Friday, December 27, 2019

குடிமக்களின் ஒப்புதல்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 10

The acquiesce of citizens! | Asramavasika-Parva-Section-10 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 10)


பதிவின் சுருக்கம் : ஒரு பிராமணர் மூலம் திருதராஷ்டிரனைத் தேற்றி, காட்டுக்குச் செல்வதற்குப் பெரும் வருத்தத்துடன் அனுமதி கொடுத்த குருஜாங்கலத்தார்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! குரு குலத்தோனே, முதிய மன்னனால் {திருதராஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட குடிமக்களும், மாகாணவாசிகளும், நினைவிழந்த மனிதர்களைப் போலச் சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.(1) அவர்கள் துயரால் அடைக்கப்பட்ட தொண்டைகளுடன், அமைதியாக இருப்பதைக் கண்ட மன்னன் திருதராஷ்டிரன், மீண்டும் அவர்களிடம்,(2) "மனிதர்களில் சிறந்தவர்களே, இந்நாட்டில் அறம் சார்ந்து வசிப்போரே, முதிர்ந்தவனும், மகனற்றவனும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடியவனுமான நான், என் மனைவியுடன் {காந்தாரியுடன்} சேர்ந்து பல்வேறு வகை புலம்பல்களில் ஈடுபட்டு(3) காட்டுக்கு ஓய்ந்து செல்லும் காரியத்தில், என் தந்தையும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்} மற்றும் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனான யுதிஷ்டிரன் ஆகியோரின் அனுமதியைப் பெற்றேன்.(4) பாவமற்றவர்களே, நானும், காந்தாரியும் தலை வணங்கி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். எங்களுக்கு அனுமதி அளிப்பதே உங்கள் அனைவருக்கும் தகும்" என்றான் {திருதராஷ்டிரன்}".(5)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி, குரு மன்னன் சொன்ன இந்தப் பரிதாபத்திற்குரிய சொற்களைக் கேட்டு, அங்கே கூடியிருந்த குருஜாங்கலவாசிகள் அனைவரும் அழத் தொடங்கினர்.(6) தங்கள் கரங்களாலும், மேலாடைகளாலும் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்ட அம்மனிதர்கள் அனைவரும், (தங்களை விட்டு நிரந்தரமாகச் செல்லப்போகும் அன்புக்குரிய மகனைக் காணும்) தந்தைமாரையும், தாய்மாரையும் போல எரியும் துயருடன் நெடுநேரம் அழுதனர்.(7) திருதராஷ்டிரன் இவ்வுலகைவிட்டு செல்ல விரும்புகிறான் என்ற கவலையை எண்ணங்கள் ஏதுமற்ற தங்கள் இதயங்களில் சுமந்திருந்த அவர்கள், நினைவை இழந்து நிற்கும் மனிதர்களைப் போலத் தெரிந்தனர்.(8)

காட்டுக்குச் செல்லும் விருப்பத்தைத் திருதராஷ்டிரன் அறிவித்ததன் மூலம் உண்டான இதயக்கலக்கத்தைத் தடுத்து, படிப்படியாகத் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிலையை அவர்கள் அடைந்தனர்.(9) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் சொற்களைச் சுருக்கமாக்கி, அவற்றை ஒரு பிராமணரிடம் சொல்லி, அவரை அந்த முதிர்ந்த ஏகாதிபதிக்கு மறுமொழி கூறச் செய்தனர்.(10) கல்விமானும், நன்னடத்தைக் கொண்டவரும், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், அனைத்துக் காரியங்களையும் அறிந்தவரும், ரிக்குகள் {ரிக் வேத மந்திரங்கள்} அனைத்திலும் திறம்பெற்றவரும், சாம்பன் என்ற பெயரைக் கொண்டவருமான அந்தப் பிராமணர் அப்போது பேச முனைந்தார்.(11)

பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தன் திறன்களை நன்கறிந்தவரும், கல்விமானுமான அந்தப் பிராமணர் {சாம்பன்}, மொத்த சபையின் முழுச் சம்மதத்தையும், அனுமதியையும் பெற்றுக் கொண்டு, இச்சொற்களை அந்த மன்னனிடம் சொன்னார்:(12) {பிராமணர் சாம்பன்}, "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்தச் சபை உரைக்க வேண்டிய பதில் என் பொறுப்பில் விடப்பட்டிருக்கிறது. ஓ! வீரரே, அதற்கே நான் குரல் கொடுக்கப் போகிறேன். ஓ! மன்னா, நீர் கேட்பீராக.(13) ஓ! மன்னர்களின் மன்னா, ஓ! பலமிக்கவரே, நீர் சொல்வதனைத்தும் உண்மையே. இதில் பொய் சிறிதளவும் கிடையாது. நாங்கள் உமது நலன் விரும்பிகளாக இருப்பதைப் போலவே, நீரும் எங்கள் நலவிரும்பியாக இருக்கிறீர்.(14) உண்மையில், இந்தக் குலத்தைச் சேர்ந்த மன்னர்களில், தன் குடிமக்களிடம் செல்வாக்கில்லாமல் ஆண்டவன் எவனும் இல்லை.(15) நீர் தந்தைமாரைப் போலவோ, சகோதரன்மாரைப் போலவோ எங்களை ஆண்டீர். மன்னன் துரியோதனனும் எங்களுக்கு எதிராக எக்குற்றத்தையும் இழைத்ததில்லை.(16)

ஓ! மன்னா, சத்தியவதியின் மகனும், அற ஆன்மா கொண்டவருமான அந்தத் தவசியின் {வியாசரின்} சொற்களின்படியே செயல்படுவீராக உண்மையில் அவரே எங்களுக்கு முதன்மையான குரு ஆவார்.(17) ஓ! ஏகாதிபதி, உம்மால் விடப்படும் நாங்கள், உமது நூற்றுக்கணக்கான நற்குணங்களின் நினைவுகளால் நிறைந்து, எங்கள் நாட்களைத் துன்பத்திலும், கவலையிலும் கழிக்கப் போகிறோம்.(18) ஓ! ஏகாதிபதி, மன்னர் சந்தனு, சித்திராங்கதன், பீஷ்மரின் ஆற்றலால் பாதுகாக்கப்பட்ட உமது தந்தை {விசித்திரவீரியன்} ஆகியோரையோ, உமது ஆலோசனையின்படியே தன் செயல்கள் அனைத்தையும் செய்தவனும், பூமியின் ஆட்சியாளனுமான பாண்டுவையோ போலவே, மன்னன் துரியோதனனும் எங்களை நன்கு பாதுகாத்து ஆட்சி செய்தான்.(19,20)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, ஒருபோதும் சிறு குற்றத்தையும் எங்களுக்கெதிராக இழைத்ததில்லை. நாங்கள் எங்கள் தந்தையை நம்புவதைப் போலவே, அந்த மன்னனைச் சார்ந்து வாழ்ந்தோம்.(21) (அந்த ஆட்சியாளனின் கீழ்) நாங்கள் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதை நீர் அறிவீர். ஓ! ஏகாதிபதி, அதே போலவே பெரும் நுண்ணறிவும், ஞானமும் கொண்ட குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} ஆட்சியின் கீழும் ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்துவருகிறோம்[1].(22) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்யும் இந்த அறம் சார்ந்த மன்னன், உமது குலத்தைச் சேர்ந்தவர்களும், புண்ணியச் செயல்களைச் செய்தவர்களும், குரு, சம்பரன் {சம்வர்ணன்}[2], பெரும் நுண்ணறிவைக் கொண்ட பரதன் உள்ளிட்ட பழங்கால அரசமுனிகளின் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறான்.(23,24)

