Sunday, August 28, 2016

போரை விட்டோடிய கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 133

Karna fled forsaking the battle! | Drona-Parva-Section-133 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 49)

பதிவின் சுருக்கம் : பீமனால் தோற்கடிக்கப்பட்டுத் தேரை இழந்த கர்ணன், மற்றொரு தேரில் ஏறி வந்து மீண்டும் பீமனுடன் மோதியது; மீண்டும் தேரையிழந்த கர்ணன்; துரியோதனன் தன் தம்பி துர்முகனிடம் கர்ணனுக்குத் தேரளிக்கும்படி அனுப்பியது; துர்முகனைக் கொன்ற பீமன்; கர்ணனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த கடும்போர்; பீமனின் வலிமையால் பீடிக்கப்பட்டுப் போர்க்களத்தை விட்டு ஓடிய கர்ணன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பீமனால் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டவனான தேரற்ற கர்ணன், மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, பாண்டுவின் மகனை {பீமனை} வேகமாகத் துளைக்க ஆரம்பித்தான். (1) தங்கள் தந்தங்களால் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் இரு பெரும் யானைகளைப் போல அவர்கள், முழுதாக வளைத்து இழுக்கப்பட்ட தங்கள் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(2) அப்போது கணைப்பொழிவால் பீமனைத் தாக்கி பெருமுழக்கம் செய்த கர்ணன், மீண்டும் அவனை {பீமனை} மார்பில் தாக்கினான்.(3) எனினும் பதிலுக்குப் பீமன், பத்து நேரான கணைகளால் கர்ணனைத் தாக்கி, மீண்டும் அவனை {கர்ணனை} இருபது நேரான கணைகளால் தாக்கினான்.(4) பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணன் ஒன்பது கணைகளால் பீமனின் நடுமார்பைத் துளைத்து, ஒரு கூரிய கணையால் பின்னவனின் {பீமனின்} கொடிமரத்தையும் தாக்கினான்.(5) பதிலுக்குப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, வலிமைமிக்க யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போல, அல்லது குதிரையைச் சாட்டையால் தாக்கும் சாரதியைப் போலக் கர்ணனை அறுபத்து மூன்று {63} கணைகளால் துளைத்தான்.(6)


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {பீமனால்} ஆழத்துளைக்கப்பட்ட வீரக் கர்ணன், நாவால் தன் கடைவாயை நனைத்து, சினத்தால் கண்கள் சிவந்தான்.(7) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணன், வஜ்ரத்தை ஏவும் இந்திரனைப் போல, பீமசேனனின் அழிவுக்காக அனைத்தையும் துளைக்கவல்ல ஒரு கணையை அவன் {பீமன்} மீது ஏவினான்.(8) அழகிய இறகுகளைக் கொண்டதும், சூதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து ஏவப்பட்டதுமான அந்தக் கணை, அந்தப் போரில் பார்த்தனை {பீமனைத்} துளைத்துச் சென்று பூமிக்குள் ஆழ மூழ்கியது.(9)

அப்போது கோபத்தால் கண்கள் சிவந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன் ஒருக்கணமும் சிந்தியாமல், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், முழுதாக நான்கு முழம் நீளம் கொண்டதும், சக்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானதும், ஆறு பக்கங்களைக் கொண்டதுமான கனமிக்க ஒரு கதாயுதத்தை அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} மீது வீசினான். உண்மையில், இந்திரன் தன் வஜ்ரத்தால் அசுரர்களைக் கொல்வதைப் போலக் கோபத்தால் தூண்டப்பட்ட அந்தப் பாரதக் குலத்துக் காளை {பீமன்}, நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தவையுமான அதிரதன் மகனின் {கர்ணனின்} குதிரைகளை அக்கதாயுதத்தாலேயே கொன்றான். பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், க்ஷுரப்ரங்கள் இரண்டைக் கொண்டு கர்ணனின் கொடிமரத்தை அறுத்தான்.(10-12) பிறகு அவன் {பீமன்}, பெரும் எண்ணிக்கையிலான கணைகளைக் கொண்டு தன் எதிரியின் {கர்ணனின்} தேரோட்டியைக் கொன்றான். குதிரைகளற்ற, சாரதியற்ற, கொடிமரமற்ற அந்தத் தேரைக் கைவிட்ட கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியற்ற நிலையிலேயே தன் வில்லை வளைத்தபடி பூமியில் நின்றான். தேரை இழந்தாலும் தொடர்ந்து எதிரியைத் தடுத்த அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாக இருந்தது.(13-14)

மனிதர்களில் முதன்மையான அந்த அதிரதன் மகன் {கர்ணன்} தேரிழந்து இருப்பதைக் கண்ட துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (தன் தம்பியான) துர்முகனிடம், “ஓ! துர்முகா, ராதையின் மகன் {கர்ணன்}, பீமசேனனால் தன் தேரை இழந்திருக்கிறான்.(15-16) ஓ! பாரதா {துர்முகா} அந்த வலிமைமிக்கத் தேர்வீரனுக்கு {கர்ணனுக்கு} ஒரு தேரை அளிப்பாயாக” என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துர்முகன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}(17), கர்ணனை நோக்கி வேகமாக விரைந்து, தன் கணைகளால் பீமனை மறைத்தான். அந்தப் போரில் துர்முகன், சூதனின் மகனை ஆதரிக்க விரும்புவதைக் கண்ட(18) வாயு தேவனின் மகன் {பீமன்} மகிழ்ச்சியால் நிறைந்து தன் கடைவாயை {நாவால்} நனைக்கத் தொடங்கினான். பிறகு தன் கணைகளால் சிறிது நேரம் கர்ணனைத் தடுத்த(19) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, விரைவாகத் துர்முகனை நோக்கித் தன் தேரைச் செலுத்தினான். அக்கணத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர் முனை கொண்ட ஒன்பது நேரான(20) கணைகளால் பீமன் துர்முகனை யமலோகம் அனுப்பிவைத்தான் [1].

