Saturday, December 14, 2019

சிசுபாலன் மற்றும் ஏகலவ்யனின் வாரிசுகள்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 83

The heirs of Sishupala & Ekalavya! | Aswamedha-Parva-Section-83 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 68)


பதிவின் சுருக்கம் : அர்ஜுனனை வரவேற்ற சிசுபாலனின் மகன் சரபன்; காசி, அந்தகம், கோசலம், கிராதம், தங்கணம் ஆகிய நாடுகளில் வரவேற்பைப் பெற்ற அர்ஜுனன்; தசார்ண மன்னன் சித்ராங்கதனை, நிஷாத மன்னனான ஏகலவ்யன் மகனை வென்றது; திராவிடம், ஆந்திரம், மாஹிஷம் மற்றும் கோல்வ மலை ஆகியவற்றில் அர்ஜுனன் பெற்ற வெற்றி; துவாரகையில் வசுதேவர் மற்றும் உக்ரசேனரால் வரவேற்கப்பட்ட அர்ஜுனன்; பஞ்சநதம் சென்று அங்கிருந்து காந்தாரம் சென்றது...


வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} சொன்னார், "மகத ஆட்சியாளனால் {மேகசந்தியால்} வழிபடப்பட்டவனும், தேரில் வெண்குதிரைகளைப் பூட்டியவனுமான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்த (வேள்விக்) குதிரையைப் பின்தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றான்.(1) விருப்பப்படி திரிந்து கொண்டிருந்த அது {வேள்விக் குதிரை}, கிளிஞ்சல்களின் {சிப்பியின்} பெயரால் அழைக்கப்படுவதும், சேதிகளுக்கு உரியதுமான அழகிய நகரத்தை {சுக்திமதியை}[1] நோக்கித் திரும்பி வந்தது. பெரும்பலம் கொண்டவனும், சிசுபாலனின் மகனுமான சரபன், முதலில் அர்ஜுனனுடன் போரிட்டு அதன் பிறகு, உரிய மதிப்புடன் அவனை வழிபட்டான்.(3) ஓ! மன்னா, அவனால் வழிபடப்பட்டு அந்தச் சிறந்த குதிரை, அதன் பிறகு, காசிகள், அங்கர்கள், கோசலர்கள், கிராதர்கள் மற்றும் தங்கணர்களின் நாடுகளுக்குச் சென்றது.(4)


[1] "இந்த நகரத்தின் பெயர் சுக்திமதி" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சுக்தி என்பது ஒரு முத்தாகும். அந்தத் தலைநகரம் சுக்திமதி என்று பொதுவாக அறியப்பட்டது" என்றிருக்கிறது. சுக்திமதி நகரம் இன்றைய உத்தரப்பிரதேசத்தின் பந்தா நகரத்தின் அருகிலோ, மத்தியப்பிரதேசத்தின் ரெய்வா நகரத்தின் புறநகரத்திலோ இருந்திருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். https://en.wikipedia.org/wiki/Suktimati

அந்த நாடுகள் அனைத்திலும் உரிய மதிப்புடன் வரவேற்கப்பட்ட தனஞ்சயன் தன் வழியில் சென்று கொண்டிருந்தான். உண்மையில் அந்தக் குந்தியின் மகன், அடுத்ததாகத் தசார்ணர்களின் நாட்டுக்குச் சென்றான்.(5) பெரும் பலம் கொண்டவனும், பகைவரை நொறுக்குபவனுமான சித்ராங்கதன் அம்மக்களின் ஆட்சியாளனாக இருந்தான். அவனுக்கும், விஜயனுக்கும் இடையில் மிகப் பயங்கரமான போர் ஒன்று நேர்ந்தது.(6) அவனைத் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தவனும், மனிதர்களில் முதன்மையானவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், ஏகலவ்யனின் மகனான நிஷாத மன்னனின் நாட்டிற்குச் சென்றான்.(7) ஏகலவ்யன் மகன் போரில் அர்ஜுனனை வரவேற்றான். அந்தக் குரு வீரனுக்கும், நிஷாதர்களுக்கும் இடையில் நடந்த மோதல் மயிர்ச் சிலிர்க்கும் வகையில் சீற்றமிக்கதாக இருந்தது.(8)

