Saturday, December 21, 2019

திருதராஷ்டிரன் தீர்மானம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 03

The resolution of Dhritarashtra! | Asramavasika-Parva-Section-03 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 03)


பதிவின் சுருக்கம் : பீமனின் நிந்தனை; காந்தாரியுடன் காட்டுக்குச் செல்லத் துணிந்த திருதராஷ்டிரன்; நண்பர்களையும், யுதிஷ்டிரனையும் அழைத்துத் தன் தீர்மானத்தைத் தெரிவித்தது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குரு நாட்டில் வாழ்ந்த மக்கள், மன்னன் யுதிஷ்டிரனுக்கும் மற்றும் துரியோதனனின் தந்தை {திருதராஷ்டிரன்} ஆகியோருக்கிடையில் இருந்த நல்லுறவில் எந்த மாறுபாட்டையும் கவனிக்கத் தவறினர்.(1) குரு மன்னன் (திருதராஷ்டிரன்) தன் தீய மகனை நினைவுகூர்ந்த போதெல்லாம் தன் இதயத்தில் அவனால் பீமனிடம் நட்புணர்வற்ற நிலையை உணராமல் இருக்க முடியவில்லை.(2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தீயதாகத் தோன்றிய இதயத்தால் தூண்டப்பட்டவனான பீமசேனனாலும் மன்னன் திருதராஷ்டிரனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(3) விருகோதரன் {பீமன்} கமுக்கமாக அந்த முதிர்ந்த மன்னனுக்குப் {திருதராஷ்டிரனுக்குப்} பிடிக்காத செயல்கள் பலவற்றைச் செய்தான். வஞ்சகமான பணியாட்களைக் கொண்டு அவன் தன் பெரிய தந்தையின் கட்டளைகளை மீறச் செய்தான்.(4) பீமன், ஒரு நாள், தன் நண்பர்களுக்கு மத்தியில் கக்கங்களின் அறைந்துகொண்டு, திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரி கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அந்த முதிர்ந்த மன்னனின் தீய ஆலோசனைகளையும், அவனுடைய செயல்கள் சிலவற்றையும் நினைவுகூர்ந்தான்.


கோபம் நிறைந்தவனான விருகோதரன் {பீமன்}, தன் பகைவர்களான துரியோதனன், கர்ணன் மற்றும் துச்சாசனனை நினைவுகூர்ந்து,(5,6) தன்னாவலுக்கு வழி கொடுத்து, இந்தக் கடுஞ்சொற்களைச் சொன்னாள்: {பீமன்}, "பல்வேறு வகை ஆயுதங்களுடன் போரிடவல்லவர்களான அந்தக் குருட்டு மன்னின் மகன்கள் அனைவரையும், இரும்பு தண்டங்களுக்கு ஒப்பான என்னுடைய இந்த இரு கைகளாலேயே மறு உலகத்திற்கு அனுப்பி வைத்தேன்.(7) உண்மையில், இரும்பு கதாயுதங்களைப் போலத் தெரிபவையும், பகைவர்களால் வெல்லப்பட முடியாதவையுமான என்னுடைய இந்த இரு கைகளின் அணைப்புக்குள்ளேயே திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரும் அழிவை அடைந்தனர். யானையின் துதிக்கைக்கு ஒப்பானவையும், உருண்டு நன்கு திரண்டவையுமான என் இரு கைகள் இவையே. இவற்றின் அணைப்புக்குள்ளேயே திருதராஷ்டிரரிடன் மூட மகன்கள் அனைவரும் அழிவைச் சந்தித்தனர்.(9) சந்தனக் குழம்பு பூசப்பட்டவையும், அந்த அலங்காரத்திற்குத் தகுந்தவையுமான என்னுடைய இந்த இரு கைகளாலேயே துரியோதனனும், அவனுடைய மகன்களும், உற்றார் உறவினரும் மறுஉலகத்திற்கு அனுப்பப்பட்டனர்" {என்றான்}.(10)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, விருகோதரன் சொன்ன இவற்றையும், உண்மையில் ஈட்டிகளுக்கு ஒப்பான இன்னும் வேறு சொற்களையும் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் உற்சாகத்தை இழந்து, கவலையடைந்தான்.(11) எனினும், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவளும், காலம் தன் போக்கில் கொண்டு வருபவற்றை அறிந்தவளுமா ராணி காந்தாரி அவற்றைப் பொய்யெனக் கருதினாள்[1].(12) ஓ! ஏகாதிபதி, பதினைந்து வருடங்கள் கடந்திருந்தபோது, பீமனின் சொல்லீட்டிகளால் (தொடர்ந்து) பீடிக்கப்பட்ட மன்னன் திருதராஷ்டிரன், மனந்தளர்ச்சியினாலும், துன்பத்தாலும் துளைக்கப்பட்டான்.(13) எனினும், குந்தியின் மகனான யுதிஷ்டிரனோ, வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனோ, குந்தியோ, பெரும்புகழைக் கொண்ட திரௌபதியோ, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களும், திருதராஷ்டிரனின் விருப்பங்களைக் கேட்ட பிறகே எப்போதும் செயல்படுபவர்களுமான மாத்ரியின் இரு மகன்களோ {நகுல சகாதேவர்களோ} இதை அறிந்தார்களில்லை.(14) மன்னன் சொல்வதைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரட்டையர்கள் ஒருபோதும் அந்த முதிர்ந்த மன்னனுக்கு ஏற்பில்லாத எதையும் சொல்வார்களில்லை. அப்போது திருதராஷ்டிரன் ஒருநாள் நம்பிக்கையுடன் தன் நண்பர்களைக் கௌரவித்தான். கண்ணீர் நிறைந்த கண்களுடன் பேசிய அவன், அவர்களிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்.(15)