[1] "சுலோகம் 22ல் ஆயிரக்கணக்கான வருடங்கள் நீடித்த யுதிஷ்டிரனின் ஆட்சி என்பது பொருளற்றது என்பது வெளிப்படை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உம்முடைய புத்திரன் சிறிதும் அப்பிரியத்தைச் செய்யவில்லை. மன்னரே, நாங்கள் அந்த மன்னனிடத்திலும், தந்தையினிடத்தில் போல இனிதே ஸுகம் பெற்று நல்ல வாழ்நாளுள்ளவர்களாக இருந்தோமென்பது உங்களுக்குத் தெரியும். அவ்விதமே, புத்திசாலியும், தைரியமுள்ளவரும், குந்தியின் புத்திரருமான யுதிஷ்டிரரால் அநேக ஆயிரம் வருஷங்கள் பரிபாலிக்கப்பட்டு ஸுகம் பெறப் போகிறோம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நுண்ணறிவு மிக்கவனான குந்தியின் மகனால் பாதுகாக்கப்பட்டு, அவனது வலிமையால் நீடித்தவர்களாக நாங்கள் ஆயிரம் வருட மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறோம்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இதைச் சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ளக்கூடாது" என்றிருக்கிறது.

[2] இவன் ஆதிபர்வம் 173ம் பகுதியில் சொல்லப்படும் சம்வர்ணனாக இருக்க வேண்டும்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்த யுதிஷ்டிரனின் ஆட்சியில், நிந்திக்கத்தக்க காரியமென்று எதுவும் சிறிதளவுமில்லை. உம்மால் பாதுகாக்கப்பட்டும், ஆளப்பட்டும் நாங்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் வாழ்கிறோம்.(25) உமக்கும் உமது மகனுக்கும் எதிராகச் சிறு குறையையும் சொல்ல இயலாது. உற்றார் உறவினருக்குப் பேரழிவை ஏற்படுத்திய காரியத்தில் துரியோதனனைக் குறித்து நீர் சொன்னதைப் பொறுத்தவரையில், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்வபரே, (நான் சொல்வதை நீர் கேட்க வேண்டுமென) நான் இரந்து கேட்கிறேன்" என்றார் {பிராமணர் சாம்பன்}.(26,27)

பிராமணர் {சாம்பன்} தொடர்ந்தார், "குருக்களுக்கு நேர்ந்த அழிவு துரியோதனனால் கொண்டுவரப்பட்டதல்ல. உம்மாலும் அது கொண்டுவரப்படவில்லை. கர்ணன் மற்றும் சுபலனின் மகனாலும் {சகுனியாலும்} அது கொண்டுவரப்படவில்லை.(28) எதிர்க்கப்பட இயலாத விதியால் அது கொண்டுவரப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம். உண்மையில், மனித முயற்சியால் ஒருபோதும் விதியைத் தடுக்க முடியாது.(29) ஓ! ஏகாதிபதி, பதினெட்டு அக்ஷௌஹிணி துருப்புகள் ஒன்றாகத் திரட்டப்பட்டன. பதினெட்டு நாட்களில் அந்தக் கூட்டமானது, குருவீரர்களில் முதன்மையான பீஷ்மர், துரோணர், கிருபர், உயர் ஆன்மக் கர்ணன், வீரனான யுயுதானன் {சாத்யகி}, திருஷ்டத்யும்னன்,(30,31) பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் உள்ளிட்ட பாண்டுவின் நான்கு மகன்கள் ஆகியோரால் அழிக்கப்பட்டது. ஓ! மன்னா, விதியின் ஆதிக்கமின்றி (பயங்கரமான) இந்தப் பேரழிவு நடந்திருக்க முடியாது.(32) குறிப்பாக க்ஷத்திரியர்களால் பகைவர்கள் போரில் கொல்லப்பட வேண்டும், மரணம் ஏற்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை[3].(33)

