Sahadeva killed Sakuni and Uluka! | Shalya-Parva-Section-28 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 28)
பதிவின் சுருக்கம் : சகாதேவனை எதிர்த்து வந்த சகுனி; பீமனோடு மோதிய சகுனியும், உலூகனும்; போர்க்களத்தின் கோரநிலை; சகாதேவனைத் தாக்கிய உலூகன்; படைவீரர்களுக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்; உலூகனின் தலையைக் கொய்த சகாதேவன்; சகுனி ஏவிய ஆயுதங்களைக் கலங்கடித்த சகாதேவன்; சகுனியைக் கொன்ற சகாதேவன்; காண்டீவத்தின் நாணொலி கேட்டு அஞ்சி ஓடிய வீரர்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்கு அழிவைத் தந்த அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகனான சகுனி, சகாதேவனை எதிர்த்து விரைந்தான்.(1) வீரச் சகாதேவனோ, சகுனி தன்னை நோக்கி வேகமாக விரைந்தபோது, பூச்சிக்கூட்டங்களைப் போன்ற எண்ணற்ற வேகமான கணைமாரியை அந்தப் போர்வீரனின் {சகுனியின்} மீது ஏவினான்.(2) அந்த நேரத்தில் உலூகனும் பீமனோடு மோதி, பத்து கணைகளால் அவனைத் துளைத்தான். அதேவேளையில் மூன்று கணைகளால் பீமனைத் துளைத்த சகுனி, ஓ! ஏகாதிபதி, தொண்ணூறால் சகாதேவனை மறைத்தான்.(3) உண்மையில், போரில் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்த வீரர்கள், கங்க மற்றும் மயில் இறகுகளைக் கொண்டவையும், தங்கத்தாலான சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கள் காதுவரை இழுக்கப்பட்ட நாண்கயிறுகளில் இருந்து ஏவப்பட்டவையுமான கூரிய கணைகள் பலவற்றால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(4) அவர்களின் விற்களில் இருந்தும், கரங்களில் இருந்தும் ஏவப்பட்ட அந்தக் கணைமாரிகள், ஓ! ஏகாதிபதி, மேகத்தில் இருந்து பொழியும் அடர்த்தியான மழைப்பொழிவைப் போலத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தன.(5)
அப்போது சினத்தால் நிறைந்தவனான பீமன் மற்றும் பெரும் வீரம் கொண்டவனான சகாதேவன் ஆகிய இருவரும், பெரும் வலிமையைக் கொண்டவர்களாக, மிகப் பெரும் பேரழிவையுண்டாக்கியபடி அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தனர்.(6) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் படையானது, அவ்விரு வீரர்களால் ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான கணைகளால் மறைக்கப்பட்டது. அதன் காரணமாகக் களத்தில் பல பகுதிகளில் ஆகாயமானது இருளால் மறைக்கப்பட்டது.(7) ஓ! ஏகாதிபதி, கணைகளால் மறைக்கப்பட்ட குதிரைகள், ஓடிக்கொண்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான போராளிகளை இழுத்துச் சென்று, அவர்கள் கொல்லப்பட்டதன் விளைவாக, போர்க்களத்தில் உள்ள பல பகுதிகளின் வழித்தடங்கள் முற்றாக மறைக்கப்பட்டன.(8) சாரதிகளுடன் கொல்லப்பட்ட குதிரைகள், உடைந்த கேடயங்கள், வேல்கள், வாள்கள், ஈட்டிகள், சூலங்கள் ஆகியவற்றால் சுற்றிலும் மறைக்கப்பட்ட பூமியானது, மலர்களால் மூடப்பட்டுக் கிடப்பதைப் போலப் பலவண்ணங்களில் தென்பட்டது.(9) ஒருவரோடொருவர் மோதிக்கொண்டு, போரில் திரிந்து கொண்டிருந்த போராளிகள், ஓ! மன்னா, கோபத்தால் நிறைந்து ஒருவரையொருவர் கொன்றனர்.(10)
