Atatayins! | Asramavasika-Parva-Section-06 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 06)(திருதராஷ்டிர நீதி - 2)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கு ராஜநீதிகளை உரைத்த திருதராஷ்டிரன்; எழுபத்திரண்டு மண்டலங்கள் குறித்துச் சொன்னது; எந்தெந்த பகைவரை எவ்வாறு கையாள வேண்டுமெனச் சொன்னது...
திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, உனக்குரிய மண்டலங்களையும், உன் பகைவர்கள், நடுநிலையாளர்கள், உன்னிடமும், பகைவரிடமும் ஒரே மனநிலையைக் கொண்டவர்கள் ஆகியோரின் மண்டலங்களையும் நீ எப்போதும் உறுதி செய்து கொள்ள வேண்டும்[1].(1) ஓ!பகைவரை நொறுக்குபவனே, பகைவர், ஆததாயிகள் {கொலையிற்கொடியார்} என்றழைக்கப்படுபவர்கள், கூட்டாளிகள், பகைவரின் கூட்டாளிகள் ஆகிய நால்வகைப் பகைவரின் மண்டலங்களையும் நீ வெவ்வேறாக அறிந்து கொள்ள வேண்டும்[2].(2) ஓ!குருகுலத்தில் முதன்மையானவனே, நாட்டின் அமைச்சர்கள், மாகாணங்களின் மக்கள், கோட்டைகளின் காவல்படையினர், படைவீரர்கள் ஆகியோர் {பகைவரால்} கெட்டோ, கெடாமலோ இருக்கலாம். (எனவே, அவர்கள் உன் எதிரிகளின் மூலம் கெடாமல் இருக்கும் வகையில் நீ நடந்து கொள்வாயாக).(3) (மேலே பட்டியலிடப்பட்ட) பன்னிருவரே[3] மன்னனின் முதன்மையான அமைப்பினராக இருக்கின்றனர். இந்தப் பன்னிருவரும், அமைச்சர்களை முதன்மையானவர்களாகக் கொண்ட அறுபதுபேரும் {ஆக மொத்தம் 72 பேரும்} மன்னனால் கவனிக்கப்பட வேண்டும்[4].(4)
[1] மண்டலம் என்பது என்னவென்று பின்வரப்போகும் சுலோகம் 5ல் விளக்கப்படுகிறது. ’உதாஸீனர்கள்’, ’மத்யஸ்தர்கள்’ என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டில், முந்தையவர்கள் நடுநிலையாளர்கள் என்றும், பிந்தையவர்கள் இரு தரப்பிடமும் ஒரே மனோநிலை கொண்டவர்கள் என்றும் நீலகண்டர் விளக்கிச் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உன்னைச் சேர்ந்தவையும், பகைவரைச் சேர்ந்தவையும், உதாஸீன குணமுள்ளவர்களைச் சேர்ந்தவையும், மத்யஸ்தர்களைச் சேர்ந்தவையுமான மண்டலங்களைத் தெரிந்து கொள்" என்றிருக்கிறது. பொதுவாக உதாஸீனம் என்பது அலட்சியப்படுத்துபவர்களையும், மத்யஸ்தர்கள் என்பது நடுநிலையாளர்களையும் குறிக்கும்.[2] "1. முறையான பகைவர்கள், 2. பகைவரின் கூட்டாளிகள், 3. இருதரப்புக்கும் வெற்றியை விரும்புபவர்கள், 4. இரு தரப்புக்கும் தோல்வியை விரும்புபவர்கள் ஆகியோரே நான்கு வகைப் பகைவர்கள் என்று உரையாசிரியர் விளக்குகிறார். ஆததாயிகளைப் பொறுத்தவரை அவர்கள் அறுவராக இருக்கின்றனர். 1.வீட்டுக்குத் தீ வைப்பவன், 2. உணவில் நஞ்சு கலப்பவன், 3. பகை எண்ணத்துடனும் கையில் ஆயுதம் ஏந்திச் செல்பவன், 4. அடுத்தவனின் செல்வத்தைக் களவு செய்பவன், 5. அடுத்தவனின் களத்தில் {வயலில்} படையெடுப்பவன், 6. மாற்றான் மனைவியைக் களவு செய்பவன்" ஆகியோரே அந்த அறுவர். இந்த ஆததாயிகள் குறித்துக் குறள் 550 பின்வருமாறு சொல்கிறது. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர். இதற்கான பரிமேலழகர் உரையில், "வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் - அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல், பைங்கூழ் களை கட்டதனொடு நேர் - உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும். ('கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன் இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை, இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப. இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவுபல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.)" என்றிருக்கிறது.[3] மேலே குறிப்பிட்டுள்ள படி, 1.தன்னைச் சார்ந்தவர்கள் 2.பகைவர், 3.நடுநிலையாளர், 4.எந்நிலையும் கொள்ளாதோர் 5. கொடியோர் {ஆததாயிகள்}, 6.கூட்டாளிகள், 7.பகைவரின் கூட்டாளிகள், 8.அமைச்சர்கள், 9.மாகாணத் தலைவர்கள், 10.கோட்டைக் காவலர்கள், 11. படையினர், 12.கருவூலமாக இருக்கலாம். கும்பகோணம் பதிப்பில் அடிக்குறிப்பில், "1.சத்ருவும், 2.அவனுக்கு மித்ரனும், 3.இருவருக்கும் வெற்றியை விரும்புகிறவனும், 4.இருவருக்கும் தோல்வியை விரும்புகிறவனும், 5-10.ஆததாயிகள் அறுவரும், 11.மித்ரனும், 12.உதாஸீனனுக்கு மித்ரனும் ஆகப் பன்னிருவரும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பின் அடிக்குறிப்பில், "1.மன்னன், 2.நாட்டுப்புறம், 3.நகரங்கள், 4.அமைச்சர்கள், 5.கோட்டை, 6.படைவீரர்கள், 7.கருவூலம், 8.கூட்டாளிகள், 9.ஒற்றர்கள், 10.அமைதி, 11.போர், 12.நடுநிலைமை ஆகியனவாகும். முதல் ஐந்து, அல்லது ஆறு குறித்து ஒருமித்த கருத்து இருந்தாலும், இந்தப் பன்னிரெண்டு குறித்த ஒருமித்த கருத்து அமையவில்லை" என்றிருக்கிறது.[4] "உழவும் அது சார்ந்தவையும் அடங்கிய எட்டு; படைகளும் அது சார்ந்தவையும் அடங்கிய இருபத்தெட்டு; நாத்திகர்களும் அவர்கள் சார்ந்தவர்களும் அடங்கிய பதினான்கு; ஆலோசகர்களும் அவர்கள் சார்ந்தவர்களும் அடங்கிப் பதினெட்டு ஆகியவை சேர்ந்து அறுபதாகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அறுபத்து நான்கு கலைகள், ஸாம முதலான நான்கு உபாயங்கள், நால்வகைச் சேனைகள் ஆக எழுபத்திரண்டு என்பது லக்ஷாபரண வ்யாக்யானம்; 64 கலைகளின் பெயர்கள் ஸ்ரீ பாகவதம் தசமஸ்கந்தம் 45-வது அத்யாயம் 36வது ஸ்லோகம் ஸ்ரீதரவ்யாக்யானத்தில் காண்க" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் அடிக்குறிப்பில், "இந்த எழுபத்திரண்டைக் கொண்டுவர பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஓர் உதாரணமாக, ஒவ்வொரு அரசும், மன்னன், அமைச்சர்கள், நாடு, கோட்டைகள், படைவீரர்கள், கருவூலம் என்ற ஆறு அங்கங்களைக் கொண்டதாகும். மண்டலங்கள் என்பன பன்னிருவரைக் கொண்டதாகும். பனிரெண்டை ஆறால் பெருக்கினால் வருவது எழுபத்திரண்டாகும்" என்றிருக்கிறது.
