எதை நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லையோ அது நிகழ்ந்துவிட்டது. என் இதயத்தின் இதயத்திற்குள் நான் எப்போதும் வளர்த்து வந்த நம்பிக்கை காலாவதியாகிவிட்டது.
The best-laid schemes o' mice an' men gang aft agley {சிறப்பாக வகுக்கப்பட்டவையும், எலிகள் மற்றும் மனிதர்கள் தீட்டுபவையுமான திட்டங்கள் எப்போதும் கோணலாகின்றன} என்று புலவன் பாடியிருக்கிறான்.
எனவே, ஏமாற்றமே அண்டத்தின் விதியாக இருக்கிறது. விஷ்ணுவின் அவதாரமே கூட {ராமனே கூடத்} தன் நம்பிக்கைகள் தவிடுபொடியானதற்காக அழுகிறான் எனும்போது, என் நம்பிக்கைகள் நிறைவேறவில்லை என்று யாரிடம் நான் முறையிடுவது? இளவரசன் ராமன் தன் முடிசூட்டு விழாவுக்குச் சற்றே முன்பாக, எந்தத் தந்தை அவ்வாறு ஆணையிடுவதற்குப் பதில், தன் செங்குருதியையே சிந்தியிருப்பாரோ அவரின் {தசரதரின்} ஆணைப்படி முழுமையாகப் பதினான்கு ஆண்டுகள் காடுகளுக்கு நாடுகடத்தப்படும் வாய்ப்பைக் குறித்து அவன் சிந்திக்க வேண்டியிருந்தது. தனக்காகக் காத்திருப்தென்ன என்பதை அந்தத் தேவ அவதாரம் {ராமன்} அறிவான்; இருப்பினும் அவனும் ஒரு மனிதனைப் போல அழுது கொண்டிருந்தான். இன்பத்தில் இருந்து துன்பத்திற்குச் செல்லும் மாற்றம் விரைவானது; நலத்திலிருந்து, பிணிக்கான மாற்றம் விரைவானது; பாறைகளில் நிறுவப்பட்டவையாகத் தோன்றும் நம்பிக்கைகள் மறைவதும் விரைவானதே. இத்தகைய மாற்றம் மனித குலத்தில் ஏற்படும் பொதுவான மாற்றமே. இதுவே உலகளாவிய இருப்பின் நிலையாகும். அதைக்குறித்து முணுமுணுத்தல் வீண் என்றாலும், {முணுமுணுக்காமல்} ஆறுதல் அடைவதும் கடினமே. நம்பிக்கைகளில் ஏற்படும் ஏமாற்றத்தால் வெளிப்படும் கண்ணீரே இயற்கையின் விதியாக இருக்கிறது.
மஹாபாரத ஆங்கில மொழிபெயர்ப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, என் கணவர் இரவும், பகலும் பணி செய்தார். அப்போது, பல்வேறு வகையான கவலைகள் அவரது மனத்தை நிறைத்தன. அவற்றில் முக்கியமான கவலைகள், இந்தப் பணியை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான பணம் தொடர்பானவையே ஆகும். அந்தக் கவலைகள், அவற்றின் இயற்கையான விளைவுகளை உண்டாக்கின. அவை, அவரது உடலை இரையாகக் கொண்டன. அவரது உடல் நிலை வலுவாகவே இருந்தது. சாதகமற்ற பருவகாலங்களில் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றது, அவரது உடல் நலத்தைப் பெரிதும் பாதித்தது. விடாத காய்ச்சல் அவரைப் பற்றியது. அவர் சிறந்த மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றாலும், எதுவும் அவருக்கு நன்மை பயக்கவில்லை. அவரது காய்ச்சலானது, விரைவில் அவருக்கு நீரிழிவு நோயின் தாக்கத்தைக் கொண்டு வந்தது. குறிப்பிட்ட அளவு மனக்கவலையை அஃது உண்டாக்கியது. உழைப்பனைத்தையும் நிறுத்த மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அவரது {என் கணவர் பிரதாப் சந்திர ராயின்} வழக்கில் அது முற்றிலும் சாத்தியமற்றதானது. நாணய சாலையையே விலையாகக் கொண்ட, பனிரெண்டு வருட நீண்ட காலப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். தன்னளவில் அவரே பரிதாபகர நிலையில் இருந்தவராவார். பல வருடங்களாக ஒரு புத்தக விற்பனையாளராக உழைத்துத் தன் திறமையால் ஈட்டிய பொருளை {செல்வத்தை} அவர் பாரதக் கார்யாலயத்திற்கே அர்ப்பணித்தார். அவர் ஸம்ஸ்க்ருத மஹாபாரதத்தின் பல்வேறு பதிப்புகளையும், ராமாயணம் மற்றும் ஹரிவம்சத்தையும் வெளியிட்டார். அவர் மஹாபாரதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை மேற்கொண்டபோது, அவரது பொருளாதாரங்கள் {செல்வங்கள்} மிகச் சுருங்கின. அவர் பொது மக்களின் ஆதரவையே முற்றிலும் சார்ந்திருந்தார். அதிர்ஷ்டவசமாக, அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவுகள் அவருக்குக் கிட்டின. ஆனால் இந்த விளைவைக் கொண்டு வருவதற்கு அவர் மகத்தான உழைப்பைக் கொடுக்க வேண்டியிருந்தது. இவ்விரண்டு எல்லைகளையும் {விளைவையும், உழைப்பையும்} சந்திக்கச் செய்தல் அவருக்கு எப்போதும் சிரமமாகவே இருந்தது. அவரது எண்ணங்கள் நிலையாக அதிலேயே ஈடுபட்டன. அவர் பிணியுற்றுத் தன் அறையை விட்டு வெளியேற முடியாதபடி படுக்கையில் கிடந்த போதும், மஹாபாரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தையே கொண்டிருந்தார். இந்தக் கவலையே அவர் சீரடைவதற்கான வழியில் தடையாக நின்றது என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கையாகும்.