போரில் வெல்லப்பட இயலாதவனான குந்தியின் வீரமிக்க மகன், வேள்விக்குத் தடையாக இருந்த அந்த நிஷாத மன்னனை வீழ்த்தினான் ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஏகலவ்யனின் மகனை அடக்கி இந்திரனின் மகன், நிஷாதர்களால் முறையாக வழிபடப்பட்டு, தெற்குக் கடலை நோக்கி முன்னேறிச் சென்றான்.(10) அந்தப் பகுதிகளில் திராவிடர்கள், ஆந்திரர்கள், மாஹிஷகர்கள், கோல்வ மலையில் {கோல்லகிரியில்} உள்ள மனிதர்கள் ஆகியோருக்கும் கிரீடம் தரித்த வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் போர்கள் நடைபெற்றன.(11) அருஞ்செயல் ஏதும் செய்யாமல் அந்த இனக்குழுக்களை அடக்கிய அர்ஜுனன், குதிரையால் வழிநடத்தப்பட்டுக் கால்நடையாகவே ஸுராஷ்ட்டிரர்களின் {சௌராஷ்டிரர்களின்} நாட்டுக்குச் சென்றான்.(12)

கோகர்ணத்தை அடைந்த அவன், அங்கிருந்து பிரபாஸத்திற்குச் சென்றான். அடுத்ததாக விருஷ்ணிகுல வீரர்களால் பாதுகாக்கப்படும் அழகிய துவாராவதி நகரத்திற்குச் சென்றான்.(13) குரு மன்னனின் அழகிய வேள்விக் குதிரை துவாராவதியை அடைந்தபோது, யாதவ இளைஞர்கள் அந்தக் குதிரைக்கு எதிராகத் தங்கள் பலத்தைப் பயன்படுத்தினர்.(14) எனினும், மன்னர் உக்ரசேனர் புறப்பட்டுச் சென்று அக்காரியத்தைச் செய்வதில் இருந்து அந்த இளைஞர்களைத் தடுத்தான். அதன்பிறகு, அந்த விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் ஆட்சியாளர் {உக்ரசேனர்}, தன் அரண்மனையில் இருந்து வெளியே வந்து,(15) அர்ஜுனனின் தாய்மாமனான வசுதேவரின் துணையுடன் உற்சாகமாக அந்தக் குரு வீரனைச் சந்தித்து, உரிய சடங்குகளுடன் அவனை வரவேற்றார்.(16)

வயது முதிர்ந்தவர்களான அந்தத் தலைவர்கள் இருவரும், அர்ஜுனனை முறையாகக் கௌரவித்தனர். அந்தக் குரு இளவரசன் அவர்களின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தான் பின்பற்றிச் சென்ற குதிரை வகுத்த வழியில் சென்றான்.(17) அந்த வேள்விக் குதிரை மேற்குக் கடலின் கரையோரமாகச் சென்று இறுதியாக ஐந்து நீர்நிலைகளைக் கொண்டதும், மக்கள் தொகையிலும், செழிப்பிலும் பெருகி இருந்ததுமான நாட்டை அடைந்தது.(18) அங்கிருந்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரை காந்தாரர்களின் நாட்டுக்குச் சென்றது. அங்கே சென்று அது, குந்தியின் மகனால் பின்தொடரப்பட்டு விருப்பப்படி சுற்றித் திரிந்தது.(19) சகுனியின் மகனும், பாண்டவர்களிடம் தன் தந்தை கொண்டிருந்த கடும் வெறுப்பை நினைவில் கொண்டிருந்தவனுமான காந்தார ஆட்சியாளனுக்கும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்}  இடையில் கடும்போர் ஒன்று நேர்ந்தது" {என்றார் வைசம்பாயனர்}.(20)

அஸ்வமேதபர்வம் பகுதி – 83ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English