[1] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன் {?}, உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் 4ம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் 8ம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின் {?}, விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் அதே 8ம் நாள் போரிலும், குண்டபேதி {?}, சுஷேணன் {?}, தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரை துரோண பர்வம் பகுதி 126ல் 14ம் நாள் போரிலும், துர்ஜயன் என்று ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 132ல் அதே 14ம் நாள் போரிலும், துர்முகன் என்ற ஒருவனைத் துரோணபர்வத்தின் இந்தப் பகுதியில் அதே 14ம் நாள் போரிலும் கொன்றிருப்பதோடு சேர்த்தால், பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 37 பேரைக் கொன்றிருக்கிறான். {?} என்ற அடைப்புக்குறிகளுக்குள் மீண்டும் கூறப்பட்ட பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

துர்முகன் கொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இளவரசனின் {துர்முகனின்} தேரில் ஏறிய அதிரதன் மகன் {கர்ணன்} சூரியனைப் போலச் சுடர்விட்டபடி பிரகாசமாகத் தெரிந்தான். (கணைகளால்) தன் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு, குருதியால் குளித்த மேனியுடன் களத்தில் கிடக்கும் துர்முகனைக் கண்ட கர்ணன், கண்ணீர் நிறைந்த கண்களுடன் போரிடுவதிலிருந்து ஒருக்கணம் விலகினான். வீழ்ந்த அந்த இளவரசனை {துர்முகனை} வலம்வந்து, அவனை {துர்முகனை} அங்கேயே விட்ட(21-23) வீரக் கர்ணன், நீண்ட நெடிய அனல்மூச்சுகளை விட்டு {அடுத்து} என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கழுகின் இறகுகளைக் கொண்ட பதினான்கு {14} நாராசங்களைச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான். தங்கச் சிறகுள் மற்றும் பெரும் சக்தி ஆகியவற்றைக் கொண்டனவும், குருதியைக் குடிப்பனவுமான அக்கணைகள், பத்து திசைப்புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடியே ஆகாயத்தில் பறந்து சென்று சூதன் மகனின் {கர்ணனின்} கவசத்தைத் துளைத்து அவனது உயிர்க்குருதியைக் குடித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},(24-26) காலனால் ஏவப்பட்டுப் பொந்துக்குள் தங்கள் பாதி உடல்கள் நுழைந்த நிலையிலிருக்கும் கோபக்காரப் பாம்புகளைப் போல, ஓ! ஏகாதிபதி, அவை {அந்தக் கணைகள்} அவனது உடலை ஊடுருவி பூமிக்குள் மூழ்கிப் பிரகாசமாகத் தெரிந்தன.(27)

அப்போது அந்த ராதையின் மகன் {கர்ணன்} ஒருக்கணமும் சிந்தியாமல், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பதினான்கு கடுங்கணைகளால் பதிலுக்குப் பீமனைத் துளைத்தான். கடும் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள் பீமனின் வலக்கரத்தைத் துளைத்தபடி(28, 29) மரத்தோப்புக்குள் நுழையும் பறவைகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. பூமியைத் அக்கணைகள், அஸ்த மலைகளுக்குச் செல்லும் சூரியனின் சுடர்மிக்கக் கதிர்களைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தன.(30) அந்தப் போரில் அனைத்தையும் துளைக்கவல்ல அக்கணைகளால் துளைக்கப்பட்ட பீமன்(31), நீரோடைகளை வெளியிடும் ஒரு மலையைப் போல அபரிமிதமான இரத்த ஓடைகளைச் சிந்தத் தொடங்கினான். பிறகு பீமன் கருடனின் வேகத்தைக் கொண்ட மூன்று கணைகளால் சூதன் மகனை {கர்ணனைப்} பதிலுக்குத் துளைத்து, மேலும் பின்னவனின் {கர்ணனின்} தேரோட்டியையும் ஏழு கணைகளால் துளைத்தான்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் வலிமையால் இப்படிப் பீடிக்கப்பட்ட கர்ணன், மிகவும் துன்புற்றவனானான்.(32-33) பிறகு அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் {கர்ணன்}, போரைக் கைவிட்டு, வேகமான தன் குதிரைகளால் சுமக்கப்பட்டுத் தப்பி ஓடினான் [2]. எனினும், அதிரதனான பீமன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் வில்லை வளைத்தபடியே அந்தப் போரில் நிலைத்து, சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}(34)

[2] வேறொரு பதிப்பில், “பீமனுடைய அம்புகளால் அடிக்கப்பட்டுத் தளர்ச்சியடைந்தவனான அந்தக் கர்ணன் வேகமுள்ள குதிரைகளோடு பெரும்பயத்தினால் யுத்தரங்கத்தைவிட்டு ஓடினான்” என்றிருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 133ல் வரும் மொத்த சுலோகங்கள் 34


ஆங்கிலத்தில் | In English