பரிதாபத்திற்குரிய என் கணவர் இன்னும் சில மாதங்கள் இருந்திருந்தால், தன் பணி நிறைவடைவதைக் காணும் நிறைவைப் பெற்றிருப்பார். அவர் தன் இறுதி மூச்சை விட்ட போது {மஹாபாரத ஆங்கில மொழிபெயர்ப்பின்} 94வது சஞ்சிகை வெளிவந்தது. ஒரு வருடத்திற்கு முன்பே, தன் பணி நிறைவடையும் வரை அவர் வாழமாட்டார் என்ற முன்னுணர்வு அவருக்கு இருந்தது. அவர் மூட நம்பிக்கை கொண்டவரல்ல என்றாலும், அவர் இவ்வாறு சொல்வதை நான் பல முறை கேட்டிருக்கிறேன். ஐயோ, இறுதியில் அந்த முன்னுணர்வே சரி என்றானது.
வாசுதேவக் கிருஷ்ணனின் அருளால் என் கணவர் அஸ்வமேத பர்வத்தின் ஒரு பகுதியாவது நிறைவடைவதைக் காண உயிரோடு இருந்தார். எனினும் அந்தப் பர்வம் முடிந்து அடுத்து ஆஸ்ரமவாஸிக பர்வம் எடுப்பதற்குள், அவர் தன் உழைப்புக்கான காட்சியில் இருந்து விலகி, நான் இருந்த ஆசிரமத்தில் (வாழ்வு முறையில்) இருந்து என்னை வலுக்கட்டாயமாக வெளியேறச் செய்தார். என் கணவரின் பணியில் நிறைவடையாத பகுதியை எவ்வழியிலேனும் என்னால் நிறைவடையச் செய்ய முடிந்தால், என் வாழ்க்கையானது, என் கணவர், இந்த உலகம் மற்றும் என்னுடைய நன்மைக்காக அமைந்தது என்று உண்மையில் நான் கருதுவேன்.
என் கணவர் இறந்ததிலிருந்து 95வது, 96வது மற்றும் 97வது என மூன்று சஞ்சிகைகளை என்னால் வெளியிட முடிந்தது. என் கணவர் தன் வீட்டையும், ஸம்ஸ்க்ருத மற்றும் ஆங்கில மஹாபாரதங்களின் சில பிரதிகளையும் தவிர, வேறு எந்த உடைமையையும் விட்டுச் செல்லவில்லை. வீடு இல்லை என்றால், என்னால் எங்கு வாழ முடியும்? அச்சகம் மற்றும் புத்தகங்களை எங்கே வைப்பது? எனவே, என்னால் வீட்டை விற்க முடியவில்லை. புத்தகங்களின் விற்பனையில் சேர்ந்த தொகை மிகச் சொற்பமானதே. இந்த மூன்று பகுதிகளின் வெளியீட்டைத் தவிர, என் கணவரின் சிராத்தத்தையும் நான் செய்ய வேண்டி இருந்தது. எனினும் அக்காரியம் மிகச் சிக்கனமாகவே செய்யப்பட்டது.
