Wednesday, December 25, 2019

அறத்தின் ஆட்சி! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 07

Rule of righteousness! | Asramavasika-Parva-Section-07 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 07) (திருதராஷ்டிர நீதி - 3)


பதிவின் சுருக்கம் : போரும் அமைதியும்; செல்வம், கூட்டாளிகள் ஆகியவற்றின் பலங்கள்; இயந்திர மற்றும் வணிக வர்க்கத்தினரின் பலம்; மன்னர்களின் பேரிடர்கள்; நூறு குதிரை வேள்விகளும் அறம்சார்ந்த ஆட்சியும் ஒரே பயனை உண்டாக்கும் என்பது...


திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னர்களில் சிறந்தவனே, ஓ! யுதிஷ்டிரா, போர் மற்றும் அமைதி குறித்தும் நீ முறையாகச் சிந்திக்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் இருவகைகளைக் கொண்டவை. பல்வேறு வழிமுறைகள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளின் மூலம் போரும், அமைதியும் உண்டாகின்றன[1].(1) ஓ! குரு குலத்தோனே, நீ உன்னைப் பொறுத்தவரையில் (பலம் மற்றும் பலவீனம் என்ற) இரண்டையும் குறித்து நீ அமைதியாகச் சிந்திக்க வேண்டும். நிறைவடைந்தவர்களும், உடல்நலமிக்கவர்களும், புத்திசாலிகளுமான படைவீரர்களைக் கொண்ட பகைவனை எதிர்த்து நீ திடீரெனப் படையெடுக்கக்கூடாது. மறுபுறம், அவனை வெல்லும் வழிமுறைகளைக் குறித்து நீ கவனமாகச் சிந்திக்க வேண்டும்[2].(2) நிறைவடைந்தவர்களும், உடல்நலம் சிறந்திருப்பவர்களுமான போராளிகள் இல்லாத பகைவனை எதிர்த்தே நீ படையெடுக்க வேண்டும். அனைத்தும் சாதகமாக இருக்கும்போதுதான் பகைவனை வீழ்த்த முடியும். எனினும், அதன்பிறகு வெற்றியாளன் ஓய்ந்து (பலமான நிலையில் நீடித்து) இருக்க வேண்டும்.(3) அடுத்ததாக அவன் தன் பகைவனைப் பல்வேறு துன்பங்களில் மூழ்கடித்து, அவனுடைய கூட்டாளிகளுக்கு மத்தியில் வேற்றுமையை விதைக்க வேண்டும். அவன், பகைவனைப் பீடித்து, அவனது இதயத்திற்கு அச்சமூட்டி, அவனைத் தாக்கி அவனது படைகளைப் பலவீனப்படுத்த வேண்டும்.(4)


[1] "பலமான பகைவன், பலமற்ற பகைவன் ஆகியோருடன் எனப் போரும் அமைதியும் ஈரிரு வகைகளாக இருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ராஜஸ்ரேஷ்டனே, யுதிஷ்டிர, நீ இப்பொழுது (பலிஷ்டன் துர்ப்பலன் என்று) இரண்டு காரணங்களுள்ளனவும், பலவித உபாயங்களுள்ளனவும், அநேகவிதங்களுமான ஸந்திவிக்ரஹவகைகளையும் தெரிந்து கொள்" என்றிருக்கிறது.

[2] "உரையாசிரியரைப் பின்பற்றி இந்தச் சுலோகத்தைச் சற்றே விரித்துக் கூறியிருக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாத்திரங்களை அறிந்த மன்னன், பகைவனை எதிர்த்துப் படையெடுக்கும்போது, மூன்று வகைப் பலங்களைக் குறித்துச் சிந்திக்க வேண்டும், உண்மையில் தன் பலத்தையும், பகைவனின் பலத்தையும் அவன் சிந்திக்க வேண்டும்[3].(5) ஓ! பாரதா, எந்த மன்னன், சுறுசுறுப்பு {உத்ஸாகசக்தியுடனும்}, ஒழுக்கம் {பிரபுசக்தியுடனும்}, ஆலோசனைகள் {மந்திரசக்தி} ஆகிய சக்திகளுடன் இருக்கிறானோ, அவனே பகைவரை எதிர்த்துப் படையெடுக்கலாம். அவனுடைய நிலை வேறு வகையில் இருந்தால், அவன் தாக்குதலைத் தவிர்க்க வேண்டும்[4].(6) மன்னனானவன், செல்வத்தின் பலம் {மௌலபலம்}, கூட்டாளிகளின் பலம் {மித்ரபலம்}, காட்டுவாசிகளின் பலம் {அடவீபலம்}, ஊதியம் பெறும் படைவீரர்களின் பலம் {பிருதபலம்}, இயந்திர மற்றும் வணிக வர்க்கங்களின் பலம் {ஸ்ரேணீபலம்} ஆகியவற்றுடன் இருக்க வேண்டும்[5].(7) இவையனைத்திலும் கூட்டாளிகள் பலமும், செல்வபலமும் எஞ்சியவற்றைவிட மேன்மையானவை. வர்க்கங்களின் பலமும் {ஸ்ரேணீபலமும்}, நிலையான படையின் பலமும் {பிருதபலமும்} நிகரானவையாகும்.(8)