[1] கும்பகோணம் பதிப்பில், "திருதராஷ்டிரராஜன் இவைகளும், மற்றுமுள்ளவைகளுமான விருகோதரனுடைய சல்யம் போன்ற பலவிதமான அந்த வார்த்தைகளைக் கேட்டு மனவருத்தமடைந்தான். சிறந்த புத்தியுள்ளவளும், காலத்தின் மாறுதலை உணர்ந்தவளும், எல்லாத் தர்மங்களையும் அறிந்தவளுமான காந்தாரி தேவியும் அந்த அப்பிரியமான வசனங்களைக் கேட்டு மேன்மை பெற்றவளான குந்தியை உற்றுப் பார்த்துப் பீமனைச் சபிக்கும் விஷயத்தில் புத்தியைச் செலுத்தவில்லை" என்றிருக்கிறது.

திருதராஷ்டிரன், "குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} எவ்வாறு அழிவு ஏற்பட்டது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். என் ஆலோசனைகள் அனைத்தையும் கௌரவர்கள் அங்கீகரித்திருந்தாலும், நான் செய்த குற்றத்தாலேயே அவை அனைத்தும் நடந்தன.(16) மூடனான நான், தீய மனம் கொண்டவனும், உற்றாரின் அச்சத்தைப் பெருக்குபவனுமான துரியோதனனை குருக்களின் ஆட்சியாளனாக நிறுவினேன்.(17) வாசுதேவன் {கிருஷ்ணன்}, "தீய புத்தி கொண்ட இந்த இழிந்தவனும், அவனுடைய நண்பர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும்" என்று என்னிடம் சொன்னான்[2]. பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சொற்களுக்கு நான் செவிமடுக்கவில்லை. ஞானிகள் அனைவரும் அதே நல்லாலோசனையையே எனக்குச் சொன்னார்கள். விதுரன், பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரும் அதையே சொன்னார்கள். புனிதரும், உயர் ஆன்மா கொண்டவருமான வியாசரும், சஞ்சயனும், காந்தாரியும் அதையே சொன்னார்கள். எனினும், பெற்ற பாசத்தில் மூழ்கிய நான் அந்த ஆலோசனையைப் பின்பற்றவில்லை. அப்போது அதைப் புறக்கணித்ததற்காக இப்போது நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.(18-20)