இந்த மூன்று சஞ்சிகைகளையும் வெளியிடும் இந்தச் சூழ்நிலையில் என்னிடம் தங்கம் மற்ற வெள்ளி ஆபரணங்களின் வடிவில் இருந்த கொஞ்சம் ஸ்ரீதனத்தையும் விற்கும் கடமை எனக்கு ஏற்பட்டது. இப்பணிக்கு அர்ப்பணிக்க இன்னும் என்னிடம் வேறேதும் இல்லை. இன்னும் மூன்று அல்லது நான்கு சஞ்சிகைகள் வெளியிட வேண்டியிருக்கிறது. குறைந்த அளவிலான மதிப்பீட்டின் படியும் இதற்கு ₹.6,000/- தேவைப்படும். என் கணவர் தன் பணி நிறைவடைவதற்காக, வாயிலுக்கு வாயில் சென்று பிச்சையெடுக்கவும் தயாராக இருந்தார். ஒரு பர்த்தனாஷினி இந்து விதவையாக நான் அதைச் செய்யக்கூடாது. என் நாட்டின் பழக்க வழக்கங்களை அறிந்தவர்கள், ஓர் இந்து பெண்மணிக்கு உலகைத் தொடர்புகொள்வதில் விதிக்கப்படும் தடைகள் குறித்தும் அறிந்ததிருப்பார்கள். எனவே, ஒவ்வொரு பக்கத்திலும் சிரமங்களே என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனினும், அந்தச் சிரமங்கள் எவ்வளவு இருந்தாலும், இந்தப் பணியை இந்நிலையில் என்னால் கைவிட முடியாது. என் கணவரின் கடைசிக் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருக்கவும் என்னால் இயலாது. அவரது மரணப் படுக்கையில், கிட்டத்தட்ட அவரது குரலும் அவரைக் கைவிட்ட வேளையிலும் கூட, அவருக்கு ஒரே சிந்தனையே இருந்தது. அவர், சொற்களைவிடக் குறிப்புகளால் மீண்டும் மீண்டும் சிலவற்றை எனக்கு நினைவூட்டினார். தேவைப்பட்டால் தன் சிராத்தத்தையும் தவிர்த்து, என் வாழ்வாதாரத் தேவைகளையும் சுருக்கிக் கொண்டு, ஓர் இந்து விதவைக்குப் பரிந்துரைக்கப்படும் கடும் பிரம்மச்சரிய ஒழுக்கத்தைப் பின்பற்றியவாறு நான் இப்பணியை முடிக்க வேண்டும் என்பதையே அவர் அடிக்கடி எனக்கு நினைவூட்டிக் கொண்டிருந்தார். அவர், தனது புரவலர்கள் {காப்பாளர்கள்}, நண்பர்கள் ஆகியோரின் பெயரைச் சொல்லி, அவர்களிடமும், மற்றவர்களிடமும் இப்பணிக்குத் தேவையான நிதியை நான் வேண்ட வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். இப்பணிக்குத் தேவைப்படும் தொகையை ஒரு புறம் தன் புரவலர்கள் மற்றும் நண்பர்களிடமும், மறுபுறம் அரசு மற்றும் இந்நிலத்தின் தலைவர்களிடமும் கேட்டால் பற்றாக்குறை ஏற்படாது என்ற முழு நம்பிக்கை, அவர் மரணப் படுக்கையில் கிடந்தபோதும் அவருக்கு இருந்தது. இதுவரை இப்பணிக்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணம் திரட்டப்பட்டது. ₹.6,000/- என்ற இந்தச் சிறிய தொகையையா திரட்ட முடியாது? என் கணவருக்காக இவ்வளவு செய்தவர்களும், நிறைவுக்கு இவ்வளவு அருகில் அவரை இட்டு வந்தவர்களும் என்னை இப்போது கைவிட்டு விடுவார்களா? உடைந்த கப்பலில் உள்ள ஒருத்தியான நான், நிலத்தின் பார்வை வரம்புக்குள் மட்டுமில்லை, அதிக மக்கள் தொகையைக் கொண்ட கரைக்கும் மிக அருகில் இருக்கிறேன். தாராளவாதியான ஒரு நபரால் வீசப்படும் ஒரு குறுங்கயிறே என்னைக் காப்பாற்றிவிடக்கூடும். அந்தக் கயிற்றைக் கீழே வீசுவதற்கு எவரும் இல்லையா? தாராளவாதிகளான இவ்வளவு மனிதர்கள் நிறைந்த இந்தப் பரந்த உலகில், இந்த அளவு உதவிகூட எனக்கு மறுக்கப்படும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இல்லை, அறம் இன்னும் உயிருள்ள சக்தியாகவே இருக்கிறது. மனித இதயத்தின் முக்கியப் பகுதியை ஈகை இன்னும் ஆக்கிரமித்துள்ளது.
