Curse of a Dog, after seeking Justice! | Adi Parva - Section 3a | Mahabharata In Tamil
(பௌசிய பர்வம்)
பதிவின் சுருக்கம் : ஜனமேஜயன் வேள்வி; சரமை என்ற நாயின் சாபம்; ஆருணி, உபமன்யு ஆகியோரின் கதைகள்; அஸ்வினித் தேவர்களுக்குரிய துதி ...
ஜனமேஜயன் தம்பிகள் மூவர், மற்றும் நீதிகேட்க வந்த சரமை என்ற நாய் |
சௌதி சொன்னார், "பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயன் தனது தம்பிகளுடன் சேர்ந்து குருக்ஷேத்திரத்தின் சமவெளியில் நீண்ட கால வேள்வி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான்.(1) சுருதசேனன், உக்ரசேனன், பீமசேனன் ஆகியோர் அவனுடன் பிறந்த மூன்று தம்பிகளாவர். அவர்கள் வேள்வியில் உட்கார்ந்திருக்கும் சமயத்தில், (தெய்வீகப் பெண்நாயான) சரமாவின் {சரமையின்} குட்டி ஒன்று, அந்த வேள்வி நடக்கும் இடத்திற்கு வந்தது.(2) ஜனமேஜயனின் தம்பிகள் மூவராலும், நையப் புடைக்கப்பட்ட அது, வலியுடன் கதறிக் கொண்டே தன் தாயிடம் ஓடியது.(3)
அதன் தாய் "ஏன் அழுகிறாய்? யார் உன்னை அடித்தது?' என்று கேட்டது.(4) இப்படிக் கேட்கப்பட்ட அந்தக் குட்டி, தன் தாயிடம் "நான் ஜனமேஜயனின் தம்பிகளால் அடித்து விரட்டப்பட்டேன்" என்று சொன்னது.(5) அதற்குக் குட்டியின் தாய் "நீ ஏதாவது தவறு செய்து உன்னை அடித்தார்களா?" என்று கேட்டது.(6) "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. வேள்விக்கு வைத்திருந்த நெய்யை எனது நாவால் தொடவில்லை; அதன் பக்கம்கூட நான் பார்க்கவில்லை" என்றது குட்டி.(7) அத்தனையும் கேட்ட குட்டியின் தாய் சரமா, தனது குட்டியின் துயரைப் பொறுக்கமுடியாமல், ஜனமேஜயனும் அவனது தம்பிகளும் இருக்கும் அந்தப் பெரிய வேள்வி நடக்கும் இடத்திற்கு வந்தது.(8)
ஜனமேஜயனிடம் கோபத்துடன் "இவன் எனது மைந்தன் எந்தத் தவறையும் செய்யவில்லையே; உனது வேள்வியின் நெய்யை இவன் நாவால் தொடவில்லை, அதன் பக்கமே பார்வையைச் செலுத்தவில்லை. இவன் தண்டிக்கப்பட்டது எவ்வாறு?" என்று கேட்டது.(9) அவர்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பிறகு சரமா "எக்குற்றமும் செய்யாத என் மைந்தன் உங்களால் அடிக்கப்பட்டதால், நீங்கள் அறியாதிருக்கும் சமயத்தில் தீமை உங்களை வந்தடையட்டும்" என்று சபித்தது.(10)