[3] கும்பகோணம் பதிப்பில் "இந்த நாசமானது தெய்வபலமின்றி நடக்கவில்லை. க்ஷத்திரியன் போர்க்களத்தில் க்ஷத்திரியனுடன் யுத்தம் செய்து கொல்வதும், காலம் வந்தவுடன் மரிப்பதும் மிக்க அவசியமே" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மக்களுக்கு ஏற்பட்ட இந்த அழிவு விதியின் சக்தியால் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக இவ்வுலகில், க்ஷத்திரியர்களும், க்ஷத்திரியர்களின் உறவினர்களும் ஆயுதங்களைப் பயன்படுத்திப் போரில் கொல்லப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை" என்றிருக்கிறது.

ஆயுத அறிவியலும், வலிமையும் கொண்டவர்களான அந்த மனிதர்களில் முதன்மையானவர்களால், பூமியானவள் தன் குதிரைகளையும், தேர்களையும், யானைகளையும் இழந்தாள்.(34) அந்த உயர் ஆன்ம மன்னர்களின் பேரழிவுக்கு உமது மகன் காரணமல்ல. நீரோ, உமது பணியாட்களோ, கர்ணனோ, சுபலனின் மகனோ {சகுனியோ} காரணமல்ல.(35) குருகுலத்தின் முதன்மையானவர்கள், மற்றும் ஆயிரக்கணக்கான மன்னர்களின் அழிவானது விதியாலேயே கொண்டுவரப்பட்டது என்பதை அறிவீராக. இதில் எவனாலும் வேறென்ன சொல்ல முடியும்?(36) நீரே குருவாகவும், மொத்த உலகத்தின் உரிமையாளராகவும் கருதப்படுகிறீர். எனவே, உமது முன்னிலையிலேயே நாங்கள் உமது மகன் அற ஆன்மா கொண்டவன் எனக் கொள்கிறோம்.(37) அந்த மன்னன் {துரியோதனன்}, தன் தோழர்களுடன் சேர்ந்து, வீரர்களுக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அடையட்டும். அவன், முதன்மையான பிராமணர்களால் அனுமதிக்கப்பட்டுச் சொர்க்கத்தில் அருள்நிறைந்தவனாக விளையாடட்டும்.(38) நீரும் அறம்பிறழாத உறுதியுள்ளவராகப் பெரும் புண்ணியத்தை ஈட்டப் போகிறீர். ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, வேதங்களில் குறிப்பிடப்படும் கடமைகளை முழுமையாகப் பின்பற்றுவீராக.(39) நீரோ, நாங்களோ பாண்டவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சொர்க்கங்களையே ஆள இயன்றவர்கள் எனும்போது, பூமியைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?(40)

ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே, ஒழுக்கத்தையே தங்கள் ஆபரணமாகக் கொண்ட பாண்டவர்களுக்கு நாங்கள் செழிப்பிலும், வறுமையிலும் கீழ்ப்படிந்திருப்போம்.(41) வேள்விகளிலும், ஈமச் சடங்குகளிலும் மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களுக்கு எப்போதும் கொடுக்கப்பட வேண்டிய மதிப்பு மிக்கக் கொடைகளைப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பழங்காலத்தின் பெரும் மன்னர்கள் வழியிலேயே அளித்து வருகிறான்.(42) உயர்ந்த மனம் கொண்ட இந்தக் குந்தியின் மகன், மென்மையானவனாகவும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனாகவும், இரண்டாம் வைஸ்ரவணனை {குபேரனைப்} போலவே எப்போதும் செலவு செய்யும் மனநிலையிலும் இருக்கிறான். அவனைக் கவனித்துக் கொள்ளப் பெரும் அமைச்சர்களும் இருக்கின்றனர்.(43) அவன் தன் பகைவர்களிடமும் கருணை கொண்டவனாக இருக்கிறான். உண்மையில், அந்த முதன்மையான பாரதக் குலத்தோன், தூய ஒழுக்கம் கொண்டவனாக இருக்கிறான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன், தன் காரியங்களில் முற்றிலும் வெளிப்படையாக இருந்து, ஒரு தந்தை தன் பிள்ளைகளைக் காப்பது போல எங்களைக் காத்து ஆட்சி செய்கிறான்.(44) ஓ! அரச முனியே, தர்மனின் மகனுடன் ஏற்படும் தொடர்பால் பீமனும், அர்ஜுனனும், பிறரும் எங்களுக்கு ஒரு போதும் சிறு குற்றத்தையும் இழைத்ததில்லை.(45)