விரைவில் அந்தப் போர்க்களமானது, காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், கோபத்தில் கண்கள் புரண்டு, சினத்தால் உதடுகள் கடிக்கப்பட்ட நிலையில் இருந்த முகங்களால் அருளப்பட்டவையுமான தலைகளால் மறைக்கப்பட்டதாயிற்று.(11) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் யானைகளின் துதிக்கைகளுக்கு ஒப்பானவையும், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், தோலுறைகளால் மறைக்கப்பட்டவையும், வாள்களையும், வேல்களையும், போர்க்கோடரிகளையும் இன்னும் பிடித்துக் கொண்டிருந்தவையுமான போர்வீரர்களின் வெட்டப்பட்ட கரங்களாலும்,(12) எழுந்து நின்ற நிலையில், இரத்தம் சிந்தியபடி களத்தில் ஆடிக் கொண்டிருந்த தலையற்ற உடல்களாலும் மறைக்கப்பட்டும், ஊனுண்ணும் பல்வேறு விலங்குகளால் மொய்க்கப்பட்டும், ஓ! தலைவா, பூமியானது பயங்கரத் தன்மையை வெளிப்படுத்தியது.(13) பாரதப் படையானது எஞ்சிய சிறு குழுவாகக் குறைக்கப்பட்ட பிறகு, அந்தப் பயங்கரப் போரில் மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவர்கள், கௌரவர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பத் தொடங்கினர்.(14)
அதே வேளையில், வீரனான சுபலன் மகனின் {சகுனியின்} வீரமகன் {உலூகன்}, ஒரு வேலால் {பராசத்தால்} சகாதேவனின் தலையை மிகப் பலமாகத் தாக்கினான்.(15) அந்த அடியின் விளைவால் மிகவும் கலக்கமடைந்த சகாதேவன், ஓ! ஏகாதிபதி, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(16) சகாதேவனை அந்த அவலநிலையில் கண்ட வீரப் பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து மொத்த குரு படையையும் தடுத்தான்.(17) அவனது துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} பகைவீரர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் துளைத்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {பீமன்}, அவர்களைத் துளைத்தபிறகு சிங்க முழக்கம் செய்தான்.(18) அந்த முழக்கத்தால் அச்சமடைந்த சகுனியின் தொண்டர்கள், தங்கள் குதிரைகள் மற்றும் யானைகளுடன் அச்சத்தால் அவசரமாக அங்கிருந்து தப்பி ஓடினர்.(19)
அவர்கள் பிளந்தோடுவதைக் கண்ட மன்னன் துரியோதனன், அவர்களிடம், "அறநெறியறியா க்ஷத்திரியர்களே, நிற்பீராக. போரிடுவீராக. தப்படி ஓடுவதால் என்ன பயன்? புறமுதுகிடாமல் போரில் உயிர்மூச்சை விடும் வீரன், இங்கேயும் புகழை அடைந்து, இதன்பிறகும் அருள் உலகங்களில் மகிழ்கிறான்" என்றான்.(20) இவ்வாறு மன்னனால் உற்சாகமூட்டப்பட்ட சுபலன் மகனின் {சகுனியின்} தொண்டர்கள், மரணத்தையே தங்கள் இலக்காக்கிக் கொண்டு பாண்டவர்களை எதிர்த்து மீண்டும் விரைந்தனர்.(22) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்படி விரைந்து வந்த போர்வீரர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது, கலங்கிய கடலுக்கு ஒப்பாகப் பயங்கரமானதாக இருந்தது.(23) ஓ! ஏகாதிபதி, போரில் இவ்வாறு முன்னேறிவரும் சுபலன் மகனின் {சகுனியின்} தொண்டர்களைக் கண்டவர்களும், வெற்றியாளர்களுமான பாண்டவர்கள் அவர்களை எதிர்த்துச் சென்றனர்.(24) சிறிது ஆறுதலையடைந்தவனும், வெல்லப்படமுடியாதவனுமான சகாதேவன், ஓ! ஏகாதிபதி, பத்து கணைகளால் சகுனியையும், மூன்றால் அவனது குதிரைகளையும் துளைத்தான். பிறகு அவன், பெரும் எண்ணிக்கையிலான வேறு சில கணைகளால் சுபலன் மகனின் {சகுனியின்} வில்லை மிக எளிதாக வெட்டினான்.(25) எனினும், போரில் வெல்லப்பட முடியாதவனான சகுனி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அறுபது கணைகளால் நகுலனையும், அடுத்தது ஏழால் பீமசேனனையும் துளைத்தான்.(26)
உலூகனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தன் தந்தையை {சகுனியைக்} காக்க விரும்பி, ஏழு கணைகளால் பீமனையும், எழுபதால் சகாதேவனையும் துளைத்தான்.(27) அம்மோதலில் பீமசேனன், பல கூரிய கணைகளால் உலூகனையும், அறுபத்துநான்கால் சகுனியையும், அவர்களைச் சுற்றிப் போரிட்டுக் கொண்டிருந்த பிற போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் மும்மூன்றாலும் துளைத்தான்.(28) எண்ணெயில் தோய்க்கப்பட்ட கணைகளைக் கொண்டு பீமசேனனால் தாக்கப்பட்ட கௌரவர்கள், அந்தப் போரில் சினத்தால் நிறைந்து, மின்னலால் சக்தியூட்டப்பட்ட மேகங்கள் மலைச்சாரில் மழையைப் பொழிவதைப் போலக் கணைமாரிகளால் சகாதேவனை மறைத்தனர்.(29)
அப்போது, வீரச் சகாதேவன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன்னை எதிர்த்து வந்த உலூகனின் தலையை ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} கொய்தான்.(30) சகாதேவனால் கொல்லப்பட்ட உலூகன், அந்தப் போரில் பாண்டவர்களை மகிழ்வித்தபடியே, தன் அங்கங்கள் அனைத்தும் குருதியில் குளித்த நிலையில், தனது தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான்.(31) தன் மகன் {உலூகன்} கொல்லப்பட்டதைக் கண்ட சகுனி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கண்ணீரால் தடைபட்ட குரலுடனும், நீண்ட பெருமூச்சுகளை விட்டபடியும் விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(32) கண்ணீர் நிறைந்த கண்களுடன் ஒரு கணம் சிந்தித்த சகுனி, கடுமூச்சுவிட்டபடியே சகாதேவனை அணுகி, அவனை மூன்று கணைகளால் துளைத்தான்.(33) சுபலன் மகனால் {சகுனியால்} ஏவப்பட்ட அந்தக் கணைகளைக் கணைமாரிகளால் கலங்கடித்த அந்த வீரச் சகாதேவன், ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் தன் எதிராளியின் {சகுனியின்} வில்லை அறுத்தான்.(34)
தன் வில்லானது வெட்டப்பட்டதைக் கண்டவனும், சுபலனின் மகனுமான சகுனி, ஓ! மன்னா, உறுதியான ஒரு வாளை எடுத்துக் கொண்டு, அதைச் சகாதேவன் மீது வீசினான்.(35) எனினும் பின்னவன் {சகாதேவன்}, ஓ! ஏகாதிபதி, அம்மோதலில் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த சுபலன் மகனின் {சகுனியின்} அந்தப் பயங்கரமான வாளை மிக எளிதாக இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(36) தன் வாளானது இரண்டாக வெட்டப்பட்டதைக் கண்ட சகுனி, உறுதிமிக்கக் கதாயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதைச் சகாதேவன் மீது வீசினான். அந்தக் கதாயுதமும், தன் இலக்கை அடையமுடியாமல் பூமியில் விழுந்தது.(37) இதன் பிறகு சினத்தால் நிறைந்தவனான அந்தச் சுபலன் மகன் {சகுனி}, எதிர்வரும் கால இரவுக்கு ஒப்பான பயங்க ஈட்டி ஒன்றை அந்தப் பாண்டு மகனின் {சகாதேவனின்} மீது வீசினான்.(38) அம்மோதலில் சகாதேவன், தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் அந்த ஈட்டியைத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் கணைகளைக் கொண்டு மூன்று துண்டுகளாக மிக எளிதாக வெட்டி வீழ்த்தினான்.(39) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், துண்டுகளாக வெட்டப்பட்டதுமான அந்த ஈட்டியானது ஆகாயத்தில் இருந்து விழும் ஒரு சுடர்மிக்க வஜ்ரத்தைப் போலப் பல கீற்றுகளாகச் சிதறியபடியே பூமியில் விழுந்தது.(40)