தெய்வீகப் பெண் நாயான சரமாவால் இப்படிச் சபிக்கப்பட்ட ஜனமேஜயன், மிகவும் அச்சமடைந்து மனத்தளர்ச்சியடைந்தான்.(11) வேள்வி முடிந்ததும் ஹஸ்தினாபுரம் திரும்பி, தன் பாவத்திலிருந்து விடுபடவும், சாபத்தின் விளைவைத் தணிக்கவும் கூடிய ஒரு புரோகிதரைத் தேடுவதில் பெரும் முயற்சி செய்யத் தொடங்கினான்.(12)
ஒருநாள், பரீக்ஷித்தின் மைந்தனான அந்த ஜனமேஜயன் வேட்டையாடிக் கொண்டிருக்கையில், தனது ஆளுகைக்குட்பட்ட ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, பிரபலமாக இருந்த சுருதசிரவன் என்ற முனிவரைக் கவனித்து வந்தான். அவருக்குச் சோமசிரவன் என்ற பெயரில், அர்ப்பணிப்புடன் ஆழமான தவத்தில் ஈடுபடக்கூடிய மைந்தன் ஒருவர் இருந்தார்.(13,14) அந்த முனி மைந்தனைத் தனது புரோகிதராக நியமிக்க விருப்பங்கொண்டவனும், பரீக்ஷித்தின் மகனுமான ஜனமேஜயன்,(15) அந்த முனிவரை {சுருதசிரவரை} வணங்கி, "ஓ {பிராமணர்களுக்குரிய} ஆறு குணங்களைக் கொண்டவரே! இந்த உமது மைந்தன் {சோமசிரவர்} எனது புரோகிதராகட்டும்" என்றான்.(16) இப்படிக் கேட்கப்பட்ட முனிவர் {சுருதசரவர்} "ஓ ஜனமேஜயா! தவ அர்ப்பணிப்புகளில் ஆழமானவனும், வேதக் கல்வி கற்றவனும், என் தவத்தின் முழுச்சக்தியைக் கொண்டவனுமான இந்த எனது மைந்தன் {சோமசிரவன்}, என் உயிர்நீரைக் குடித்த ஒரு பெண் பாம்புக்குப் (அதன் கருவறையில்) பிறந்தவன் ஆவான்.(17) அவன், மகாதேவனுக்கு {சிவனுக்கு} எதிராக இழைக்கப்பட்டவை தவிர, பிற குற்றங்கள் அனைத்தில் இருந்தும் உன்னை விடுவிக்க இயன்றவனாவான்.(18) ஆனால், தன்னிடம் இரந்து கேட்கும் எந்தப் பிராமணனுக்கும் எதையும் கொடுத்துவிடும் பழக்கம் அவனுக்கு இருக்கிறது. அதை உன்னால் ஏற்க முடியும் என்றால், நீ அவனை {சோமசிரவனை} அழைத்துச் செல்லலாம்" என்றார்.(19) முனிவரால் {சுருதசிரவரால்} இப்படி மறுமொழி கூறப்பட்ட ஜனமேஜயன், “அப்படியே ஆகட்டும்” என்றான்.(20) ஜனமேஜயன் அவரைப் {சோமசிரவரை} புரோகிதராக ஏற்றுக் கொண்டு தனது தலைநகரம் திரும்பி, தன் தம்பிகளிடம் "இந்த மனிதரை நான் என் ஆன்ம குருவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; இவர் என்ன கேட்கிறாரோ அதை ஆய்ந்துபார்க்காமல் முடித்துக் கொடுங்கள்" என்றான்.(21)
