The embrace of Dhritarashtra! | Stri-Parva-Section-12 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 12) [ஸ்திரீ பர்வம் - 03]
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் நகரத்தைவிட்டுப் புறப்பட்டதை அறிந்து அவனைச் சந்திக்கப் புறப்பட்ட யுதிஷ்டிரன்; அவனை அடைந்து வணங்கியது; யுதிஷ்டிரனை ஆரத்தழுவிய திருதராஷ்டிரன்; பீமனை நொறுக்குவதாக எண்ணிக் கிருஷ்ணனால் கொடுக்கப்பட்ட இரும்புப் பதுமையைத் தூள் தூளாக்கிய திருதராஷ்டிரன்; முடிவை ஏற்றுக் கொள்ளுமாறு திருதராஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "போர்வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, யுதிஷ்டிரன், தன் பெரியப்பாவான திருதராஷ்டிரன், யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தைவிட்டு {ஹஸ்தினாபுரத்தை விட்டுத்} புறப்பட்டதைக் கேள்விப்பட்டான்.(1) ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகன்கள் கொல்லப்பட்ட துயரத்தில் இருந்த யுதிஷ்டிரன், தன் (நூறு) மகன்களின் படுகொலையால் துயரில் முழ்கி, கவலையில் நிறைந்திருக்கும் தன் பெரியப்பாவைச் சந்திக்கத் தன் தம்பிகளுடன் புறப்பட்டான்.(2) அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, உயரான்ம வீரனும், தசார்ஹ குலத்தோனுமான கிருஷ்ணனாலும், யுயுதானனாலும் {சாத்யகியாலும்}, யுயுத்சுவாலும் பின்தொடரப்பட்டான்.(3) துயரில் எரிந்து கொண்டிருந்த திரௌபதியும், தன்னுடன் இருந்த பாஞ்சாலப் பெண்களின் துணையுடன், தன் தலைவனை {யுதிஷ்டிரனைக்} கவலையோடு பின்தொடர்ந்து சென்றாள்.(4) யுதிஷ்டிரன், ஓ! மன்னா, துயரால் பீடிக்கப்பட்டு, பெண் அன்றில் கூட்டத்தைப் போல அழுது கொண்டிருக்கும் பாரத மகளிர்க்கூட்டத்தைக் கங்கைக் கரையின் அருகில் கண்டான்.(5)
மன்னன் {யுதிஷ்டிரன்}, ஏற்புடைய மற்றும் ஏற்கமுடியாத அனைத்துவகை வார்த்தைகளையும் சொல்லி அழுது புலம்பிக் கொண்டும், துயரால் தங்கள் கரங்களை உயர்த்திக் கொண்டும் வந்த அந்த ஆயிரக்கணக்கான மகளிரால் சூழப்பட்டு,(6) "தந்தைமார், சகோதரர்கள், ஆசான்கள், மகன்கள் மற்றும் நண்பர்களைக் கொன்ற அந்த நீதிமிக்க மன்னன் எங்கே? அவனது உண்மையும், கருணையும் எங்கே?(7) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே {யுதிஷ்டிரா}, துரோணரையும், உன் பாட்டனான பீஷ்மரையும், {மைத்துனனான} ஜெயத்ரதனையும் கொன்றபிறகாவது உன் இதயம் அமைதி அடைந்ததா?(8) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உன் தந்தைமாரும், சகோதரர்களும், தடுக்கப்பட முடியாத அபிமன்யுவும், திரௌபதியின் மகன்களும் இவ்வாறு கொல்லப்பட்டதைக் கண்ட பிறகும், உனக்கு அரசுரிமைக்கான தேவை என்ன இருக்கிறது?" {என்று அவர்களால் கேட்கப்பட்டான்}.(9)
வலிய கரங்களைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், பெண் அன்றில்களைப் போலக் கதறிக்கொண்டிருந்த அந்த மங்கையரைக் கடந்து சென்று, தன் பெரியப்பாவின் {திருதராஷ்டிரரின்} பாதங்களை வணங்கினான்.(10) எதிரிகளைக் கொல்பவர்களான பாண்டவர்கள், முறைப்படி தங்கள் பெரியப்பாவை வணங்கி, தங்கள் பெயரைச் சொல்லி அவனிடம் தங்களை அறிவித்துக் கொண்டனர்.(11) தன் மகன்களின் படுகொலையால் துயரில் மிகவும் பீடிக்கப்பட்டிருந்த திருதராஷ்டிரன், அந்தப் படுகொலைக்குக் காரணமான பாண்டுவின் மூத்த மகனை {யுதிஷ்டிரனை}, விருப்பமில்லாமலேயே தழுவிக் கொண்டான்.(12) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை ஆரத்தழுவி, சில ஆறுதல் வார்த்தைகளைச்சொன்ன பிறகு, தீய ஆன்மா கொண்டவனான அந்தத் திருதராஷ்டிரன், தன்னை அணுகும் அனைத்தையும் எரித்துவிடும் சுடர்மிக்க நெருப்பைப் போலப் பீமனைத் தேடினான்.(13) உண்மையில், அவனது துயரெனும் காற்றால் தூண்டப்பட்ட கோபமெனும் நெருப்பானது, பீமக் காட்டை எரிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிந்தது.(14)