[3] "இந்த மூன்று வகைப் பலங்கள் அடுத்தச் சுலோகத்தில் விளக்கப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "உத்ஸாஹம் என்பது தயார் நிலை அல்லது சுறுசுறுப்பாகும். பிரபுசக்தி என்பது ஒழுக்கத்தின் மூலம் தன் படைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நிலையாகும். ஆலோசனைகளின் பலம் என்பது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் மற்றும் தற்காப்பாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[5] "மௌலம் என்பது பணபலமாகும். நவீன காலப் போர்களில்கூட பணம் என்பது போரின் நரம்புகள் என்றழைக்கப்படுகிறது. அடவீ பலம் என்பது காட்டுவாசிகளைக் கொண்ட படை என்பதாகும், ஒருவேளை முறைசார்ந்த போராளிகளால் ஆதரிக்கப்படும் முறைசாராத போராளிகளாக இருக்கலாம். ப்ருத பலம் என்பது எக்காலத்திலும் நாட்டிடம் இருந்து ஊதியம் பெறும் முறை சார்ந்த படையாகும். இந்தியாவில் நிலையான படைகள் பழங்காலத்தில் இருந்தே இருக்கின்றன. ஸ்ரேணீ பலம் என்பது சாலைகள் மற்றும் போக்குவரத்தைக் கவனித்துக் கொண்ட கைவினைஞர்கள், இயந்திரக் கைவினைஞர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோரையும், படைக்குப் பொருட்களைக் கொடுக்கும் வணிகர்களையும் உள்ளடக்கிய படையாக இருக்கலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நியாயமாகச் செல்வமும், க்ஷேமமும் உறுதியாகவுள்ள அரசன் மூலபலத்தையும், மித்திரனுடைய சேனையையும், காட்டிலுள்ள சேனையையும், கூலிப்படையையும், ஸ்ரேணியிலுள்ள சேனையையும் மித்திரனுக்கு மித்திரனுடைய சேனையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மன்னன், செல்வபலத்தையும், நண்பர்களின் பலத்தையும், காட்டு பலத்தையும், பணியாள் பலத்தையும், வணிகர்களின் பலத்தையும் நிச்சயம் திரட்ட வேண்டும்" என்றிருக்கிறது.

மேற்கண்ட இரண்டு பலங்களையும் பயன்படுத்த வேண்டிய வேளைவரும் பல சந்தர்ப்பங்களில், அவை இரண்டிற்கும் இணையாக ஒற்றர்களின் பலமே செயல்திறன் கொண்ட பலமாக மன்னனால் கருதப்படும்.(9) ஓ! மன்னா, ஆட்சியாளர்களை மூழ்கடிக்கும் பேரிடர் {ஆபத்து} என்பது, பல வடிவங்களைக் கொண்டதாகக் கருதப்பட வேண்டும். ஓ! குரு குலத்தோனே, அந்தப் பல்வேறு வடிவங்கள் யாவை என்பதைக் கேட்பாயாக.(10) உண்மையில், ஓ! பாண்டுவின் மகனே, பேரிடர் {ஆபத்துகள்} பல்வேறு வகைகளைச் சார்ந்தவையே. ஓ! மன்னா, அவற்றின் வடிவங்களைத் தனித்தனியாகக் கண்டு, (சோம்பலில் அவற்றை மறைக்காமல்) சமரசம் மற்றும் நன்கறியப்பட்ட பிற வழிமுறைகளைப் பயன்படுத்தி அவற்றைச் சந்திக்க வேண்டும்.(11) ஓ! பகைவரை எரிப்பவனே, மன்னன் நல்ல படையைக் கொண்டிருக்கும்போது (பகைவனை எதிர்த்து) படையெடுக்க வேண்டும். படையெடுக்கத் தயாராகும்போது, காலம், இடம், தான் திரட்டியிருக்கும் படை, (பிற காரியங்களில்) தன்னுடைய சாதகங்கள் ஆகியவற்றை அவன் கருத்தில் கொள்ள வேண்டும்.(12)