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தப் பணிக்காக அதிகம் செய்துள்ளது. என் கணவர் உயிரோடு இருந்தால், அரசு தன்னிடம் செலுத்தும் கருணைக்காக அவர் மீண்டும் விண்ணப்பித்திருக்கமாட்டார். எனினும், இனிமேல் என் கணவர் இல்லை. நான் ஆதரவற்றவளான ஓர் இந்து விதவை. எனவே, முதலில் நான் அரசாங்கத்திடம் ஏதாவது உதவியைப் பெறுவதற்கு முயற்சிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்தியத் தலைவர்கள் மற்றும் இளவரசர்களிடமும் இதையே சொல்ல வேண்டியுள்ளது. அவர்களில் சிலர் என் கணவருக்குக் கணிசமான அளவுக்குக் கருணை காட்டியுள்ளனர். அவர் உயிரோடு இருந்தால், மேலும் உதவி வேண்டி அதே நபர்களை அணுகும் சாத்தியம் அரிதே. அவர் இல்லாதபோது, பணிவான வேண்டுதல்களுடன் அவர்களையும் அணுகுவதை விட வேறு வழி ஏதும் எனக்குத் தென்படவில்லை.
நான் எனது வேண்டுகோளை ஜமீந்தார்களிடமும், என் நாட்டின் நிலப்பிரபுக்களிடமும் வைக்கப் போகிறேன். அவர்களில் எவராது எனக்குப் பயனுள்ள உதவிகளைச் செய்யக்கூடும். இறுதியாக நான், சந்தாதாரர்கள் மற்றும் இந்த வெளியீட்டைப் பெறுபவர்களிடமும் என் பணிவான வேண்டுதலை முன்வைக்கிறேன்.
மொழிபெயர்ப்பாளரான பாபு {திரு.} கிசாரி மோகன் கங்குலி மற்றும் பாரதக் கார்யாலயத்தின் மேலாளரான பாபு {திரு.} அகோரே நாத் பேனர்ஜி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்காமல் இந்த வேண்டுகோளை என்னால் நிறைவடையச் செய்ய முடியாது. பரிதாபத்திற்குரிய என் கணவர் மரணம் அடைந்து, ஆதவற்ற நிலையில் என்னைக் கண்ட அவர்களின் வேகமான உதவியில்லாமல் என்னால் எதையும் செய்திருக்க முடியாது. பணியை நிறைவடையச் செய்வதில் என் கணவர் கொண்டிருந்த கவலையைக் கண்ட பாபு {திரு.} கிசாரி மோகன் அவர்கள், முடிந்தவரை அவரை அந்தக் கவலையில் இருந்து விடுவிப்பதற்காக, அத்திட்டத்தின் இலக்கியச் செயல்பாட்டைப் பொறுத்தவரையில், தேவைப்பட்டால் தாம் ஈடுபட்டிருந்த வேறு பணிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு, தாம் (பாபு {திரு.} கிசாரி மோகன்) எவ்வாறேனும் இதை {இப்பணியை} நிறைவேற்றித் தருவதாக அவருக்கு வாக்குறுதியை அளித்தார். பாபு {திரு.} அகோரே நாத் அவர்களின் அன்பையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. என் கணவர் இறந்ததில் இருந்து, பாபு {திரு.} அகோரே நாத் அவர்கள் முன்னெப்போதையும்விட அதிக விடாமுயற்சியுடன் காரியாலயத்தின் ஆன்மாவாகவே அனைத்து வகையிலும் செயல்பட்டு வருகிறார். ஓர் ஆதரவற்ற விதவையிடம் காட்டி வரும் கருணைக்கான வெகுமதியைக் கடவுள் இவ்விருவருக்கும் அளிப்பாராக. ஒருவேளை கொடுப்பதற்கு என்னிடம் பணம் இருந்தாலும், அவர்களின் மதிப்புமிக்கத் தொண்டுகளுக்கு எவ்வளவு தொகையும் ஈடாகாது.
- சுந்தரி பாலா ராய்
இந்த அறிக்கையில் தேதி குறிப்பிடப்படவில்லை. அஸ்வமேத பர்வம் தொடங்கும்போது முன்னுரையில் உள்ள தேதி 31.12.1894. அதன் பின்னரே பிரதாப் சந்திர ராய் இறந்திருக்கிறார். இந்த அறிக்கையில் பணி தொடங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டதாக குறிப்பு இருக்கிறது. இப்பணி 1883ல் தொடங்கப்பட்டு 1896ல் முடிவுற்றதாகும். எனவே இந்த அறிக்கை 1895ன் இறுதி மாதங்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.