்கடி தாக்கி அவற்றைப் பிரித்துக் கொண்டிருந்தான்.

உண்மையில் மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்த தார்தராஷ்டிரப் படை, மந்தையாளனால் பாதுகாக்கப்படாத பசு மந்தையானது இரை தேடும் விலங்குகளால் கொல்லப்படுவதைப் போலப் பாண்டவர்களாலும், சிருஞ்சயர்களாலும் மூர்க்கமாகக் கொல்லப்பட்டது. அந்தப் பயங்கரப் போரில், திருஷ்டத்யும்னனால் மலைக்கச் செய்யப்பட்ட வீரர்களைக் காலன் ஏற்கனவே விழுங்கிவிட்டதாகவே மக்கள் நினைத்தனர்.

தீய மன்னனின் நாட்டைப் பஞ்சம், நோய்கள் ஆகியவையும், திருடர்களும் அழிப்பதைப் போலவே, உமது படையும் பாண்டவர்களால் பீடிக்கப்பட்டது. ஆயுதங்கள் மற்றும் வீரர்களின் மேல் சூரியக் கதிர்கள் விழுந்ததாலும், படைவீரர்களால் எழுப்பப்பட்ட புழுதியாலும், அனைவரின் கண்களும் துன்புற்றன. அந்தப் பயங்கரப் போரில் கௌரவப் படையானது பாண்டவர்களால் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதால், கோபத்தில் நிறைந்த துரோணர், தம் கணைகளால் பாஞ்சாலர்களை எரிக்கத் தொடங்கினார். இந்தப்படையணிகளை நசுக்குவதிலும், தம் கணைகளால் {அவற்றைக்} கொல்வதிலும் ஈடுபட்டிருந்த துரோணரின் வடிவமானது சுடர்மிக்க யுகநெருப்பைப் போன்றாகியது. அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {துரோணர்}, அந்தப் போரில் தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கணையால் மட்டுமே துளைத்தார். அப்போதங்கே, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளைத் தாங்கிக்கொள்ளவல்ல வீரர்கள் எவரும் பாண்டவப் படையில் இல்லை.

சூரியனின் கதிர்களால் எரிக்கப்பட்டும், துரோணரின் கணைகளால் வெடித்தும், அந்தப் பாண்டவப் படைப்பிரிவுகள் களத்திலேயே சுழலத் தொடங்கின. அதே போல உமது படையும், பிருஷதன் மகனால் கொல்லப்பட்டு நெருப்பில் இருக்கும் உலர்ந்த காட்டைப் போல அனைத்து இடங்களிலும் எரிவதாகத் தெரிந்தது. துரோணர், திருஷ்டத்யும்னன் ஆகிய இருவரும், அந்த இரு படைகளையும் கொன்று கொண்டிருந்தபோது, தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்த இரு படையின் வீரர்களும், தங்கள் ஆற்றலின் எல்லை வரை சென்று எங்கும் போரிட்டுக் கொண்டிருந்தனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது படையிலோ, எதிரியின் படையிலோ அச்சத்தால் போரில் இருந்து ஓடிய ஒரு வீரனும் இருக்கவில்லை.

விவிம்சதி, சித்திரசேனன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான விகர்ணன் ஆகிய உடன்பிறந்த சகோதரர்கள், குந்தியின் மகனான பீமசேனனால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டனர். அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், பெரும் ஆற்றலைக் கொண்ட க்ஷேமதூர்த்தி ஆகியோர் (பீமசேனனுக்கு எதிராகப் போரிட்ட) உமது மகன்கள் மூவரையும் ஆதரித்தனர்.

பெரும் சக்தியும், உன்னதக் குல பிறப்பும் கொண்ட மன்னன் பாஹ்லீகன், தன் துருப்புகளுடனும், ஆலோசகர்களுடனும் {அமைச்சர்களுடனும்} சேர்ந்து திரௌபதியின் மகன்களைத் தடுத்தான். சைப்யன், கோவாசனர்களின் தலைவனான சைப்யன் [1], ஆயிரம் முதன்மையான வீரர்களுடன் சேர்ந்து கொண்டு, பெரும் ஆற்றலைக் கொண்டவனான காசிகளின் மன்னனுடைய மகனை எதிர்த்து அவனைத் தடுத்தான். மத்ரர்களின் ஆட்சியாளனான மன்னன் சல்லியன், சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பானவனும் குந்தியின் மகனுமான அரசன் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்டான்.

[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, "சிபி வம்சத்தவனான கோவாசனராஜன் சற்றேறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட யுத்தவீரர்களோடு சேர்ந்து பராக்கிரமமுள்ள காசி தேசத்தரசனான அபிபூவினுடைய குமாரனைத் தடுத்தான்" என்றிருக்கிறது.

துணிச்சலும், கோபமும் நிறைந்தவனான துச்சாசனன், தன் படைப்பிரிவுகளால் முறையாக ஆதரிக்கப்பட்டு, தேர்வீரர்களில் முதன்மையான சாத்யகியை அந்தப் போரில் கோபத்துடன் எதிர்த்து சென்றான். என் துருப்புகளுடன் கூடிய நான், கவசம்பூண்டு கொண்டு, ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, நானூறு முதன்மையான வில்லாளிகளால் ஆதரிக்கப்பட்டுச் சேகிதானனைத் தடுத்தேன் [2]. சகுனியோ, விற்கள், ஈட்டிகள், வாள்கள் தரித்த எழுநூறு காந்தார வீரர்களுடன்  மாத்ரியின் மகனை (சகாதேவனைத்) தடுத்தான்.

