“I will take part in war, after you cease” said KarnA!| Udyoga Parva - Section 62 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 22) {யானசந்தி பர்வம் - 16}
பதிவின் சுருக்கம் : கௌர்வர்களுக்கு உற்சாகமூட்டும்படி கர்ணன் பேசியது; பரசுராமரிடம் தான் பெற்ற பிரம்மாஸ்திரத்தைக் குறித்துச் சொன்னது; தான் ஒருவனாகவே சென்று பாண்டவர்களையும் அவர்களது கூட்டணியையும் வென்று திரும்புவதாகக் கர்ணன் சொன்னது; பீஷ்மர் கர்ணனைக் கண்டு எள்ளி நகையாடியது; சக்தி ஆயுதத்தைக் கிருஷ்ணன் தவிடுபொடியாக்குவான் என்றும், நாகாஸ்திரத்துடன் சேர்த்து அர்ஜுனன் கர்ணனையும் அழிப்பான் என்றும் பீஷ்மர் சொன்னது; இதனால் கோபமுற்ற கர்ணன், பீஷ்மர் ஒழிந்த பிறகே, தான் போரில் கலந்து கொள்வதாகச் சொல்லிவிட்டு சபையைவிட்டு வெளியேறியது; கர்ணனின் பொய்மை குறித்துப் பீஷ்மர் இடித்துரைத்தது; பீஷ்மருக்குப் பதிலுரைக்கத் துரியோதனன் எத்தனித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பார்த்தனைக் {அர்ஜுனனைக்} குறித்துக் {சஞ்சயனிடம்} கேட்பதற்கு இருந்த விசித்திரவீரியன் மகனான திருதராஷ்டிரனைப் பொருட்படுத்தாத கர்ணன், அங்கே கூடியிருந்த குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} உற்சாகத்தை ஊட்டும்படி, திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான். அவன் {கர்ணன்}, “பழங்காலத்தில், போலிப் பாசாங்கால் [1], பிரம்மாயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} அடைந்தேன் என்பதை அறிந்த ராமர் {பரசுராமர்}, என்னிடம், “உனது நேரம் {கடைசிக்காலம்} வரும்போது, இவ்வாயுதம் குறித்த உனது நினைவு பொய்த்து விடும். {இந்த ஆயுதம் உனக்குத் தோன்றாமல் போகும்}” என்றார்.
[1] false pretence = பொய் சொல்லி
அப்படிப்பட்ட ஒரு பெரிய குற்றத்திற்கு, எனது ஆசானான அந்தப் பெருமுனிவரால் {பரசுராமரால்} இப்படிச் சாதாரணமாகவே நான் சபிக்கப்பட்டேன். கடும் சக்தி கொண்ட அந்தப் பெரும் முனிவர் {பரசுராமர்}, கடல்களுடன் கூடிய முழுப் பூமியையும் எரித்துவிடவல்லவர். {என்} பணிவிடை மற்றும் தனிப்பட்ட வீரத்தின் காரணமாக நான் அவரது {பரசுராமரின்} இதயத்தை அமைதியடையச் செய்தேன். என்னிடம் அந்த ஆயுதம் {பிரம்மாஸ்திரம்} இன்னும் இருக்கிறது. எனது காலமும் இன்னும் இருக்கிறது. எனவே, (வெற்றியடையத்தக்க அளவில்} நான் முழுத் திறமையுடனேயே இருக்கிறேன். {எதிரியை வெல்லும் இந்தப்} பொறுப்பு எனதாகட்டும். அம்முனிவரின் {பரசுராமரின்} அருளைப் பெற்றிருப்பதால், பாஞ்சலர்கள், கரூசர்கள், மத்ஸ்யர்கள், மகன்கள் மற்றும் பேரர்களுடன் கூடிய பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} ஆகியோரை கண்ணிமைக்கும் நேரத்தில் கொன்று, எனது ஆயுதங்களால் வெல்லப்பட்ட எண்ணற்ற பகுதிகளை நான் உனக்கு அளிப்பேன்.
பாட்டன் {பிதாமகரான பீஷ்மர்}, துரோணர் மற்றும் மன்னர்கள் அனைவரும் உன்னுடன் இருக்கட்டும். எனது படையின் தலைமை {முக்கிய} போர்வீரர்களுடன் அணிவகுத்துச் செல்லும் நான் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களைக்} கொல்வேன். இப்பணி எனதாகட்டும்” என்றான் {கர்ணன்}.
இப்படிப் பேசிய அவனிடம் {கர்ணனிடம்}, பீஷ்மர், “ஓ! கர்ணா, நீ என்ன சொல்கிறாய்? {என்ன பிதற்றுகிறாய்?}, நேரம் நெருங்கி வருவதால் உனது புத்தி மறைக்கப்படுகிறது. ஓ! கர்ணா, தலைவன் {கர்ணனான நீ} [2] கொல்லப்பட்டால், திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்பதை நீ அறியவில்லையா? கிருஷ்ணனை மட்டுமே துணைவனாகக் கொண்டு, காண்டவ வனத்தை எரித்து, தனஞ்சயன் {அர்ஜுனன்} செய்த சாதனையைக் கேட்ட பிறகு, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிய நீ, மனதை அடக்கிக் கொள்வதே தகும்.
[2] //இங்கே “தலைவன் தலைவனாக இருக்க வேண்டும், நீ தகுதியில்லாதவன்” என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது, “குருகுலத்தலைவனான நான் இறந்தால், கௌரவர்கள் இறப்பார்கள்” என்றும் பொருள் கொள்ளலாம்// என்று சொல்லப்படுகிறது. இங்கே பீஷ்மர் வஞ்சப்புகழ்ச்சியைக் கையாள்வதாகத் தெரிகிறது. எனவே, கர்ணனைக் கேலி செய்கிறார் என்றே நாம் கொள்ளலாம்.