அந்த ஈட்டியானது கலங்கடிக்கப்பட்டதைக் கண்டு அச்சத்தால் பீடிக்கப்பட்ட சுபலனின் மகனும் {சகுனியும்}, உமது துருப்பினர் அனைவரும் அச்சத்துடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.(41) அப்போது வெற்றியில் ஆவலோடு இருந்த பாண்டவர்கள் உரத்த கூச்சல்களை வெளியிட்டனர். தார்தராஷ்டிரர்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட அவர்கள் அனைவரும் போரில் இருந்து புறமுதுகிட்டனர்.(42) உற்சாகமற்றவர்களாக அவர்களைக் கண்ட மாத்ரியின் அந்த வீரமகன் {சகாதேவன்} அந்தப் போரில் பல்லாயிரம் கணைகளால் அவர்களைத் தடுத்தான்.(43) அப்போது சகாதேவன், வெற்றியடையும் எதிர்பார்ப்பில் ஓடிக் கொண்டிருந்தவனும், காந்தாரர்களின் சிறந்த குதிரைப்படையால் பாதுகாக்கப்பட்டவனுமான சுபலனின் மகனை {சகுனியை} வந்தடைந்தான்.(44) ஓ! மன்னா, தன் பங்காக ஒதுக்கப்பட்ட அந்தச் சகுனி இன்னும் உயிரோடிருப்பதை நினைத்துப் பார்த்த சகாதேவன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேரில் அந்தப் போர்வீரனைப் பின்தொடர்ந்து சென்றான்.(45)
உறுதிமிக்கத் தன் வில்லுக்கு நாண்பொருத்திக் கொண்டு, அதை மிகப் பலமாக வளைத்த சகாதேவன், சினத்தால் நிறைந்து, அந்தச் சுபலன் மகனைப் {சகுனியைப்} பின்தொடர்ந்து சென்று, கூர்முனை வேல்களால் வலிமைமிக்க யானையொன்றைத் தாக்கும் ஒரு மனிதனைப் போல, கழுகின் இறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணைகள் பலவற்றால் அவனை மூர்க்கமாகத் தாக்கினான்.(46) பெரும் மனோவலிமை கொண்ட சகாதேவன், இவ்வாறு தன் எதிரியைப் பீடித்து, (அவனுடைய கடந்த காலக் கெடுசெயல்களை) அவனது மனத்திற்கு நினைவூட்டும்படி இந்த வார்த்தைகளால்: "க்ஷத்திரியக் கடமைகளை நோற்று (என்னோடு) போரிடுவீராக. ஆண்மையோடிருப்பீராக.(47) ஓ! மூடரே, சபைக்கு மத்தியில் பகடையில் சூதாடும்போது நீர் மிகவும் மகிழ்ந்தீர். ஓ! தீய அறிவைக் கொண்டவரே, அச்செயலின் கனியை இப்போது பெறுவீராக.(48) அப்போது எங்களைக் கேலிபேசிய தீய ஆன்மாக்களைக் கொண்டோர் அனைவரும் அழிந்துவிட்டனர். குலத்தில் இழிந்தவனான துரியோதனனும், அவனது தாய்மாமனான நீரும் மட்டுமே இன்னும் உயிரோடிருக்கிறீர்கள்.(49) ஒரு தடியைக் கொண்டு மரத்தின் கனியைக் கொய்யும் ஒரு மனிதனைப் போல நான் என் கத்தித் தலைக் கணை ஒன்றைக் கொண்டு தலையைக் கொய்து இன்றும்மைக் கொல்லப் போகிறேன்" என்றான்.(50)
பெரும் வலிமை கொண்ட மனிதர்களில் புலியான அந்தச் சகாதேவன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, சினத்தால் நிறைந்து, சகுனியை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(51) போர்வீரர்களில் முதன்மையானவனும், வெல்லப்படமுடியாதவனுமான அந்தச் சகாதேவன், கோபத்தால் எரித்துவிடுபவனைப் போலத் தன் எதிரியை அணுகி, தன் வில்லைப் பலமாக வளைத்து,(52) பத்து கணைகளால் சகுனியையும், நான்கால் அவனது குதிரைகளையும் துளைத்தான். பிறகு அவனது குடை, கொடிமரம், வில் ஆகியவற்றை வெட்டி வீழ்த்திய அவன், ஒரு சிங்கத்தைப் போல முழக்கம் செய்தான்.(53) சகாதேவனால் இவ்வாறு கொடிமரம், வில் மற்றும் குடை ஆகியன வெட்டப்பட்ட அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, தன் முக்கிய அங்கமெங்கும் கணைகள் பலவற்றால் துளைக்கப்பட்டிருந்தான்.(54) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த வீரச் சகாதேவன், தடுக்கப்படமுடியாத கணைமாரியை சகுனியின் மீது மீண்டுமொருமுறை ஏவினான்.(55)
