Sunday, December 15, 2019

சகுனியின் வாரிசு! - அஸ்வமேதபர்வம் பகுதி – 84

The heir of Shakuni! | Aswamedha-Parva-Section-84 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 69)


பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுடன் போரிட்ட சகுனியின் மகன்; அவனைத் தடுத்து அறிவுறுத்திய அர்ஜுனன்; தன் மகனைக் காக்க வந்த சகுனியின் மனைவி; சகுனியின் மகனைக் கொல்லாமல் விட்ட அர்ஜுனன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "காந்தாரர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனியின் வீர மகன்[1], ஒரு பெரும்படையின் துணையுடன் சுருள் முடி கொண்ட குரு வீரனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றான். அந்தப் படையில் யானைகளும், குதிரைகளும், தேர்களும் முறையாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்தன. மேலும் அப்படை கொடிகள் மற்றும் பதாகைகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(1) தங்கள் மன்னனான சகுனி கொல்லப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும், அதற்குப் பழிதீர்க்கும் வஞ்சத்தில் எரிந்து கொண்டிருந்தவர்களும், விற்களுடன் கூடியவர்களுமான அந்தப் போர்வீரர்கள் ஒன்றுசேர்ந்தவர்களாகப் பார்த்தனை நோக்கி விரைந்தனர்.(2) அற ஆன்மா கொண்டவனும், வெல்லப்பட முடியாதவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, அவர்களிடம் அமைதியாகப் பேசினாலும், (அர்ஜுனன் மூலமாகச் சொல்லப்பட்ட) யுதிஷ்டிரனின் நல்ல வார்த்தைகளை அவர்கள் ஏற்க விரும்பவில்லை.(3) இனிய சொற்களைக் கொண்டு பார்த்தனால் தடுக்கப்பட்டாலும், அவர்கள் கோபவசப்பட்டவர்களாக அந்த வேள்விக் குதிரையைச் சூழ்ந்தனர். இதனால் பாண்டுவின் மகன் கோபத்தில் நிறைந்தான்.(4)


[1] சகுனியின் மகன்கள் உலூகன் மற்றும் விருகாசுரன் ஆகிய இருவராவர். உலூகன் பதினெட்டாம் நாள் போரில் {சல்லிய பர்வம் 28ம் பகுதியில்} சகாதேவனால் கொல்லப்படுகிறான். விருகாசுரன் பதினேழாம் நாள் போரில் நகுலனால் கொல்லப்படுவதாகச் சொல்லப்படுகிறது. கங்குலியின் பதிப்பில் இதற்கு ஆதாரம் திரட்ட முடியவில்லை. இங்கே சொல்லப்படும் சகுனியின் மகன் யார் என்பது தெரியவில்லை. ஒருவேளை விருகாசுரனாக இருக்கலாம். கங்குலியிலும், கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இதற்கான அடிக்குறிப்போ, விளக்கமோ காணக்கிடைக்கவில்லை. மத்ஸ்ய புராணத்தில் கரபி என்ற பெயரில் சகுனியின் மகன் ஒருவன் சொல்லப்படுகிறான் என புராணிக் என்சைக்லோபீடியா பக்கம் 389ல் தகவல் இருக்கிறது.

அப்போது அர்ஜுனன், காந்தியில் சுடர்விடுபவையும், காண்டீவத்தில் இருந்து அலட்சியமாக {அதிக முயற்சியின்றி} ஏவப்பட்டவையும், கத்தியைப் போன்ற தலைகளைக் கொண்டவையுமான கணைகளால் {க்ஷுரங்களால்} காந்தாரப் போர்வீரர்கள் பலரின் தலைகளைக் கொய்தான்.(5) ஓ! மன்னா, பார்த்தனால் இவ்வாறு காந்தாரர்கள் கொல்லப்பட்ட போது, பெரிதும் துன்பமடைந்த அவர்கள் குதிரையை விடுவித்து விட்டு, அச்சத்தால் போரை விட்டு விலகிச் சென்றனர்.(6) எனினும், அதற்கு மேலும் அனைத்துப் பக்கங்களிலும் தன்னைச் சூழ்ந்திருந்த காந்தாரப் போராளிகளால் தடுக்கப்பட்டாலும், பெரும் சக்தி கொண்டவனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அவர்களில் பலரின் பெயர்களை முன்பே சொல்லிவிட்டு அவர்களின் தலைகளைக் கொய்தான்.(7) அந்தப் போரில் அவனைச் சுற்றிலும் இருந்த காந்தாரப் போர் வீரர்கள் இவ்வாறு கொல்லப்பட்ட போது, சகுனியின் அரசமகன், அந்தப் பாண்டுவின் மகனைத் தடுக்க முன்வந்தான்.(8)

க்ஷத்திரியக் கடமையால் உந்தப்பட்ட அர்ஜுனன், தன்னுடன் போரிட்டுக் கொண்டிருந்த காந்தார மன்னனிடம், "யுதிஷ்டிரரின் ஆணைகளின் விளைவாக, நான் என்னுடன் போரிடும் மன்னர்களைக் கொல்ல நினைப்பதில்லை. ஓ! வீரா, என்னுடன் போரிடுவதை நிறுத்துவாயாக. தோல்வி உனதாக வேண்டாம்" என்றான்.(9,10) இவ்வாறு சொல்லப்பட்ட சகுனியின் மகன், அறியாமையில் மதிமயங்கி, அந்த ஆலோசனையை அலட்சியம் செய்து, போர்ச்சாதனைகளில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவனான அந்தக் குரு வீரனை வேகமாகச் செல்லும் கணைகள் பலவற்றால் மறைத்தான்.(11) அப்போது பார்த்தன், பிறைவடிவக் கணையொன்றால் {ஒரு அர்த்தச்சந்திர பாணத்தால்} தன் பகைவனின் தலைப்பாகையை வெட்டி வீழ்த்தினான். அளவிலா ஆன்மாகக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, (குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் தான் வெட்டி வீழ்த்திய) ஜெயத்ரதன் தலையைப் போலவே அந்தத் தலைப்பாகையையும் நெடுந்தொலைவு தள்ளி விழச் செய்தான்.(12)