தம்பிகளும் அதன்படியே நடந்துகொண்டனர். மன்னன், தம்பிகளுக்கு இப்படிக் கட்டளையிட்டுவிட்டுத் தக்ஷசீலத்திற்குப் படையெடுத்துச் சென்று அந்நாட்டையும் தனது ஆளுகைக்குள் இணைத்துக் கொண்டான்.(22) அதே சமயத்தில், அயோதா தௌம்யர்[1] என்ற பெயரைக் கொண்ட ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அந்த அயோதா தௌம்யருக்கு உபமன்யு, ஆருணி, வேதா {பைதன்} என்ற மூன்று சீடர்கள் இருந்தனர்.(23) பாஞ்சாலத்தைச் சேர்ந்த ஆருணி என்ற சீடனைத் தனது வயலில் உள்ள ஒரு வாய்க்கால் நீரை அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார் அம்முனிவர்.(24) அங்கு சென்ற போது அந்த வாய்க்காலின் நீரைச் சாதாரணமாக அடைக்க முடியாது என்பதை ஆருணி உணர்ந்தான்.(25) தனது ஆசானின் {அயோதா தௌம்யரின்} கட்டளையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வருந்திக் கொண்டிருக்கும்போது, {அவனுக்கு} ஒரு வழி கிடைத்தது. “நன்று, நான் இஃதை இவ்வழியில் செய்யப் போகிறேன்” என்று சொல்லி,(26) நேராக அந்த வாய்க்காலை அடைத்துக் கொண்டு தானே படுத்துக் கொண்டான். நீரும் இவ்வாறு அடைபட்டது.(27)
சிறிது நேரங்கழித்து ஆசான் அயோதா தௌம்யர், "பாஞ்சாலத்தின் ஆருணி எங்கே?" என்று மற்ற இரு சீடர்களிடமும் கேட்டார்.(28) அவர்கள், "ஐயா, நீங்கள் தானே அவனை {ஆருணியை} வாய்க்காலின் நீரை அடைக்க அனுப்பினீர்கள்" என்றார்கள். இப்படி நினைவுப்படுத்தப்படவே "அவ்வாறெனில், அவன் இருக்கும் இடத்திற்கு நாம் அனைவரும் செல்வோம்" என்றார்.(29) அந்த இடத்திற்கு வந்ததும், "ஓ பாஞ்சாலத்தின் ஆருணியே! நீ எங்கிருக்கிறாய்? இங்கே வா மகனே" என்று உரக்க அழைத்தார்.(30) ஆசானின் {அயோதா தௌம்யரின்} குரலைக் கேட்ட ஆருணி வாய்க்காலில் இருந்து உடனே எழுந்திருந்து தனது ஆசானின் முன்னிலையில் வந்து நின்றான்.(31) பின்னவரிடம் {ஆசானிடம்} பேசிய ஆருணி, "இதோ நான் வாய்க்காலில் இருக்கிறேன். இஃதை அடைக்க வேறு வழியேதும் தெரியாததால், நீர் வெளியேறுவதைத் தடுப்பதற்காக நானே இதற்குள் இறங்கிவிட்டேன். ஆசானே, நீர் வந்து அழைத்தபிறகு, அதைவிட்டெழுந்து, நீரோட அனுமதித்து உமது முன்னால் நிற்கிறேன் ஆசானே நான் உம்மை வணங்குகிறேன்; நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்றான் {ஆருணி}.(32)
இவ்வாறு சொல்லப்பட்ட அந்த ஆசான், "வாய்க்காலில் இருந்து எழுந்து, நீரோட்டத்தைத் திறந்ததால், உன் ஆசானுக்கு உதவி செய்த ஒரு குறியீடாக உத்தாலகன்[2] என்று இன்று முதல் நீ அழைக்கப்படுவாய்.(33) என்னுடைய வார்த்தைகளுக்கு நீ கீழ்ப்படிந்ததால் உனக்கு நற்பேறு கிட்டும். எல்லா வேதங்களும், தர்மசாத்திரங்களும் உன்னுள் ஒளிரும்" என்றார்.(35) தன் ஆசானால் இவ்வாறு சொல்லப்பட்ட ஆருணி தன் இதயம் விரும்பிய நாட்டுக்குச் சென்றான்.
