Thursday, December 26, 2019

குடிமக்களிடம் வேண்டிய திருதராஷ்டிரன்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 08

Dhritarashtra's solicitation to the citizens! | Asramavasika-Parva-Section-08 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 08)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனைத் தூண்டிய காந்தாரி; நாட்டு மக்களை அழைத்துத் தான் காட்டுக்குச் செல்ல அனுமதி வேண்டிய திருதராஷ்டிரன்...


யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பூமியின் தலைவா, நீர் சொன்னதை நான் செய்வேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, எனக்கு நீர் மேலும் கற்பிக்க வேண்டும்.(1) பீஷ்மர் சொர்க்கத்திற்கு உயர்ந்துவிட்டார். மதுசூதனன் (துவாரகைக்குச்) சென்றுவிட்டான். விதுரரும், சஞ்சயரும் (உம்மோடு காட்டுக்குச்) சென்று விடுவார்கள். எனவே, உம்மைத் தவிர வேறு யார் எனக்குக் கற்பிக்க முடியும்?(2) ஓ! பூமியின் தலைவா, நீர் என் நன்மையை விரும்பி இன்று சொன்ன அனைத்தையும் நான் நிச்சயம் பின்பற்றுவேன். ஓ! மன்னா, இது குறித்து நீர் உறுதி கொள்வீராக[1]" என்றான்".(3)


[1] கும்பகோணம் பதிப்பில், "நன்மையைச் செய்வதில் நிலைபெற்றிருக்கும் நீர் இப்பொழுது இது விஷயத்தில் எனக்கு எதை உபதேசித்தீரோ அதை நான் செய்கிறேன். ராஜரே, கவலையற்றிரும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நீர் இன்று எனக்குச் சொல்லப்போகும் அனைத்தையும் நான் பின்பற்றுவேன். ஓ பூமியின் தலைவா, ஓ பாரதக் குல வழித்தோன்றலே, நீர் சொல்லாமல் இருக்கக்கூடாது" என்றிருக்கிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதர்களின் தலைவா, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அரசமுனி திருதராஷ்டிரன், (காட்டுக்கு ஓய்ந்து செல்ல) மன்னனின் அனுமதியைப் பெற விரும்பினான்.(4) அவன், "ஓ! மகனே, நிற்பாயாக {இரு}. நான் அதிகமாக உழன்றிருக்கிறேன்" என்றான்[2]. இதைச் சொன்ன அந்த முதிய மன்னன் காந்தாரியின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்.(5)

[2] கும்பகோணம் பதிப்பில், "புத்திரனே, களைப்பாறு. எனக்கும் ஸ்ரமம் அதிகமாக இருக்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ மகனே, விலகுவாயாக. என் வலிமை தீர்ந்துவிட்டது" என்றிருக்கிது. திருதராஷ்டிரன், "சற்றுப் பொறு, சொல்கிறேன்: என்று சொல்லிச் செல்வதாகத் தெரிகிறது.

அறவொழுக்கம் கொண்டவளும், காரிய சாதனைகள் அனைத்தையும் அறிந்தவளுமான காந்தாரி, உயிரினங்களின் இரண்டாவது தலைவனைப் போலிருந்த தன் கணவனிடம், அந்தக் காலத்திற்குப் பொருத்தமான சொற்களில்,(6) "பெரும் முனிவரான வியாசரிடமே நீர் அனுமதியைப் பெற்றுவிட்டீர். எனினும், யுதிஷ்டிரனின் அனுமதியுடன் நீர் எப்போது காட்டுக்குச் செல்லப் போகிறீர்?" என்று கேட்டாள்.(7)

திருதராஷ்டிரன், "ஓ! காந்தாரி, உயர் ஆன்மா கொண்ட என் தந்தையிடம்  {வியாசரிடம்} நான் அனுமதியைப் பெற்றுவிட்டேன். (அடுத்துப் பெறப்போகும்) யுதிஷ்டிரனின் அனுமதியுடனும் நான் விரைவில் காட்டுக்கு ஓயப்போகிறேன்.(8) எனினும், கொடிய பகடைக்கு அடிமையாக இருந்த என் மகன்கள் அனைவருக்காகப் பிரேத நிலையைப் பின்பற்றிச் செல்லவல்ல கொஞ்சம் செல்வத்தை நான் கொடையளிக்க விரும்புகிறேன். உண்மையில், என் மாளிகைக்கு மக்கள் அனைவரையும் அழைத்து அக்கொடைகளை அளிக்க நான் விரும்புகிறேன்" என்றான்"[3].(9)