அரசியல் அறிந்த ஆசிரியர்கள் {நீதிசாஸ்திரமறிந்த ஆசார்யர்கள்} இவற்றை {இந்த எழுபத்திரண்டையே} மண்டலங்கள் என்ற பெயரில் அழைக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரா, (அமைதி, போர், அணிவகுப்பு, நிறுத்தம், வேற்றுமை விதைத்தல், சமாதானம் ஆகிய) ஆறு நிகழ்வுகள் இவற்றையே {இந்த எழுபத்திரண்டையே} சார்ந்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வாயாக[5].(5) வளர்ச்சியும், சிதைவும், நிலையாக நிற்கும் நிலையும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஆறு வகை நிகழ்வுகளின் குணங்கள், (ஏற்கனவே பட்டியலிடப்பட்ட) எழுபத்திரண்டைச் சார்ந்திருக்கின்ற என்பதையும் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.(6) ஓ! குந்தியின் மகனே, ஒருவன் சார்ந்திருக்கும் தரப்பு பலமானதாகவும், பகைவனின் தரப்பு பலவீனமானதாகவும் இருக்கும் போதுதான் அவன் பகைவனை எதிர்த்து போரிட்டு வெற்றியடைவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும்.(7) பகைவன் வலுவாகவும், தன் தரப்பு பலவீனமாகவும் இருக்கும்போது, அந்தப் பலவீனமான மன்னன் புத்திசாலியாக இருந்தால் அந்தப் பகைவனுடன் சமாதானம் செய்து கொள்ள முனைவான்.(8)
[5] "இதில் ஆறுகுணங்கள் வசப்பட்டிருக்கின்றன" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "மந்த்ரம், ஔஷதம், இந்திரஜாலம், ஸாமம், தான, பேதம், தண்டம்" என்று ஏழு குறிப்பிடப்படுகிறது. இது சபாபர்வம் பகுதி 5ல் வரும் "ஒப்பந்தம், போர், போர்ப்பயணம், எதிரிக்கு எதிரானவைகளைப் பராமரித்தல், தந்திரங்கள், மறைந்திருத்தல் ஆகிய ஆறாக இருக்க வேண்டும்.
ஒரு மன்னன் (படையின் உணவுத்துறைக்கு வேண்டிய) பொருட்களைப் பெரிய அளவில் திரட்ட வேண்டும். ஓ! பாரதா, படையெடுக்க இயன்றவனாகும்போது, அவன் ஒருபோதும் தாமதிக்கக்கூடாது.(9) அதைத்தவிர, அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் வேறு எந்தக் கருத்தினாலும் அசைக்கப்படாமல், தன்னுடையவர்களை அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் நியமிக்க வேண்டும். (தன் ஆட்சிப்பகுதிகளைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது) அவன் அதிகம் பயிர் விளையாத நிலங்களை மட்டுமே தன் எதிரிக்குக் கொடுக்க வேண்டும்.(10) (செல்வத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது) அவன் அற்ப உலோகம் கலக்கப்பட்ட தங்கத்தையே கொடுக்க வேண்டும். (தன் படையில் ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது) பலமற்ற மனிதர்களையே அவன் கொடுக்க வேண்டும். உடன்பாடுகள் செய்வதில் திறம் பெற்றவன், நிலத்தையோ, தங்கத்தையோ, மனிதர்களையோ தன் எதிரியிடம் இருந்து பெறும்போது, இதற்கு நேர்மாறான குணங்களை உடையவற்றையே பெற வேண்டும்[6].(11) ஓ! பாரதர்களின் தலைவா, அமைதி உடன்பாடுகள் செய்யப்படும்போது, (வீழ்த்தப்பட்ட) மன்னனின் மகனைப் பிணையாகக் கேட்க வேண்டும். ஓ! மகனே, இதற்கு முரணான நடத்தை நன்மை பயக்காது.
[6] "அதாவது, செழிப்பான நிலம், பசும்பொன், பலமான மனிதர்களைப் பெற வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். "அஃதாவது ஒருவன் கெட்டதைக் கொடுத்து, நல்லதைப் பெற வேண்டும்" எனப் பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்புச் சொல்கிறது.