ஓ! குரு குலத்தைச் சேர்ந்தவரே, மென்மையானவர்களிடம் மென்மையாகவும், கடுமையானவர்களிடம் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்று கடுமையானவர்களாகவும் அவர்கள் நடந்து கொள்கின்றனர். பெருஞ்சக்தி கொண்ட அந்த உயர் ஆன்மாக்கள் எப்போதும் மக்களின் நன்மையிலேயே அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர்.(46) குந்தியோ, (உமது மருமகள்) பாஞ்சாலியோ, உலூபியோ, சாத்வதகுல இளவரசியோ {சுபத்திரையோ}, இந்த மக்களுக்குச் சிறு குற்றத்தையும் செய்யமாட்டார்கள்[4].(47) எங்களிடம் நீர் காட்டிய பரிவும், யுதிஷ்டிரன் கொண்டிருக்கும் அன்பும், இந்த நகரத்து மற்றும் மாகாணத்து மக்களால் ஒருபோதும் மறக்கமுடியாத அளவுக்குப் பெரிய அளவில் இன்னும் நீடித்திருக்கின்றன.(48) குந்தியின் மகன்களும், அறக்கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், இந்த மக்கள் அறமற்றவர்களாக இருப்பினும் அவர்கள் பாதுகாத்துப் பேணி வளர்ப்பார்கள்.(49) எனவே, ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, யுதிஷ்டிரன் குறித்து உமது இதயத்தில் இருக்கும் கவலைகள் அனைத்தையும் விலக்கி, புண்ணியச் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் உம்மை நிறுவிக் கொள்வீராக" என்றார் {பிராமணர் சாம்பன்}".(50)

[4] கும்பகோணம் பதிப்பில், "குந்தியும், திரௌபதியும், உலூபியும், ஸுபத்திரையும் இந்த ஜனங்களுக்கு ஒருகாலும் பிரதிகூலங்களைச் செய்யமாட்டார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "குந்தி, பாஞ்சாலி, உலூபி, சாத்வதி {சுபத்திரை} ஆகியோர் ஒருபோதும் இந்த மக்களுக்கு எதிரான எதையும் செய்ய மாட்டார்கள்" என்றிருக்கிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அந்தச் சபையில் இருந்தோர் ஒவ்வொருவரும், அறமும், தகுதியும் நிறைந்த அந்தப் பிராமணரின் சொற்களைக் கேட்டு, அங்கீகரித்து, "நன்று, நன்று" என்று சொல்லி அவற்றைத் தன்னுடைய சொற்களாகவே ஏற்றனர்.(51) திருதராஷ்டிரனும், அந்தச் சொற்களை மீண்டும் மீண்டும் புகழ்ந்து, தன் குடிமக்களுக்கு மெதுவாக விடை கொடுத்தனுப்பினான்.(52) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, அவர்களால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டு, அவர்களது மங்கலப் பார்வைகளைப் பெற்ற அந்த முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் கைகளைக் கூப்பி அவர்கள் அனைவரையும் பதிலுக்குக் கௌரவித்தான்.(53) அதன் பிறகு அவன் காந்தாரியுடன் தன் மாளிகைக்குள் நுழைந்தான். அந்த இரவு கழிந்ததும் அவன் என்ன செய்தான் என்பதை இனி கேட்பாயாக" {என்றார் வைசம்பாயனர்}.(54)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 54

ஆங்கிலத்தில் | In English