இந்த அருஞ்செயலைக் கண்ட காந்தாரப் போர்வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அர்ஜுனன் தானாகவே தங்கள் மன்னனை உயிருடன் விட்டான் என்பதை அவர்கள் நன்கு புரிந்து கொண்டனர்.(13) அப்போது, அந்தக் காந்தாரர்களின் இளவரசன், அச்சமடைந்த மான் கூட்டத்திற்கு ஒப்பான தன் போர்வீரர்கள் அனைவருடன் சேர்ந்து களத்தைவிட்டுத் தப்பி ஓடத் தொடங்கினான்.(14) அச்சத்தால் உணர்விழந்த காந்தாரர்கள், தப்ப இயலாதவர்களாகக் களத்திலேயே திரிந்து கொண்டிருந்தனர். அர்ஜுனன், அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு அவர்களில் பலரின் தலைகளை வெட்டி வீழ்த்தினான்.(15) அர்ஜுனனுடைய கணைகளின் விளைவால் பலர் தங்கள் கைகளை இழந்திருந்தாலும், அந்த உறுப்பை இழந்ததைக் கூட அறியாத வண்ணம் அவர்கள் அச்சத்தால் திகைத்திருந்தனர். உண்மையில், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட பார்த்தனின் நெடுங்கணைகளால் அந்தக் காந்தாரப் படை பெரிதும் பீடிக்கப்பட்டது.(16)

அச்சமடைந்த மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைக் கொண்டதும், போர்வீரர்கள் பலரையும் விலங்குகள் பலவற்றையும் இழந்திருந்ததும், கற்கட்டாகக் குறைக்கப்பட்டதும், முறியடிக்கப்பட்டதுமான அந்தப் படை, மீண்டும் மீண்டும் களத்திற்குள்ளேயே சுழன்று திரியத் தொடங்கியது.(17) இவ்வாறு கொல்லப்பட்ட அந்தப் பகைவருக்கு மத்தியில், அருஞ்சாதனைகளுக்காப் புகழ்பெற்றவனான அந்தக் குருவீரனுக்கு எதிரில் எவனும் நிற்பது காணப்படவில்லை. தனஞ்சயனின் ஆற்றலையைத் தாங்கக்கூடிய எவரும் அங்கே காணப்படவில்லை.(18) அப்போது, காந்தாரர்களின் ஆட்சியாளனுடைய தாயானாவள் {சகுனியின் மனைவி}, அச்சத்தால் நிறைந்தவளாக, தன் நாட்டின் முதிர்ந்த அமைச்சருகளுடன் சேர்ந்து, அர்ஜுனனுக்காகச் சிறந்த அர்க்கியத்துடன் தன் நகரத்தைவிட்டு வெளியே வந்தாள்.(19) உறுதியான இதயம் கொண்டவனும், துணிவுமிக்கவனுமான தன் மகனை மேலும் போரிடுவதில் இருந்து தடுத்து, உழைப்பால் ஒருபோதும் களைப்படையாதவனான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} நிறைவடையச் செய்தாள்.(20)

பலமிக்கவனான பீபத்சு {அர்ஜுனன்}, காந்தாரர்களுக்குக் கருணை காட்ட விரும்பி அவளை வழிபட்டான். சகுனியின் மகனைத் தேற்றும் வகையில் அவன்,(21) "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, உன் இதயத்தில் இவ்வளவு வெறுப்பை நிறுவியிருப்பதன் மூலம் நீ எனக்கு ஏற்புடையதைச் செய்யவில்லை. ஓ! வீரர்களைக் கொல்பவனே, ஓ! பாவமற்றவனே, நீ என் மைத்துனனாவாய்[2].(22) என் தாயான காந்தாரியை நினைத்தும், திருதராஷ்டிரரின் நிமித்தமாகவும் நான் உன் உயிரை எடுக்கவில்லை. ஓ! மன்னா {சகுனியின் மகனே}, அதன் காரணமாகவே நீ இன்னும் உயிருடன் வாழ்கிறாய். எனினும், உன் தொண்டர்கள் பலர் என்னால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.(23) இனிமேலும் இவ்வாறு நிகழ வேண்டாம். பகைமைகள் தொடர வேண்டாம். உன் புத்தி மீண்டும் இவ்விதமாகச் செல்ல வேண்டாம். சைத்ர மாதத்தின் முழுநிலவு நாளில் நடைபெற இருக்கும் எங்கள் மன்னரின் குதிரை வேள்விக்கு நீ நிச்சயம் வர வேண்டும்" என்றான் {அர்ஜுனன்}".(24)

[2] "சகுனி, துரியோதனனின் தாய்மாமனாவான், எனவே, அர்ஜுனனுக்கும் அவன் அவ்வாறே ஆவன். சகுனியின் மகனும், அர்ஜுனனும் மாமன் மகன் மற்றும் அத்தை மகன்களாவர் {மைத்துனர்களாவர்}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அஸ்வமேதபர்வம் பகுதி – 84ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English