[2] கும்பகோணம் பதிப்பில், "புத்திரனிடத்தில் சினேகத்திற்கு வசப்பட்டவனும், கெட்ட புத்தியுள்ளவனுமான நான், சிறந்த பொருளுள்ள கிருஷ்ணனுடைய வாக்கியத்தையும், "பாபியான இந்தத் துர்யோதனனை நன்கு கொன்றுவிட" என்று வித்வான்களான விதுரன், பீஷ்மர், துரோணர், கிருபர், மகாத்மாவான வியாஸபகவான், ஸஞ்சயன் ஆகிய இவர்களும் காந்தாரியும் அடிக்கடி சொன்ன நன்மையையும் கேட்கவில்லை" என்றிருக்கிறது.

தந்தைமார், பாட்டன்மாரிடம் இருந்து அடைந்த சுடர்மிக்கச் செல்வத்தை, அனைத்துத் தகுதிகளும்வாய்ந்த உயர் ஆன்ம பாண்டவர்களிடம் கொடுக்காததற்கும் நான் மனம் வருந்துகிறேன்.(21) கதனின் அண்ணன் மன்னர்களின் அழிவை முன்பே கண்டான் {உணர்ந்தறிந்தான்}; எனினும் அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அந்த அழிவே உயர்ந்த நன்மையெனக் கருதினான்[3].(22) என்னுடைய துருப்புகளின் பல அனீகங்கள் {அனீகினிகள்} அழிவையடைந்தன. ஐயோ, இந்த விளைவுகள் அனைத்தாலும் என் இதயம் ஆயிரம் ஈட்டிகளால் பிளக்கப்படுகிறது.(23) தீய புத்தி கொண்டவனான நான், பதினைந்து வருடங்கள் கழிந்த பிறகு என் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யப் போகிறேன்.(24)

[3] "பூமியானவள், உயிரினங்களின் பெருக்கத்தால் உண்டான சுமையைப் பொறுக்கமுடியாமல், அந்தச் சுமையைக் குறைக்கப் பெரும்பாட்டனிடம் வேண்டினாள். தேவையானதைச் செய்யுமாறு பெரும்பாட்டன் விஷ்ணுவைத் தூண்டினான். எனவே பூமியின் சுமையைக் குறைக்க விஷ்ணு கிருஷ்ணனாகப் பிறந்தான் என்பது இங்கு நினைவில் கொள்ளப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இப்போது, நாளின் நான்காம் காலத்திலோ, சில வேளைகளில் எட்டாம் காலத்திலோ முறையான நோன்புடன் தாகத்தை {பசியைத்} தணித்துக் கொள்வதற்காக மட்டுமே சிறிதளவு உணவை உண்கிறேன். காந்தாரி இதையறிவாள்.(25) என் பணியாட்கள் அனைவரும் நான் உண்கிறேன் என்று கருதுவார்கள். யுதிஷ்டிரனிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக மட்டுமே நான் என் செயல்களை மறைத்தேன். ஏனெனில், பாண்டுவின் மூத்தமகன் என் நோன்பை அறிய நேர்ந்தால், பெருந்துன்பத்தை அடைவான்.(26) தோலாடை உடுத்திக் கொண்டு, தரையில் சிறிதளவு குசப் புற்களைப் பரப்பி, அதில் கிடந்து அமைதியான ஜபங்களில் நான் என் காலத்தைக் கழிக்கிறேன் பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும் இதே போன்ற நோன்புகளில் தன் காலத்தைக் கழிக்கிறாள்.(27) போரில் புறமுதுகிடாதவர்களான நூறு மகன்களை இழந்த நாங்கள் இவ்வாறே நடந்து வருகிறோம். எனினும், என் பிள்ளைகளுக்காக நான் வருந்தவில்லை. க்ஷத்திரியக் கடமைகளை நோற்றே அவர்கள் அனைவரும் இறந்திருக்கின்றனர்" என்றான் {திருதராஷ்டிரன்}.(28)

இந்தச் சொற்களைச் சொன்ன அந்த முதிர்ந்த மன்னன், மீண்டும் குறிப்பாக யுதிஷ்டிரனிடம், "யதுகுல இளவரசியின் மகனே {குந்தியின் மகனே}, நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் சொல்வதைக் கேட்பாயாக.(29) ஓ! மகனே, இவ்வளவு வருடங்களும் உன்னால் பேணி வளர்க்கப்பட்டு நான் வாழ்ந்திருக்கிறேன். (உன் உதவியைக் கொண்டு) நான் பெரும் அளவு கொடைகளைக் கொடுத்திருகிகறேன், மீண்டும் மீண்டும் சிராத்தங்களைச் செய்திருக்கிறேன்[4].(30)

[4] "’மஹாதானம்’ என்பது யானைகள், படகுகள், தேர்கள், குதிரைகள் முதலிய கொடைகளைக் குறிக்கிறது. இவற்றை ஏற்பதனால் ஒரு பிராமணன் தன் நிலையில் இருந்து வீழ்ந்துவிடுவான் என்பதனால் இத்தகைய கொடைகளை அனைவரும் ஏற்பதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, என்னால் முடிந்த அளவுக்குப் பெரிதான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டியிருக்கிறேன். இந்தக் காந்தாரி, மகன்களை இழந்தவளாக இருப்பினும், என்னைப் பார்த்துக் கொண்டே பெரும் கௌரவத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறாள்.(31) திரௌபதியிடம் பெருங்குற்றமிழைத்தவர்களும், உன் செழிப்பைக் களவாடியவர்களுமான அந்தக் கொடிய பாவிகள் அனைவரும் தங்கள் வகைக்கான நடைமுறைக்கு ஏற்புடைய வகையிலேயே போரில் கொல்லப்பட்டு இவ்வுலகைவிட்டுச் சென்றுவிட்டனர்.(32) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நான் அவர்களுக்காக எதையும் செய்ய வேண்டியதில்லை. போரை நோக்கிய முகங்களுடன் கொல்லப்பட்ட அவர்கள் ஆயுததாரிகளுக்கான உலகங்களை அடைந்துவிட்டனர்.(33) நான் இப்போது எனக்கும், காந்தாரிக்குமான நன்மை மற்றும் புண்ணியங்களை அடைய வேண்டும். ஓ! பெரும் மன்னா, எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்.(34) அறவோர் அனைவரிலும் முதன்மையானவன் நீ. மன்னனே உயிரினங்கள் அனைத்திற்கும் ஆசானாவான். அதற்காகவே நான் இவ்வாறு சொல்கிறேன்.(35)

ஓ! வீரா {யுதிஷ்டிரா}, ஓ! மன்னா, உன் அனுமதியுடன், கந்தலையும், மரவுரியையும் தரித்துக் கொண்டு, காந்தாரியுடன் சேர்ந்து காட்டுக்குச் செல்லப் போகிறேன்.(36) நான் காட்டில் வாழ்ந்தவாறு உனக்கு எப்போதும் ஆசிகூறிக் கொண்டு இருப்பேன். ஓ! மகனே, முதுமை நேரும் போது அரசுரிமையைத் தங்கள் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு, காட்டு வாழ்வுமுறையைப் பின்பற்றிச் செல்வது நம் குலத்தவரின் வழக்கம். ஓ! வீரா, அங்கே காற்றை மட்டுமே உண்டு, உணவனைத்தையும் கைவிட்டு, என் மனைவியுடன் சேர்ந்து நான் கடுந்தவங்களைச் செய்வேன்.(37,38) ஓ! மகனே, நீ மன்னனாக இருப்பதால் அந்தத் தவங்களில் உனக்கும் பங்குண்டு. மன்னர்களுக்குத் தங்கள் நாட்டில் நடைபெறும் மங்கல மற்றும் மங்கலமற்ற செய்லகளில் பங்குண்டு[5]" என்றான் {திருதராஷ்டிர்ன}.(39)

[5] "மன்னன், தன் பாதுகாப்பின் கீழ் வாழும் முனிவர்கள் செய்யும் தவங்களில் ஆறில் ஒரு பங்கைப் பெறுவான். அதே போல, தன் நாட்டில் நடைபெறும் தீச்செயல்களின் பாவங்களிலும் அதே அளவு பங்கைப் பெறுவான். ஏனெனில் மன்னனின் கண்காணிப்பு இல்லாததாலேயே அத்தகைய தீச்செயல்கள் அரங்கேறுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, நீர் இவ்வாறு துயருறுகையின் அரசுரிமை எனக்கு உவப்பாகவே இல்லை. தீய புத்தி கொண்டவனும், ஆட்சி இன்பங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், உண்மையான காரியங்களில் கவனமற்றவனுமான எனக்கு ஐயோ.(40) ஐயோ, நீர் இவ்வளவு காலம் துன்பத்தில் பீடிக்கப்பட்டவராக, உணவைத் தவிர்த்து உண்ணா நோன்புகளினால் மெலிந்து வெறுந்தரையில் படுத்துக் கிடப்பதை நானும் என் தம்பிகளும் அறியாமல் இருந்தோம்.(41) ஐயோ, எனக்கு நம்பிக்கையை அளித்துப் பின்பு இவ்வளவு துயரத்தை அடைந்திருக்கும் ஆழ்ந்த புத்தியுடைய உம்மால் மூடனான நான் வஞ்சிக்கப்பட்டேன்.(42) ஓ! மன்னா, நீர் இவ்வளவு பீடிக்கப்பட்டிருக்கும்போது, எனக்கு நாட்டினாலோ, அனுபவிக்கத் தகுந்த பொருட்களினாலோ பயனென்ன? வேள்விகளினாலும், மகிழ்ச்சியினாலும் பயனென்ன?(43) நான் என் நாட்டைப் பிணியாகவும், என்னைப் பீடிக்கப்பட்டவனாகவும் கருதுகிறேன். நான் துயரில் மூழ்கியிருந்தாலும், நான் உம்மிடம் சொல்லும் இந்தச் சொற்களால் பயனென்ன?(44) எங்கள் தந்தை நீர், எங்கள் தாயும் நீர்; எங்கள் பெரியோரில் முதன்மையானவர் நீர். நீர் இல்லாமல் நாங்கள் எவ்வாறு வாழப் போகிறோம்?(45)

ஓ! மன்னர்களில் சிறந்தவரே, உம் மடியில் பிறந்த யுயுத்சுவோ, நீர் விரும்பும் வேறு எவரோ மன்னனாகட்டும்.(46) நான் காட்டுக்குச் செல்கிறேன். நீர் நாட்டை ஆள்வீராக. புகழ்க்கேட்டினால் ஏற்கனவே எரிந்திருக்கும் என்னை மேலும் எரிப்பது உமக்குத் தகாது.(47) நான் மன்னனல்ல. நீரே மன்னன். நான் உமது விருப்பத்தைச் சார்ந்தே இருக்கிறேன். என் ஆசானான உமக்கு நான் அனுமதியளிக்க எவ்வாறு துணிவேன்?(48) ஓ! பாவமற்றவரே, சுயோதனனால் {துரியோதனனால்} எங்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக நான் என் இதயத்தில் எவ்வித மனக்கசப்பையும் வளர்த்ததில்லை. இவ்வாறு நடக்க வேண்டுமென விதிக்கப்பட்டிருக்கிறது. நாங்களும், பிறரும் (விதியால்) திகைப்படையச் செய்யப்பட்டோம்.(49) துரியோதனனையும், பிறரையும் போலவே நாங்களும் உமது பிள்ளைகளே. குந்தியைப் போலவே காந்தாரியும் எங்கள் தாய் என்பதே என் நம்பிக்கை.(50)

ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரா}, நீர் எங்களை விட்டுக் காட்டுக்குச் சென்றால், நானும் உம்மைப் பின்தொடர்ந்து வருவேன். என் ஆன்மாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன்.(51) கடல்களைக் கச்சையாகக் கொண்டதும், இவ்வளவு செல்வம் நிறைந்ததுமான பூமியானது {திருதராஷ்டிரராகிய} நீரில்லாமல் எனக்கு இன்பமளிக்காது.(52) இவை யாவும் உமக்குரியவை. நான் தலைவணங்கி உம்மை நிறைவடையச் செய்கிறேன். ஓ! மன்னர்களின் மன்னா, நாங்கள் அனைவரும் உம்மைச் சார்ந்திருப்பவர்கள். உமது இதயத்தில் இருக்கும் நோய் விலகட்டும்.(53) ஓ! பூமியின் தலைவா, உமக்கு நேர்ந்த இவையாவும் விதியால் நேர்ந்தவையே. நற்பேற்றினால் உமக்குப் பணிவிடை செய்வதாலும், உமது ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து அவற்றைச் செயற்படுத்துவதாலும் உமது இதயத்தில் இருக்கும் நோயில் இருந்து உம்மை விடுவித்து விடலாம் என நான் எண்ணினேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.(54)

திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! மகனே, என் மனம் தவத்தில் நிலைத்திருக்கிறது. ஓ! பலமிக்கவனே, நான் காட்டுக்கு ஓயச் செல்வது நம் குல வழக்கமாகும்.(55) ஓ! மகனே, நான் உன் பாதுகாப்பின் கீழ் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நான் பல வருடங்கள் மதிப்புடன் உன்னால் தொண்டாற்றப்பட்டேன். இப்போது நான் வயது முதிர்ந்தவன். ஓ! மன்னா (காட்டை வசிப்பிடமாகக் கொள்ள) எனக்கு அனுமதியளிப்பதே உனக்குத் தகும்" என்றான்".(56)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இச்சொற்களைச் சொன்னவனும், அம்பிகையின் மகனுமான மன்னன் திருதராஷ்டிரன், நடுங்கிக் கொண்டே தன் கைகளைக் கூப்பி, உயர் ஆன்ம சஞ்சயனிடமும், பெருந்தேர்வீரரான கிருபரிடமும், மேலும் இந்தச் சொற்களைச் சொன்னான்: {திருதராஷ்டிரன்}, "நான் உங்கள் மூலமாக மன்னனை வேண்ட விரும்புகிறேன்.(57,58) என் வயதின் பலவீனத்தாலும், களைத்துப் பேசிக் கொண்டிருப்பதாலும், என் மனம் உற்சாகமிழக்கிறது, என் வாய் உலர்கிறது" என்றான்.(59) இவ்வாறு சொன்னவனும், செழிப்பால் அருளப்பட்டவனும், குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனும், அற ஆன்மா கொண்டவனுமான அந்த முதிர்ந்த மன்னன், காந்தாரியின் மீது சாய்ந்து, திடீரென உயிரையிழந்தவனைப் போலத் தெரிந்தான்.(60) பகைவீரர்களைக் கொல்பவனுமான குந்தியின் அரச மகன்{யுதிஷ்டிரன்}, நினைவிழந்த ஒருவனைப் போல இவ்வாறு அமர்ந்திருக்கும் அவனை {திருதராஷ்டிரனைக்} கண்டு கடுங்கவலையடைந்தான்.(61)

யுதிஷ்டிரன் , "ஐயோ, நூறாயிரம் யானைகளுக்கு இணையான பலத்தைக் கொண்ட மன்னர், ஐயோ இன்று பெண் மீது சாய்ந்து அமர்ந்திருக்கிறார்.(62) ஐயோ, முன்பொரு சந்தர்ப்பத்தில் பீமனின் இரும்புச் சிலையைத் துண்டுகளாகக் குறைத்த ஒருவர் இன்று பலவீனமான பெண்ணின் மீது சாய்ந்திருக்கிறார்[6].(63) அறமற்ற எனக்கு ஐயோ. என் புத்திக்கு ஐயோ. என் சாத்திர அறிவுக்கு ஐயோ. இந்தப் பூமியின் அதிபதி இந்நிலையில் கிடக்கக் காரணமான எனக்கு ஐயோ.(64) நானும் என் ஆசானைப் போல உண்ணா நோன்பிருக்கப் போகிறேன். உண்மையில், இந்த மன்னரும், பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும் உணவைத் தவிர்த்தால் நான் உண்ணா நோன்பிருப்பேன்" என்றான்".(65)

[6] திருதராஷ்டரின் இரும்புச் சிலையை உடைத்த நிகழ்வு  ஸ்திரீ பர்வம் 12ம் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அனைத்துக் கடமைகளையும் அறிந்த பாண்டவ மன்னன், அப்போது தன் கையாலேயே குளிர்ந்த நீரை எடுத்து அந்த முதிர்ந்த ஏகாதிபதியின் மார்பிலும், முகத்திலும் மென்மையாகத் தேய்த்தான்.(66) மங்கலமானதும், நறுமணமிக்கதும், நகைகளையும் {ரத்தினங்களையும்}, மருத்துவ மூலிகைகளையும் {ஔஷதிகளையும்} கொண்டதுமான அந்த மன்னனுடைய கைகளின் தீண்டலால் {அந்த பாணிஸ்பரிசத்தால்} திருதராஷ்டிரன் தன்னுணர்வுகள் {பிரஜ்ஞை} மீண்டான்[7].(67)

[7] "முற்காலத்தில் மன்னர்களும், உன்னத மனிதர்களும் தங்கள் கரங்களில் நகைகளையும், மருத்துவ மூலிகைகளையும் அணிந்தனர். மருத்துவ மூலிகைகள் குடுவை போன்ற தங்க தாயத்துகளில் அடைக்கப்பட்டிருந்தன. நகைகளும், மருத்துவ மூலிகைகளும் பல தீமைகளில் இருந்து பாதுகாக்கின்றன என்று நம்பப்பட்டது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

திருதராஷ்டிரன், "ஓ! பாண்டுவின் மகனே, உன் கையால் மீண்டும் என்னைத் தீண்டுவாயா, நீ என்னைத் தழுவுவாயாக. ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, உன் கையின் மங்கலத் தீண்டலால் என்னுணர்வுகள் மீண்டன.(68) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நான் உன் தலையை முகர விரும்புகிறேன். உன் கைகளின் அரவணைப்பு எனக்கு உயர்ந்த நிறைவை அளிக்கின்றன.(69) இது நாளின் எட்டாம் காலமாகும், நான் உணவு உண்ணும் காலமாகும். ஓ! குரு குலத்தின் குழந்தாய், நான என் உணவை உண்ணாததால் நகர முடியாத அளவுக்குப் பலவீனமாக இருக்கிறேன்.(70) உன்னிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டிருந்ததில் நான் மிகவும் களைத்திருக்கிறேன். ஓ! மகனே, அதனால் உற்சாகமிழந்தவனாகி மயக்கமடைந்தேன்.(71) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, உயிர்ப்பூட்டும் விளைவுகளில் அமுதத்துக்கு ஒப்பான உன் கைகளின் தீண்டலைப் பெற்றவுடன் நான் என் உணர்வுகளை மீண்டும் பெற்றேன்" என்றான் {திருதராஷ்டிரன்}".(72)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதா, தன் தந்தையின் அண்ணனால் {திருதராஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அன்பினால் அவனது உடலெங்கும் மென்மையாகத் தீண்டினான்.(73) உயிர் மூச்சுகள் மீண்ட மன்னன் திருதராஷ்டிரன் தன் கைகளால் பாண்டுவின் மகனை ஆரத் தழுவி கொண்டு அவனது தலையை முகர்ந்தான்.(74) விதுரனும், பிறரும் பெருந்துயரால் உரக்க அழுதனர். எனினும், கடுங்கவலையின் விளைவால் அவர்கள் அந்த முதிர்ந்த மன்னனிடமோ, பாண்டுவின் மகனிடமோ ஏதும் சொல்லாதிருந்தனர்.(75) அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளான காந்தாரி, மனவுரத்தால் நிறைந்த தன் இதயத்தில் கவலையைப் பொறுத்துக் கொண்டு ஒன்றும் பேசாதிருந்தாள்.(76) வேறு பெண்களும், அவர்களுக்கு மத்தியில் இருந்த குந்தியும் பெரிதும் துன்புற்றனர். அவர்கள் அந்த முதிர்ந்த மன்னனைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டு அதிகமான கண்ணீரைச் சொரிந்து அழுதனர்.(77)

அப்போது திருதராஷ்டிரன், மீண்டும் யுதிஷ்டிரனிடம் இந்தச் சொற்களில், "ஓ! மன்னா, தவம் பயில எனக்கு நீ அனுமதியளிப்பாயாக.(78) ஓ! மகனே, தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதால் என் மனம் பலவீனமடைகிறது. ஓ! மகனே, இதற்குப் பிறகும் எனைத் துன்புறுத்துவது உனக்குத் தகாது" என்றான்.(79)

குரு குலத்தில் முதன்மையான அவன் {திருதராஷ்டிரன்}, யுதிஷ்டிரனிடம் இவ்வாறு சொன்னபோது, அங்கிருந்த போர்வீரர்கள் அனைவரிடம் இருந்தும் உரத்த ஓலம் எழுந்தது[8].(80) பெருங்காந்தியைக் கொண்டவனான தன் அரசத் தந்தை மெலிந்து மங்கியவனாக இருப்பதையும், விரும்பத்தகாத நிலைக்குக் குறைக்கப்பட்டிருப்பதையும், உண்ணா நோன்புகளால் சிதைந்திருப்பதையும், தோலால் போர்த்தப்பட்ட எலும்புக்கூட்டைப் போலத் தெரிவதையும் கண்டு, தர்மனின் மகனான யுதிஷ்டிரன் துயரால் கண்ணீர் சிந்தி, மீண்டும் இந்தச் சொற்களைச் சொன்னான்.(81,82) {யுதிஷ்டிரன்}, "ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, வாழ்வையும், பூமியையும் நான் விரும்பவில்லை. ஓ! பகைவரை எரிப்பவரே, உமக்கு ஏற்புடையதைச் செய்வதில் நான் என்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறேன்.(83) நான் உமது ஆதரவுக்குத் தகுந்தவனென்றால், நான் உமக்கன்பானவன் என்றால் ஏதாவது உண்பீராக. அப்போதே நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவேன்" என்றான்.(84)

[8] கும்பகோணம் பதிப்பில், "கௌரவஸ்ரேஷ்டனான அந்தத் திருதராஷ்டிரன் அந்தப் பாண்டவனிடம் அவ்விதம் சொன்னபொழுது அந்தப்புர ஸ்திரீகளெல்லாரும் தீனமான சப்தத்தை உரக்க வெளியிட்டனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் அந்தப்புரஸ்திரீகள் என்றில்லாமல் கங்குலியில் உள்ளதைப் போன்றே போர்வீரர்கள் என்றே இருக்கிறது.

பெரும் சக்தி கொண்ட திருதராஷ்டிரன் அப்போது யுதிஷ்டிரனிடம், "ஓ! மகனே, நான் உன் அனுமதியுடன் கொஞ்சம் உணவை உண்ண விரும்புகிறேன்" என்றான்.(85) திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனிடம் இந்தச் சொற்களைச் சொன்னபோது, சத்யவதியின் மகனான வியாசர் அங்கே வந்து பின்வருமாறு சொன்னார்" {என்றார் வைசம்பாயனர்}.(86)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 86

ஆங்கிலத்தில் | In English