[3] "இறப்பவர்கள் முதலில் பிரேதமாகிறார்கள். சபிண்டிகரணச் சிராத்தம் செய்யப்படும் ஒரு வருட காலம் வரை அவர்கள் அந்த நிலையிலேயே நீடித்திருக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் பித்ருக்களுடன் சேர்கிறார்கள். முதல் சிராத்தத்திலும், மாதாமாதம் செய்யப்படும் சிராத்தங்களிலும் அளிக்கப்படும் கொடைகள் அந்தப் பிரேதத்தை மீட்கவோ, அவனுக்குத் தகுதியை அளிக்கவோ செய்யும். ஆண்டுதோறும் நிகழும் சிராத்தங்களிலும் கொடுக்கப்படும் கொடைகளுக்கும் அதே திறன் உண்டு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "(காந்தாரியிடம்) இவ்வாறு சொன்ன திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனுக்கும் சொல்லி அனுப்பினான். பின்னவன் {யுதிஷ்டிரன்}, தன் பெரியப்பாவின் ஆணையின் பேரில் தேவையான பொருட்கள் அனைத்தையும் கொண்டு வந்தான்.(10) குருஜங்காலத்தில் வசித்த பிராமணர்கள் பலரும், க்ஷத்திரியர்கள் பலரும், வைசியர்கள் பலரும், சூத்திரர்கள் பலரும், நிறைவடைந்த இதயங்களுடன் திருதராஷ்டிரனின் மாளிகைக்கு வந்தனர்.(11) அந்தப்புரத்தில் இருந்து வெளியே வந்த முதிய மன்னன் {திருதராஷ்டிரன்}, அவர்கள் அனைவரையும், அங்கே கூடியிருந்த தன் குடிமக்களை அனைவரையும் கண்டான்.(12) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், அங்கே திரண்டிருந்த குடிமக்கள், மாகாணத்துவாசிகள், தன் நலம் விரும்பிகள், பல்வேறு நாடுகளில் இருந்து பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த பிராமணர்கள் ஆகியோரைக் கண்டு இந்தச் சொற்களைச் சொன்னான்.(13,14)

{திருதராஷ்டிரன்}, "நீங்களும் குருக்களும் {கௌரவர்களும்} நீண்ட பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து, ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும், ஒருவருக்கொருவர் நன்மை செய்வதில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறீர்கள்.(15) இப்போது வந்திருக்கும் வாய்ப்பைக் கருத்தில் கொண்டு நான் சொல்வதை ஆசான்களின் சொற்களை நிறைவேற்றும் சீடர்களைப் போல நீங்கள் அனைவரும் நிறைவேற்ற வேண்டும்.(16) காந்தாரியைத் துணையாகக் கொண்டு காட்டுக்குள் ஓய்ந்து செல்வதில் நான் என் இதயத்தை நிலைநிறுத்தியிருக்கிறேன். வியாசரும், குந்தியின் மகனும் {யுதிஷ்டிரனும்} இதை ஏற்றிருக்கின்றனர்.(17) உங்கள் அனுமதியும் எனக்குக் கிடைக்கட்டும். இதில் தயக்கமேதும் கொள்ளாதீர். உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் எப்போதும் நீடித்திருக்கும் நல்லெண்ணத்தை,(18) வேறு நாடுகளை ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும் இடையில் காண முடிவதில்லை. இவ்வளவு காலம் என் தலையில் இருக்கும் இந்தச் சுமையால் நான் களைத்திருக்கிறேன். நான் பிள்ளைகளை இழந்தவனாகவும் இருக்கிறேன்.(19) பாவமற்றவர்களே, காந்தாரியுடன் சேர்ந்து நோற்கும் உண்ணாநோன்புகளால் நான் மெலிந்திருக்கிறேன். அரசாட்சி யுதிஷ்டிரனுக்குச் சென்ற பிறகும், நான் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தேன்.(20) மனிதர்களில் முதன்மையானவர்களே, துரியோதனனின் அரசில் நான் எதிர்பார்க்கக்கூடிய மகிழ்ச்சியைவிட அது பெரிதாக இருந்ததாக நான் நினைக்கிறேன். முதிர்ந்தவனும், பிள்ளைகளை இழந்தவனும்மான எனக்குக் காடுகளை விடச் சிறந்த புகலிடம் வேறு எது இருக்க முடியும்? உயர்வாக அருளப்பட்டவர்களே, நான் வேண்டும் அனுமதியை எனக்குக் கொடுப்பதே உங்களுக்குத் தகும்" என்றான் {திருதராஷ்டிரன்}.(21)

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அவன் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட குருஜங்காலவாசிகள் அனைவரும், கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன் உரத்த ஒப்பாரியில் ஈடுபட்டனர்.(22) பெருஞ்சக்தி கொண்ட திருதராஷ்டிரன், துயரில் பீடிக்கப்பட்ட அந்த மக்களுக்கும் மேலும் சிலவற்றைச் சொல்ல விரும்பி, மீண்டும் அவர்களிடம் பேசத்தொடங்கிப் பின்வருமாறு சொன்னான்" {என்றார் வைசம்பாயனர்}.(23)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 08ல் உள்ள சுலோகங்கள் : 23

ஆங்கிலத்தில் | In English