Friday, December 27, 2019

அடைக்கலம் ஒப்படைப்பு! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 09

Deposit made! | Asramavasika-Parva-Section-09 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 09)


பதிவின் சுருக்கம் : தான் செய்த தவறுகளைப் பொறுக்கும்படி மக்களிடம் வேண்டிய திருதராஷ்டிரன்; யுதிஷ்டிரனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் காட்டுக்குச் செல்வதற்கு அனுமதி கேட்டது...


திருதராஷ்டிரன், "சந்தனு இந்தப் பூமியை முறையாக ஆண்டார். அதே போல, பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட விசித்திரவீரியரும் உங்களை ஆண்டார். நிச்சயம் இவை யாவும் நீங்கள் அறிந்தது.(1) என் தம்பி பாண்டு, எனக்கும், உங்களுக்கும் எவ்வளவு அன்புக்குரியவனாக இருந்தான் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவனும் உங்களை முறையாகவே ஆண்டான்.(2) பாவமற்றவர்களே, நானும் உங்களுக்குத் தொண்டாற்றியிருக்கிறேன். அத்தொண்டுகள் தேவையான அளவுக்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும், கவனக்குறைவின்றி நான் என் கடமைகளைச் செய்திருப்பதால் என்னை மன்னிப்பதே உங்களுக்குத் தகும்.(3)


துரியோதனனும் தன் தரப்பில் ஒரு முள்ளுமின்றி {பகைவரெவருமின்றி} இந்நாட்டை அனுபவித்தான். அவன் தீய புத்தி கொண்டவனாகவும், மூடனாகவும் இருந்தாலும், உங்களுக்கு எத்தீங்கையும் செய்ததில்லை.(4) எனினும், தீய புத்தி கொண்ட அந்த இளவரசனின் குற்றத்தாலும், அவனது செருக்காலும், என்னுடைய அநீதியினாலும் அரச வகையைச் சேர்ந்த மனிதர்களுக்குப் பேரழிவு ஏற்பட்டது.(5) அக்காரியத்தில் நான் சரியாகச் செயல்பட்டிருந்தாலும், தவறாகச் செயல்பட்டிருந்தாலும், அது குறித்து உங்கள் இதயங்களில் இருக்கும் நினைவுகளை அகற்றிவிடுமாறு கூப்பிய கரங்களுடன் நான் உங்களை வேண்டுகிறேன்.(6)

"இவன் முதியவன்; இவன் தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தவன்; இவன் துன்பத்தால் பீடிக்கப்பட்டவன்; இவன் நம் மன்னன்; இவன் முந்தைய மன்னர்களின் வழித்தோன்றல்" என்பன போன்ற கருத்துகள் என்னை மன்னிக்கும்படி உங்களைத் தூண்ட வேண்டும்.(7) காந்தாரியும் உற்சாகமற்றவளாகவும், முதியவளாகவும் இருக்கிறாள். அவளும் தன் பிள்ளைகளை இழந்து ஆதரவற்றவளாக இருக்கிறாள். மகன்களை இழந்த துக்கத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் அவளும் என்னுடன் சேர்ந்து உங்களை வேண்டுகிறாள்.(8) எங்கள் இருவரையும் முதியவர்களாகவும், பீடிக்கப்பட்டவர்களாகவும், பிள்ளைகளை இழந்தவர்களாகவும் அறிந்து கொண்டு நாங்கள் வேண்டும் அனுமதியை எங்களுக்குக் கொடுப்பீராக.(9)

குரு {குருஜங்காலத்தின்} மன்னனும், குந்தியின் மகனுமான இந்த யுதிஷ்டிரன், செழிப்பிலும், வறுமையிலும் உங்கள் அனைவராலும் கவனித்துக் கொள்ளப்பட வேண்டும்.(10) அளவில்லா ஆற்றல் கொண்ட நான்கு சகோதரர்களைத் தன் ஆலோசகர்களாகக் கொண்ட அவன் ஒருபோதும் துன்பத்தில் வீழமாட்டான். அறம், பொருள் இரண்டையும் அறிந்தவர்களான அவர்கள் அனைவரும், லோகபாலர்களுக்கு ஒப்பானவர்களாவர்.(11) வலிமையும், சக்தியும் கொண்ட இந்த யுதிஷ்டிரன், அண்டத்தின் உயிரினங்களுடைய தலைவனான சிறப்புமிக்கப் பிரம்மனைப் போலவே உங்களை ஆள்வான்.(12)

நிச்சயம் சொல்லப்பட வேண்டியதையே நான் இப்போது சொன்னேன். நான் உங்களிடம் இந்த யுதிஷ்டிரனை அடைக்கலமாக ஒப்படைக்கிறேன். இந்த வீரனிடம் உங்களையும் அடைக்கலமாக ஒப்படைக்கிறேன்.(13) இப்போது உயிரோடு இல்லாத என் மகன்களாலோ, உண்மையில் என்னைச் சார்ந்தவர்கள் எவராலோ உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கெதனையும் மன்னித்து மறப்பதே உங்கள் அனைவருக்கும் தகும்.(14) முன்னர் எச்சந்தர்ப்பத்திலும் நீங்கள் எனக்கு எதிரான கோபத்தை ஒருபோதும் வளர்த்ததில்லை. மாறாப்பற்றிற்கு {விசுவாசத்திற்கு} புகழ்பெற்ற உங்கள் முன் நான் என் கைகளைக் கூப்புகிறேன். இதோ நான் உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்.(15) பாவமற்றவர்களே, சஞ்சல புத்தி கொண்டவர்களும், பேராசையெனும் களங்கமுடையவர்களும், ஆசைகளுடைய தூண்டலின்படியே எப்போதும் செயல்பட்டவர்களுமான என் மகன்களால் செய்யப்பட்ட எதற்காகவும் நானும், என் அருகில் இருக்கும் காந்தாரியும் உங்களிடம் மன்னிப்பை வேண்டுகிறோம்" என்றான் {திருதராஷ்டிரன்}.(16)

அந்த முதிய ஏகாதிபதியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், குடிமக்கள் மற்றும் மாகாணத்துவாசிகள் அனைவரும், கண்ணீரால் நிறைந்தவர்களாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே ஒன்றும் பேசாதிருந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(17)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 17

ஆங்கிலத்தில் | In English