பீமனிடம் அவன் கொண்டிருக்கும் தீய நோக்கங்களை உறுதி செய்து கொண்ட கிருஷ்ணன், உண்மையான பீமனை இழுத்துவிட்டு, அந்த முதிய மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} இரும்பாலான இரண்டாம் பாண்டவனின் {பீமனின்} சிலையைக் கொடுத்தான்.(15) பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணன், தொடக்கத்திலேயே திருதராஷ்டிரனின் நோக்கங்களைப் புரிந்து கொண்டு, அவற்றைக் கலங்கடிப்பதற்காகவே இந்தச் சூழ்ச்சியைச் செய்தான்.(16) பெரும் பலம் கொண்டவனான மன்னன் திருதராஷ்டிரன், தன்னிரு கரங்களாலும் அந்த இரும்பு பீமனைப் பற்றிக் கொண்டு, இரத்தமும், சதையுமான உண்மையான பீமனாகவே கருதி அதைத் துண்டுகளாக நொறுக்கினான்.(17) பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான வலிமையைக் கொண்ட அம்மன்னன் {திருதராஷ்டிரன்} அந்தச் சிலையைத் துண்டு துண்டானச் சிதறல்களாக்கினான். எனினும், தன் மார்பும் குறிப்பிட்ட அளவுக்குக் காயமடைந்ததால் {மிகவும் நசுக்கப்பட்டதால்} அவன் ரத்தம் கக்கத் தொடங்கினான்.(18) குருதியில் மறைந்திருந்த அந்த மன்னன், மலர்களின் சுமையை உச்சியில் கொண்டிருக்கும் பாரிஜாத மரத்தைப் போலக் கீழே தரையில் விழுந்தான்.(19) கல்விமானும், அவனது தேரோட்டியும், கவல்கணன் மகனுமான சஞ்சயன் அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} உயர்த்தி, ஆறுதல் சொல்லித் தேற்றி, "இவ்வாறு செயல்படாதீர்" என்றான்.(20)
பிறகு, தன் கோபத்தைக் கைவிட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் இயல்பான நிலையை அடைந்து, துயரால் நிறைந்து, "ஐயோ, ஓ! பீமா, ஐயோ, ஓ! பீமா!" என்று சொல்லி உரக்க அழத்தொடங்கினான்.(21) அவன் இன்னும் கோபத்தின் ஆளுகையில் இல்லை என்பதையும், பீமனைக் கொன்றதால் உண்மையாக வருந்துவதையும் (தான் நம்பியவாறே)[1] புரிந்து கொண்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(22) "ஓ! திருதராஷ்டிரரே, நீர் பீமசேனரைக் கொல்லவில்லை என்பதால் வருந்தாதீர். ஓ! மன்னா, நீர் நொறுக்கியது ஓர் இரும்பு சிலையே.(23) ஓ! பாரதக் குலத்தின் காளையே, நீர் சினத்தால் நிறைந்திருக்கிறீர் என்பதைப் புரிந்து கொண்ட நான், குந்தியின் மகனை {பீமரைக்} காலனின் கோரப் பற்களுக்கிடையில் இருந்து இழுத்துவிட்டேன்.(24) ஓ! மன்னர்களில் புலியே, உடல்வலுவில் உமக்கு இணையாக எவனும் இல்லை. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உமது கரங்களின் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள இங்கே எவன் இருக்கிறான்?(25)
[1] கங்குலி தான் இதை நம்பவில்லை என்பதைக் குறிக்க இந்த அடைப்புக்குறி சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறாரா, அல்லது மூலத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. மூலத்தில் இருக்குமானால் கிருஷ்ணன் நம்பினான், வியாசரும், வைசம்பாயனரும் நம்பவில்லை என்று இது பொருள்படும். கும்பகோணம் பதிப்பிலும், பிபேகத் திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறான குறிப்பு இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே அடைப்புக்குறி வசனம் இருக்கிறது. எனினும் இங்கே திருதராஷ்டிரனின் செயல்பாடுகள் கணிகர் முன்பு சொன்னது போலவே "நம்ப வைத்துக் கொல்லும் வகையில்" இருக்கின்றன.
உண்மையில், காலனுடன் மோதி எவனும் உயிருடன் தப்ப முடியாது என்பதைப் போலவே, உமது அணைப்புக்குள் இருந்து பாதுகாப்பாக எவனாலும் வெளியேற முடியாது.(26) அதன் காரணமாகவே, உமது மகனால் {துரியோதனனால் கதாயுதப் பயிற்சிக்காகச்} செய்யப்பட்ட பீமரின் இந்தச் சிலையை உமக்காகவே தயாராக வைத்திருந்தேன்.(27) உமது மகன்களின் மரணத்தால் உண்டான துயரின் மூலம் உமது மனம் நீதியில் இருந்து விழுந்துவிட்டது. ஓ! பெரும் மன்னா, இதன் காரணமாகவே நீர் பீமசேனரைக் கொல்ல முயன்றீர்.(28) எனினும், ஓ! மன்னா, பீமரைக் கொல்வது உமக்கு ஒரு நன்மையையும் செய்யாது. ஓ! ஏகாதிபதி, அதனால் உமது மகன்கள் பிழைத்து வர மாட்டார்கள்.(29) எனவே, உமது இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாமல், அமைதியை எட்டும் நோக்கில் எங்களால் எது செய்யப்பட்டதோ அஃதை ஏற்றுக்கொள்வீராக {அங்கீகரிப்பீராக}" என்றான் {கிருஷ்ணன்}".(30)
ஸ்திரீ பர்வம் பகுதி – 12ல் உள்ள சுலோகங்கள் : 30
ஆங்கிலத்தில் | In English |