ஒப்பற்றவனும் வழிபடத்தகுந்தவனும், தேவர்கள் தலைவனுமான பெரும் இந்திரன் உனக்கு அளித்த கணை {சக்தி ஆயுதம்}, கேசவனின் {கிருஷ்ணனின்} சக்கரத்தால் தாக்கப்படும்போது, {அந்த சக்தி ஆயுதம்} உடைந்து சாம்பலாகப் போவதை நீ காண்பாய். மலர் மாலைகளைக் கொண்டு உன்னால் மரியாதையாக வழிபடப்படுவதும், பாம்பு வாய்க் கொண்டதும், (உனது அம்பறாத்தூணியில்) ஒளிர்ந்து கொண்டிருப்பதுமான மற்றொரு கணை {நாகாஸ்திரம்}, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} கணைகளால் அடிக்கப்படும்போது, உன்னோடு சேர்ந்து அழிந்து போகும். பாணன், பூமியின் மகன் {நரகன்} ஆகியோரைக் கொன்றவனும், கடும்போரில் உனக்கு நிகரான மற்றும் உன்னைவிட மேம்பட்ட எதிரிகளைக் கொன்றவனுமான வாசுதேவனே {கிருஷ்ணனே}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அர்ஜுனனைப் பாதுகாக்கிறான்” என்றார் {பீஷ்மர்}.
அதற்குக் கர்ணன் {சபையோரிடம்}, “விருஷ்ணிகளின் தலைவன் {கிருஷ்ணன்} அப்படியே இருக்கிறான். அதில் ஐயமில்லை. மேலும், அந்த உயர்ந்த ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்} அதற்கும் மேலானவனே. எனினும், அவர் உச்சரித்திருக்கும் சிறிய கடும் உரையின் விளைவைப் பாட்டன் {பிதாமகரான பீஷ்மர்} கேட்கட்டும். நான் எனது ஆயுதங்களைக் கீழே வைக்கிறேன். இனிமேல் பாட்டன் {பீஷ்மர்} என்னைச் சபையில் மட்டுமே காண்பார்; போர்க்களத்தில் அல்ல. நீர் அமைதியடைந்த {ஒழிந்த} பின்பே, எனது ஆற்றலை, இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் இவ்வுலகத்தில் காண்பார்கள்” [3] என்றான் {கர்ணன்}.
[3] Let, however, the Grandsire listen to the effect of the bit of harsh speech that he hath uttered. I lay down my weapons. The Grandsire will henceforth behold me in court only and not in battle. After thou hast become quiet, the rulers of the earth will behold my prowess in this world.இதற்குச் சற்று முன்புதான் "தன் விருப்பம் இல்லாமல் மரணம் தன்னை அண்டாது என்று தன் தந்தை சந்தனுவிடம் வரம்பெற்றவர் பீஷ்மர்" என்று திருதராஷ்டிரனிடம் துரியோதனன் (உத்யோக பர்வம் பகுதி 55ல்} சொல்கிறான். பீஷ்மர் விருப்பப்பட்டாலொழிய அவருக்கு மரணம் கிடையாது என்பதை அறிந்தும், "நீர் ஒழிந்த பிறகே போரில் பங்கேற்பேன்" என்று கர்ணன் போரில் இருந்து விலகுகிறான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன அந்தப் பெரும் வில்லாளி (கர்ணன்), அந்தச் சபையை விட்டகன்று தனது வசிப்பிடம் சென்றான். எனினும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, பீஷ்மர் உரக்கச் சிரித்தபடி, குருக்கள் {கௌரவர்கள்} மத்தியிலிருந்த துரியோதனனிடம், “இந்தச் சூதனின் மகன் {கர்ணன்} வாக்கில் எவ்வளவு உண்மையுள்ளவன்? “அவந்தி மற்றும் கலிங்கத்தின் மன்னர்கள், ஜெயத்ரதன், சேதித்தஜன், வால்ஹீகன் ஆகியோரைப் பார்வையாளர்களாகக் கொண்டு, பகைவீரர்களை ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும் நான் கொல்வேன்” என்று மீண்டும் மீண்டும் சூளுரைத்தானே. {இனி} எப்படி அந்தக் கடமையை அவன் {கர்ணன்} நிறைவேற்றுவான்?
எதிர் வியூகத்தால் தனது பிரிவுகளைப் பகிர்ந்து, தலைகளை ஆயிரக்கணக்கில் சிதறடித்து, பீமன் இழைக்கப்போகும் பேரழிவைப் பார். புனிதமானவரும், பழியற்றவருமான ராமரிடத்தில் {பரசுராமரிடத்தில்}, விகர்த்தனன் மகன் {கர்ணன்}, தன்னை ஒரு பிராமணன் என்று காட்டி, அந்த ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} அடைந்த அந்தக் கணத்தில்தான், உண்மையில், அந்தப் பாவி {கர்ணன்}, தனது அறம் மற்றும் தவம் ஆகிய இரண்டையும் இழந்தான்” என்றார் {பீஷ்மர்}. ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, தனது ஆயுதங்களைக் கைவிட்டு கர்ணன் சென்றதும், பீஷ்மர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட விசித்திரவீரியன் மகனின் {திருதராஷ்டிரனின்} மூட மகனான துரியோதனன், சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம் பின்வரும்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்” என்றார் {வைசம்பாயனர்}.