அயோதா தௌம்யரின் மற்றொரு சீடனின் பெயர் உபமன்யு என்பதாகும்.(36) அவனை {உபமன்யுவை} ஒருநாள் தௌம்யர் அழைத்து "மகனே, நீ கால்நடைகளைக் கவனித்துக் கொள்" என்றார்.(37) அவனும் தன் ஆசானின் {அயோதா தௌம்யரின்} கட்டளையை ஏற்று மாடு மேய்க்கச் சென்றான். அவற்றை நாளெல்லாம் மேய்த்துவிட்டு, மாலையில் தன் ஆசானின் {அயோதா தௌம்யரின்} இல்லத்திற்குத் திரும்பி வந்து, அவரை மரியாதையுடன் வணங்கி நின்றான்.(38) அவன் {உபமன்யு} நல்ல நிலைமையில் வந்திருப்பதைக் கவனித்த ஆசான், அவனிடம், "உபமன்யு, என் மகனே, நீ எதைக் கொண்டு உன்னைத் தாங்கிக் கொள்கிறாய்? நீ மிகவும் பருமனாக இருக்கிறாயே?" என்று கேட்டார்.(39) அதற்கு அவன், "ஐயா, நான் பிச்சை எடுத்து என்னைத் தாங்கிக் கொள்கிறேன்" என்றான்.(40)
அவனது ஆசான் {அயோதா தௌம்யர்} "பிச்சையின் மூலம் எது உனக்குக் கிடைக்கிறதோ, அதை எனக்குக் கொடுக்காமல் நீ பயன்படுத்தக் கூடாது" என்றார். இவ்வாறு சொல்லப்பட்ட உபமன்யு அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டான். பிச்சை எடுத்து, அதைத் தனது ஆசானுக்குக் கொடுத்தான்.(41) அவனது ஆசான் அவனிடமிருந்த முழுவதையும் தானே எடுத்துக் கொண்டார். இவ்வாறு நடத்தப்பட்ட உபமன்யு, மாடுகளை மேய்க்கச் சென்றுவிட்டான். நாளெல்லாம் மாடுகளை மேய்த்துவிட்டு, மாலையில் தன் ஆசானின் முன்பு வந்து நின்று அவரை மரியாதையுடன் வணங்கினான்.(42) ஆசான் அவன் இன்னும் நல்ல நிலையிலேயே இருப்பதைக் கண்டு, அவனிடம், "உபமன்யு, என் மகனே, நீ பிச்சை எடுத்துக் கொண்டு வந்த அனைத்தையும், உனக்கென எதையும் விடாமல் நானே எடுத்துக் கொண்டேன். இப்போதும் நீ எவ்வாறு உன்னைத் தாங்கிக் கொண்டாய்?" என்று கேட்டார்.(43) உபமன்யு "ஐயா, பிச்சை எடுத்த அனைத்தையும் உங்களிடம் கொடுத்துவிட்டதால், மறுபடியும் இரண்டாவது முறை பிச்சை எடுத்து, என்னை நான் தாங்கிக் கொண்டேன்" என்றான்.(44)
இதற்கு மறுமொழியுரைத்த ஆசான், "இது நீ உன் ஆசானுக்குச் செலுத்தும் மரியாதை அல்ல. இப்படிச் செய்வதால், பிச்சை எடுத்து வாழ்பவர் பலரின் தேவைகளை நீ அழிக்கிறாய். இவ்வாறு உன்னைத் தாங்கிக் கொள்வதால் நீ பேராசைக்காரன் என்பதையே நிரூபிக்கிறாய்" என்றார்.(45) தன் ஆசான் சொன்ன அனைத்துக்கும் சம்மதித்த உபமன்யு, மாடு மேய்ப்பதற்குச் சென்று விட்டான். மாடுகளை நாளெல்லாம் மேய்த்துவிட்டு, மாலையில் தன் ஆசானின் இல்லத்திற்குத் திரும்பினான். பிறகு தன் ஆசானின் முன் நின்று மரியாதையுடன் அவரை வணங்கினான்.(46) அவன் {உபமன்யு} இன்னும் பருமனாகவே இருப்பதைக் கவனித்த ஆசான், அவனிடம் மீண்டும், "உபமன்யு, என் மகனே, நீ பிச்சை எடுத்துக் கொண்டு வந்த அனைத்தையும் நானே எடுத்துக் கொண்டேன். நீ இரண்டாவது முறை பிச்சை எடுக்கவும் செல்வதில்லை. இருந்தும் நீ ஆரோக்கியமாக இருக்கிறாயே. நீ எவ்வாறு உன்னைத் தாங்கிக் கொண்டாய்" என்று கேட்டார்.(47)
இப்படிக் கேட்கப்பட்ட உபமன்யு "ஐயா, நான் இந்த மாடுகளின் பால் குடித்து என்னைத் தாங்கிக் கொள்கிறேன்" என்று பதிலளித்தான். அதன்பேரில் அவனது ஆசான், "முதலில் என் சம்மதத்தைப் பெறாமல், நீ மாடுகளிடம் பால் எடுப்பது சரியல்ல" என்றார்.(48) உபமன்யுவும் இந்த அவதானிப்புகளில் உள்ள நீதியை ஏற்றுக் கொண்டு, மாடுகளை மேய்க்கச் சென்றுவிட்டான். அவன் தன் ஆசானின் இல்லத்திற்குத் திரும்பியபோது, அவர் முன்பு வழக்கம் போலவே நின்று வணங்கினான்.(49) இப்போதும் அவன் பருமனாகவே இருப்பதைக் கவனித்துவிட்ட அவனது ஆசான், "உபமன்யு, என் மகனே, நீ இப்போது பிச்சை எடுத்து உண்பதில்லை, இரண்டாவது முறை பிச்சை எடுப்பதுமில்லை, பாலும் குடிப்பதில்லை; இருப்பினும் பருமனாகவே இருக்கிறாயே. இப்போது எவ்வழிமுறைகளில் நீ உன்னைத் தாங்கிக் கொள்கிறாய்" என்று கேட்டார்.(50) "ஐயா, கன்றுக்குட்டிகள் தனது தாயின் மடியை உறிஞ்சும் போது, சிந்தும் உமிழ்பாலை {நுரையை} உறிஞ்சி உண்கிறேன்" என்றான்.(51) அதற்கு ஆசான், "இந்தக் கன்றுக்குட்டிகள், உன் மீதிருக்கும் அன்பால் நிறைய உமிழ்பாலை {நுரையை} வெளியிடுகின்றன என்று நினைக்கிறேன். இவ்வாறு நீ நடந்து கொள்வதால், அவை {கன்றுக்குட்டிகள்} முழு உணவைப் பெறும் வழியில் நீ குறுக்கிடுகிறாய். உமிழ்பாலை {நுரையை} குடிப்பதும் சரியல்ல” என்றார்.
இதற்கும் சம்மதித்த உபமன்யு, மாடுகளைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.(52) ஆசானால் கட்டுப்படுத்தப்பட்ட அவன், பிச்சை எடுத்து உண்பதில்லை, உண்பதற்கு வேறு எதுவும் இல்லை; பாலைக் குடிக்கவும் இல்லை; உமிழ்பாலைச் {நுரையை} சுவைப்பதுமில்லை. ஒரு நாள் பசியால் ஒடுக்கப்பட்ட உபமன்யு, காட்டில் இருக்கும்போது, எருக்கிலைகளை உண்டு விட்டான். அவன் உண்ட அந்த இலைகளின் கொடூரமான, எரிச்சலுள்ள, முரட்டுத்தனமான உப்புத் தன்மைகளால் அவன் குருடானான். தவழ்ந்து கொண்டே சென்ற அவன், ஒரு குழிக்குள்ளும் விழுந்துவிட்டான்.(53,54) அந்த நாளில் மேற்கு மலைகளின் சிகரங்களுக்குப் பின்னால் சூரியன் மறைந்த பிறகும் அவன் திரும்பாததால், அந்த ஆசான், உபமன்யு இன்னும் வரவில்லை என்பதைக்கண்டு தன் சீடர்களிடம் சொன்னார். அவர்கள் மாடுகளுடன் அவன் சென்றதாக அவரிடம் சொன்னார்கள்.(55)
அப்போது அந்த ஆசான், "அனைத்தையும் பயன்படுத்துவதில் இருந்து உபமன்யு என்னால் தடுக்கப்பட்டான் என்பதாலேயே, உண்மையில், தாமதமாகியும் அவன் இன்னும் இல்லத்திற்கு வராமல் இருக்கிறான். நாம் அவனைத் தேடிச் செல்வோம்" என்றார். இதைச் சொன்ன அவர், தன் சீடர்களுடன் காட்டுச் சென்று, "ஓ உபமன்யு, நீ எங்கிருக்கிறாய்?" என்று கூவத் தொடங்கினார்.(56) தன் ஆசானின் குரலைக் கேட்ட உபமன்யு, "இங்கே நான் கிணற்றுக்கடியில் இருக்கிறேன்" என்று உரத்தத் தொனியில் பதிலுரைத்தான். அவன் அங்கே எவ்வாறு சென்றான் என அவனது ஆசான் கேட்டார்.(57) உபமன்யு "எருக்கஞ்செடியின் இலைகளையுண்டதால், நான் குருடானேன், எனவே இந்தக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டேன்" என்றான்.(58) அதன் பேரில் அவனது ஆசான், "தேவர்களுக்கே மருத்துவர்களான அசுவினி இரட்டையர்களைப் போற்றி மகிழ்விப்பாயாக. அவர்கள் உனது பார்வையை மீட்பார்கள்" என்றார். ஆசானால் இவ்வாறு வழிநடத்தப்பட்ட உபமன்யு, ரிக் வேதத்தின் வார்த்தைகளின் பின்வருமாறு அசுவினி இரட்டையர்களைப் போற்றத் தொடங்கினான்.(59)
"படைப்புக்கு முன்பிருந்தவர்கள் நீங்களே, முதலில் பிறந்தவர்கள் நீங்களே, ஐம்பூதங்களில் காட்சியளிப்பவர்கள் நீங்களே, எனது கேள்வி ஞானத்தாலும், தியானத்தாலும் இதை அறிந்த நான் உங்களது உதவியை நாடி நிற்கிறேன். நீங்கள் முடிவில்லாதவர்கள், நீங்கள் இயற்கையில் ஆன்மாவிலும் உறைபவர்கள், நீங்களே மரம் போன்ற உடலில் இறகுள்ள பறவை. நீங்களே எல்லா உயிர்களின் பொதுத்தன்மை, நீங்களே ஒப்பற்றவர்கள், நீங்களே படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிலும் இந்த அண்டத்தை ஊடுருவியிருக்கும் ஆவி.
நீங்களே பொற்கழுகுகள், நீங்களே எல்லாப்பொருட்களும் எதில் மறையுமோ, அதன் சாரம். நீங்களே தவறிழைக்காதவர்கள், அழியும் தன்மையற்றவர்கள், நீங்களே நியாயமற்ற முறையில் அடிக்காமல் அனைத்து மோதல்களிலும் வெற்றிகொள்ளும் அழகான அலகு. நீங்களே காலத்திற்கு மேல் பணி செய்பவர்கள். கதிரவனைப் படைத்து, பகலெனும் வெள்ளை நூலாலும், இரவெனும் கருப்பு நூலாலும் பின்னப்பட்ட ஆடை நீங்களே. அப்படிப் பிண்ணப்பட்ட ஆடையால், நீங்களே இரண்டு செயல்களை (கர்மங்களை) தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் படைத்தவர்கள். காலத்தால் பற்றப்பட்ட உயிர்ப்பறவையின் பலத்தையும், முடிவில்லா ஆன்மாவையும் பிரதிபலித்து, அவளை விடுவித்து அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுப்பவர்கள் நீங்களே. புலன்களால் மயங்கி ஆழ்ந்த அறியாமையில் இருப்பவர்களுக்கு நீங்களே மிகப்பெரிய பரிசு.
முன்னூற்று அறுபது {360} மாடுகள், முன்னூற்று அறுபது {360} நாட்களைப் பிரதிபலித்து ஒரு கன்றுக்குட்டியை ஈன்றெடுக்கின்றன அதுதான் ஒரு வருடம். அந்தக் கன்றுக்குட்டியே அனைத்தையும் ஆக்கவும் அழிக்கவும் செய்கிறது. உண்மையைத் தேடுபவர்கள் பல பாதைகளில் தொடர்ந்து, ஞானம் எனும் பாலை அந்தக் கன்றுக்குட்டியின் தயவால் பெறுகின்றனர். அசுவினிகளாகிய நீங்களே, அந்தக் கன்றுக்குட்டியைப் படைப்பவர்கள். வருடம் என்பது பல பகல்களையும் இரவுகளையும் பிரதிபலிக்கும் எழுநூற்று இருபது {720} கோல்களை {சட்டங்களை} இணைத்த ஒரு சக்கரத்தின் மையம். சக்கரத்தின் சுற்றளவு பனிரெண்டு மாதங்களை முடிவில்லாமல் பிரதிபலிக்கிறது. இந்தச் சக்கரம் மாயத்தோற்றம் கொண்டது. அழிவை அறியாதது. அஃது எல்லா உயிரினங்களையும் மற்ற உலகங்களையும் பாதிக்கின்றது. அசுவினிகளாகிய நீங்களே, இந்தச் சக்கரத்தின் ஓட்டத்தை முடுக்குபவர்கள்.
காலச்சக்கரத்தால் பிரதிபலிக்கப்படும் வருடம் ஆறு {6} பருவங்களைப் பிரதிபலிக்கும் மையத்தைக் கொண்டுள்ளது. இந்தச் சக்கரத்துடன் சேர்ந்த பனிரெண்டு {12} கோல்களை ஜாதகத்தின் பனிரெண்டு {12} ராசிச் சின்னங்கள் பிரதிபலிக்கின்றன. காலத்தின் சக்கரமான இந்தச் சக்கரம் அனைத்துப் பொருட்களின் செயலுக்குமான பலனை வெளிப்படுத்துகிறது. காலத்திற்கான தேவதைகள் இந்தச் சக்கரத்தில் லயித்திருக்கின்றன. நான் இப்போது அப்படிப்பட்ட ஒரு சிரமகாலத்தில் அகப்பட்டிருக்கிறேன். ஓ அசுவினிகளே, என்னைக் காலச்சக்கரத்தின் பிடியில் இருந்து விடுவியுங்கள். ஓ அசுவினிகளே, நீங்களே இந்த அண்டத்தின் ஐம்பூதங்கள். நீங்களே அனைத்து உலகங்களின் பயன்படுபொருளாக உள்ளீர்கள். என்னை ஐம்பூதங்களின் பிடியில் இருந்து விடுவியுங்கள். நீங்களே பிரம்மாவாக இருந்தாலும், உலகத்தின் மீது புலன்கள் தரும் மகிழ்ச்சியில் வலம் வருகிறீர்கள்.
ஆதியில் நீங்களே அண்டத்தின் பத்துப் புள்ளிகளை உருவாக்கினீர்கள். அதன்பிறகு நீங்களே கதிரவனையும், வானத்தையும் மேலே வைத்தீர்கள். அதே கதிரவனின் ஓட்டத்தைக் கணக்கிட்டு முனிவர்கள், தங்கள் வேள்விகளைச் செய்கின்றனர். தேவர்களும், மனிதர்களும் அவர்களுக்கு என்ன விதித்திருக்கிறதோ அதன்படி தமது வேள்விகளைச் செய்து பலன்களைப் பெறுகின்றனர். மூன்று நிறங்களைக் கலந்து, பார்வையில் படும் பொருட்களைப் படைத்திருக்கிறீர்கள். இதிலிருந்துதான் அண்டமே உண்டாயிற்று. அதனால்தான் தேவர்களும் மனிதர்களும் தங்களது தொழில்களை முறையே செய்ய முடிகின்றது. அசுவினிகளாகிய உங்களை நான் துதிக்கிறேன். உங்கள் கைவண்ணத்தால் உருவான வானத்தையும் நான் துதிக்கிறேன். தேவர்களும் எதில் {செயல்களின் பலன்களில்} சுதந்திரமாக இல்லையோ அந்த அனைத்துச் செயல்களின் கனிகளையும் விதிப்பதும் நீங்களே.
அனைவருக்கும் பெற்றோர் நீங்களே. ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்து உணவை விழுங்குபவர்கள் நீங்களே. இதுவே {அந்த உணவு} பின்னர், உயிரை உண்டாக்கும் நீர்மையையும் இரத்தத்தையும் உருவாக்குகிறது. புதிதாகப் பிறந்த குட்டிகள் தனது தாயின் மார்பை உறிஞ்சுகின்றன. அந்தக் குழந்தையின் உருவத்தை எடுத்தவர்கள் {அந்தக் குழந்தைகளும்} நீங்களே. அசுவினிகளே, எனக்குப் பார்வையைக் கொடுத்து எனது வாழ்வைக் காப்பீராக!" (என்று துதித்தான் உபமன்யு}.(60-70)
இவ்வாறு அழைக்கப்பட்ட அந்த அசுவினி இரட்டையர்கள், அங்கே தோன்றி, "நாங்கள் நிறைவு கொண்டோம். உனக்காக ஓர் அப்பம் இங்கே இருக்கிறது. எடுத்து உண்பாயாக" என்றனர்.(71) இப்படிச் சொல்லப்பட்ட உபமன்யு, "ஓ அசுவினிகளே, உங்கள் சொற்கள் எப்போதும் பொய்த்ததில்லை. ஆனாலும், எனது ஆசானுக்குக் காணிக்கை கொடுக்காமல் இந்த அப்பத்தை எடுத்துக் கொள்ள நான் துணியமாட்டேன்" என்றான்.(72) அதற்கு அசுவினிகள் "இதற்கு முன்பு, உனது ஆசானும் எங்களை இருப்புக்கு அழைத்தார். அதன்பேரில் இதே போன்ற அப்பத்தை நாங்கள் அவருக்குக் கொடுத்தோம்; அப்போது அவர் {அயோதா தௌம்யர்} தனது குருவுக்குக் காணிக்கையாகக் கொடுக்காமலே அதை எடுத்துக் கொண்டார். உனது ஆசான் எப்படி நடந்து கொண்டாரோ, அப்படியே நீயும் நடந்து கொள்வாயாக" என்றனர்.(73) இப்படிச் சொல்லப்பட்ட உபமன்யு, "ஓ அசுவினிகளே, உங்கள் மன்னிப்பை மன்றாடிக் கேட்கிறேன். எனது குருவுக்கு {அயோதா தௌம்யருக்கு} காணிக்கைக் கொடுக்காமல் இந்த அப்பத்தைப் ஏற்றுக் கொள்ளத் துணிய மாட்டேன்" என்றான்.(74) அசுவினிகள், "ஓ, உன் ஆசானிடம் நீ கொண்டுள்ள அர்ப்பணிப்பால் நாங்கள் நிறைவடைந்தோம். உன் குருவின் பற்கள் உருக்காலானாது. உனக்கு அவை தங்கமாக இருக்கட்டும். உனது பார்வை உனக்குத் திரும்பட்டும், நீ நற்பேற்றை அடைவாய்" என்றனர்.(75)
அசுவினிகள் இப்படிச் சொல்லப்பட்ட அவன் தன் பார்வையை மீண்டும் அடைந்து, தன் ஆசானின் முன்னிலைக்குச் சென்று அவரை வணங்கி அனைத்தையும் சொன்னான். அவனது ஆசானும் அதைக் கேட்டு உள்ளம் நிறைந்து, அவனிடம், "நீ அசுவினிகள் சொன்னதைப் போலவே, எல்லாச் செல்வங்களையும் செழுமையும் பெறுவாய்.(76) வேதங்கள் மற்றும் தர்ம சாத்திரங்களும் அனைத்தும் உன்னுள் ஒளிரும்" என்றார். இதுவே உபமன்யுவுக்கு வந்த சோதனை.(77)

[1] அயோதா என்றால் இரும்பு போன்ற பற்களை உடையவர் என்றும், நீரைக் குடிப்பவர் என்றும் இரு பொருள் உண்டு என்று சொல்லப்படுகிறது.

[2] உத்தாலகன் என்றால் பிளப்பவன் என்று பொருளாம். மடையைப் பிளந்து வந்ததால் ஏற்பட்ட காரணப் பெயர் இதுவாகும்.

ஆங்கிலத்தில் | In English |