அப்போது சினத்தால் நிறைந்த அந்தச் சுபலன் மகன் {சகுனி}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வேல் ஒன்றால் சகாதேவனைக் கொல்லும் விருப்பத்துடன் அம்மோதலில் தனியொருவனாகப் பின்னவனை {சகாதேவனை} நோக்கி விரைந்து சென்றான்.(56) எனினும் அந்த மாத்ரியின் மகனோ {சகாதேவனோ}, ஒரு கணத்தையும் இழக்காமல், மூன்று அகன்ற தலைக் கணைகளைக் கொண்டு, போரின் முன்னணியில் வைத்துத் தன் எதிரியின் உயர்த்தப்பட்ட வேலையும், நன்கு பருத்திருந்த அவனது கரங்கள் இரண்டையும் வெட்டி வீழ்த்தி, உரத்த முழக்கம் செய்தான்.(57) பெரும் சுறுசுறுப்பை உடையவனான வீரச் சகாதேவன், கடினமான இரும்பாலானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதும், கவசமனைத்தையும் ஊடுவவல்லதும், பெரும் வேகத்துடனும், கவனத்துடனும் ஏவப்பட்டதுமான ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு தன் எதிரியின் {சகுனியின்} தலையை அவனது உடலில் இருந்து வெட்டி வீழ்த்தினான்.(58) சுபலனின் மகன் {சகுனி}, அந்தப் போரில் பாண்டுவின் மகனால் ஏவப்பட்டதும், பெருங்கூர்மை மற்றும் சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தக் கணையால் தன் தலையை இழந்து கீழே பூமியில் விழுந்தான்.(59) உண்மையில், சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {சகாதேவன்}, தங்கச் சிறகால் அலங்கரிக்கப்பட்டதும், கல்லில் கூராக்கப்பட்டதும், வேகமாகச் செல்லக் கூடியதுமான அக்கணையைக் கொண்டு குருக்களின் தீய கொள்கைக்கு வேராக இருந்த அந்தத் தலையைத் தாக்கி வீழ்த்தினான்.(60) முக்கிய அங்கமெங்கும் ஊனீராக நனைந்தபடி தரையில் கிடக்கும் தலையற்ற சகுனியைக் கண்ட உமது போர்வீரர்கள், அச்சத்தால் பலவீனர்களாகி, தங்கள் கைகளில் ஆயுதங்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(61)
அந்த நேரத்தில் தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியவற்றுடன் கூடிய உமது மகன்கள், காண்டீவத்தின் நாணொலியைக் கேட்டு முற்றிலும் பிளந்தவர்களாக, நிறமற்ற முகங்களைக் கொண்டவர்களாக, அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களாக, தங்கள் உணர்வுகளை இழந்தவர்களாகத் தப்பி ஓடினார்கள்.(62) சகுனியை அவனது தேரில் இருந்து வீசியெறிந்த பிறகு, ஓ! பாரதரே, அந்தப் பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். தங்களுக்கு மத்தியில் இருந்த கேசவனுடன் மகிழ்ந்த அவர்கள், அந்தப் போரில் தங்கள் துருப்புகளுக்கு மகிழ்வூட்டும்படி தங்கள் சங்குகளை முழக்கினர்.(63) மகிழ்ச்சியான இதயங்களுடன் கூடிய அவர்கள், "ஓ! வீரா, தீய ஆன்மா மற்றும் தீய வழிகளைக் கொண்டவனான சகுனி, அவனுடைய மகனுடன் சேர்த்து உன்னால் கொல்லப்பட்டது நற்பேறாலேயே {பாக்கியத்தினாலேயே}" என்று சொல்லி சகாதேவனை வழிபட்டனர்" {என்றான் சஞ்சயன்}.(64)
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 28ல் உள்ள சுலோகங்கள் : 64
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 28ல் உள்ள சுலோகங்கள் : 64
சல்லிய வத பர்வம் முற்றும்
ஆங்கிலத்தில் | In English |