தன் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் கவனமுள்ள மன்னன், உற்சாகமிக்கவர்களும், உடல்நலமிக்கவர்களுமான போர்வீரர்களுடன் ஆயத்தமான பிறகே படையெடுக்க வேண்டும். ஓ! பாண்டுவின் மகனே, அவன் பலமடையும்போது, பருவகாலம் சாதகமற்றிருந்தாலும் கூட, அவன் படையெடுக்கலாம்.(13) அம்பறாத்தூணிகளையே கற்களாகக் கொண்டதும், குதிரைகளையும், தேர்களையும் ஓடையாகக் கொண்டதும், கொடிமரங்களைக் கரைகளில் நிற்கும் மரங்களாகக் கொண்டதும் காலாட்படைவீரர்களையும், யானைகளையும் சகதியாகக் கொண்டதுமான ஓர் ஆற்றை மன்னன் உண்டாக்க வேண்டும். அத்தகைய ஆற்றையே {படையையே} மன்னன் தன் பகைவனை அழிக்கப் பயன்படுத்த வேண்டும்.(14) உசானஸ் {சுக்ராச்சாரியர்} அறிந்த அறிவியலுக்கு ஏற்புடைய வகையில், பகைவரோடு போரிட சகடம், பத்மம் மற்றும் வஜ்ரம் என்றழைக்கப்படும் வியூகங்களை அமைக்க வேண்டும்[6].(15) பகைவனின் பலம் குறித்த அனைத்தையும் ஒற்றர்களின் மூலம் அறிந்து, தன் பலத்தையும் ஆய்வு செய்து கொண்டு, ஒரு மன்னன் தன் ஆட்சிப்பகுதிக்குள்ளோ, பகைவரின் ஆட்சிப்பகுதிக்குள்ளோ போரைத் தொடங்க வேண்டும்[7].(16)

[6] "சகடம் என்பது தேரின் வடிவிலான ஒரு வியூகமாகும். அது சுக்ர நீதியில் முழுமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அது துரோண பர்வத்திலும் சொல்லப்பட்டுள்ளது. பத்மம் என்பது கோண முனைப்புகளுடன் கூடிய ஒரு வட்ட வடிவ வியூகமாகும். அது பல நவீன கோட்டைகளைக் கட்டுவதற்கு இன்று பயன்படும் நட்சத்திர வியூகம் போன்றதாகும். வஜ்ரம் என்பது ஆப்பு போன்ற வடிவத்தைக் கொண்ட வியூகமாகும். அஃது ஓர் ஆப்பைப் போலப் பகைவரின் படையணிகளைப் பிளக்க உதவுகிறது, சுசிவியூகம் என்றும் அஃது அழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[7] "அதாவது, தன் நாட்டிற்குள்ளேயே பகைவனைச் சந்தித்தல், அல்லது பகைவனின் நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று அங்கே அவனை வீழச் செய்தல்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மன்னன் எப்போதும் தன் படையை நிறைவடையச் செய்து, (பகைவனை எதிர்த்து) தன்னுடைய பலமிக்கப் போர்வீரர்களை ஏவ வேண்டும். முதலில் தன்னுடைய நாட்டின் நிலையை உறுதி செய்து கொண்டு, சமரசத்தையோ, நன்கறியப்பட்ட வேறு வழிமுறைகளையோ ஒருவன் பயன்படுத்த வேண்டும்.(17) ஓ! மன்னா, ஒருவன் அனைத்து வழிமுறைகளின் மூலமும் தன் உடலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இம்மையிலும், மறுமையிலும் பெறப்போகும் உயர்ந்த நன்மைக்காக அவன் அதைச் செய்ய வேண்டும்.(18) ஓ! ஏகாதிபதி, மன்னன் இவ்வழிமுறைகளில் முறையாக நடந்து கொள்வதன் மூலம், இவ்வுலகில் அறம்சார்ந்த தன் குடிமக்களை ஆண்டபிறகு, மறுமையில் சொர்க்கத்தை அடைகிறான்.(19) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, ஈருலகங்களையும் அடைவதற்காக இவ்வாறே நீ உன் குடிமக்களின் நன்மையை எப்போதும் நாட வேண்டும்[8].(20)

[8] "அஃதாவது, இம்மையில் புகழையும், மறுமையில் இன்பத்தையும் பெறுவது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பீஷ்மர், கிருஷ்ணன், விதுரன் ஆகியோர் மூலம் ஏற்கனேவே கடமைகள் அனைத்தம் உனக்குக் கற்பிக்கப்பட்டிருந்தாலும், நான் உன் மீது கொண்டிருக்கும் அன்பின் காரணமாக இந்த நெறிமுறைகளை உனக்குச் சொன்னேன்.(21) வேள்விகளில் அபரிமிதமான கொடைகளை அளிப்பவனே, இவை யாவற்றையும் நீ முறையாகச் செய்ய வேண்டும். இவ்வழியில் உன்னை நடத்திக் கொண்டு உன் குடிமக்களின் அன்புக்குரியவனாகி சொர்க்கத்தின் இன்பநிலையை அடைவாயாக.(22) நூறு குதிரை வேள்விகளில் தேவர்களைத் துதித்தவனும், அறம்சார்ந்து தன் குடிமக்களை ஆண்ட மன்னனும் நிகரான தகுதியையே அடைகிறார்கள்" என்றான் {திருதராஷ்டிரன்}.(23)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 23

ஆங்கிலத்தில் | In English