ஒரு மன்னனுக்குப் பேரிடர் நேர்தால்,(12) வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளில் உள்ள தன் அறிவை அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்[7]. ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, ஒரு மன்னன், தன் மக்களில் உற்சாகமற்றவர்கள், (பார்வையற்றோர், காது கேளாதோர், ஊமைகள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட) ஆதரவற்றவர்களைப் பராமரிக்கவேண்டும்.(13) தன் நாட்டைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வலிமைமிக்க மன்னன், ஒன்றன்பின் ஒன்றாகவோ, ஒரே நேரத்திலோ பகைவரை எதிர்க்கும் தன் முயற்சிகள் அனைத்தையும் செய்து கொண்டே வேண்டும். அவன் அவர்களைப் பீடித்துத் தடுத்து, அவர்களது கருவூலத்தை வற்றச் செய்ய வேண்டும்.(14) தன் வளர்ச்சியை விரும்பும் மன்னன், தன் ஆளுகையின் கீழ் உள்ள துணை நிலைத் தலைவர்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்கக்கூடாது. ஓ! குந்தியின் மகனே, மொத்த பூமியையும் வெல்ல விரும்பும் மன்னனிடம் நீ ஒருபோதும் {நேரடியாகப்} போரிட முயலாதே.(15) உன் அமைச்சர்களின் துணையுடன் அவனது உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் துணைநிலைத் தலைவர்களுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்கி அதன் மூலம் நீ {உன் நாட்டுக்கு} நன்மை பெற முயல வேண்டும்.(16)
[7] கும்பகோணம் பதிப்பில், "உபாயத்தையும், ஆலோசனையையும் அறிந்தவனான நீ அந்த ஆபத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள முயற்சி செய்" என்றிருக்கிறது.
பலமிக்க மன்னன் ஒருவன், பலவீனமான மன்னர்களை அழிக்க முற்படக்கூடாது. ஏனெனில் அவர்களே {உன் ஆளுகைக்குட்பட்டு} நல்லோரைப் பேணி பாதுகாத்து, தீயோரைத் தண்டித்து உலகத்திற்கு நன்மை செய்வார்கள். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, நீ ஒரு பிரம்பின் {நாணல் / நீர்நொச்சியின்} நடத்தையைப் பின்பற்ற வேண்டும்[8].(17) பலமிக்க மன்னன் ஒருவன் பலவீனமானவனை எதிர்த்து முன்னேறினால், பின்னவன், சமாதானம் மற்றும் பிற வழிமுறைகளைப் பின்பற்றி அவனைத் தடுக்க வேண்டும்.(18) படையெடுத்து வருபவனை இவ்வழியில் தடுக்க முடியவில்லையெனில், அவனும், அவனுக்கு நன்மை செய்யும் மனநிலை கொண்டவர்களும், பகைவனை எதிர்த்துப் போரிட வேண்டும். உண்மையில், அவன் {தன்னை எதிர்த்துப்} படையெடுத்து வருபவனுக்கு எதிராக, {தனது} அமைச்சர்கள், குடிமக்கள் ஆகியோருடனும், கருவூலத்துடனும் சேர்ந்து பலத்தைப் பயன்படுத்த {போரிட} வேண்டும்.(19) பகைவனோடு போரிடுவது நம்பிக்கையளிக்கவில்லையெனில் அவன் தனது ஆதாரங்களை ஒவ்வொன்றாகத் துறந்து வீழ்ச்சியடைய வேண்டும். இவ்வகையில் உயிரைக் கைவிடும் அவன் கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுதலை பெறுவான்" என்றான் {திருதராஷ்டிரன்}.(20)
[8] "பிரம்பானது, அழுத்தம் கொடுக்கப்படும்போது அதையேற்று வளைகிறது. சாந்தி பர்வத்தில் {113ம் பகுதியில்} பெருங்கடலுக்கும், ஆறுகளுக்கும் இடையில் ஒரு விரிவான உரையாடல் நேர்கிறது. 'ஆறுகள் பெரும் மரங்களையே வீழ்த்தும்போது, ஒரேயொரு பிரம்பைக் கூட அவற்றால் ஏன் வீழ்த்தி கடலுக்குக் கொண்டு வர முடியவில்லை?' என்று பெருங்கடல் கேட்டது. 'பிரம்பு வளைந்தது, மரங்கள் வளையவில்லை' என்பதே அதற்குப் பதிலாக இருந்தது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 06ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |