என்னை வேறு
மனிதனாக்கிய காவியம். இது எத்தனை பேரின் மனங்களை மாற்றியிருக்கும்! அதன் கதைக்களம், கதை சொல்லும் பாங்கு, கிளைக் கதைகள், கதைகளுக்குள்
முடிச்சு. கதையின் நீளம் என்று எதைப் பார்த்தாலும் பிரம்மிப்பாக இருந்தது.
ஆனால்,
தற்போது தமிழ்நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் எத்தனை பேர் இதைப் படிப்பார்கள் என்ற
கவலையும் உள்ளது. என் இளவயதில் எனது தாயார் எதற்கெடுத்தாலும் மஹாபாரதக் கதை சொல்லியே
ஒரு செயலை விளக்குவார். அப்போதெல்லாம் எனக்கு எரிச்சலாக இருக்கும். 'என்னடா
எதற்கெடுத்தாலும் ஒரு கதையா?' என்று நினைப்பேன்.
என்
அதிர்ஷ்டம் தூர்தர்ஷனில் 1988ல் மஹாபாரதம் தொடராக வந்தது. அப்போதெல்லாம் இரண்டே
சேனல்கள்தானே, வேறு வழியே இல்லை இந்தியாக இருந்தாலும் அத்தொடரைப் பார்த்துத்தான்
ஆகவேண்டும்.
அந்தத் தொடரில் வரும் துரியோதனன், பீஷ்மர், அர்ஜூனன், கிருஷ்ணன் பாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டன. அதன் பிறகு எனது தாய் கதை சொல்ல ஆரம்பிக்கும்போதெல்லாம் அஃதை ஆர்வமாகக் கேட்கத்தொடங்கினேன். ஞாயிற்றுக்கிழமையானால் எப்போது மஹாபாரதம் போடுவார்கள் என்று ஏங்கத் தொடங்கினேன்.
அந்தத் தொடரில் வரும் துரியோதனன், பீஷ்மர், அர்ஜூனன், கிருஷ்ணன் பாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டன. அதன் பிறகு எனது தாய் கதை சொல்ல ஆரம்பிக்கும்போதெல்லாம் அஃதை ஆர்வமாகக் கேட்கத்தொடங்கினேன். ஞாயிற்றுக்கிழமையானால் எப்போது மஹாபாரதம் போடுவார்கள் என்று ஏங்கத் தொடங்கினேன்.
அப்போதெல்லாம் என் தந்தை துக்ளக் பத்திரிகை வாங்குவார். அந்த பத்திரிக்கையைச்
சீண்டக்கூட மாட்டேன். திடீரென்று ஒருநாள் அந்த பத்திரிக்கையின் ஒரு பக்கம்
விரிந்து கிடந்தது. அதில் டி.வி. தொடர் தமிழ் வசனங்களுடன் அப்படியே இருந்தது. அதையும் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.
பள்ளிப் புத்தகங்களைத் தவிர்த்து வேறு புத்தகங்களைப் படித்தது அதுவே முதல் முறை.
அந்தத் தொடரில் திரு.சோ அவர்கள் ஆங்காங்கே வியாச பாரத்தில் இப்படியிருக்கும், ஆனால்
இந்த டி.வி. தொடரில் இப்படி இருக்கிறது என்று கோடிட்டுக் காட்டுவார். 'ஆகா! வியாச
பாரதம் தானே மூலம். அதை நம்மால் படிக்க முடியவில்லையே' என்று நினைக்க
ஆரம்பித்தேன்.
ராஜாஜியின் மகாபாரதம் அட்டைப்படம் |
டிப்ளமா
முதல் ஆண்டு சேர்ந்தேன். இப்போது என் கைகளில் பேருந்து மற்றும் உணவு செலவுக்காக
வீட்டில் கொடுக்கும் பணம் சேர ஆரம்பித்தது. ஒரு நாள் ஒரு புத்தகக் கடையில்
மகாபாரதம் பளிச்சிட்டது. நான் யோசிக்கவே இல்லை, வாங்கிவிட்டேன். அதைப் படித்த
பிறகும் திருப்தி ஏற்படவில்லை. முழுவதும் அறிய முடியவில்லையே என்ற ஏக்கம்.
பின்னர்
துக்ளக்-ல் சோ அவர்களே புதிய தொடராக "மஹாபாரதம் பேசுகிறது" எழுத ஆரம்பித்தார்.
வாராவாரம் அதைப் படிக்க ஆரம்பித்தேன். 'சே! என்னடா இந்தவாரம் இவ்வளவு சுருக்கமா
போயிடுச்சேன்னு' நினைப்பேன். பிறகு "மஹாபாரதம் பேசுகிறது'' என்று
புத்தகங்களாகவே இரண்டு வால்யூமாக வெளியிட்டார் சோ. எங்கு கிடைக்கும்; தேடினேன்;
கிடைக்கவில்லை. மயிலாப்பூர் அலயன்ஸ் கம்பெனியில் கிடைக்கும் என்று துக்ளக்கில்
விளம்பரம் வந்தது. விலை ரூ.500/- என்று நினைக்கிறேன். என் தாயாரிடம் கேட்டேன்.
"கண்ணா! அவ்வளவுலாம் செலவிடக்கூடாதுப்பா" என்றார்கள். இரண்டு நாள் அடம்பிடித்து,
கைகளில் பணத்தை வாங்கிக் கொண்டு, மையிலாப்பூர் சென்று புத்தகங்களை
வாங்கிவிட்டேன். நோபல் பரிசு பெற்றது போன்ற உணர்வு.
அதைப்படித்து, 'டிவி மஹாபாரதத்திற்கும், ஒரிஜினல் மஹாபாரதத்திற்கு எவ்வளவு
வித்தியாசம் இருக்கிறது' என்று நினைத்தேன். ஒரு வாரத்தில் படித்து முடித்தேன். என்
தாயாரே ஆச்சரியப்பட்டார். மஹாபாரதத்தில் சில கதைகள் பற்றி நானும் என் தாயாரும் வாதிட
ஆரம்பித்தோம். என் தாயார் "என்னை விட உனக்கு அதிகமாகத் தெரிகிறதே" என்று
பெருமிதமாகச் சொன்னார். ஆனால், திரு.சோ அவர்களும் இது வெறும் சுருக்கம்தான்,
முழுமையானது அல்ல என்று குறிப்பிட்டுவிட்டார். சுருக்கமே ரூ.500/-, முழுமையானது
என்றால் 'ஆகா! இந்த ஜென்மத்துல படிச்சு முடிக்க மாட்டோம்'னு நினைத்தேன்.
கிசாரி மோகன் கங்குலியின் மஹாபாரதம் அட்டைபடம் |
நாம்
ஆரம்பித்து முடிக்கவே 20 வருடங்கள் பிடித்தனவே. இனி வரும் இளைய தலைமுறை இதை
எப்படிப் படிக்கும். சுருங்கச் சொல்வதில் பலனில்லை. முழுவதுமான தமிழ்
மொழிபெயர்ப்பு என்றால் (இருக்கிறதா என்று கூட எனக்குத் தெரியாது) [1] அது எவ்வளவு
விலையிருக்கும். வாங்கிப் படிப்பார்களா? இப்படியே மறைய வேண்டியதுதானா இப்படி ஒரு
ஞானப் பொக்கிஷம். எனக்கு இப்போது திரு.சோவை நினைக்க நினைக்க கோபமாக வந்தது. ஏன்
சுருங்கச் சொல்லவேண்டும். முழுவதும் சொல்லியிருந்தால் எத்தனை பேர் இதற்குள்
(துக்ளக் எப்படியும் வாங்கத்தான் போகிறார்கள்) இலவசமாக மஹாபாரதம்
தெரிந்திருப்பார்கள்.
[1] கும்பகோணம் பதிப்பைப் பற்றி ஆதிபர்வம் முக்கால்வாசி மொழிபெயர்ப்பை முடித்த பிறகு தெரிந்து கொண்டேன். ஏற்கனவே ஒரு பெரும்படைப்பு இருக்கும் போது நாமும் இதைச் செய்ய வேண்டுமா? இப்பணியைக் கைவிட்டுவிடலாம் என்று நினைத்தேன். "நம் மொழிபெயர்ப்பு இணையத்தில் என்றும் இலவசமாக இருக்கும். இது பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்" என்று சொன்ன நண்பர் ஜெயவேலன் அவர்களின் வார்த்தைகளுக்குப் பிறகே மீண்டும் உற்சாகமாக மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்.
எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. தமிழ், ஆங்கிலம் மட்டும்தான் தெரியும். என் சிற்றறிவுக்கு எட்டியவரை மஹாபாரதத்தை ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழுக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறேன். இது என்னால் முடியுமா தெரியவில்லை. பரமன் மீது பாரத்தைப் போட்டு ஆரம்பிக்கிறேன். "நீ என்ன அவ்வளவு பெரிய ஆளாடா?" என்று கேட்காதீர்கள். நான் பாமரன்தான், என்னைவிடவும் பாமரர்கள் இலவசமாகப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவேத் தொடங்குகிறேன்.
பெரியவர்கள்,
மஹாபாரத அறிஞர்கள் என்னனை மன்னிக்க வேண்டும். பிழையிருப்பின் சுட்டிக்காட்டுங்கள்
திருத்த முயல்கிறேன். ஆதிபர்வம் பகுதி 1 ஒரு வருடத்திற்கு முன் சும்மா விளையாட்டாக
மொழிபெயர்ப்பு செய்தேன். அதைத் திரும்பவும் இந்தப் பதிப்பிற்காக மொழிபெயர்ப்பு
செய்ய வேண்டுமா என்று யோசித்தேன். வேண்டாம் என்று அப்படியே தருகிறேன். இனி வரும்
பகுதிகளில் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தி மொழி பெயர்க்க முயல்கிறேன். இனிதான்
மொழிபெயர்க்க வேண்டும். நன்றி!