[2] "இந்த ஸ்லோகம் அனைத்து உரைகளிலும் காணப்படுகிறது. எனவே, போரில் தான் சாட்சியாகக் கண்டவற்றைத் திருதராஷ்டிரனிடம் சொல்வதை மட்டுமே சஞ்சயன் எப்போதும் செய்து கொண்டிருக்கவில்லை, ஆனால் சில சமயங்களில் போரிலும் அவன் பங்கேற்றான் என்பது இங்கே தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இவ்வரி, "நான் யுத்தசன்னத்தனாகிக் கவசத்தையணிந்து கொண்டு என்னுடைய படையோடும் நானூறு சிறந்த வில்லாளிகளோடும் சேகிதானனை எதிர்த்தேன்" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இவ்வரி காணப்படவில்லை.

இருபெரும் வில்லாளிகளான அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் தங்கள் நண்பனுக்காக (துரியோதனனுக்காகத்) தங்கள் ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு, தங்கள் உயிர்களைத் துச்சமாகக் கருதி, மத்ஸ்யர்களின் மன்னனான விராடனுடன் மோதினார்கள். மூர்க்கமாக முயன்ற மன்னன் பாஹ்லீகன் [3], எதிரிகள் அனைவரையும் தடுக்க வல்ல வீரனும், வெல்லப்படாதவனும், வலிமைமிக்கவனுமான யக்ஞசேனன் மகன் சிகண்டியைத் தடுத்தான். அவந்தியின் தலைவன் [4], சௌவீரர்களோடும், குரூரமான பிரபத்ரகர்களோடும் சேர்ந்து, பாஞ்சாலர்களின் இளவரசனான கோபக்காரத் திருஷ்டத்யும்னனைத் தடுத்தான். அலம்புசன், குரூர செயல்களைச் செய்பவனும், துணிவுமிக்கவனும், கோபத்தோடு போரிடச் சென்றவனுமான ராட்சசன் கடோத்கசனை எதிர்த்து வேகமாக விரைந்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான குந்திபோஜன், ஒரு பெரும் படையின் துணை கொண்டு, கடும் முகம் கொண்டவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அலம்புசனைத் தடுத்தான்.

[3] பாஹ்லீகன் திரௌபதியின் மகன்களோடு போரிட்டதாகவும் மேலே கண்டோம்.இங்கு சிகண்டியோடும் போரிடுகிறான். இது பின்னர் விவரிக்கப்படலாம்.

[4] இது அவந்தியின் விந்தானுவிந்தர்களில் ஒருவரா, வேறு எவருமா என்பது தெரியவில்லை.

இப்படியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படை வீரர்களுக்கும் அவர்களது படைவீரர்களுக்கும் இடையில் நூற்றுக்கணக்கான தனிப் போர்கள் நடைபெற்றன. சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பொறுத்தவரை, வில்லாளிகளில் முதன்மையானோர் பலராலும், எண்ணிக்கையில் தங்களுடன் கிருபரையும் கொண்ட தேர்வீரர்களாலும் பாதுகாக்கப்பட்டு, மொத்தப் படையின் பின்புறத்திலேயே அவன் {ஜெயத்ரதன்} தொடர்ந்து நீடித்தான். மேலும், அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன், முதன்மையான இருவீரர்களான துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} தன் வலப்புறத்திலும், சூதனின் மகனை {கர்ணனைத்} தன் இடப்புறத்திலும் தன் சக்கரங்களின் பாதுகாவலர்களாகக் கொண்டிருந்தான். மேலும் தன் பின்புறத்தைப் பாதுகாப்பதற்காகச் சோமதத்தன் தலைமையிலானவர்களும், நீதி அறிந்தவர்களும், போரில் சாதித்த வலிமைமிக்க வில்லாளிகளுமான கிருபர், விருஷசேனன், சலன் மற்றும் வெல்லப்பட முடியாத சல்லியன் [5] முதலிய எண்ணற்ற வீரர்களைக் கொண்டிருந்தான். குருவீரர்கள், சிந்துக்களின் ஆட்சியாளனைப் பாதுகாப்புக்காக இவ்வேற்பாடுகளைச் செய்துவிட்டு (பாண்டவர்களுடன்) போரிட்டனர்" {என்றான் சஞ்சயன்}.

[5] சல்லியன் யுதிஷ்டிரனோடு போரிட்டதாக மேலே ஒரு குறிப்பைக் கண்டோம், இங்கே ஜெயத்ரதனைப் பாதுகாப்போர் பட்டியலிலும் அவன் இருக்கிறான். ஒரு வேளை அவன் பதினான்காம் நாள் போரில் பின்னர் யுதிஷ்டிரனோடு போரிட்டிருக்கலாம். மேலும் துரோண பர்வம் பகுதி 93 மற்றும் 94 ஆகியன 14ம் நாள் போரில் அர்ஜுனனைத் தவிர வேறு பகுதிகளில் நடைபெற்ற போர்களின் முன்கதை சுருக்கமாக இருக்க வேண்டும்.


ஆங்கிலத்தில் | In English